Published:Updated:

"பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞருக்குச் சமர்ப்பணம்!" - சாகித்ய அகாடமி விருது வென்ற இமையம்

இமையம்

2020-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் 'செல்லாத பணம்' நாவலுக்காக எழுத்தாளர் இமையத்துக்கு விருது கிடைத்திருக்கிறது.

"பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞருக்குச் சமர்ப்பணம்!" - சாகித்ய அகாடமி விருது வென்ற இமையம்

2020-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் 'செல்லாத பணம்' நாவலுக்காக எழுத்தாளர் இமையத்துக்கு விருது கிடைத்திருக்கிறது.

Published:Updated:
இமையம்

கால்நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ் எழுத்துலகில் இயங்கிவரும் இமையத்தின் முதல் நாவலான 'கோவேறு கழுதைகள்' வெளியானபோதே தமிழ் இலக்கிய உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக வாழும் புதிரை வண்ணார்களின் வாழ்க்கையையும் அவர்கள்மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளையும் பதிவு செய்த 'கோவேறு கழுதைகள்' பல உரையாடல்களைத் தமிழ்ச் சமூகத்தில் எழுப்பியது.

'கோவேறு கழுதைகள்' நாவலில் இருந்து தொடர்ச்சியாகத் தன் எழுத்துகளில் எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், சாதியப்பிரச்னைகளையும் பதிவு செய்துவருகிறார் இமையம். இலக்கியத்தில் அரசியல்கூடாது, அது உன்னதப் படைப்பு என்ற மேட்டுக்குடிப் பார்வையில் இருந்து விலகி நிற்கும் இமையம் அரசியலை மறைபொருளாகவும் சமயங்களில் நேரடியாகவும் தன் கதைகளில் பதிவு செய்ய மறப்பதில்லை.

எழுத்தாளர் இமையம்
எழுத்தாளர் இமையம்

2013-ல் வெளியான இமையத்தின் 'பெத்தவன்' நெடுங்கதை, தர்மபுரி திவ்யா - இளவரசன் பிரச்னைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பெரிதாகப் பேசப்பட்டது. இயக்குநர் களஞ்சியம் இதைத் திரைப்படமாக எடுக்கவுள்ளார்.

'ஆறுமுகம்', 'செடல்', 'எங்கதெ' ஆகிய நாவல்களும் 'மண்பாரம்', 'வீடியோ மாரியம்மன்', 'நன்மாறன் கோட்டைக்கதை', 'நறுமணம்', 'சாவுச்சோறு' என்று பல சிறுகதைத் தொகுப்புகளும் இமையத்தின் எழுத்தாற்றலைச் சொல்லும்.

ஆங்கிலம், பிரெஞ்சு என்று பல்வேறு மொழிகளில் இமையத்தின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனந்த விகடன் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, திராவிடர் கழகத்தின் பெரியார் விருது, இயல் விருது என பல விருதுகளைப் பெற்றவர் இமையம்.

எப்போதும் தன்னைத் திராவிட இயக்க எழுத்தாளராக முன்னிறுத்திக்கொள்பவர் இமையம். எந்த மேடையாக இருந்தாலும் கறுப்பு - சிவப்பு கரைவேட்டியுடன்தான் காட்சியளிப்பார். இமையம் தி.மு.க-வில் சேர்ந்த வரலாற்றைத் தி.மு.க-வே சமீபத்தில் பிரசார வீடியோவாகத் தயாரித்திருந்தது. திராவிட இயக்கத்தில் இருந்தபோதும் 'கட்சிக்காரன்', 'வாழ்க வாழ்க' போன்ற படைப்புகள் மூலம் விமர்சனங்களை முன்வைக்கும் துணிச்சல்மிக்க எழுத்தாளர் இமையம். 'செல்லாத பணம்' நாவலும்கூட சமூகப்பிரச்னைகளைப் பேசும் நாவலே!

எழுத்தாளர் இமையம்
எழுத்தாளர் இமையம்

இமையத்திடம் பேசினேன். "1994-ல் இருந்தே எனக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும் என்ற பேச்சுகள் நிலவி வந்தன. இப்போது விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீதிக்கட்சித் தலைவர்களையும் திராவிட இயக்க முன்னோடிகளையும் இந்தத் தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். சாகித்ய அகாடமி விருது பெற்ற இரண்டாவது திராவிட இயக்க எழுத்தாளர் நான். இதற்கு முன் 'பிசிராந்தையார்' நூலுக்காகப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்தார். திராவிட இயக்கச் சிந்தனைகளே என் எழுத்துகளுக்கான அடிப்படை. தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய நால்வருக்கும் இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன்" என்றார்.

வாழ்த்துகள் இமையம்!