Published:Updated:

``எழுத்தாளன் திமுக கரைபோட்ட வேட்டியைக் கட்டக்கூடாதா? சமூக குற்றச்செயலா?"- எழுத்தாளர் இமையம்

இமையம்

`செல்லாத பணம்’ நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கு வெற்றி மாறன் கேட்டுள்ளார். அது குறித்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இப்படி எனது கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டாலும் நான் வசனம் எழுதமாட்டேன். - எழுத்தாளர் இமையம் பேட்டி

``எழுத்தாளன் திமுக கரைபோட்ட வேட்டியைக் கட்டக்கூடாதா? சமூக குற்றச்செயலா?"- எழுத்தாளர் இமையம்

`செல்லாத பணம்’ நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கு வெற்றி மாறன் கேட்டுள்ளார். அது குறித்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இப்படி எனது கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டாலும் நான் வசனம் எழுதமாட்டேன். - எழுத்தாளர் இமையம் பேட்டி

Published:Updated:
இமையம்

"கன்னட மொழியின் மகத்தான ஆளுமையாக இருந்த குவெம்பு பெயரில் வழங்கப்படும் விருதைப் பெறுவதில் பெரும் மகிழ்ச்சி. குவெம்புவின் எழுத்துகளை 1984-90 காலகட்டங்களிலேயே நான் படித்திருக்கிறேன். சில விருதுகள் பெருமை சேர்க்கும். சில விருதுகள் சிறுமையைச் சேர்க்கும். குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது என் எழுத்துக்குக் கிடைத்த அரிய தேசிய அங்கீகாரமாகவே கருதுகிறேன். உண்மையைச் சொன்னால், குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது குழுவினர், ‘2022ஆம் ஆண்டுக்கு உங்களைத் தேர்வு செய்திருக்கிறோம்’ என்று அறிவிக்கும் வரை இப்படி ஒரு விருது வழங்கப்பட்டு வருகிறது என்பதே எனக்குத் தெரியாது" என்று உற்சாகத்துடன் பேசுகிறார், எழுத்தாளர் இமையம். சமீபத்தில், கன்னட தேசியக் கவி குவெம்பு நினைவு அறக்கட்டளை வழங்கும் ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்’ விருதுக்கு முதல் தமிழ் எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எழுத்தாளர் இமையத்திடம் வாழ்த்துகளுடன் பேசினேன்.

"2013-ஆம் ஆண்டு முதல் 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் மொழிக்கு 2022-ஆம் ஆண்டுதான் வந்திருக்கிறது. காலதாமதமாக வழங்கப்பட்டதாகக் நினைக்கிறீர்களா?"

"இல்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகளுக்கு வழங்குவது என்று குவெம்பு நினைவு அறக்கட்டளை தீர்மானித்து, அதன்படி ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மொழியில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ் மொழிக்கு இந்த ஆண்டு வந்திருக்கிறது. எந்த ஆண்டு எந்த மொழிக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானிப்பது அறக்கட்டளை நிர்வாகிகள்தான். அதில், யாரும் தலையிட முடியாது; கூடாது. ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர்வு உறுப்பினர்களால்தான் விருதாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதில், அறக்கட்டளை நிர்வாகிகள் தலையிடுவதில்லை, அதனால் தமிழ் மொழிக்கு முன்னால் வந்ததா, பின்னால் வந்ததா என்று கேட்பது பொருத்தமாகாது. தரமானவர்களுக்கு வருகிறதா என்பதுதான் முக்கியம்".

"கனடா இலக்கியத் தோட்ட ‘இயல் விருது’, ‘சாகித்ய அகாடமி விருது’, இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிற ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது’ என்று பல விருதுகளைப் பெற்றுள்ளீர்கள். சில எழுத்தாளர்கள், 'தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை' என்கிறார்களே?"

எழுத்தாளர் இமையம்
எழுத்தாளர் இமையம்

"இலக்கிய செயல்பாடு விருது சம்பந்தப்பட்டது அல்ல. சமூக அங்கீகாரம் சம்பந்தப்பட்டது அல்ல. மொழி சம்பந்தப்பட்டது. தரம், நேர்மை சம்பந்தப்பட்டது. எழுதும் எழுத்துக்கு உண்மையாக இருப்பது, சமூகத்திற்கு நேர்மையாக இருப்பது, எத்தனை பேர் என்னுடைய புத்தகங்களைப் படிக்கிறார்கள், எத்தனை ஆண்டுகளாகப் படிக்கிறார்கள், எத்தனை முறை மறு அச்சு காண்கிறது என்பதுதான் முக்கியம். எத்தனை விருதுகள் வாங்குகிறோம் என்பதில்லை. தமிழில் சாகித்ய அகாடமி விருதை தரமான எழுத்தாளர்களும் வாங்கி இருக்கிறார்கள். தரமற்ற எழுத்தாளர்களும் வாங்கி இருக்கிறார்கள்.

விருதுகள் எழுத்தின் மதிப்பை, எழுத்தாளனின் மதிப்பைக் கூட்டுவதில்லை. விருதுகள் எழுத்தாளனின் எழுத்துகளைப் பொது வெளியில் அறிமுகம் செய்வதற்கு உதவுகின்றன. அவ்வளவுதான். அதற்கு மேல் விருதுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. தனிமனிதனாக சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். சமூக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று புலம்புகிற எழுத்தாளர்கள் நன்றாக எழுதியிருக்கிறமோ என்ற கேள்வியைத் தங்களுக்கு தாங்களே கேட்டுக்கொள்வது நல்லது. அதன்பிறகு, தன் எழுத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று புலம்புவது சரியாக இருக்கும்".

“உங்களுடைய ‘செல்லாத பணம்’, ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவலும் முழுக்க முழுக்க மருத்துவமனையிலேயே நடக்கிறது. அதேமாதிரி ‘ஆண்டவரின் கிருபை’, ‘பிணத்துக்குச் சொந்தக்காரி’ ஆகிய சிறுகதைகளும் மருத்துவமனைகளில்தான் நடக்கிறது. தொடர்ந்து மருத்துவமனை தொடர்பான நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதுவதற்கு என்ன காரணம்?”

"மருத்துவமனைகளை மையப்படுத்தி நாவல்களையும் சிறுகதைகளையும் எழுத வேண்டும் என்பது என்னுடைய விருப்பமல்ல. தானாக அமைகிறது. தனியார் மருத்துவமனைகள் கார்பரேட் நிறுவனங்களாக மாறிவிட்ட நிலையில் இலக்கியப் படைப்புகள் அதிகம் பேச வேண்டிய இடங்கள் மருத்துவமனைகள்தான். கதை எழுதுவதற்கு சமூகத்தில் மருத்துவமனைகள்தான் சிறந்த இடம் என்பது என் கருத்து. சுடுகாட்டில் கேட்கிற அழுகுரல்களைவிட மருத்துவமனைகளில்தான் அதிகமாகக் கேட்கின்றன. என் எழுத்துக்கு அழுகுரல்களே அடித்தளமாக இருக்கின்றன".

‘பெத்தவன்’ எழுதியதால் கேட்கிறேன். தொடர்ந்து ஆணவக் கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. என்னதான் தீர்வு?

``தமிழக, இந்தியச் சமூக அமைப்பே சாதியால்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தின் மூலமாக மட்டுமே தீர்வு காண முடியாது. சமூகத்தில் சாதி சார்ந்த பெருமை ஒழிய வேண்டும். தமிழகத்தில் எத்தனை சாதிக் கட்சிகள் இருக்கின்றன? ‘சாதி சார்ந்த ஒற்றுமை’, ‘சாதியின் பலத்தை நிரூபிக்க வேண்டும்’, ‘சாதிய பெருமை’, ‘ஆண்ட பரம்பரை’ போன்ற கோஷங்களை முன்வைத்து அணி திரட்டுகிறார்கள். இந்த அணி திரட்டல்கள் சாதிய ஆணவ படுகொலைகளுக்கு உறுதுணையாக இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும். சாதி சார்ந்த பெருமையும் ஒற்றுமையும்தான் சாதிய ஆணவப் படுகொலை நடப்பதற்கு மட்டுமல்ல, சமூக வாழ்வு சீர்குலைவுக்கும் காரணமாகின்றன. சாதிய அரசியல் கட்சிகள் அணி திரட்டுவதை நிறுத்தும்போதுதான் சாதிய ஆணவப் படுகொலைகள் குறையும்".

``ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் சினிமாவுக்குக் கதை, வசனம் எழுதுகிறார்கள். உங்களுக்கு சினிமாவுக்கு கதை, வசனம் எழுதுவதற்கு வாய்ப்பு வந்ததா?"

``புதிதாகப் படம் எடுக்கிற, எடுக்க விரும்புகிற பல பேர் வந்து என்னிடம் கேட்டிருக்கிறார்கள். திரப்பட இயக்குனர் என்ன கேட்கிறாரோ, என்ன விரும்புகிறாரோ அதைத்தான் நான் எழுதித் தரவேண்டும். என் விருப்பத்திற்கு எழுத முடியாது. பணத்திற்காக மற்றவர்கள் கேட்பதற்கு ஏற்ப என்னால் எழுதித் தர முடியாது. எழுத்தில் யாரும் என்னைக் கட்டுப்படுத்தக்கூடாது என்பதற்காகவே சினிமாவுக்குக் கதை, வசனம் எழுதுவதற்குப் போகவில்லை."

``உங்களுடைய சிறுகதைகள், நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டாலும் வசனம் எழுத மாட்டீர்களா?"

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

`` `பெத்தவன்’ கதையை மு. களஞ்சியம் `முந்திரிக்காடு’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார். இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. `எங் கதெ’ நாவலை திரைப்படமாக எடுக்க ஒருவர் முன்பணம் கொடுத்துள்ளார். `செல்லாத பணம்’ நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கு வெற்றி மாறன் கேட்டுள்ளார். அது குறித்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இப்படி எனது கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டாலும் நான் வசனம் எழுதமாட்டேன். சினிமா என்னுடைய வடிவமல்ல. ‘இப்படி எழுதுங்கள், அப்படி எழுதுங்கள்’ என்று ஒருவர் எனக்கு ஆர்டர் போடுவதை என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. எனக்கு பணம் வேண்டாம். சினிமா புகழ் வேண்டாம். சினிமாவுக்குக் கதை, வசனம் எழுதுவது எனக்கு லட்சியமாக இருக்கவில்லை. மற்ற எழுத்தாளர்களுக்கு இருந்தால் ஆட்சேபனை இல்லை. எழுத்துத்தான் என் அடையாளம், பெருமை".

"நீங்கள் எப்போதும் திமுக கரைபோட்ட வேட்டியைக் கட்டிக்கொண்டிருப்பதால் இலக்கியவாதிகள் விமர்சிக்கிறார்களே?"

"பேசட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை. ஒரு எழுத்தாளன் திமுக கரைபோட்ட வேட்டியைக் கட்டக் கூடாதா? சமூக குற்றச் செயலா? என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் ரகசியங்களில்லை. என்னுடைய படைப்புகள், அதன் தரம் சார்ந்து மட்டுமே பேசப்பட்டு வருகிறது. என்னுடைய அரசியல் நிலைப்பாடு சார்ந்து அல்ல. எழுத்து வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் நடிப்பதில்லை. பகலில் இலக்கியத் தூய்மை, அரசியல் தூய்மை பேசிவிட்டு இரவில் அதிகாரத்திற்காக அலைகிற, அதிகாரத்தின் முன் மண்டியிடுகிற இலக்கியவாதி அல்ல நான். எழுத்தாளனின் வாழ்க்கையில் வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் முக்கியம். இன்றுவரை நான் அப்படித்தான் இருந்துவருகிறேன்".

"‘ஞானபீட விருது தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. மீண்டும் எப்போது கிடைக்கும், யாருக்குக் கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?"

ஜெயகாந்தன்
ஜெயகாந்தன்

"ஞானபீட விருது மீண்டும் எப்போது கிடைக்கும், யாருக்குக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. நான் ஜோசியக்காரனில்லை. விருது குழுவில் இடம்பெறுகிறவர்களின் விருப்பதைப் பொறுத்தது. பல விருதுகள் குழுவில் இடம்பெறுகிறவர்களுக்கு இலக்கியப் படிப்போ, ரசனையோ சுத்தமாக இருப்பதில்லை. ஆனால், அப்படிப்பட்டவர்கள்தான் தேர்வுக் குழுவில் இடம்பெறுகிறார்கள். ஞானபீட விருது தமிழ் மொழிக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் உங்களைப் போலவே எனக்கும் ஆசை உண்டு. அதேநேரத்தில் ஜெயகாந்தன் எழுதிய ‘ஜய ஜய சங்கர’ நூலுக்குக் கிடைத்ததுபோல கிடைத்துவிடக் கூடாது என்ற கவலையும் இருக்கிறது".