Published:Updated:

கே.டானியல்: இலங்கையில் கம்யூனிசப் பணி; தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி; பிறந்ததினப் பகிர்வு!

கே.டானியல்

“தமிழ்நாட்டில் தலித் இலக்கியம் என்பது தனியாக உருவாவதற்கு வெகுகாலம் முன்பே டானியல் தலித்துகளின் வாழ்வை, பிரச்னைகளை தொடர்ந்து விரிவாக எழுதிவந்தார்.”

கே.டானியல்: இலங்கையில் கம்யூனிசப் பணி; தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி; பிறந்ததினப் பகிர்வு!

“தமிழ்நாட்டில் தலித் இலக்கியம் என்பது தனியாக உருவாவதற்கு வெகுகாலம் முன்பே டானியல் தலித்துகளின் வாழ்வை, பிரச்னைகளை தொடர்ந்து விரிவாக எழுதிவந்தார்.”

Published:Updated:
கே.டானியல்

தமிழில் தலித் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஈழத்து எழுத்தாளர் கே.டானியலின் பிறந்தநாள் இன்று. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகள் பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலையையும், சாதிப் பிரச்னைகளையும் எழுத்தில் படைத்த டானியல், யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள ஆனைக்கோட்டையில் 1926 மார்ச் 25 அன்று பிறந்தார்.

சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் பல வடிவங்களில் இயங்கிய கே.டானியலின் நாவல்களான ‘பஞ்சமர்', ‘கோவிந்தன்', ‘போராளிகள் காத்திருக்கின்றனர்’, ‘அடிமைகள்', ‘கானல்', ‘தண்ணீர்’ ஆகியவை தமிழ் தலித் இலக்கியத்தின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் முதன்மையான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.

கே.டானியல்
கே.டானியல்

குடும்பத்தின் வறுமைச் சூழல் காரணமாக ஆறாம் வகுப்புக்கு மேல் டானியலால் பள்ளிக் கல்வியைத் தொடரமுடியவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ப.ஜீவானந்தம் இலங்கையில் தலைமறைவாக இருந்தபோது அவரை சந்திக்கவும், அவரது உரைகளைக் கேட்கவும் டானியலுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அதன்மூலம் கம்யூனிசத் தத்துவத்தின்மீது மிகுந்த ஈடுபாடு ஏற்படவே, தன்னுடைய 17-வது வயதில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார் டானியல். மேலும், தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், புரட்சிகர எழுத்தாளர் அமைப்பு, சிறுபான்மைத் தமிழர் மகாசபை, மக்கள் கலை இலக்கியப் பெருமன்றம் முதலிய அமைப்புகளில் இணைந்து முக்கியப் பங்காற்றினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1982-1986 காலகட்டத்தில் பேராசிரியர் அ.மார்க்ஸுக்கும், அவரது தோழர்களுக்கும் டானியல் எழுதிய கடிதங்களை ‘கே.டானியலின் கடிதங்கள்’ என்ற பெயரில் தொகுத்துள்ள அ.மார்க்ஸ், கே.டானியல் குறித்த நினைவுகளை இங்கு பகிர்ந்துகொள்கிறார்.

கே.டானியலின் கடிதங்கள்
கே.டானியலின் கடிதங்கள்

“தமிழ்நாட்டில் தலித் இலக்கியம் என்பது தனியாக உருவாவதற்கு வெகுகாலம் முன்பே டானியல் தலித்துகளின் வாழ்வை, பிரச்னைகளை தொடர்ந்து விரிவாக எழுதிவந்தார். அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல; களப் போராளியும்கூட. இலங்கையில் அப்போது இடதுசாரிகள் தீவிரமாக இருந்த காலகட்டத்தில், சீன ஆதரவு கம்யூனிஸ்டான ஷண்முகதாஸன் உள்ளிட்டோருடன் இணைந்து ஆட்சிக் கவிழ்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட டானியல், 14 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். இலங்கையில் ‘தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க’த்தை உருவாக்கி, நடத்தியவர்களில் முக்கியமானவர் டானியல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டானியல் அவர் வாழ்நாளில் நான்கு முறை தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். முதல்முறை வந்தபோது எனக்கு அறிமுகம் இல்லை. எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ், டானியலின் ‘பஞ்சமர்’ நாவலை வெளியிட விரும்பினார். அதன் வெளியீட்டுக்காக டானியல் தஞ்சை வந்திருந்தபோதுதான் எனக்கு அவருடன் அறிமுகம் ஏற்பட்டது. எனக்கு அவருக்கும் மிக அதிக வயது வித்தியாசம் என்றாலும், நாங்கள் நண்பர்களானோம். இடதுசாரித் தோழர்களுடன் இணைந்து அவருடைய புத்தகங்களை அறிமுகப்படுத்திக் கூட்டங்கள் நடத்தினோம். டானியல் மீண்டும் இலங்கைக்குச் சென்றதும், கடிதங்கள் மூலம் தொடர்பில் இருந்தோம். அவருடைய புத்தகங்கள், அதன் அடிப்படையில் தலித் எழுத்துகளை வெளியிடுவதற்காக தலித் வெளியீட்டகம் என்ற அமைப்பையும் தொடங்கி, சில புத்தகங்களை வெளியிட்டோம்.

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

மிகக் கடுமையான சர்க்கரை வியாதியால் டானியல் அவதிப்பட்டுவந்தார். அதற்குச் சிகிச்சை எடுப்பதற்காகக் கடைசியாகத் தமிழகம் வந்தார். சிகிச்சையில் இருக்கும்போது ஓட்டல் உணவுகள் ஆகாது என்பதால், எங்கள் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்துவந்தார். உடல்நிலை சீராகிவந்தபோது, ஓர் அறுவைசிகிச்சை செய்துகொண்டு இலங்கைக்குத் திரும்பிவிடுவது என்று தீர்மானித்தார். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து மருத்துவமனையில் ஓய்வில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக டானியல் இறந்துபோனார். அப்போது வெளியூரில் இருந்த நான் தகவலறிந்து ஓடிவந்தேன்.

செங்கொடிப் போர்த்தி இடதுசாரித் தோழர்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினோம். பட்டுக்கோட்டை அழகிரி போன்ற மதநம்பிக்கை இல்லாதவர்களுக்கு மயானத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் டானியலை அடக்கம் செய்து வீரவணக்கம் செலுத்தினோம். அப்போதிருந்த போர்ச்சூழல் காரணமாக அவரது உடலை இலங்கைக்குக் கொண்டுசெல்ல முடியவில்லை. இலங்கையில் மிகவும் புகழ்பெற்றிருந்த டானியலுக்கு ஆயிரக்கணக்காணோர் அஞ்சலி செலுத்தக்கூடியிருப்பார்கள்,” என்கிறார் அ.மார்க்ஸ்.

கே.டானியல்
கே.டானியல்

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தீண்டாமைப் பிரச்னை எவ்வளவு கொடூரமாக இருந்தன என்பதற்கான ஆவணமாக கே.டானியலின் படைப்புகள் இன்றும் விளங்குகின்றன. தன்னுடைய படைப்புகளில் 90 சதவிகிதம் தலித்துகள் பிரச்னைகளைப் பற்றிப் பேசிய டானியல் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism