Published:Updated:

`காலத்தின் வேகத்துக்கு இணையாகப் பயணித்தவர் கி.ரா!' - குட்டி ரேவதி

எழுத்தாளர் கி.ரா-வுடன் கவிஞர் குட்டி ரேவதி
எழுத்தாளர் கி.ரா-வுடன் கவிஞர் குட்டி ரேவதி

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் கவிஞர் குட்டி ரேவதி.

தமிழ் நவீன இலக்கியத்தின் அச்சாணிகளில் ஒருவரான கி.ராஜநாராயணன் நேற்றிரவு தனது பெருவாழ்வை நிறைவு செய்துவிட்டார். எள்ளலும் ஊக்கமும், உற்சாகமும் குன்றாத மனிதராகவே 99 வயதுவரை வாழ்ந்த அவரது மறைவு தமிழ் அறிவுலகத்துக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு. வரலாற்றில் பெண்கள் எதிர்கொண்ட இடர்கள் மற்றும் அவர்களது ஆளுமையை முதன்மைப்படுத்தி கதைகளை எழுதிய கி.ராவின் படைப்புலகு மற்றும் அவரைச் சந்தித்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் கவிஞர் குட்டி ரேவதி…

``மறைந்த நாதஸ்வர கலைஞர் காருக்குறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டையொட்டி நாங்கள் இயக்கிய ஆவணப்படத்துக்காக அவரின் நெருங்கிய நண்பரான கி.ரா-வை இந்த ஆண்டு ஜனவரியில் சந்தித்து பேட்டி கண்டோம். ஏற்கெனவே சில முறை அவரைச் சந்தித்திருக்கிறேன் என்றாலும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கி.ரா-வின் நெருங்கிய நண்பரும் தமிழறிஞருமான சீனு தமிழ்மணிதான் எங்களை அவரிடம் அழைத்துச் சென்றார்.

கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன்

தமிழிசை குறித்தும், காருக்குறிச்சி அருணாசலத்துடனான தனது நினைவுகள் குறித்தும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார் கி.ரா. காருக்குறிச்சி அருணாசலத்துக்கு இலக்கியப் பரிச்சயம் உண்டு. அதேபோல, கி.ரா-வுக்கு தமிழிசை குறித்த பரந்த அறிவு உண்டு. தமிழிசை மரபு மற்றும் காருக்குறிச்சி அருணாசலத்தின் இசை என விரிந்த அந்த உரையாடல் மறக்கவே முடியாதது. படக்குழுவில் ஒரு பெண் நான் இருக்கிறேன் என்றதும், மனிதர்கள் மனிதக்கறியைச் சாப்பிடுபவர்களாக மாறாததற்கு பெண்தான் காரணம் எனக்கூறி அதற்கு ஒரு நாட்டுப்புறக் கதையைச் சொன்னார்.

பெரும்பாலும் எழுத்தாளர்கள் படைப்பில் வெளிப்படும் முகமும், நேரில் அணுகும்போது வெளிப்படும் முகமும் வேறு வேறானதாக இருக்கும். ஆனால் கி.ரா இதற்கு விதிவிலக்கானவராகத் தனது எழுத்தைப் போலவே துடிப்பும், உற்சாகமுமாக வாழ்ந்தவர். எதிர்மறை எண்ணங்களோ, பிற்போக்குத்தனமான சிந்தனைகளோ அல்லாமல் காலத்தின் வேகத்துக்கு இணையாகப் பயணித்து வந்தவர். வயது முதிர முதிர அற்புதம் நிறைந்த மனிதராக உருப்பெற்று வந்தார் என்றுதான் சொல்ல முடியும். படைப்பூக்கம் மிக்கவராய் பல தலைமுறைகளைப் பார்த்து வந்த அவர் உற்சாகத்தாலும் எழுச்சியாலும் தன்னை விரித்துக்கொண்டவர்.

கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன்

கி.ரா-வின் இறப்பு வருந்தத்தக்கது இல்லை. ஏனென்றால் தமிழ் நவீன இலக்கியம் எனும் அகன்ற வெளியில் பெரும் மிடுக்கோடு ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். எத்தனை பேருக்கு இப்படியொரு வாழ்வு கிடைக்கும் என்று வியக்கும்படியான வாழ்வை வாழ்ந்திருக்கிறார். அவர் எந்தக் காலகட்டத்திலும் சிக்குண்டு தேங்கி விடாமல், ஒவ்வொரு காலத்திலும் அந்தந்த காலத்தின் மனிதராகவே இருந்து வந்தார். பெரும் ஆளுமையான அவரிடமிருந்து ஒரு படைப்பாளியாகக் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்கிறார் குட்டி ரேவதி.

குறிப்பிட்ட ஒரு சமூக மக்களின் இடப்பெயர்ச்சியின் வரலாற்றை மையப்படுத்தி எழுதப்பட்ட `கோபல்ல கிராமம்’ நாவலில் பெண்களே முதன்மை பாத்திரங்கள். ஒரு பெண் படைப்பாளியாக கி.ரா-வின் படைப்புலகு பற்றி அவரிடம் கேட்டதற்கு…

``பெண்மையைப் போற்றுகிற எழுத்தாளராகவே அவர் இருந்தார். பெண் மீது எந்த வெறுப்புமற்று வெளிப்படைப்படைத்தன்மையுடன் பெண்ணுலகை அணுகக்கூடியவராக இருந்தார். பல யுகங்கள் வாழ்ந்திட்ட மனிதனைப்போல அவரிடம் கதைகள் கொட்டிக்கிடந்தன. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத் திலிருந்து உலகமயமாக்கல் காலம்வரை பல மாற்றங்களைக் கண்கூடாகக் கண்ட அவரது பழுத்த அனுபவமும், விரிந்த பார்வையும் அவரை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருந்தது. எந்தக் கட்டத்திலும் நிலை தவறாமல், கூர்மையான சிந்தனையோடும், அபரிமிதமான நகைச்சுவை உணர்வோடும் இருந்தவர் கி.ரா. நவீன சிந்தனைகளுக்குள் தன்னை மெருகேற்றிக் கொண்டு 99 வயது வரை பெருவாழ்வு ஒன்றை வாழ்ந்ததோடு அதைப் பகிர்ந்து விட்டும் போயிருக்கிறார். இத்தகு வாழ்வை வாழ்ந்தவர் இறுதி பிம்பமாக எதை விட்டுவிட்டுச் செல்கிறார் என்பது முக்கியம். காலத்தின் விசைக்கு ஏற்றாற்போல் தன்னைப் புதிப்பித்துக்கொண்டவரும், இறுதி வரை மகிழ்ச்சியை தன் வசப்படுத்திக் கொண்டவருமாகவே கி.ரா நம் நினைவில் நிற்பார்” என்கிறார் குட்டி ரேவதி.

கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன்
அ.குரூஸ்தனம்

பெரும்படைப்பாளியான கி.ராஜநாராயணன் அவர்களின் உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படுவதோடு, அவருக்கு சிலையும் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அவ்வகையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் எழுத்தாளர் என்கிற பெருமைக்குரியவராகிறார் கி.ராஜநாராயணன். அவருக்கு நம் அஞ்சலி.

அடுத்த கட்டுரைக்கு