Published:Updated:

``என் கதைகளில் வெளிப்படுவது பாலியல் சார்ந்த சூழல்களல்ல, அதன் பின்னணி குரூரங்கள்!’’ - லட்சுமி சரவணகுமார்

லஷ்மி சரவணகுமார்
லஷ்மி சரவணகுமார்

தமிழின் இளம் எழுத்தாளரும் `பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் வசனகர்த்தாவுமான, லஷ்மி சரவணக்குமாரிடம் சில கேள்விகளை முன்வைத்து உரையாடினோம்.

``உங்களைப் பற்றிய சின்ன அறிமுகத்தோடு தொடங்கலாமா?’’

``மிகவும் சிக்கலான, குழப்பமான இளம்பிராயம் என்னுடையது. நான் பிறந்தது திருமங்கலத்தில். நான் ஆறுமாதக் கைக்குழந்தையாக இருக்க அப்பா எங்களை விட்டுச் சென்றுவிட்டார். யாருடைய ஆதரவுமின்றி அம்மா, வீடுகளில் வேலை பார்த்துதான் என்னை வளர்த்தார். நான் வெளியில் போய் விளையாடி, சண்டை இழுத்துவிடுவேன் என்பதற்காக வீட்டுக்கு வெளியே ஒரு தூணில் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு வேலைக்குப் போவார். பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள்தான் சாப்பாடு ஊட்டிவிடுவார்கள். எப்போதும் தனியாகவே இருந்ததால் யாரைப் பார்த்தாலும் கோபம் வரும்; கல்லெடுத்து அடிப்பேன்; கெட்ட வார்த்தைகளில் திட்டுவேன். இதையெல்லாம் கவனித்த அம்மா, `மற்ற பையன்களுடன் விளையாடினால் சரியாகிவிடுவான்’ என நினைத்து, கட்டிப்போடுவதை நிறுத்தினார். ஆனால் என்னிடம் எந்த மாற்றங்களும் வந்திருக்கவில்லை.

என் சேட்டைகளைப் பொறுத்துப் பார்த்த அம்மா, ஒருகட்டத்தில் என்னை ஆதரவற்றோர்களுக்கான விடுதியில் சேர்த்துவிட்டார்.

காட்டுப் பகுதியில் பத்து வீடுகளும், ஒரு சின்ன சர்ச் மட்டுமே இருக்குமிடத்தில் அந்த விடுதி இருந்தது. ஏற்கெனவே தனிமையால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனான எனக்கு அந்தச் சூழல் இன்னும் இறுக்கத்தைக் கொடுத்தது. அந்த விடுதி நல்ல நோக்கத்தோடு நடத்தப்பட்டாலும், அங்கே இருந்த சிலர் என்னைப் போன்ற சிறுவர் சிறுமிகளிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டார்கள். சரியான உணவு கிடைக்காததால், சமையலுக்கு வைத்திருந்த உப்பையும் கருப்பட்டியையும்தான் பைக்குள் வைத்து திண்பேன். நாளடைவில் உப்புத்தன்மை அதிகமாகி உடம்புக்கு முடியாமல் போனது.

சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் பாலியல்ரீதியாக நான் வன்முறைக்குள்ளாக்கப்பட்டது அம்மாவுக்குத் தெரியவந்தது. அதனால் மீண்டும் வீட்டுக்கே கூட்டிவந்துவிட்டார். வீட்டுக்கு வந்தும்கூட யாருடனும் ஒட்ட முடியாமல் தனியனாகவே இருந்தேன். வீட்டில் வறுமையின் பிடி அதிகமாகியிருந்ததால் ஐந்தாவது படிக்கும்போதே வீட்டுக் கடனைக் கட்ட ஸ்கூல் முடிந்ததும் வேலைக்குப் போகத் துவங்கினேன்.”

``எழுத்தின் மீதான ஈடுபாடு எப்படி வந்தது?’’

``எட்டாவது படிக்கும்போது எல்லோருக்கும் இருப்பதுபோல, `யாராவது நம்மைக் கவனிக்க மாட்டார்களா?' என்ற ஏக்கம் எனக்குள்ளும் இருந்தது. `ஸ்போர்ட்ஸ்மேனாக வேண்டும்’ என்பது என் விருப்பம்; நன்றாக ஓடக்கூடியவனாகவும் இருந்தேன். ஆனால் அடுத்தடுத்து எனக்கு நிகழ்ந்த விபத்துகளும் குடும்பச் சூழலும் தொடர்ந்து என்னை விளையாட்டின் பக்கம் செல்ல அனுமதிக்கவில்லை. இலக்கியத்தின் மீது கவனம் திரும்பியது. என் பள்ளி ஆசிரியர்கள் இரண்டுபேர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்கள். பல புத்தகங்களை அறிமுகப்படுத்திவைத்தனர். அப்போது மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் ஆனந்த் பட்வர்தனின், `ராம் கே நாம்' படத்தைத் திரையிடும் நிகழ்வு ஒன்றுக்கு முதல் முறையாய்ச் சென்றேன். அந்தப் படமும் படம் குறித்து நிகழ்ந்த விவாதம் எனக்குள் பல திறப்புகளை உண்டாக்கியது. அவர்கள் பேசிய பாட்டாளி வர்க்கம், ரஷ்யப் புரட்சி போன்ற விஷயங்கள் எனக்குள் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தின. அந்த வயதில் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தவர்களும், சிறந்த புத்தகங்களை வாசிக்க வைத்ததும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர்களும் இடதுசாரித் தோழர்கள்தான். அதற்குப் பிறகு நிறைய மார்க்சிய வகுப்புகளில் கலந்துகொண்டேன். அதன் வழியாக தமுஎகச அமைப்போடு இணைந்து செயல்பட முடிந்தது. அங்கிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவைதான் இப்போதுவரை என்னுடைய பலமாக இருப்பதாக நம்புகிறேன்.

பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் கைவிடப்பட்ட கிராமப்புற இளைஞர்கள், திராவிட இயக்கங்கள், தலித் இயக்கங்கள் அல்லது இடதுசாரி இயக்கங்களின் மூலமாகத்தான் சரியான பாதைக்கு வருகிறார்கள். நானும் அப்படித்தான் வந்தேன்.”

``வீட்டுச்சூழல் நல்ல நிலைக்கு வந்திருந்ததா?’’

``இல்லை. ஒன்பதாவது படிக்கும்போது, என் அப்பா திரும்பவும் வீட்டுக்கு வந்தார். சரியாக அவர் வந்து 13-வது நாளிரவு பெரும் வன்முறையைப் பார்க்க நேரிட்டது. நிறைய குடும்பங்கள் வசிக்கும் அந்த காம்பவுண்ட்டில் எங்களுடையது மட்டும் மாடியில் தனி வீடு. வீட்டிற்கு முன்பாக மாடியின் நீண்ட வராண்டா. அப்பாவுக்கு பழக்கமான ஒரு நபர் அங்கு அவரால் கொல்லப்பட்டார். உயிருக்குத் துடிக்கும் அலறலையும் சாவை எதிர்கொள்ளும் கொடூரத்தையும் காலடியில் பார்த்த அந்த இரவை சாகும் வரையிலும் என்னால் மறக்கமுடியாது. காவல்துறை வருவதற்கு முன்பாக அப்பா ஓடிவிட, அம்மாவும் நானும் தனித்துவிடப்பட்டோம். அவர் தலைமறைவானதால் விசாரணைக்காக என்னையும் அம்மாவையும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்றார்கள். விசாரணை என்ற பெயரில் அந்த பகலில் நானும் என் அம்மாவும் போலிஸ்காரர்களிடம் வாங்கிய அடி கொஞ்ச நஞ்சமல்ல. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எதையும் சேர்த்து வைக்க முடியாமல் போனால்கூட பரவாயில்லை, இயல்பான பால்யத்தை சிதைக்கும்படி எதையும் செய்யக்கூடாது. துரதிஷ்டவசமாக எனக்கு பால்யம் துயரங்கள் மட்டுமே நிரம்பியதாயிருந்தது.

பத்து வயதில் மெஸ்ஸில் துவங்கி மெடிக்கல் ஷாப், ரைஸ் மில்லில் நெல் அவிக்கும் வேலை, பிளாஸ்டிக் கம்பெனி என பதினொன்றாம் வகுப்பு வரையிலும் பள்ளி முடிந்ததும் வேலைக்குப் போக நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தேன். உடல் ஒத்துழைக்கவில்லை என்பதால் என் படிப்பு பாதியில் நின்று முழுநேரமாக வேலைக்குச் செல்லத் துவங்கினேன். ஒயின்ஷாப், பிளாஸ்டிக் கம்பெனி, டெக்ஸ்டைல்ஸ், கட்டிடவேலை, க்ரஷ்ஷர், சரக்கு லாரி எனப் பல்வேறு இடங்களில் வேலை பார்த்தேன். ஒரு 15 வயது சிறுவன் வாழ வேண்டிய இயல்பான வாழ்க்கை கிடைக்காததோடு அனுபவிக்கக் கூடாத எல்லாவற்றையும் நான் எதிர்கொண்டேன். அதுதான் யாரைப் பார்த்தாலும் எரிச்சலையோ, கோபத்தையோ பொறாமையையோ வரவழைத்தது. `பணமிருந்தால் மட்டுமே வாழ முடியும்’ என்ற நெருக்கடி துரத்திக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு வேலையும் இன்னொரு வேலைக்குத் துரத்தும். வழக்கு செலவுகளுக்காக வாங்கிய கடன் ஒரு பக்கம் அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. அந்த வழக்கில் அப்பாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எதன் மீதும் நம்பிக்கையோ பற்றோ இல்லாமல் வெறுத்துப் போயிருந்த காலகட்டத்தில்தான், தொடர்ந்த வாசிப்பு எழுத வேண்டுமென்கிற உந்துதலைக் கொடுத்தது. `எழுத்தாளனாகிவிட்டால் இந்த நெருக்கடிகளிலிருந்து தப்பித்துவிடலாம்’ என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அப்படித்தான் எழுத வந்தேன்; இப்போது யோசித்துப் பார்த்தால், எழுத்து மட்டுமே என்னைக் காப்பாற்றியிருக்கிறது.’’

சிறந்த சிறுகதைத் தொகுப்புகான விருதுடன் லஷ்மி சரவணக்குமார்
சிறந்த சிறுகதைத் தொகுப்புகான விருதுடன் லஷ்மி சரவணக்குமார்

``எழுத்தாளனானால் பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எப்படி வந்தது?’’

``அது ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கைதான். `தமிழ் இலக்கியச் சூழலில் எழுத்தாளராக இருப்பது ஒரு சாபக்கேடு’; `சோத்துக்கே கஷ்டப்படணும்' என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை `விகடன் தடம்’ பேட்டியில் கி.ரா., `எழுத்து சோறு போடுமா?’ என்ற கேள்விக்கு, `போடும். நான் சாப்பிட்டிருக்கிறேன்’ என்று அழுத்தமாகச் சொல்லியிருப்பார். அது நூறு சதவிகிதம் உண்மை. எழுத்தாளன் யாருக்கு நேர்மையாக இருக்கிறானோ இல்லையோ, அவனுடைய எழுத்துக்கு நேர்மையாக இருந்தால் போதும். எழுதுகிறவன் விரும்புகிற எல்லாவற்றையும் எழுத்தே கொடுக்கும்; எனக்குக் கொடுத்திருக்கிறது.

2007, நவம்பர் மாதத்தில் `புதிய காற்று' இதழில் வெளியான `எஸ்.திருநாவுக்கரசுக்கு 25 வயதான பொழுது'தான் என் முதல் சிறுகதை. அது பலராலும் கவனிக்கப்பட்டது ஆச்சர்யம்தான். எஸ்.ராமகிருஷ்ணன், `நல்ல கதை' என்று பாராட்டியதை பிற நண்பர்கள் வழியே அறிந்துகொண்டேன். அந்தக் கதை வழியாகத்தான் கோணங்கியின் அறிமுகமும் கிடைத்தது. அவர்களிடம் சந்தேகம் கேட்கவோ, கற்றுக்கொள்ளவோ நான் கொஞ்சமும் கூச்சப்படவில்லை. அவர்களும் சரியாகவே வழிகாட்டினார்கள்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` `இதுதான் சிறுகதைக்கானது / நாவலுக்கானது’ எனத் தீர்மானிக்கும் விஷயம் எது?’’

``எல்லோருடைய வாழ்க்கையிலும் சொல்லப்படாத ரகசியங்கள் இருக்கும். என் வாழ்க்கையிலும் இருக்கின்றன. அவற்றைத்தான் நான் புனைவுகளாக்குகிறேன். ஆனால், அவற்றை அப்படியே சொல்லாமல், எனக்குப் பிடித்த வகையில் மாற்றிச் சொல்கிறேன். நான் சந்திக்கும் சுவாரஸ்யமான மனிதர்களின் இடத்தில் நான் இருந்தால் என்ன நடந்திருக்குமென்கிற கேள்வியிலிருந்து துவங்குகிறது என் கதையுலகம். சில சமயம் என்னை பாதித்த சம்பவங்களில், கற்பனைகளை ஊற்றிக் கதைகளாக்குகிறேன். நான் எழுதும் எல்லாக் கதைகளிலும் ஏதோவொரு வகையில் நானும் என்னைச் சார்ந்தவர்களும் இருக்கிறோம். ஒருவர் தரும் ஏதாவதொரு சொல்லில், அனுபவத்தில், காட்சியிலென எனக்கான கதைகள் கிடைக்குமிடங்கள் அனேகம்.’’

லஷ்மி சரவணகுமார்
லஷ்மி சரவணகுமார்

``உங்கள் படைப்புகளில் பாலியல் சார்ந்த சூழல்கள் பிரதானமாக இருப்பதற்கு பிரத்யேகமான காரணம் உண்டா?’’

``இச்சைகளைப் பொதுவில் உரையாட முடியாத சமூகத்தில் வாழும் நாம், ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் தனிமனிதப் பிரச்சனைகளில் அதிகம் பாலியல் தொடர்பானவையாய்த்தான் இருக்கின்றன. அது உருவாக்கும் வன்முறைகள், கொலைகள், குழந்தைகளின் மீதான அத்துமீறல் இவற்றை செய்திகளாக கடந்து போகிறோமே தவிர விவாதங்களாகவும் படைப்புகளாகவும் மாற்றத் தயங்குகிறோம். மேலும் என் கதைகளில் வெளிப்படுவது வெறுமனே பாலியல் சார்ந்த சூழல்களல்ல, அதன் பின்னணியிலிருக்கும் குரூரங்களும் வன்முறைகளும். கொமோரா, நீலப்படம் இரண்டு நாவல்களுமே சிறுவயதில் பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகிறவர்களின் அகச்சிக்கலைத்தான் பிரதானமாய்ப் பேசுகிறது. எனக்கும் முன்பாகவே தமிழில் நிறைய எழுத்தாளர்கள் பாலியல் சார்ந்த சிக்கல்களை நுட்பமாகவும் அழுத்தமாகவும் எழுதியிருக்கிறார்கள். ஜி.நாகராஜன், தஞ்சை ப்ரகாஷ், ராஜேந்திர சோழன், சாரு நிவேதா, ஜே.பி சாணாக்யா, சு.வேணுகோபால் இவர்களின் சில படைப்புகளை அவற்றுள் முக்கியமானவையாய்ச் சொல்லலாம். இச்சை என்பது பாவத்திற்குரிய செயலாகவும், அது குறித்தான உரையாடல்கள் தணிக்கை செய்யப்பட வேண்டியவை என்ற சூழலும் தான் சரியான புரிதல்கள் உருவாக தடைகளாய் இருக்கின்றன. இங்கே நிகழ்ந்திருக்கும் கல்வி வளர்ச்சியின் மூலமாகவோ, தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாகவோ நம்முடைய அகம், வளர்ச்சியடையவே இல்லை.

எவ்வளவுதான் கட்டுப்படுத்தினாலும் நம் இச்சைகள் நம்மைத் தாண்டிப் போய்க்கொண்டே இருக்கும். அதனால் எது சரி, எது தவறு என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மேற்குலக நாடுகளில் பத்து வயதிலேயே பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய மக்கள்தொகைகொண்ட நம் நாட்டில் முறையான உரையாடல் நடைபெறுவதே இல்லை. சக மனித உடலை ஒரு மெட்டீரியலாகப் பார்க்கும் சூழலே இப்போதும் இங்கே நிலவுகிறது. அப்படியான இருண்ட சமூகத்தில் வாழும் ஓர் எழுத்தாளன் அது குறித்துப் பேச வேண்டிய அவசியம் இருப்பதால், என் கதைகளில் அதிகம் அது இடம்பெறுகிறது.’’

``உங்கள் நாவல்கள் திரைக்கதை வடிவில் இருப்பதாகச் சொல்லப்படுவது பற்றி...’’

``ஒரே நேரத்தில் சினிமாவிலும் இலக்கியத்திலும் வேலை செய்வதால் இது நிகழ்ந்திருக்கிறது. திரைப்படங்களில் பணியாற்றுவதோடு, திரைக்கதை உருவாக்கத்திலும் பங்கேற்கிறேன். சினிமாவில் எடிட்டிங் மிக முக்கியமானது. சினிமாவை முழுமையாகக் கற்றுக்கொள்வது என்பது எடிட்டிங்கைச் சரியாக் கையாளுதலே. எது தேவை, தேவையில்லை என்பதைச் கணித்து, அதை எந்தவிதத்தில் சொன்னால் சுவாரஸ்யமாயிருக்கும் என்பதை அவதானிக்க வேண்டும். இந்த திரைக்கதை யுக்தியை நான் நாவல் எழுதுவதில் கடைப்பிடிக்கிறேன். `என் எழுத்தை வாசிப்பவர்களுக்கு அலுப்புத்தட்டக் கூடாது. சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்’ என நான் விரும்புகிறேன். அதனால், காட்சி ஊடகத்துக்கான மொழியை என் எழுத்தில் பயன்படுத்துகிறேன்.

சில கதைகளை நாம் வாசிக்கும்போது, அது காட்சியாக திரைப்படம் போலத்தான் நம் மனக்கண்ணில் விரியும். பலரின் எழுத்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். இலக்கியத்தில், `சினிமேட்டிக்' என்ற ஒன்று தனியாக இல்லை. ஒரு புனைவு ஒரிஜினலாக இருப்பதைப் போலவே சுவாரஸ்யமாகவும், ஆழமாகவும், புரியும் வகையிலும் சொல்லப்படவேண்டும். நான் இதைத்தான் கடைபிடிக்கிறேன். அவற்றை என் பலமாகவே நினைக்கிறேன். காட்சி ஊடகங்களே நம்மை அதிகமும் ஆக்கிரமித்திருக்கும் காலமிது, திரைப்படம், தொலைக்காட்சி என்பதையெல்லாம் தாண்டி விர்ச்சுவல் ரியாலிட்டிக்குள் ஒரு தலைமுறை பயணிக்கத் துவங்கிவிட்டது. தற்போதுள்ள வாசகர்களில் பெரும்பாலானோர் காட்சி ஊடகத்தின் வழியாகவே இலக்கியத்தையும் அணுகுகிறார்கள். பழைய பாணியிலான கதை சொல்லல் முறை அவர்களைச் சலிப்படையச் செய்கிறது. ஒரு நாவலையோ சிறுகதையையோ அணுகும்போது அதற்கு இணையான பிரதியை அணுகுவதை விடவும் திரைப்படக் காட்சிகளின் வழியாக அணுகிப் பழக்கப்பட்டுவிட்டார்கள்.’’

அரவான் பட ஷூட்டிங்கில் லஷ்மி சரவணகுமார்
அரவான் பட ஷூட்டிங்கில் லஷ்மி சரவணகுமார்

``உங்கல் எழுத்துநடையில் யாருடையை பாதிப்பு அதிகம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?’’

``மொழிரீதியாக கு.அழகிரிசாமி; கதைகளுக்கான உலகங்களில் ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ், ப்ரேம் ரமேஷ், எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களோடு பஷீரின் பாதிப்பு என் படைப்புகளில் இருப்பதாக உணர்கிறேன். மொழிபெயர்ப்பு நூல்கள் பாரிய அளவில் எனக்கான எழுத்துநடையை உருவாக்கிக் கொள்ள உதவியாய் இருந்தன. விடியல் பதிப்பகத்தின் வழியாய் வெளியான பெத்ரோ பரோமா, எரியும் சமவெளி, போர் தொடர்கிறது உட்பட ஏராளமான நூல்களுக்கும், சாரு நிவேதிதாவின் மொழிபெயர்ப்புகளுக்கும் எண்பதுகள் துவங்கி இரண்டாயிரத்தின் நடுப்பகுதி வரை சிற்றிதழ்களில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளுக்கும் இதில் முக்கியப்பங்குண்டு. கல்குதிரை, புனைகளம், புதுஎழுத்து, உன்னதம் இப்படி தமிழில் வந்த அத்தனை சிற்றிதழ்களுக்கும் இதற்காக நன்றி சொல்வேன்.’’

ஜி.நாகராஜன்
ஜி.நாகராஜன்

``பெண்களின் இருப்பு குறித்த நுட்பமான சித்திரிப்பு உங்கள் ஆக்கங்களில் வெளிப்படும். அதற்கான பின்னணி என்ன?’’

``நான் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி... என் உலகம் முழுமையாகப் பெண்களால் சூழப்பட்டிருந்தது. காரணம், ஆண்களுடன் இருக்கும்போது அங்கு நான் எளிதாக உதாசீனப்படுத்தப்பட்டேன். அவர்களால் வன்முறைக்கு ஆளானேன். பெண்களுடன் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்ந்தேன். என்னை உடல்ரீதியாகத் தொந்தரவு செய்யாத நபர்களாகப் பெண்களே இருந்தார்கள். சிறு வயதில் என்றில்லை, வளர்ந்த பிறகும்கூட நான் வீழ்ந்துபோகக்கூடிய சூழல்களிலெல்லாம் அக்காவாக, தோழியாக இருந்து என்னை மீட்டெடுத்தவர்கள், பாதுகாத்தவர்கள் பெண்கள்தான். என் கதைகளில் வரும் பெண்களுடனான உரையாடல்கள் எல்லாமே என்னுடன் சம்பந்தப்பட்ட பெண்களுடனான என் உரையாடல்கள்தான்.’’

``திலீபன் நாவலை இன்னும் ஏன் எழுதவில்லை?’’

``எழுதவில்லை என்று சொல்ல முடியாது. 70 பக்கங்கள் எழுதியிருக்கிறேன். வருடத்திற்கு இரண்டுமுறை இலங்கைக்குப் போய் வருகிறேன். ஆனால் இந்த நாவலைத் தொடர்ந்து எழுத முடியுமாவெனத் தெரியவில்லை. நான் நாவல் எழுதத் திட்டமிட்டிருந்தபோது, `இந்த விஷயங்களையெல்லாம் நாவலில் பேச வேண்டும்’ என்று சில தயாரிப்புகளிருந்தன. தோழமை பதிப்பகம் பூபதி தன் சேகரிப்பிலிருந்த ஏராளமான நூல்களை இந்த நாவல் எழுதுவதற்கான ஆய்விற்காக தந்து உதவினார். ஆறு மாத காலம் முழுமையாக அந்த நூல்களை வாசித்து எடுத்தக் குறிப்புகள் பாதுகாப்பாவே இருக்கின்றன. ஆனால், என் ஒவ்வொரு இலங்கைப் பயணத்திலும் நான் சந்தித்த மனிதர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், அங்கிருக்கும் இலக்கியவாதிகள் உள்ளிட்டவர்களிடமிருந்து கிடைத்த  மாறுபட்ட அனுபவங்கள் நான் எழுத நினைத்ததற்கும் அப்பாலிருந்த நிஜங்களை புரியவைத்தபோது ஒரு தயக்கம் வருகிறது. தமிழகத்தில் இருந்துகொண்டு ஈழச் சிக்கல்களை எழுதுவதென்பது தேன்கூட்டுக்குள் கைநுழைப்பது போன்றது. 

Thileeban - Prabhakaran
Thileeban - Prabhakaran

நாம் எந்த நிலைப்பாட்டிலிருந்தாலும் அதை ஆதரிக்கவும் எதிர்க்கவும் பக்கசார்புள்ள ஆட்கள் இருக்கிறார்கள். வல்வெட்டித்துறையில் வசிக்கும் ஆனந்தராஜ் என்பவர் `வல்வை படுகொலைகள்’ என்கிற பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார். வல்வெட்டித் துறையில் இந்திய அமைதிப்படை நிகழ்த்திய வெறியாட்டத்தின் நேரடி சாட்சியம். இப்படி தமிழர்கள் வாழும் ஒவ்வொரு பகுதியிலும் இந்திய அமைதிப்படை நிகழ்த்திய அத்துமீறல்களும் படுகொலைகளும், கற்பழிப்புகளும் ஏராளம். இலங்கை தமிழ் மக்களின் வாழ்வில் இந்திய அமைதிப்படையின் காலகட்டம் ஒரு இருண்டகாலம். நான் அந்த இருண்டகாலத்தின் பதிவுகளை எழுதவே முயற்சிக்கிறேன். அதற்கு இன்னும் கூடுதலான உழைப்பு தேவைப்படுகிறது. இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டேனும் நிச்சயம் அந்த நாவலை எழுதுவேன்.’’

``சமூக வலைதளங்களில், சில புத்தக விமர்சனக் கூட்டங்களில் வெளிப்படும் உங்களின் மொழிப் பிரயோகம் அந்த நேரத்தின் வெளிப்பாடா... அல்லது கவன ஈர்ப்புக்காகவா?’’

``மற்ற எல்லா விஷயங்களைவிடவும் இலக்கியத்தை ஓர் உயர்வான விஷயமாக பார்க்கிறேன். அப்படி மதிப்பிற்குரிய ஒரு கலைவடிவத்தில் அடிப்படைவாதக் கருத்துக்களும் சிறுபான்மையினருக்கு எதிரான குரல்களும் வரும்போது எரிச்சலும் வெறுப்பும் வருகிறது. என்னால் அமைதியாகக் கடந்துபோக முடியவில்லை. புனைவிலக்கியத்தில் நான் மிக அதிகமாக மதிக்கும் ஒருவர் `இஸ்லாமியர் ஒருவருடன் மேடையைப் பகிர்ந்துகொள்ளும்போது முதுகில் நடுக்கம் எடுக்கிறது’ என்று சொல்லும்போது என்னால் இயல்பாக நட்பு பாராட்ட முடியவில்லை. இதுதான் வித்தியாசம். எழுத்தாளனுக்கான அறம் என இந்த வெளிப்படைத்தன்மையையே நம்புகிறேன். நான் யுவபுரஸ்கார் விருதைத் திருப்பிக் கொடுத்ததுகூட கவன ஈர்ப்புக்காகத்தான் என்றார்கள். கவன ஈர்ப்பிற்காக ஒருவன் எவ்வளவோ செய்யலாம், ரோட்டில் ஆடையில்லாமல் செல்வதுகூட ஒருவகையில் கவன ஈர்ப்புதான். நாம் நம்பும் இலக்கியத்துக்கு இந்த கவன ஈர்ப்பெல்லாம் தேவையில்லை. நம் படைப்புகள்தாம் பிறர் கவனத்தை ஈர்க்க வேண்டும்.

ஒரு உண்மையான கலைஞனால் அதிகாரத்திற்கு துணை நிற்க முடியாது. அவன் துன்பப்படுகிற மக்களின் பக்கம் தான் இருப்பான், இல்லை தனித்திருப்பான். அப்படியில்லை என்றால் தன் கலையிலிருந்தே நீக்கப்பட்டுவிடுவான். பேசுவதற்கு வழியோ, வாய்ப்போ கொடுக்கபடாத மக்களின் சார்பாக பேசுகின்ற பொறுப்பை ஒரு கலைஞன் ஏற்றுக்கொள்ள வேண்டும்!’’’

விருதை திருப்பித் தருதல்
விருதை திருப்பித் தருதல்

``ஜல்லிக்கட்டுப் பிரச்னையில் சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுத்ததை இப்போது எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``நான் ஜல்லிக்கட்டுப் பிரச்னைக்காக மட்டும் யுவபுரஸ்கார் விருதைத் திருப்பிக் கொடுக்கவில்லை. `நீட்’ உள்ளிட்ட தமிழகம் சந்திக்கிற பல்வேறு பிரச்னைகளுக்காகவும்தான் திருப்பிக் கொடுத்தேன். என் அறிக்கையில் அவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன். `நீட்' தேர்வால் மருத்துவக் கல்வி பாதிப்படையும் என்பதை அப்போதே பல கட்டுரைகளின் வாயிலாக நான் அறிந்திருந்தேன். கல்வி மறுக்கப்பட்ட ஒருவனான எனக்குக் கல்வியின் அவசியம் குறித்து மற்றவர்களைவிட நன்றாகவே தெரியும். அப்போதைய தருணத்தில் `ஜல்லிக்கட்டு’ முக்கியமான விஷயமாக இருந்ததால், நான் சொன்ன மற்ற விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. விருதைத் திருப்பிக் கொடுத்தது, தெளிவாக யோசித்து எடுத்த முடிவுதான். `கொடுத்திருக்க வேண்டாமோ...' என்று ஒருபோதும் யோசித்ததில்லை.’’

Vikatan

``விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய நுட்பமான பதிவுகள் உங்கள் படைப்புகளில் இடம்பெறும். உங்களைப் பொறுத்தவரை, விளிம்புநிலை மனிதர்கள் என்பதற்கான வரையறை என்ன?’’

`` `விளிம்புநிலை மனிதர்கள்' என்ற வார்த்தைப் பிரயோகத்தையே இப்போது நான் வெறுக்கிறேன். விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய கதை என்று ஒரு கதையைச் சொன்னால், `நான் அவர்களைவிட மேலானவன்’ என்ற குரல் இருப்பதாகத்தானே அர்த்தம். என் கதைகளில் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்ற கருத்திலேயே நான் மாறுபடுகிறேன். சப்வேயின்கீழ் வாழும் மனிதர்களைப் பற்றியோ, வீடில்லாமல் பாலத்துக்குக் கீழே ஒதுங்கி வாழும் மனிதர்களைப் பற்றி நான் ஒரு பார்வையாளனாக இருந்துதான் எழுதியிருக்கிறேன். `இன்னும் அவர்களின் பிரச்னைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ...’ என்ற சந்தேகமும் எனக்குள் இருக்கின்றன. அந்தக் கதைகளை இப்போது நான் எழுதினால், வேறு மாதிரியாக எழுதவே வாய்ப்பிருக்கிறது. நாம் வெறும் நுகர்வோராக மட்டுமே மாறிப்போயிருக்கும் இந்தக் காலத்தில், வர்க்கரீதியாக சில வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரும் ஒரே தராசுத்தட்டில்தான் இருக்கிறோம். ஒரு வியாபாரியின் முன்னால் நாம் அத்தனைபேருமே நுகர்வோர். ஏதோவொரு வகையில் நம் உழைப்பு சுரண்டுப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சமூகரீதியில் ஒடுக்கப்பட்டவர்களும், பொருளாதார ரீதியில் வாய்ப்பிழந்தவர்களும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டிய காலகட்டமிது. Many small people, in small places, doing small things can change the world. - எட்வர்தோ காலியானோவின் வரிகளை இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.’’

லஷ்மி சரவணகுமார் - சங்கர் - ரஜினி
லஷ்மி சரவணகுமார் - சங்கர் - ரஜினி

``உங்களின் இலக்கிய உறவாடல்களில் சாதியம் நேரடியாகவோ, மறைமுகவோ பிரச்னையாக இருந்தது உண்டா?''

`` தமிழ் இலக்கியவாதிகளிடையே சிக்கியிருக்கும், `அறம்’. `மனிதம்’, `பேரன்பின் ஆதி ஊற்று' போன்ற புனித வார்த்தைகள் எல்லாம் மிக ஆபத்தானவை. சாதியைத் தூக்கிப் பிடித்திருக்கும், சாதிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இலக்கியவாதிகள் பலர் இருக்கிறார்கள். சமூகத்தில் ஒரு மனிதனின் முதுகுக்குப் பின்னால் சாதி இருக்கிறது என்றால், தமிழ் இலக்கியச் சூழலில் தலைக்கு மேல் இருந்து கண்கானிக்கிறது. இங்கே வழங்கப்படும் பல விருதுகள் தொடங்கி படைப்புகளுக்குக் கிடைக்கும் பாராட்டுகள் வரை பல சமயங்களில் பின்னிணியில் சாதியும் ஒரு காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வையும் சந்தேகத்தோடு பார்க்கக்கூடிய சூழலை இங்கே இருக்கும் இலக்கியவாதிகள் ஏற்படுத்திவிட்டார்கள். சரண்குமார் லிம்பாலேவின் `குப்பை’க் கதையில் வரும் பேராசிரியர் மாதிரிதான் இங்கே நிறைய ஆளுமைகள் இருக்கிறார்கள்.’’

``இலக்கியத்துக்கும் சமகால நிகழ்வுகளுக்குமான இடைவெளி எந்த அளவில் இருக்கிறது?’’

``முன்பெல்லாம், தஞ்சாவூர் இலக்கியம், கரிசல் இலக்கியம், குமரி மாவட்ட இலக்கியம், கொங்கு வட்டார இலக்கியம் என நிலப் பகுதிகளின் வழியாக படைப்புகள் அடையாளப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது இங்கே இருக்கும் சமூக வலைதளங்கள், பத்திரிகைகள் நிலத்திலிருந்து எழுத வருபவர்களைப் புறக்கணித்துவிட்டு, பொதுப்பார்வைக்குத் தெரிந்த எழுத்தாளர்களை மட்டுமே அடையாளப்படுத்துகின்றன.

கூடங்குளம் அணுவுலை இந்த சமூகத்திற்கு எத்தனை பெரிய அச்சுறுத்தல். அதுகுறித்த நாவல்களையோ சிறுகதைகளையோ எழுதி இருக்கிறோமா? டெல்டா நிலப்பகுதி முழுக்க இயற்கை எரிவாயுக் கிணறுகள் வரப்போவதால் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தை குறித்த படைப்புகள் ஏன் எழுதப்படவில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததை ஆதரித்த எழுத்தாளர்கள் சிலர் இப்போது சிறுபான்மையினருக்கு எதிரான சி.ஏ.ஏ சட்டத்தைக்கூட ஆதரிப்பதைப் பார்க்கையில் இவர்கள் மானுடத்திற்கு எத்தனை விரோதமானவர்களென அச்சமாய் இருக்கிறது. இந்தக் குரல்களுக்கு எதிராக படைப்புகள் வெளியாகி இருக்க வேண்டும். எது சமகாலப் பிரச்சனைகளில் இருந்து ஒரு எழுத்தாளனை விலகி நிற்க வைக்கிறதென்கிற சந்தேகம் ஒவ்வொரு நாளும் எழுகிறது.

நான் எழுதும் கதைகள் உட்பட கடந்த ஐந்தாறு வருடங்களில் எழுதப்பட்ட பல கதைகளில் ஓர் அவசரம் தெரிகிறது. இந்த அவசரம் படைப்புகளை ஒருவகையில் தொந்தரவு செய்கிறதோ என நான் நினைக்கிறேன். எனக்கு மட்டுமல்ல, இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நிறையபேருக்கு இந்த நெருக்கடி இருப்பதாக கருதுகிறேன்.’’

அரவான்
அரவான்

``சிறு வயதிலிருந்தே உங்களுக்கு சினிமா ஒரு தேர்வாக இருந்ததா?’’

``சிறு வயதிலிருந்தே எனக்கு சினிமா பார்ப்பது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. சொல்லப்போனால், எனக்கிருந்த ஒரே துணை அதுதான். நான் பார்த்தவை பெரும்பாலும் இரவு நேர வேலைகள்தான். அதனால், பகலில் சினிமாக்கள் பார்த்தே பொழுது கழியும். தினமும் ஏதேனும் ஒரு படம் பார்த்துவிடுவேன். ஏதாவது ஒரு வேலையில் சேரலாம் என்றுதான் சென்னைக்கு வந்தேன். த.மு.எ.க.ச அமைப்பு, `திரைக்கதை எழுதும் பயிற்சி ஏழுநாள் முகாம்’ நடத்தியது. அந்த முகாம் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் திறப்பையும் கொடுத்தது. இறுதி நாளில் திரைக்கதை எழுதும் அசைன்மென்ட் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. நெய்வேலி சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற என் கதையை அடிப்படையாகக் கொண்டு நான் எழுதிய திரைக்கதை வடிவம் பாராட்டைப் பெற்றது. நான் பார்த்த எண்ணற்ற சினிமாக்கள் தந்த பரிசாக அதை நினைத்துக்கொண்டேன். அங்கு வந்த எழுத்தாளர் சு.வெங்கடேசனின் `காவல் கோட்டம்’ நாவலைத்தான் அப்போது இயக்குநர் வசந்தபாலன் படமாக எடுப்பதாக இருந்தார். எனவே, அவருக்கு இலக்கிய வாசிப்புடைய ஒரு உதவி இயக்குநர் தேவைப்பட்டார். சு.வெங்கடேசன் என்னுடைய சுறுசுறுப்பையும் வேகத்தையும் பார்த்து என்னைப் பரிந்துரை செய்தார். அப்படித்தான் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். சினிமாவில் எனக்கான வாய்ப்பு எளிதாகக் கிடைத்துவிட்டாலும், சினிமாவுக்கான நபராக என்னைத் தயார்படுத்திக்கொள்வதற்கு மிகக் கடினமாக உழைத்திருக்கிறேன்.’’

``வசந்தபாலனிடம் ஓர் உதவி இயக்குநராகக் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயங்கள் என்னென்ன?’’

``நிறைய விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாக, பொறுமையும் அதீத உழைப்பும். ஒரு விஷயத்துக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தேடிப்போகும் ஆர்வத்தை அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.”

லஷ்மி சரவணகுமார்
லஷ்மி சரவணகுமார்

``ஷங்கருக்கும் உங்களுக்குமான உறவு பற்றி...’’

``ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எப்போதும் நினைப்பவன் நான். இயக்குநர் ஷங்கர் அவர்களின் `2.0’ மேக்கிங் தொடர்பாகப் புத்தகம் எழுதும் வாய்ப்பையும் அப்படித்தான் பயன்படுத்திக்கொண்டேன். ( புத்தகம் இறுதிநிலையில் உள்ளது, மிக விரைவில் வெளியாகும்.) அவரது தயாரிப்பில் உருவாக இருந்த இம்சை அரசன் 2 வில் சில நாட்கள் கதை விவாதத்திற்கு சென்றேன். இவற்றுக்குப் பிறகுதான் `இந்தியன் 2’-வில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 2.0 புத்தகம் எழுதுவதற்காக படபிடிப்பு சென்ற நாட்களிலும், அவருடனான உரையாடலிலும் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது அனேகம். ஒரு திரைப்படத்திற்காக அவர் கொடுக்கும் அதிகபட்ச உழைப்பு மலைக்க வைக்கும். கதை விவாதங்களின் போது திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைப்பது எப்படியென்பதை அனுபவப்பூர்வமாய் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடிந்தது.”

``சமூக ஊடகம் காமத்துக்கான வடிகாலாக மாறியிருக்கிறதா?’’

``இல்லை. அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. அடுத்தவர்களின் அந்தரங்கத்தைப் பகிரங்கப்படுத்துதலில் ஆர்வம் அதிகமாகிவிட்டது. தனிமனிதர்களைத் தாக்குவதற்கும் மிரட்டுவதற்குமான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. உடல் உடலாக மட்டுமே பார்க்கப்படும் சூழல் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இது முன்பே சமூகத்தில் இருக்கும் சிக்கல்களை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. ’’

கோவை ஞானி
கோவை ஞானி

``அரசியல்ரீதியாக உங்களை எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள்?’’

``மார்க்சியத்திலிருந்து தமிழ்த்தேசிய கருத்தாக்கத்திற்குள் வந்தடைந்த ஞானி அவர்களையே இவ்விஷயத்தில் பின்பற்றுகிறேன். `மனிதர்களின் மனநிறைவான வாழ்விற்கு அவர்களின் தாய்மொழி வழியாக அமைந்த தேசிய வாழ்வு ஒரு சிறிதும் பங்கமில்லாமல் கட்டமைக்கப்பட வேண்டும். மனித விடுதலைக்கு இதுவே அடிப்படை.’ என அவரின் கருத்தாக்கத்தில் முழு உடன்பாடுண்டு...’’

``உங்களுக்குப் பிடித்த நாவல்கள்...’’

`` `புயலிலே ஒரு தோணி’, `பசித்த மானுடம்’, `காகித மலர்கள்’, `அம்மா வந்தாள்’, `இடைவெளி’, `உள்ளேயிருந்து சில குரல்கள்’, `குறத்தி முடுக்கு’, `கரமுண்டார் வூடு’, `ஸீரோ டிகிரி’, `நெடுங்குருதி’, `விஷ்ணுபுரம்’, `சொல் என்றொரு சொல்’, `ம்’, `பஞ்சமர்’, `எட்டுத்திக்கும் மதயானை’, `காவல் கோட்டம்’, `தாண்டவராயன் கதை’, `கன்னி, தகப்பன்கொடி "

லஷ்மி சரவணகுமார்
லஷ்மி சரவணகுமார்

``உங்களின் சமீபத்திய நாவல், `ரூஹ்’ பற்றி...’’

`` `ரூஹ்... `கொமோரா’வின் ஒரு பகுதியாக எழுதத் திட்டமிட்டிருந்த கதை. ஆனால், வெறுப்பின் பிரதியான `கொமோரா’வுக்குள் நிபந்தனையற்ற நேசத்தை மட்டுமே பேசவிழையும் `ரூஹி’ன் கதை பொருந்திப் போகவில்லை. அதனால் தவிர்த்துவிட்டேன். ஒரு நாவலை எழுதத் தொடங்குவதற்கு முன்னரும் எழுதும்போதும் அந்தக் காலகட்டத்தின் வாழ்விலிருந்து பெறும் படிப்பினைகள் கதையில் பிரதிபலிப்பதை விரும்புகிறவன் நான். `கொமோரா’ எழுத முக்கியக் காரணம் மனதை அழுத்திய நீண்டகால வெறுப்புணர்விலிருந்து மீள வேண்டுமென்பதுதான். `ரூஹ்’ எழுத முக்கியமான சில தூண்டுதல்கள் உள்ளன. `காவியத் தலைவன்’ திரைப்படத்தில் வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில் தனிப்பட்ட வாழ்வில் பெரும் தோல்விகள். கடுமையான தற்கொலை எண்ணத்தில் இருந்ததோடு, மனநல மருத்துவரிடம் சிகிச்சையும் எடுத்துக்கொண்டிருந்தேன். இயக்குநர் வசந்தபாலன் அப்போது கடப்பா ஆமீன் பீர் தர்காவுக்கு அழைத்துச் சென்றார். அந்த நாள் தர்காவில் கேட்ட ஹவ்வாலியும், பிரார்த்தனையும் (முக்கியமாக நான் கலந்துகொண்ட அதிகாலைப் பிரார்த்தனை) மனதிலிருந்த அத்தனை வலிகளையும் விலக்கி லகுவாக்கின. வழிபாடுகளிலும் பிரார்த்தனைகளிலும் நம்பிக்கையில்லாதவனுக்கு அந்த அதிகாலைப் பிரார்த்தனையும் சூரியோதயமும் மகத்தான நிம்மதியைக் கொடுத்தன. அந்தத் தூண்டுதலில் எழுத விரும்பிய கதைதான் `ரூஹ்.’ நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களுக்குள் இருக்கும் நேசத்தைப் பேச விழையும் கதை இது. சொல்லப்போனால் வெறுப்புணர்விலிருந்து கற்றுக்கொண்ட மிக மோசமான பாடங்கள்தான் நேசத்தின் மதிப்பை புரியவைத்திருக்கின்றன. இந்த நாவலை ஸீரோ டிகிரி பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளார்கள்."

அடுத்த கட்டுரைக்கு