Published:Updated:

`அறுவை சிகிச்சைக்கு என் உடலை ஒரு கேக் போல் ஒப்புக்கொடுத்தேன்' - கவிஞர் மனுஷ்ய புத்திரன்

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

`இந்த அரசாங்கம் மக்களைப் பச்சையாக ஏமாற்றக்கூடிய அரசாங்கம். ஒரு திருடன்மீது இருக்கும் நம்பிக்கைதான் இந்த அரசின்மீதும் இருக்கிறது.’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் உங்களுக்குள் ஆயிரம் கேள்விகள் தோன்றும். நாளை என்பதே ஒரு வெற்றிடம் போலத்தான் தோன்றும். சிறுவர்கள் பொன்வண்டை தீப்பெட்டிக்குள் பிடித்து வளர்ப்பார்கள். சிறு இலை ஒன்றை உணவாக தீப்பெட்டிக்குள் திணித்துவைப்பர். பொன்வண்டு இலையை உண்டுவிட்டு, தீப்பெட்டிக்குள்ளாகவே சுற்றித்திரியும். நானும் ஒரு பொன்வண்டைப் போல. என் நினைவுகளை இலைபோல கடித்துக்கொண்டு மருத்துவமனை அறைக்குள்ளாகவே சுற்றினேன்.

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

மருத்துவமனை வேறு ஒரு உலகம். அங்கு, உங்களின் உடல் உங்களுக்கு வேறொன்றாகத் தெரியும். என் உடலை ஒரு கேக்கைப் போல அறுவைசிகிச்சைக்கு ஒப்புக்கொடுத்தேன். அனஸ்தீசியா கொடுக்கப்பட்டபின், என் உறக்கத்தை நானே கண்டுகொண்டேன். " நிதானமான சொற்களில் பேசினார் மனுஷ்யபுத்திரன். கவிஞர், பத்திரிகையாளர், பதிப்பாளர் அரசியல் பிரமுகர் எனப் பன்முகம் கொண்டவர். இருதய அறுவை சிகிச்சை முடிந்து கவிதை நூல் வெளியீட்டில் இருந்தவரை சந்தித்துப் பேசினேன். அரசியல், கவிதை எனப் பல தளங்களில் அவருடன் உரையாடியதிலிருந்து...

"இன்றைக்கு ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானவுடனேயே உங்களது கவிதையும் ஒன்று வெளியாகிவிடுகிறது. 'பெரும்பாலானவை கவிதைகளாக இருப்பதில்லை, சம்பவங்களாகவே எஞ்சி நிற்கின்றன' என்ற விமர்சனங்கள் உங்கள்மீது முன்வைக்கப்படுகிறதே? எல்லாச் செய்திகளிலும் கவிதைக்கான ஒரு தருணம் இருப்பதாக உணர்கிறீர்களா?"

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

"தெருவில் ஒரு போராட்டம் நடக்கிறது. அந்தப் போராட்டத்தை அரசாங்கம் ஒரு விதமாகப் பார்க்கிறது. போராட்டத்துக்கு எதிரான கருத்துடையவர்கள் ஒருவிதமாகப் பார்க்கிறார்கள். ஊடகங்கள் அதை செய்தியாகப் பார்க்கும். போராட்டக் களத்தில் இருப்பவர்கள், போராட்டத்தை வேறுவிதமாகப் பார்ப்பார்கள். போராடுபவரின் குடும்பத்தினர் அதை மற்றொரு கோணத்தில் பார்ப்பார்கள். இத்தனை பார்வைகள் அந்தப் போராட்டத்தை ஒட்டியிருக்கிறது. அதில் ஒரு கவிஞனின் பார்வையும் இருக்கும்தானே. கவிஞனின் மனம், அந்தப் போராட்டத்தை முன்பு நடந்த ஒரு நிகழ்வோடு பொருத்திப்பார்க்கிறது. இதற்குமுன், இதேபோல் நடந்த போராட்டம் என்னவானது. அங்கு போராடியவர்கள் என்ன ஆனார்கள். அவர்களின் கோரிக்கை என்னவாயிற்று... எனக் கவிஞனின் மனம் யோசிக்கும். பொதுப்புத்தி சார்ந்த புரிதலைத் தாண்டி, வேறு ஓர் அர்த்தம், பார்வை எல்லாவற்றிலும் இருக்கிறது. அதை நான் பதிவு செய்கிறேன்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"சமகாலத்தில், காட்சி ஊடகங்கள் அதிகமாகிவிட்டன. வாசிப்பைத் தாண்டி காட்சி வழியாகப் பதிவுசெய்வதென்பதே பிரதானமாகிவிட்டது. அப்படியிருக்கையில், தற்போது கவிதையின் தேவை மற்றும் எதிர்காலம் என்னவாக இருக்கிறது? "

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

"காட்சி ஊடகத்தின் தீவிரமான பரவலாக்கத்தை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. மனித குல நாகரிகத்தின் தொடக்க காலத்தில், மனிதனிடம் காட்சி வடிவம் மட்டுமே இருந்தது. எழுத்து வடிவமோ, வரி வடிவமோ நம்மிடம் இல்லை. சுவர்களில் ஓவியம் வரைந்தோ, உடல் மொழியின் மூலமாகவோ தன் எண்ணவோட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டான். ஆக, காட்சி வழியாகத் தெரிவிப்பதும் உள்வாங்குவதும்தான் மனித குலத்தின் ஆதியாக இருந்துள்ளது. வரலாறு பெரிய சுற்றுச் சுற்றி தொடக்க இடத்திற்கே வந்து சேர்ந்துள்ளதா என யோசிக்கையில், பிரமிப்பும் திகைப்பும் ஏற்படுகிறது. இல்லை, இது பரிணாமத்தின் இன்னொரு வளர்ச்சியா என்ற பெரிய கேள்வியும் முன்நிற்கிறது. மொழியின், சொற்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என யோசிக்கத் தோன்றுகிறது. ஏனென்றால், மனிதன் சொற்கள் வழியாகவே சிந்திக்கிறான். மொழி சார்ந்த அறிவு வளர்ச்சிக்குப்பின்தான் அவன் சிந்தனாவாதியாக மாறினான். அது, அவனுக்கு உரையாடலுக்கு வழிவகுத்தது. அங்கிருந்துதான் அறிவியல், தத்துவம், பகுத்தறிவு எனப் படிப்படியாக முன்னேறினான். இன்னொருபுறம் காட்சி ஊடகத்தின் வளர்ச்சி நமக்கு அறிவுசார்ந்த வளர்ச்சிக்கும் வழிசெய்கிறது. இந்த ஒட்டுமொத்த உலகமே ஸ்டூடியோவுக்குள் இருக்கிறது. கேமராவில் கண்காணிக்கப்படுகிறது. இந்த உலகம் கண்கள் வழியே பார்க்கப்படுவதில்லை. கேமராவால் பார்க்கப்படுகிறது. "

"தி.மு.க தலைவர் ஸ்டாலின் பலவீனமான தலைமை என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

"பி.ஜே.பி-யைப் போல எம்.எல்.ஏ-க்களின் குதிரைப் பேரத்தில் ஸ்டாலின் ஈடுபடுவதில்லை. கலைஞரின் புதல்வன் ஒருபோதும் அதைச் செய்ய மாட்டார். அதனால்தான் இந்தக் குற்றச்சாட்டு. அவர், ஜனநாயகத்தை மதிப்பவர். சட்டத்தின் வழி செல்பவர். அதுதான் அவரது பலம். ஒரு ஜனநாயகபூர்வமான தலைவர் ஸ்டாலின் போலத்தான் செயல்படுவார். நாடு முழுவதுமுள்ள மதச்சார்பற்ற சக்திகள் அவரை தேசியத் தலைவராகப் பார்க்கிறார்கள். பிற மாநிலத் தலைவர்கள், தமிழகத்தின் முகமாக ஸ்டாலினை நிறுவுகிறார்கள். அவரது இந்த தலைமைப் பண்பு, இந்தியத் தலைவர்களில் சிலரிடமே உள்ளது. "

"குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் இந்திய இஸ்லாமியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அரசியல் ஆதாயத்துக்காகச் சிலர் போராட்டத்தைத் தூண்டிவிடுகிறார்கள். என மத்திய அரசு சார்பில் சொல்லப்படுகிறதே..."

" ஓர் அரசு, விளக்கமோ வாக்குறுதியோ கொடுக்கும்போது, மக்களுக்கு அதன்மீது குறைந்தபட்ச நம்பிக்கை ஏற்பட வேண்டும். பணமதிப்பிழப்பு வந்தபோது, குறைந்தது 50 நாள்களில் இது சரியாகாவிட்டால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்றார் பிரதமர். பின் அது 3 மாதம், 6 மாதம் என நீடித்துக்கொண்டே சென்றது. எதுவும் நடக்கவில்லை. இந்தியா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பேரழிவை நோக்கிச் சென்றது. 'ஒரே நாடு ஒரே வரி' எனக் கொண்டுவந்தனர். அப்போது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? நம்பிக்கைகள் என்ன? 100 வாக்குறுதிகள் கொடுத்து, அதில் ஒரு வாக்குறுதியேனும் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த வாதத்தையாவது பொருட்படுத்தலாம். இந்த அரசாங்கம், பொய் சொல்லக்கூடிய அரசாங்கம். இந்த அரசாங்கம், மக்களைப் பச்சையாக ஏமாற்றக்கூடிய அரசாங்கம். ஒரு திருடன்மீது இருக்கும் நம்பிக்கைதான் இந்த அரசின்மீதும் இருக்கிறது. இவர்கள், எதை நடக்காது என்கிறார்களோ அதுதான் நடக்கும். "

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு