Published:Updated:

“விதிகளைத் தகர்ப்பதே இலக்கியத்தின் விதி!”

இரா.முருகவேள்
பிரீமியம் ஸ்டோரி
இரா.முருகவேள்

சந்தேகத்துக்கே இடமில்லாமல் சமகாலமே முக்கியமானது. ‘புனைபாவை’ எழுதியதற்கான காரணம் வேறு. இன்று சாதியப் பெருமிதம் உச்சத்தை எட்டியிருக்கிறது.

“விதிகளைத் தகர்ப்பதே இலக்கியத்தின் விதி!”

சந்தேகத்துக்கே இடமில்லாமல் சமகாலமே முக்கியமானது. ‘புனைபாவை’ எழுதியதற்கான காரணம் வேறு. இன்று சாதியப் பெருமிதம் உச்சத்தை எட்டியிருக்கிறது.

Published:Updated:
இரா.முருகவேள்
பிரீமியம் ஸ்டோரி
இரா.முருகவேள்
வரலாறு குறித்த பார்வையும் சமகால வாழ்க்கை குறித்த கண்ணோட்டமும் இணையும் புள்ளியில்தான் இரா.முருகவேளின் எழுத்துகள் உருவாகின்றன. ‘எரியும் பனிக்காடு’, ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’, ‘தூக்கிலிடு பவரின் குறிப்புகள்’ போன்ற பல முக்கியமான நூல்கள் முருகவேளின் மொழிபெயர்ப்புப் பங்களிப்புகள். ‘மிளிர்கல்’, ‘செம்புலம்’, ‘புனைபாவை’ போன்ற நாவல்களின்வழி அரசியல் எழுத்துகளை அழுத்தமாகப் பதிவுசெய்யும் இரா.முருகவேளிடம் பேசினேன்.
“விதிகளைத் தகர்ப்பதே இலக்கியத்தின் விதி!”

``எப்போது முருகவேள், எழுத்தாளர் இரா.முருகவேள் ஆனீர்கள்?’’

“என் வீட்டில் அப்பா அம்மா இருவரும் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அப்பா பழந்தமிழ் இலக்கியங்கள், மொழியியல் ஆகியவற்றில் அதீத ஆர்வம் கொண்டவர். அந்தக் கால வழக்கப்படி லஷ்மி, சிவசங்கரி, இந்துமதி என்று அம்மாவுடைய படிப்பு வேறு மாதிரி இருக்கும். ஒன்பதாவது படிக்கும்போது அப்பா வாங்கி வைத்திருந்த ‘லெனினின் வாழ்க்கைக்கதை’ என்ற மரியா பிரிழெலாயெவா எழுதிய நாவலைப் படித்தேன். அது லெனினை ஒரு நண்பரைப் போல, பக்கத்து வீட்டுக் காரரைப்போல அறிமுகப் படுத்தியது. அந்த உலகத்தை மேலும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. பின்பு என்னுடைய படிப்பு சோவியத் இலக்கியங்களை நோக்கித் திரும்பியது. புஷ்கினின் கைபிடித்து ஸ்டெப்பி புல்வெளிகளில் நடந்தேன். லேர்மந்தவ் எனக்குப் பிடித் த மான எழுத்தாளரானார்.

பிறகு உள்ளூர் நூலகத்தில் வங்க இலக்கியங்கள், சரத் சந்திரர், தாகூர் பின்பு ஜெயகாந்தன், கிரா என்று ஒரு சுற்றுச் சுற்றி வந்தது எனது படிப்பு. இந்த நேரத்தில் அரசியல் கட்சிகளோடு கொஞ்சம் வேலை செய்த அனுபவமும் சேர்ந்துகொள்ள எழுத ஆரம்பித்தேன். ‘மிளிர்கல்’ நாவல் வந்த பின்புதான் மற்றவர்கள் என்னை எழுத்தாளன் என்று ஒப்புக்கொண்டார்கள். அதற்கு முன்பே ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், எரியும் பனிக்காடு போன்ற மொழி பெயர்ப்புகளும், நாளி என்ற ஆவணப்படமும் வந்திருந்தன.”

``போர்த்தொழில்நுட்பம் இல்லாமல் அழிந்த பாண்டியர்கள், சாதிகள் திரட்டப்பட்ட காலம் ஆகியவற்றை ‘புனைபாவை’ நூலில் முன்வைக்கிறீர்கள். திருப்பூர் நூற்பாலைகள், என்.ஜி.ஓ பின்னணி, தலித் அரசியல் குறித்து ‘செம்புலம்’ நாவலில் விவரிக்கிறீர்கள். எந்த வரலாறு முக்கியமானது, கடந்தகாலமா, சமகாலமா?’’

“சந்தேகத்துக்கே இடமில்லாமல் சமகாலமே முக்கியமானது. ‘புனைபாவை’ எழுதியதற்கான காரணம் வேறு. இன்று சாதியப் பெருமிதம் உச்சத்தை எட்டியிருக்கிறது. எல்லோரும் தங்களை மன்னர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால் சாதி உருவாக்கத்துக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றிப் பேச விரும்பினேன். இதை விரிவாக அலசும் டி.டி. கோசாம்பியின் ஆய்வுகளை நாவலுக்குள் பொதித்து வைத்திருந்தேன்.”

``தகவல்களைத் திரட்டி நாவல் எழுதும்போது அது இலக்கியச்சுவை இல்லாமல் ஆவணமாக மாறிவிடும் அபாயமிருக்கிறதே?’’

“தகவல்கள் பெரும்பாலும் கதைவடிவில்தான் நமக்கு வந்து சேரும், உதாரணமாக உட்ஸ் உருக்குத்தொழில் நுட்பம் எனப்படும் கொடுமணல் உருக்குத் தொழில் நுட்பம் பற்றிய தகவல்கள் சிலுவைப் போர் பற்றிய கதைகளில் இருந்துதான் தொடங்கும். நாம் கதையை விட்டுவிட்டு தகவலை மட்டும் பிடித்துக்கொண்டால்தான் ஆவணமாகிவிடும். மேலும் மக்களின் செவிவழிக் கதைகளையும், இலக்கியங் களையும் புறக்கணித்துவிட்டு நிபுணர்கள் எழுதியுள்ள தொழில் நுட்பரீதியிலான நூல்களில் மட்டும் கவனம் செலுத்தினாலும் இந்த ஆபத்து ஏற்படும். இரண்டையும் பேலன்ஸ் செய்வதில்தான் எழுத்தாளரின் திறமை இருக்கிறது.”

``முற்போக்கு இலக்கியம் என்பது வறட்டுத்தனமான இலக்கியம் என்று ஒரு கருத்து நிலவுகிறதே?’’

“எல்லாவகையான இலக்கியங்களையும் வறட்டுத்தனமாகவும் எழுதமுடியும், சுவாரஸ்ய மாகவும் எழுத முடியும். எடுத்தால் கீழே வைக்க முடியாத முற்போக்கு இலக்கியங்கள் இருக்கின்றன. பத்துப் பக்கத்தைத்கூடத் தாண்ட முடியாத சீரியஸ் ‘கலை கலைக்காக’ வகை இலக்கியங் களும் இருக்கின்றன. தங்களையும் தங்கள் மண்டைக்குள் ஓடும் சிந்தனைகளையும் தவிர வேறு எதையும் படிக்க விரும்பாத வர்கள் கட்டி விட்ட கதை இவை. ஷோலகாவும், சீமனவும், ஹெமிங்வேயும் காட்டிய உலகம் வறட்டுத்த னமானதா என்ன?’’

``எரியும் பனிக்காடு, ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூல்கள் தமிழ்ச்சூழலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. அந்த மொழிபெயர்ப்பு அனுபவத்தைத் சொல்லுங்கள்.’’

“முதலில் ‘எரியும் பனிக்காடு’ நாவலைத்தான் மொழிபெயர்க்கும் எண்ணம் இருந்தது. ஆனால் தமிழர் களைப் பற்றிய நாவல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டி ருக்கிறது, இதைத் தமிழில் மொழிபெயர்க்கும்போது வட்டார வழக்கைப் பயன்படுத்துவது சரியா என்றெல்லாம் எனக்குச் சந்தேகங்கள் இருந்தன. அந்த நேரத்தில்தான் ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ நூலின் ஆங்கில மூலத்தைப் பார்த்தேன். ‘விடியல்’ பதிப்பக சிவா இதை மொழிபெயர்க்க முடியுமா என்று கேட்டார். படிக்க எளிதாக இருந்தது என்று நினைத்து ஒப்புக் கொண்டேன். ஆனால் மொழிபெயர்க்கும்போதுதான் அது எவ்வளவு கடினம் என்று புரிந்தது. அமெரிக்க ஆங்கிலம். எழுதியவர் எழுத்தாளரும் அல்லர். மிகவும் பெரிய பெரிய சிக்கலான வாக்கிய அமைப்புகள். முதலில் வரிக்கு வரி அப்படியே மொழி பெயர்த்துவிட்டேன். ஆனால் என் மனைவி படித்து விட்டு ‘புரிந்துகொள்ள மிகவும் சிரமமாக இருக்கிறது’ என்றார். ‘ஒரு வருடம் கடினமாக உழைத்து யாராலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்றை எழுதுவதில் என்ன பலன்?’ என்று துணிச்சலை வரவழைத்துக்கொண்டு பொருள் மாறாமல் வாக்கியங் களை எளிமைப் படுத்தினேன். கடுமையான வேலை அது.

‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ கொடுத்த தன்னம்பிக்கையில் எனக்குப் பிடித்த வகையில் எரியும் பனிக்காட்டை மொழி பெயர்த்தேன். திருநெல்வேலி வட்டார வழக்கைப் பயன் படுத்தினேன். மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சில உரிமைகளும் கடமைகளும் உள்ளன. பொருள் மாறக் கூடாது, சிதைக்கக் கூடாது. மூல ஆசிரியர் சொல்லாத ஒன்றைச் சொல்லக் கூடாது. சொல்லாத விதத்தில் சொல்லக் கூடாது. மற்ற எல்லா விதிகளையும் தகர்க்க மொழிபெயர்ப்பாளருக்கு உரிமை உண்டு. பிரேக் த ரூல் என்பதே இலக்கியத்தின் அடிப்படையான விதி.”

``நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் சர்வதேச அரசியல் பொருளாதாரப் பின்னணி உண்டு என்பதை உதாரணங்களுடன் விளக்க முடியுமா?’’

“கல்வி, மருத்துவம், குடிநீர் வழங்கல், போக்குவரத்து போன்ற சேவைத்துறைகளில் அரசு ஈடுபடக்கூடாது என்று உலகவங்கி அறிவுறுத்துகிறது. நமது பி.ஜே.பி அரசின் கொள்கையும் அதுதான். நூறு ஆண்டுக்காலமாக கோவை மக்களின் பணத்தையும், அறிவையும் கொண்டு உருவாக்கப்பட்ட சிறுவாணி அணைக் குடிநீர்த் திட்டம் சூயஸ் என்ற பிரெஞ்சு கம்பெனிக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. குடிநீர் என்பது உரிமை அல்ல; அது விற்று வாங்கும் ஒரு பண்டம், பணம் இருப்பவர்களுக்குத்தான் கிடைக்கும் என்ற உலகமயக் கொள்கை நம் வீட்டுக்குள் வந்துவிட்டது.

அதேபோலத்தான் தனியார் மயமாக்கப்பட்ட பல ரயில்களில் அன்ரிசர்வ்டு பகுதி ஒழிக்கப்பட்டுவிட்டது. அது லாபகரமாக இல்லை என்பதால் அந்தப் பெட்டிகளை ஏசிக்கு மாற்றிவிட்டனர். சாதாரண மக்கள் பயணம் செய்ய வேண்டும் என்பது முக்கியமே இல்லை. அவர்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுப்பதே முக்கியமாக மாறிவிட்டது. இதுதான் உலகமய அரசு. இன்னும் உதாரணங்களைக் கொடுத்துக்கொண்டே போகலாம்.”

“விதிகளைத் தகர்ப்பதே இலக்கியத்தின் விதி!”

`` ‘எரியும் பனிக்காடு’ நாவல்தான் ‘பரதேசி’ திரைப்படமாக மாறியது. அது முழுமையான படைப்பாகத் திருப்தியளித்ததா?’’

``கொஞ்சம்கூடத் திருப்தியளிக்கவில்லை. எல்லாத் தளங்களிலும் படம் தோல்வியே அடைந்திருந்தது. முதல் விஷயம், பஞ்சத்தில் அடிபட்ட நிலப்பரப்புகளும் கண்கவரும் பசுமைக்கு உள்ளே கொடுமழையையும், பனியையும், மலேரியாவையும், நிமோனியாவையும், அட்டைகளையும் ஒளித்து வைத்திருக்கும் மலைகளும் ஒழுங்காகக் காட்டப்படவே இல்லை. நாவலில் தேயிலைத் தோட்டங்கள் இயங்கும் விதம், கங்காணிகளை வைத்து ஆசைகாட்டி ஆட்களை மலைக்குக் கொண்டு வருவது, அவர்களிடம் கொள்ளையடிக்கப்படும் பணம் லண்டன் பங்குதாரர் களுக்குப் போவது என்ற நெட்நொர்க் மிக ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கும். இயக்குநர் பாலாவுக்கு இதைப் பற்றிய குறைந்த பட்ச புரிதல்கூட இல்லை. எஸ்டேட் லைன்களில் வாழும் தலித் மக்களின் வாழ்வியல் படத்தில் கொஞ்சம்கூட இல்லை. படத்தின் இரண்டாவது பாதி முழுக்க பாலா நம்மைக் கட்டிப் பிடித்து அழுது ‘சோகமாக இரு, சோகமாக இரு’ என்று மிரட்டிக்கொண்டே இருப்பார்.

கௌதம் கோஷ் எடுத்த ‘பத்மா நதிர மாஜி’ என்ற ஒரு வங்காள மொழிப் படம் சுந்தரவனக் காடுகளில் மக்களைக் குடியேற்றும் திட்டத்தைப் பற்றியது. பரந்து விரிந்திருக்கும் பத்மா நதியும், சேறு நிறைந்திருக்கும் கிராமங்களும், நதிப் பரப்பிலிருந்து வீசும் காற்றில் கண்கள் சிவந்திருக்கும் மீனவர்களும் என்று அற்புதமான படம் அது. பத்மா நதிர மாஜி தொடாத பல விஷயங்களை ‘எரியும் பனிக்காடு’ தொடுகிறது. கொஞ்சம் நுட்பமாக எடுத்திருந்தால் ‘பரதேசி’ கேன்சில் விருதுகளை அள்ளியிருக்கும். ஆனால் இயக்குநருக்கு அதைப் பற்றிய புரிதல் இல்லாததால் படம் வெறும் போலியான மெலோ டிராமாவாக மாறிவிட்டது. தவிர படத்தில் நாவலாசிரியர் பி. எச் . டேனியலை மதம் மாற்றுபவராகவும், வெள்ளைக் காரருடன் உட்கார்ந்து குடிப்பவராகவும் காட்டியதில் எனக்குக் கடுங்கோபம் உண்டு.”

``அண்மையில் நீங்கள் ஜெயமோகனின் ஒரு சிறுகதையை விமர்சித்ததற்காக ‘இரா.முருகவேளுக்கு இலக்கியமும் தெரியாது, சட்டமும் தெரியாது’ என்று விமர்சித்திருந்தாரே?’’

“ஜெயமோகனின் அந்தக் கதையில் ‘இருட்டில் காரை மர நிழலில் நிறுத்தினான்’ என்பது போன்ற பிழைகளை விட்டுவிடலாம். கதையின் அடிப்படையிலேயே படுமோச மான தவறுகள் இருந்தன. விபத்தில் காயம்பட்டவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று கதையில் ஒரு பயிற்சி டாக்டர் சொல்கிறார். ஒரு மருத்துவ மனையில் விபத்து சிகிச்சைப் பகுதி இருக்கும். இந்த மாதிரி உரையாடல் நிகழ முடியாது என்பதை சமூகவலைதளத்தில் பல டாக்டர்களும், வக்கீல்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

காயம்பட்டவரைக் காப்பாற்றிய நல்லவரை வக்கீல்கள் 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகின்றனர் என்று கதை போகிறது. விபத்து வழக்குகளில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் இழப்பீடு வாங்குவதுதான் வழக்கம். வாகனத்தை இன்ஷூர் செய்துள்ள ஒருவர் ஏன் பதினைந்து லட்சம் கொடுக்க வேண்டும்? இந்தத் தவறுகள் தவிர, கதையில் வக்கீல்கள், டாக்டர்கள், போலீஸ் கதாபாத்திரங்களின் சித்திரிப்பு அவ்வளவு மோசமாக இருந்தது. ஏழைகள் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற வலதுசாரி மனப்போக்கு கதையில் அப்பட்டமாக இருந்தது. இதைச் சுட்டிக் காட்டி யதற்குத்தான் பதில் சொல்லத் தெரியாமல் ‘முருகவேளுக்கு சட்டம் தெரியாது, இலக்கியம் தெரியாது’ என்கிறார் ஜெயமோகன். விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இழப்பீடு வாங்கித் தரும் அளவுக்குத்தான் எனக்கு சட்டம் தெரியும். சட்டத்துக்குள் நுழைந்து தரிசனக் கனிகளைப் பறித்து வந்து ஜூஸ் போட்டுத் தரும் ஜெயமோகன் அளவுக்கு எனக்கு சட்டம் தெரியாது.”

``தமிழ்ப் பண்பாட்டில் போற்ற வேண்டியவை, நீக்க வேண்டியவை என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?’’

“முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்ச் சமூகத்தில் பெரும்பாலான சாதிகள் விவாகரத்தையும் மறுமணத்தையும் ஏற்றுக் கொண்டன. இந்தப் பண்பாட்டு அம்சம் தொடரவேண்டும். சாதி, ஆணாதிக்கம், பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்க மறுத்தல் ஆகியவை நம் பண்பாட்டில் ஒழிக்கப்பட வேண்டியவை. பழைய காலங்களில் கிராமங்கள் ஓரளவு தங்கள் தேவையைத் தாங்களே பூர்த்தி செய்து கொண்டன. இப்போது நகர வளர்ச்சிக்காக கிராமங்களை அழிக்கும் போக்கு இருக்கும் கால கட்டத்தில் ஓரளவு தன்னிறைவு கொண்ட சமூகங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. தன்னிறைவு என்றால் காந்தியவாதிகள், இயற்கை வேளாண்வாதிகள் சொல்வது போல எல்லா அறிவியல் வளர்ச்சியையும் மறுப்பது அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism