Published:Updated:

புலம்பெயர் வாழ்க்கையை புனைவாக்கிய கதைசொல்லி! - ப.சிங்காரம் 100

ப.சிங்காரம்
பிரீமியம் ஸ்டோரி
ப.சிங்காரம்

இலக்கியம் - ந.முருகேசபாண்டியன்

புலம்பெயர் வாழ்க்கையை புனைவாக்கிய கதைசொல்லி! - ப.சிங்காரம் 100

இலக்கியம் - ந.முருகேசபாண்டியன்

Published:Updated:
ப.சிங்காரம்
பிரீமியம் ஸ்டோரி
ப.சிங்காரம்

வரலாறு என்பது விநோதமானது. முன்னர் எப்பொழுதோ நடந்த ஒரு சம்பவத்தை முன்வைத்துப் பல்வேறு வரலாறுகள் எழுதப்படுகின்றன. அவற்றில் புனைவுகள் தோய்ந்திருக்கின்றன. வரலாற்றின் பக்கங்களில் மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கைக் கதைகள், ஆவணங்களாகப் பதிவாகியுள்ளன. கர்ண பரம்பரைக் கதைகள், செவிவழிக் கதைகள் மூலமாகவும் காலந்தோறும் வரலாறு தொடர்கிறது. புனைவு இலக்கியம் என்ற பெயரில் கற்பனையாகக் கதைக்கப்படுகிற நாவல்களில்கூட கடந்த காலத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தமிழில், நாவலைப் பொறுத்தவரையில் தொடக்கம் முதலாகவே குடும்பக் கதைகள்தான் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பின்னர் துப்பறியும் மர்மக் கதைகள், மன்னர் கால வரலாற்றுக் கதைகளும் செல்வாக்குப் பெற்றன. தமிழர்கள் புலம்பெயர்ந்து அயல்நாடுகளுக்குச் செல்வது கி.பி. 18ஆம் நூற்றாண்டில் தொடங்கினாலும் புதுமைப்பித்தனின் `துன்பக்கேணி’ போன்ற படைப்புகள் அதிகமாக எழுதப்படவில்லை. தமிழக நிலவெளிக்குள் ஒற்றைத்தன்மையுடன் கதை சொல்லும் பொதுப்போக்கு நிலவியது. இத்தகைய காலகட்டத்தில் ப.சிங்காரத்தின் `கடலுக்கு அப்பால்’ (1959), `புயலிலே ஒரு தோணி’ (1972) ஆகிய இரு நாவல்களும் மாறுபட்ட தளத்தில் விரிந்தவை.

தமிழகம், அயல்நாடு என இருவேறு நிலப்பரப்புகளில் தமிழர் எதிர்கொண்ட வாழ்க்கை அனுபவங்களை, வரலாற்றுப் பின்புலத்தில் ப.சிங்காரம் விவரிக்கிற கதைசொல்லல் தமிழுக்குப் புதிது. அத்தகைய ப.சிங்காரத்துக்கு இது நூற்றாண்டு.

நண்பர் சி.மோகன் எழுதிய ப.சிங்காரத்தின் நாவல்கள் பற்றிய விமர்சனம், இலக்கிய உலகில் புதிய பேச்சுகளை உருவாக்கியது. தமிழினி பதிப்பகம் மூலம் வசந்தகுமார் அழகிய பதிப்பாக 1999ஆம் ஆண்டு வெளியிட்ட `புயலிலே ஒரு தோணி' நாவலும், அதில் இடம்பெற்ற சிங்காரம் பற்றிய எனது பதிவுகளும் மறுபேச்சுகளை உருவாக்கின. இன்று ப.சிங்காரம் பெயர், தமிழ் நாவல் வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெறத்தக்க அளவில், வாசிப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

புலம்பெயர் வாழ்க்கையை புனைவாக்கிய கதைசொல்லி! - ப.சிங்காரம் 100

நூற்றாண்டு கண்ட ப.சிங்காரத்தின் வாழ்க்கைக் குறிப்புகள், அவருடைய நாவல்களைப் புரிந்துகொள்ள உதவும் என்ற நோக்கில் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிங்கம்புணரி கிராமத்தில், மூக்க நாடார் என்ற கு.பழநிவேல் நாடார்-உண்ணாமலை அம்மாள் ஆகியோரின் மூன்றாவது மகனாக ப.சிங்காரம் 12-08-1920 அன்று பிறந்தார். சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியிலும் மதுரை செயின்ட்மேரிஸ் பள்ளியிலும் பயின்றார். சிங்கம்புணரியைச் சார்ந்த செ.கா.சின்னமுத்துப்பிள்ளை இந்தோனேசியாவில் மைடான் என்ற இடத்தில் வைத்திருந்த வட்டிக்கடையில் வேலை செய்வதற்காக 1938ஆம் ஆண்டு கப்பலேறினார். 1940இல் இந்தியா வந்து மீண்டும் இந்தோனேசியா சென்று அங்கு மராமத்துத்துறை அலுவலகத்தில் பணியாற்றினார். அங்கேயே திருமணம் செய்துகொண்டார். பிரசவத்தின்போது அவர் மனைவியும் பிறந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டனர். அவர் மனைவியின் பெயர், ஊர் போன்ற தகவல்களை அறிய இயலவில்லை.

1946ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பியவர், மதுரையிலே தங்கிவிட்டார். `தினத்தந்தி' நாளிதழில் செய்திப் பிரிவில் பணிக்குச் சேர்ந்தார். மதுரை YMCA தங்குமில்லத்தில் ஐம்பது ஆண்டுகளாகத் தங்கியிருந்தார். சொந்த ஊரான சிங்கம்புணரிக்கு அபூர்வமாகவே சென்று வந்தார். நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதையும் விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் கடைசிவரை தவிர்த்துள்ளார்.

ப.சிங்காரம் எழுதிய ‘கடலுக்கு அப்பால்' நாவலுக்குக் ‘கலைமகள்' நாவல் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. 1959இல் `கடலுக்கு அப்பால்' நாவல் வெளியானது. `புயலிலே ஒரு தோணி' நாவலை 1962இல் எழுதினார். அது 1972ஆம் ஆண்டு கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. நாவல்களை வெளியிடுவதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக, தொடர்ந்து எழுதவில்லை என நண்பர்களிடம் கூறியுள்ளார்.

1987ஆம் ஆண்டு தினத்தந்தி பணியிலிருந்து தானாக விரும்பி ஓய்வுபெற்றார். 1997ஆம் ஆண்டு YMCA நிர்வாகம் அவரைக் கட்டாயப்படுத்தி விடுதியிலிருந்து வெளியேற்றியது. மதுரை, விளக்குத்தூண் அருகிலுள்ள நாடார் மேன்சன் விடுதியில் குடியேறினார் ப.சிங்காரம். ஏற்கெனவே அவர் இதயநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், டிசம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட இடைவிடாத வயிற்றுப் போக்கு, அவருடைய உடல்நிலையை பாதித்தது. மதுரை கென்னட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்கேன் எடுப்பதற்காக வெளியே கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்சிலேயே இறந்தார். இறந்த நாள் 30-12-1997.

ப.சிங்காரத்தின் நூற்றாண்டு விழாக் காலகட்டத்தில், அவருடைய நாவல்களை தமிழினி, நற்றிணை, காலச்சுவடு, டிஸ்கவரி, என்.சி.பி.ஹெச், புலம், பரிதி ஆகிய ஏழு பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. பாக்கெட் நாவல் அசோகன், `புயலிலே ஒரு தோணி' நாவலை மலிவுப் பதிப்பாக 30 ரூபாய் விலையில் வெளியிட்டுள்ளார். ப. சிங்காரம் வாழ்ந்தபோது அவர் எழுதிய நாவல்கள் போதிய கவனம் பெறாமல் இருந்தன. இன்று இளைய தலைமுறையினரால் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகின்றன. ஒரு பிரதியில் பொதிந்திருக்கிற கருத்தியல் சார்ந்து அந்தப் பிரதி தனக்கான இடத்தைக் காலங்கடந்து தக்க வைத்துக்கொள்ளும் என்பதற்கு ப.சிங்காரத்தின் நாவல்கள் சாட்சியங்கள்.

கி.பி. 10ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசின் கடல் ஆதிக்கம் காரணமாக மலேயா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் தமிழரின் அதிகாரம் நிலவியது. அன்றைய தமிழர்களின் வரலாற்று எச்சங்கள் இன்றளவும் மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. அதற்குப் பின்னர் 19ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில், தமிழகத்தில் நிலவிய வறுமை, தீண்டாமை காரணமாக மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுபவித்த துயரங்கள் ஏராளம். வணிகம், வட்டித் தொழில் செய்வதற்காகக் கப்பலேறிய தமிழர்கள் அந்த நாடுகளில் செழிப்புடன் வாழ்ந்தனர். தமிழகம், தென் கிழக்காசிய நாடுகள் என்ற இருவேறு நிலங்களில் மனிதர்களின் தேடல்கள் எப்படியெல்லாம் விரிந்துள்ளன என்ற புனைவின் வழியே ப.சிங்காரம் விவரித்துள்ள காட்சிகள், வாசிப்பின் வழியே முடிவற்ற உலகினுக்கு இட்டுச் செல்கின்றன. ப.சிங்காரம் எழுதியுள்ள `கடலுக்கு அப்பால்', `புயலிலே ஒரு தோணி' ஆகிய இரு நாவல்களும் புலம்பெயர்ந்த தமிழர் வாழ்க்கையைப் பதிவாக்கியதுடன், நுட்பமான கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தோன்றும் காதலில் சாதி, சமயம், பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக ஏற்படுகிற முரண்களே நாவல்களாகியுள்ள தமிழிலக்கியத்தில் இருந்து `கடலுக்கு அப்பால்’ நாவல் முழுக்க மாறுபடுகிறது. காதலர் பிரிவினுக்குப் போர் காரணமாகிறது. இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலையைப் பற்றி நாவல் விவரிக்கும் சம்பவங்கள், அழுத்தமான பதிவுகள். `மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை’ என்ற தேறுதலுடன் முடியும் நாவலின் இறுதி வரிகள்தான் ப.சிங்காரம் சொல்ல விழைவதா? யோசிக்க வேண்டியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புலம்பெயர் வாழ்க்கையை புனைவாக்கிய கதைசொல்லி! - ப.சிங்காரம் 100

ப.சிங்காரம் புனைந்துள்ள மொழியின் அதிகபட்ச சாத்தியங்கள், நாவல்கள் ஆக்கத்தில் புதிய பரிமாணங்களைத் தந்துள்ளன. தமிழில் எந்த நாவலாசிரியரும் தொட்டிராத சிகரத்தைத் தனக்கான புதிய மொழியின் வழியே ப.சிங்காரம் அடைந்துள்ளார். `புயலிலே ஒரு தோணி' நாவல், தலைப்பினுக்கேற்ப கதையாடலில் அங்குமிங்கும் இடைவிடாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. சிம்பனி இசைக்கோவை போல நாவலின் கதைப்போக்கில் பல்வேறு கதைக்கருக்கள், தோன்றி, வளர்ந்து மறைந்து, மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அவை, வாசகனை வெவ்வேறு தளங்களுக்கு முடிவற்று இழுத்துச் செல்கின்றன.

ப.சிங்காரத்தின் நாவல்கள் வெளியானபோது, தமிழகத்தில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆனால், எண்பதுகளுக்குப் பின்னர் `புயலிலே ஒரு தோணி’ நாவல் பற்றி உருவான பேச்சுகள் பரவலாகின. அன்றைய காலகட்டத்தில் தஞ்சை பிரகாஷ், சிட்டி, சிவபாத சுந்தரம், கி.ராஜநாராயணன், வண்ணநிலவன், பிரபஞ்சன், கோணங்கி, சி.மோகன், ராஜ மார்த்தாண்டன், விக்ரமாதித்யன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற இலக்கிய ஆளுமைகள் ப.சிங்காரத்தின் நாவல்களைக் கொண்டாடினர். ப.சிங்காரத்தின் நாவல்களை வாசித்துவிட்டு, அவை எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தினால் 1984ஆம் ஆண்டு மதுரையில் ப.சிங்காரத்தை நேரில் சந்தித்தேன். அவரை நேர்காணல் காண்பது எனது நோக்கம். அவர் ‘ஏதோ நாவல் எழுதினேன். அந்த ஆர்வம் இப்ப இல்லை’ என்று நேர்காணலுக்கு மறுத்துவிட்டார். அந்தச் சந்திப்பு பற்றிய என் பதிவுகள், ஒருவகையில் ப.சிங்காரம் பற்றிய வரலாறாகிவிட்டன. அப்பொழுது அவர் என்னிடம் சொன்ன சில தகவல்கள்:

``பதினெட்டு வயசுல கப்பலேறினேன். வட்டிக் கடையில வேலை பார்த்தேன். அப்ப ரெண்டாம் உலக யுத்தம் தொடங்கினதால, இந்தியாவுக்குக் கப்பல் போக்குவரத்து இல்ல. இந்தியாவிலிருந்து எந்தத் தமிழ்ப் பத்திரிகையும் அங்க வராது. வேற வழியில்லாம பினாங்கு லைப்ரரியில ஹெமிங்வே, தல்ஸ்தோய், பாக்னர், செகாவ், தாஸ்தாயேவ்ஸ்கி... இப்படிப் பலரையும் படிக்க ஆரம்பிச்சேன். ஹெமிங்வேயோட `ஏ ஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ்' எனக்கு ரொம்பப் பிடிச்ச நாவல். அது அமெரிக்க இலக்கியத்துல திருப்புமுனைன்னு நினைக்கிறேன். தல்ஸ்தோயோட `அன்னா கரேனினா' நம்பர் ஒன். ஆனால், மேல்நாட்டு க்ரிட்டிக்ஸ் `வார் அண்ட் பீஸ்' தான் சிறந்ததுன்னு சொல்றாங்க.

என்னோட நண்பர்கள் பலர் ஐ.என்.ஏவுல இருந்தாங்க. ஆர்மியில பெரிய பதவியில் சிலர் இருந்தாங்க. அங்க பினாங்கில காபி, டீ கடைகள் ஐரோப்பா மாதிரி இருக்கும். அதை கிளப்ன்னு சொல்வாங்க. சாயங்கால நேரம் ஒரு கோப்பை காபியைக் குடிச்சிட்டு ஐந்தாறு மணிநேரம் பேசிக்கிட்டிருப்போம். அப்பத்தான் யுத்தம் பத்தின பல சமாசாரங்களைக் கேள்விப்பட்டேன். அப்புறம் நண்பர்களுடன் சேர்ந்து நானே பல ராணுவ முகாம்களுக்கு நேரடியாகப் போயிருக்கேன். நாவல்னா என்னா? கற்பனையில எழுதுறதுதானே! அப்படியேவா எழுதணும்? நாம கேள்விப்பட்ட விஷயங்கள், அனுபவங்களைத் தொகுத்துக் கற்பனையோடு எழுதலாம். ஒரு கதாபாத்திரம்னா அவன் ரெண்டு மூணு பேரோட சேர்க்கையா இருக்கலாம். நாவல்ல வர்ற சின்னமங்கலம் கிராமம்கூட ரெண்டு கிராமங்களை ஒன்றாக்கியதுதான்.

புலம்பெயர் வாழ்க்கையை புனைவாக்கிய கதைசொல்லி! - ப.சிங்காரம் 100

`புயலிலே ஒரு தோணி' நாவலைப் போட்டால், இன்னிக்கி யாரு காசு கொடுத்து வாங்கிப் படிப்பாங்க? இங்க சீரியஸா படிக்கிற வழக்கமே இல்லாமப்போச்சு. சீரியஸா எழுத எவ்வளவோ விஷயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில் எங்க இருக்கு? ஆனால், போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க... அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும். பாருங்க... `புயலிலே ஒரு தோணி' நாவல்ல தோணில போறதப் பத்தி ஒரு இடம் வருது. அது நாங்க யுத்த நேரத்துல இந்தோனேசியாவிலிருந்து மலேயாவுக்குச் சரக்குகளோட போனதுதான். புயலடிச்சதால சரக்குகளைக் கடலில் வீசினோம். நாவல் எழுதறப்ப தோணுன சில சந்தேகங்களைக் கூட வந்தவங்ககிட்டே கேட்டேன். `ஆமா, போனோம். வந்தோம். கூட யாரு வந்தா, என்ன நடந்ததுங்கிறதெல்லாம் ஞாபகமில்லே'ன்னுட்டாங்க. வெள்ளைக்காரன் மூணு வருஷம் நம்ம நாட்ல வந்து தங்கினாப் போதும். நம்ம வாழ்க்கையை வச்சு நாவல் எழுதிப்பிடுவான். மதுரை டவுன்ஹால் ரோட்ல சாயங்காலம் நடக்கிறதப் பார்த்தீங்களா? மூணுசீட்டு போடுறவன், திரி குத்துறவன், முடிச்சவிழ்க்கிறவன், கூவி ஏலம் போடுறவன், பிராத்தலுக, மாமாகாரனுக... நிறைய எழுதலாம். அதுமாதிரி கீழமாசி வீதிப் பலசரக்குக் கடைகள்.... அது ஒரு தனி உலகம். அங்க நடக்கிறத வச்சு எவ்வளவு எழுதலாம் தெரியுமா? உண்மையாச் சொன்னா நம்ம வாழ்க்கையிலதான் எழுத எவ்வளவு விஷயமிருக்கு தெரியுமா? ஆனால் கூர்மையாகப் பார்த்து எழுதுற வழக்கம் நம்ம ஆளுகளுக்குக் கிடையாது.”

தமிழின் முதல் புலம்பெயர் நாவலை எழுதிய ப.சிங்காரத்தை நாம் காலதாமதமாகவே கண்டுகொண்டோம். இந்த நூற்றாண்டிலாவது அவர் எழுத்துகளின் வலிமையை உணர்ந்து கொண்டாடத் தொடங்குவோம்!