Published:Updated:

"இலக்கியம் அகத்தேவை; அதை டிஜிட்டல் யுகத்துக்கு எப்படி வழங்குவது என்பதே சவால்!"- எழுத்தாளர் பாவண்ணன்

எழுத்தாளர் பாவண்ணன்

"ஒவ்வொரு நாடகப் பிரதிக்கும் காலம் கடந்து நிற்கும் ஆற்றல் உண்டு. இன்று அவை மேடையில் நிகழ்த்தப்படவில்லை என்பதற்காக எதிர்காலத்திலும் நிகழ்த்தப்பட வாய்ப்பில்லை என்று சொல்லிவிட முடியுமா?"- எழுத்தாளர் பாவண்ணன்

"இலக்கியம் அகத்தேவை; அதை டிஜிட்டல் யுகத்துக்கு எப்படி வழங்குவது என்பதே சவால்!"- எழுத்தாளர் பாவண்ணன்

"ஒவ்வொரு நாடகப் பிரதிக்கும் காலம் கடந்து நிற்கும் ஆற்றல் உண்டு. இன்று அவை மேடையில் நிகழ்த்தப்படவில்லை என்பதற்காக எதிர்காலத்திலும் நிகழ்த்தப்பட வாய்ப்பில்லை என்று சொல்லிவிட முடியுமா?"- எழுத்தாளர் பாவண்ணன்

Published:Updated:
எழுத்தாளர் பாவண்ணன்

இந்த வார ஆனந்த விகடன் இதழில், “இன்று மரப்பாச்சி விளையாட்டும் இல்லை... மரக்குதிரைகளும் இல்லை!” என்ற தலைப்பில் எழுத்தாளர் பாவண்ணனின் பேட்டி வெளியாகியிருக்கிறது. அந்த நீண்ட உரையாடலில் விடுபட்ட கேள்விகளும் பதில்களும் இங்கே இன்னும் விரிவாக...

இந்தப் பேட்டியின் முந்தைய பகுதிகள், கீழேயுள்ள இணைப்பில்...

"உங்கள் காலக்கட்டத்தைச் சேர்ந்த தற்போதும் இயங்கிக்கொண்டிருக்கிற காத்திரமான படைப்பாளிகள் என்று யாரையெல்லாம் குறிப்பிடுவீர்கள்?"

"எங்கள் காலத்தின் நற்பேறு என்றுதான் சொல்லவேண்டும். என் காலகட்டத்தில் எழுதத் தொடங்கிய கோணங்கி, சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன், எஸ்,ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, கெளதம சித்தார்த்தன், எஸ்.சங்கரநாராயணன் எல்லாருமே இன்னும் ஆர்வமோ, படைப்பூக்கமோ சற்றும் குறையாமல் எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம். எங்களை அடுத்து வந்த எம்.கோபாலகிருஷ்ணன், சு.வேணுகோபால், மோகனரங்கன், உமா மகேஸ்வரி, தேவிபாரதி ஆகியோரும் இன்னும் வற்றாத ஆர்வத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நம்மைச் சூழ இருப்பவர்கள் சுறுசுறுப்பாகவும் உற்சாகத்துடன் இருப்பதைப் பார்க்கும்போது தானாகவே நமக்கும் உற்சாகம் பிறந்துவிடுகிறது."

"அவசியமாக தமிழுக்குச் செய்தேயாக வேண்டிய மொழிபெயர்ப்புகள் என்று இளம் தலைமுறைக்கு எவற்றையெல்லாம் அடையாளம் காட்டுவீர்கள்?"

"ஏராளமானவை உண்டு. இக்கணத்தில் உடனடியாக என் நினைவுக்கு வரும் சில புத்தகங்களின் பெயர்களைச் சொல்கிறேன்.

லியோ தல்ஸ்தோய் எழுதிய The Kingdom of God Is Within You,

சிவராம காரந்த் வாழ்க்கை வரலாறான Ten faces of a crazy mind,

ஹெலன் கெல்லர் தன்வரலாறான The Story of My Life,

ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய நாவல் Ulysses,

சார்லஸ் டிக்கன்ஸன் எழுதிய நாவல் BLEAK HOUSE,

தன்வரலாற்று நூலான Autobiography Of Benvenuto Cellini,

ஜார்ஜ் எலியட் எழுதிய நாவல் Middlemarch.''

"நீங்கள் மிகச்சிறந்த கதைசொல்லி. கனிந்த குரலில் வசீகரமாக விவரிக்கக்கூடியவர். மிகவும் ரசித்து உணர்வுபூர்வமாக நீங்கள் சொல்லக்கூடிய கதையென்றால் எதைச் சொல்வீர்கள்?"

"இளம் எழுத்தாளர்களுக்கான சில பயிற்சிப்பட்டறைகளில் அப்படி சில கதைகளைச் சொல்ல நேர்ந்திருக்கிறது. தி.ஜானகிராமனின் சிலிர்ப்பு, புதுமைப்பித்தனின் செல்லம்மாள், கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார், கி.ராஜநாராயணனின் கன்னிமை, கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு போன்ற கதைகள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன."

"உங்களுடைய சிறுகதைகளில், பிற கலைஞர்களின் வாழ்வையும் பேசியிருக்கிறீர்கள். உதாரணமாக தெருவில் நடனமாடும் இரண்டு சிறுமிகளின் `ஆட்டம்’ சிறுகதை. அதேபோல சிற்பி, நாடகக்கலைஞர் இப்படிப் பிற கலைஞர்களின் வாழ்வும் ஓர் இழையாக உங்கள் சிறுகதைகளில் இடம்பெற்றிருக்கிறது. கலையும், கலைஞர்களும் உங்கள் படைப்போடு கலந்தது எப்படி?"

"தெருவிலே வட்டமாகக் கூடியிருக்கும் பத்து பேருக்கு நடுவில் ஆடுகிறவர்களாகவோ பாடுகிறவர்களாகவோ இருக்கும் கலைஞர்களாக இருந்தாலும் சரி, அலங்காரம் செய்த மேடைகளில் ஆயிரம் பேருக்கு முன்னால் ஒப்பனையோடும் தாளங்களோடும் ஆடுகிறவர்களாகவும் பாடுகிறவர்களாகவும் இருக்கும் இருந்தாலும் சரி, கலையின் எழுச்சி பொங்கி வெளிப்படும் தருணங்கள் இருவருக்குமே ஒரே தன்மையுடையவைதான். அதில் வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் பெரும்பாலான பார்வையாளர்களின் மனத்தில் ஒருவர் தெருக்கலைஞராகவும் இன்னொருவர் மேடைக்கலைஞராகவும் மட்டுமே பதிவாகிறார். அவர்களுடைய எதிர்வினைகளும் அப்படித்தான் உள்ளன. நுட்பமாக சிறுமைப்படுத்துவதிலேயே அவர்கள் குறியாக இருக்கிறார்கள். அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ளும் கலைஞர்களைப் பார்த்தால் சங்கடமாக இருக்கிறது. கலையின் மதிப்பை, அது வெளிப்படும் சூழலை முன்வைத்து அளவிடும் அரைகுறை மதியாளர்களின் அகங்காரம் அருவருப்பை அளிக்கிறது. இப்படி உருவாகும் மனபாரங்களை எழுதித்தான் கரைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஹேமந்தகுமார் என்னும் திரைப்பட இசையமைப்பாளரைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தித் திரைப்பட உலகில் கொடிகட்டிப் பறந்தவர். தமிழில் கூட கணவனே கண்கண்ட தெய்வம் என்கிற திரைப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அவர் நாகின் என்னும் திரைப்படத்துக்கு இசையமைத்துக்கொண்டிருந்தபோது, அவர் மனத்தில் இருந்த இசைக்கோவையை அவர் குழுவில் ஒருவராலும் இசைக்க முடியவில்லை. ஒருநாள் தன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, தற்செயலாக அப்படிப்பட்ட இசைக்கோவையை தெருவோரத்தில் ஆர்மோனியப்பெட்டியோடு உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தவர் இசைப்பதைக் கேட்டார். உடனே வண்டியை விட்டு இறங்கி கூட்டத்தோடு கூட்டமாக நின்று அந்த இசையைக் கேட்கத் தொடங்கினார். அந்த இசையில் மனம் பறிகொடுத்து அவர்களை அக்கணமே அங்கிருந்து அழைத்துச் சென்று தன் குழுவில் இணைத்துக்கொண்டார். பிற்காலத்தில் அவர்கள் அதே இந்தி உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களாக கொடிகட்டி வாழ்ந்தார்கள். கல்யாண், ஆனந்த் என்னும் பெயருடைய சகோதரர்கள். கோடியில் ஒருவருடைய வாழ்க்கையிலே அப்படிப்பட்ட தருணம் அமையக்கூடும். ஹேமந்தகுமார் போல ஒருவருடைய வாழ்க்கையிலே திருப்புமுனையை நம்மைச் சுற்றியுள்ள பார்வையாளர்கள் உருவாக்க வேண்டியதில்லை. குறைந்தபட்சமாக மனமாரப் பாராட்டினாலே போதும்."

எழுத்தாளர் பாவண்ணன்
எழுத்தாளர் பாவண்ணன்

"நவீன வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு பெரியாழ்வார், மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணை போன்ற பாத்திரங்களை மையப்படுத்தியும் சிறுகதைகள் எழுதியிருக்கிறீர்கள். இது போன்ற பாத்திரங்கள் ஒரு படைப்பில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தீர்கள்? இதிகாச, புராண பாத்திரங்களை மையப்படுத்தி எழுதியதற்கு ஏதாவது பிரத்யேகக் காரணம் உண்டா?"

"அந்தக் காலமாக இருந்தாலும் சரி, இந்தக் காலமாக இருந்தாலும் சரி உணவுமுறை, உழைக்கும் முறை, உடுத்தும் முறை, வீடுகளை அமைத்துக்கொள்ளும் முறை என சில அம்சங்களில் வேண்டுமானால் மாற்றங்கள் உருவாகியிருக்கலாம். ஆனால் சில அடிப்படையான கணங்களும் அக்கணங்களில் உருவாகும் தவிப்புகளும் தடுமாற்றங்களும் அச்சங்களும் மாற்றமில்லாமல் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. நீங்கள் குறிப்பிடும் பெரியாழ்வாரைப் பாத்திரமாகக் கொண்ட கதையின் பெயர் புதிர். ஒரு பெண் தன் காதலையும் முடிவையும் தன் தந்தையிடம் முன்வைக்கும்போது, அத்தந்தை உடனடியாக பதற்றமடைகிறார். காதலுக்கான காரணத்தை எப்படிப் புரிந்துகொள்ள முடியாதோ, அதுபோலவே பதற்றத்துக்கான காரணத்தையும் புரிந்துகொள்ள முடியாது. காலமெல்லாம் தொழுதேத்தும் இறைவனையே தன் மகள் மணந்துகொள்ள இருக்கும் செய்தியைக் கேட்டு ஒரு தந்தையாக பெரியாழ்வார் மகிழ்ச்சியடைவதுதானே நிறைவளிக்கும் முடிவாக இருக்கும். ஆனால் அதற்கு நேர்மாறாக அவர் பதற்றமடைகிறார். மகளின் மனத்தைத் திசைதிருப்ப முயற்சி செய்கிறார். அது தோல்வியடையும்தோறும் துவண்டுபோகிறார். ஒரு தந்தையாக அவர் அடையும் தவிப்புகளுக்கான காரணம் என்பது எப்போதும் புதிரானவை. காதல் அரும்பியது எப்படிப் புதிரானதோ, அதேபோல பதற்றம் உருவானதும் புதிரே. விடையற்ற அத்தகு புதிர்களின் ஊடேதான் வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிப் பார்ப்பதுபோல, புராண காலத்துத் தருணமொன்றை கற்பனை செய்து பார்க்கும் முயற்சிதான் அது. காவியத்தருணங்களை மீட்டுருவாக்கம் செய்து நிகழ்த்துவது என்பது நாடக மரபில் ஒரு முக்கியமான அம்சம். பஸன் எழுதிய நாடகங்கள் அத்தகையவை. அந்தப் புள்ளியிலிருந்து ஒரு கதைமரபை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். புராணத்திலிருந்து கச்சிதமாக வெட்டியெடுக்கப்பட்ட ஒரு துண்டு. அதன் வழியாக துலங்கிவரும் வாழ்க்கை. அதில் வெளிப்படும் துயரம். கண்ணீர். அவமானம். இயலாமை. ஒரு சிறிய ஜன்னல் வெளியே உள்ள வானத்தையும் நாம் அடைபட்டிருக்கும் நாலு சுவர்கொண்ட அறையையும் இணைத்துவிடுவதுபோல, அந்தக் கதையை வாசிக்கும் போக்கில் ஒரு வாசகன் புராணவாழ்க்கையையும் நவீன வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்கும் ஒரு தருணம் அமையக்கூடும் என்பது என் நம்பிக்கையாக இருந்தது. என்னிடம் உரையாடிய பல வாசகர்களிடம் அது நிகழ்ந்திருப்பதை என்னால் உணரமுடிந்தது. அதனால் பெற்ற எழுச்சியே மீண்டும் மீண்டும் பல கதைகளை எழுதிப் பார்க்க தூண்டுகோலாக இருந்தது."

"கன்னடத்திலிருந்து தமிழுக்கு ஏராளமான மொழிபெயர்ப்புகளைத் தந்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பில் உங்களை ஈடுபடுத்தியது எது... அதிலும் கன்னடப் படைப்புகளை மொழிபெயர்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது ஏன்?"

"கன்னட மொழியை முதன்முதலாக கற்றுக்கொள்ளும்போது, இந்த மண்ணில் வாழ்கிறோம், இந்த மண்ணின் மொழியை அறிந்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணமே என்னிடம் இருந்தது. செய்தித்தாட்களும் வார இதழ்களும் படிக்கத் தொடங்கியதுமே இலக்கியப்படைப்புகளைத் தேடியெடுத்துப் படிக்கும் விருப்பம் உருவானது. இந்திய எழுத்தாளர்களின் என் மனம் கவர்ந்தவர் சிவராம காரந்த். அப்போதே அவருடைய சில நாவல்கள் தமிழில் வெளியாகியிருந்தன. அவை எல்லாமே என் மனம் கவர்ந்தவை. அப்போது அவர் எழுதிய நாவலான சோமனதுடி திரைப்படமாக எடுக்கப்பட்டு நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருந்தது. நூறு நூற்றைம்பது பக்கமே உள்ள சிறிய நாவல் அது. அதை கன்னடத்திலேயே படிக்கவேண்டும் என்றொரு ஆசை இருந்தது. அப்போதுகூட எனக்கு மொழிபெயர்க்கும் நாட்டமெல்லாம் இல்லை. நான் பெங்களூருக்கு வந்து, ஏற்கனவே எனக்கு கடிதம் வழியாக அறிமுகமாகியிருந்த மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களைச் சந்தித்து உரையாடும்போது, அவர்தான் அந்த எண்ணத்தை என்னிடம் விதைத்தார். அப்போதும் அந்த வேண்டுகோளிலிருந்து ஏதேதோ காரணம் சொல்லி தப்பித்துக் கொண்டுதான் இருந்தேன். ஒருமுறை அவர் இந்திய மொழிகளில் உள்ள ஓரங்க நாடகங்களை தமிழில் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு பெருந்தொகுப்பைக் கொண்டுவரும் திட்டத்தை முன்வைத்துப் பேசினார். வட இந்திய மொழி நாடகங்களை இந்தி வழியாக மொழிபெயர்க்க இருப்பதாகவும் தென்னிந்திய மொழிகளின் நாடகங்களை அந்தந்த மொழி தெரிந்த நண்பர்கள் வழியாக மொழிபெயர்த்து வாங்கி இணைத்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார். கன்னடத்திலிருந்து நான்தான் மொழிபெயர்த்துக் கொடுக்கவேண்டும் என்றும் சொல்லிவிட்டார். அப்போது என்னால் தப்பிக்க முடியவில்லை. அவருடைய வேண்டுகோளுக்குக் கட்டுப்படவேண்டியதாக இருந்தது. சம்பா என்று அழைக்கப்படும் சந்திரசேகர பாடீல் என்னும் எழுத்தாளர் எழுதிய ஓரங்க நாடகத்தை அவருக்காக முதன்முதலாக மொழிபெயர்த்தேன். மொழிபெயர்ப்பதை ஒரு புதிய அனுபவமாக உணர்ந்தேன். அந்த நேரத்தில்தான் கிரீஷ் கார்னாட் எழுதிய ‘தலெதண்ட’ என்னும் நாடகம் பெங்களூரில் முதன்முதலாக அரங்கேறியது. முதல் காட்சியிலேயே நான் அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டேன். அதற்குமுன் நான் பார்த்த அவருடைய பிற நாடகங்களைவிட அந்த நாடகம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. இறுதிக்காட்சியில் கையறு நிலையில் நிற்கும் பசவண்ணரின் தோற்றம் ஏதோ ஒருவகையில் காந்தியடிகளை நினைக்க வைத்துவிட்டது. வரலாற்றில் எப்போதோ நிகழ்ந்த ஒரு துண்டு நிகழ்ச்சி. அது இன்றைய நவீன சமூகத்துக்கும் பொருந்துவதாக இருந்தது. அந்த இணைப்பை உணர்ந்த பரவசத்தில், அந்த நாடகத்தை உடனடியாக மொழிபெயர்க்கவேண்டும் என்று நினைத்தேன். அந்த மாதத்திலேயே ஒருமுறை கிரீஷ் கார்னாடை நேரில் சந்தித்து அனுமதியைப் பெற்று அந்த நாடகத்தை பலிபீடம் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தேன். இதுதான் நான் மொழிபெயர்ப்பாளனாகவும் இயங்கத் தொடங்கிய கதை. இப்படி புதிய கோணத்தில் அமைந்த படைப்புகளைப் படிக்க நேர்ந்தபோதெல்லாம் அந்த எண்ணம் உருவாகும். ஆசைப்படலாமே தவிர எல்லாவற்றையும் மொழிபெயர்த்துவிட முடியாது. எனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எந்த அளவுக்குச் செய்யமுடியுமோ, அந்த அளவுக்கு மட்டும் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தேன். இன்று நீங்கள் பார்க்கும் மொழிபெயர்ப்புப் படைப்புகள் எல்லாமே அப்படி உருவானவைதான்."

கிரீஷ் கார்னாட்
கிரீஷ் கார்னாட்
Srtejaswi at the English Wikipedia, via Wikimedia Commons

"கிரீஷ் கார்னாட் எழுதிய பதினான்கு நாடகங்களில் பத்து நாடகங்களை மொழிபெயர்த்திருக்கிறீர்கள். தமிழில் நாடகப் பிரதிகளுக்கான விற்பனைச்சாத்தியம் மிகவும் குறைவு என்பது உங்களுக்கே தெரியும். அப்படிப்பட்ட நிலையில் நாடகப் பிரதிகளை மொழிபெயர்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்ற என்ன காரணம்?"

"கிரீஷ் கார்னாடே ஒருமுறை இந்தக் கேள்வியைக் கேட்டார். நான் அவருக்குச் சொன்ன பதிலையே உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒரு நாடகப்பார்வையாளனாக மேடையில் நிகழ்த்தப்படும் ஒரு நாடகத்தால் நான் அடையும் கலையனுபவம் மகத்தானதாக உள்ளது. அந்த மகத்தான அனுபவத்தை தமிழுலகமும் பெறவைக்க வேண்டும். மொழிபெயர்ப்பதற்கு நான் எடுத்துக்கொள்ளும் கால அளவு குறைவானதுதான். ஆனால் ஒவ்வொரு பிரதிக்கும் காலம் கடந்து நிற்கும் ஆற்றல் உண்டு. இன்று இவை மேடையில் நிகழ்த்தப்படவில்லை என்பதற்காக எதிர்காலத்திலும் நிகழ்த்தப்பட வாய்ப்பில்லை என்று சொல்லிவிட முடியுமா? எதிர்காலத்தில் நிச்சயம் பார்வையாளர்கள் உருவாகி வருவார்கள். பாரதியார் தன் இறுதிக்காலத்தில் தன் படைப்புகள் மண்ணெண்ணெய் போலவும் தீப்பெட்டி போலவும் அதிக அளவில் விற்றுத் தீரவேண்டும் என்று விரும்பினார். அப்போது அது நிகழவில்லை. அப்படி நிகழ முப்பது நாற்பது ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது. சூழல் மாறினால் கார்னாடின் நாடகங்களுக்கும் அப்படி ஒரு திருப்பம் ஏற்படலாம். அது தவிர, ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒரு படைப்பை மொழிபெயர்க்கத் தீர்மானிக்கும்போது, அந்தப் படைப்புடன் அவர் கொள்ளும் அந்தரங்கமான நெருக்கமே பிரதான காரணமாக இருக்குமே தவிர, விற்பனைச்சாத்தியம் என்பது ஒருபோதும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. திருவாசகத்தை முதன்முதலில் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப். கிறித்துவத்தைப் பரப்ப வந்த மனிதர் வேலை மெனக்கிட்டு தி்ருக்குறளையும் திருவாசகத்தையும் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டார். அதற்கு எது காரணமாக இருந்திருக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள். அந்தப் பாடல்கள் வழியாக அவர் பெற்ற அந்தரங்கமான நெருக்கமும் பற்றுமே காரணமாக இருந்திருக்கும் அல்லவா? நான் மொழிபெயர்த்தற்கும் எனக்குள் அப்படி உருவானதொரு நெருக்கமே காரணம்."

"கன்னட இயக்குநர் கிரிஷ் காசரவள்ளியின் `த்வீபா’, `ஹசீனா’ போன்ற திரைப்படங்களுக்கு அழுத்தமான விமர்சனங்களை வைத்திருக்கிறீர்கள். தமிழிலும் பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்கள் Parallel cinema-வுக்கு வழிவகுத்திருக்கிறார்கள். இந்த வகைமையில் தமிழ், கன்னடப் படங்களை எப்படி ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்?"

"த்வீபா, ஹசீனா எல்லாமே புத்தாயிரத்தாண்டின் தொடக்கத்தில் வெளியானவை. புதிய முயற்சிகளைக் காணும்தோறும் அதை அறிமுகப்படுத்தவேண்டும் என்னும் வேகத்தில் அக்கட்டுரைகளை எழுதினேன். இரண்டாயிரத்துக்குப் பிறகு தமிழ், கன்னடம் இரு மொழிகளிலுமே புதிய திறமைசாலிகள் உருவாகினர். கன்னடத்தில் காசரவள்ளியைத் தொடர்ந்து கடந்த இருபதாண்டுகளில் துனியா சூரி, குருபிரசாத், யோகராஜ் பட், பவன் உடையார், ஷஷாங்க், பிரேம் என இளம் இயக்குநர்கள் பலர் உருவாகி பல வகைமைகளில் திரைப்படங்களை உருவாகக் காரணமாக இருந்தனர். தமிழிலும் வசந்த், வசந்தபாலன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், ராஜு முருகன், பாலாஜி சக்திவேல், மணிகண்டன், காளி ரங்கசாமி, தமிழ், ஞானவேல், மடோன் அஸ்வின், செழியன் என பல இயக்குநர்கள் இந்தத் திரைப்பட உலகில் தம்மை நிறுவிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாப் படங்களையும் இன்றுவரை தொடர்ந்து பார்க்கிறேனே தவிர, அவற்றை முன்வைத்து எழுதுவதில்லை. அதை பதினைந்து, பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டேன்."

எழுத்தாளர் பாவண்ணன்
எழுத்தாளர் பாவண்ணன்

"கன்னட தலித் இலக்கியம் குறித்த ஓர் அறிமுகத்தைக் கொடுத்தது உங்களுடைய ’ஊரும் சேரியும்’, ’கவர்ன்மென்ட் பிராமணன்’ போன்ற தன்வரலாறுகள், `புதைந்த காற்று’ மொழிபெயர்ப்பு சிறுகதைகள். படைப்பைத் தாண்டி, தமிழ்நாட்டிலும் கன்னடத்திலும் அவர்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என நினைக்கிறீர்கள்?"

"தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில், கல்வியும் வேலை வாய்ப்புகளும் தலித்துகளின் வாழ்வில் ஒரு சிறிய மாற்றத்துக்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. வேலை செய்யும் துறைகளில் தலித்துகள் தம் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு ஏற்ற வகைகளில் பொறுப்புகள் தரப்படுவதில்லை. அவற்றைத் தீர்மானிக்கும் இடங்களில் இருப்பவர்கள் மிக இயற்கையாக நிகழ்வதுபோன்ற பாவனையுடன் அவர்களை எளிய பொறுப்புகளை நோக்கிச் செலுத்திவிடுகிறார்கள். ஒரு மருத்துவமனையில் ஒரு தலித் மருத்துவர் தன்னைத் தொட்டு சிகிச்சை அளிப்பதை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாமல் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சாதிய மனோபாவத்தில் ஊறிக் கிடப்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். இங்கு சாத்தியமாகியிருக்கும் சிறிய அளவிலான மாற்றம் கூட, வட இந்திய மாநிலங்களில் இன்னும் நிகழவில்லை. இன்னும் தலித்துகள் கைத்தொழிலை மட்டுமே நம்பி வாழவேண்டிய சூழலே அங்குள்ளது. வணிகத்தில் தலித்துகளுக்கான வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அளவுக்குத்தான் நம் மண்ணில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. முழு மாற்றத்துக்கும் இன்னும் எத்தனை எழுபத்தைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை."

"முக்கியமான மூன்று நாவல்கள், பல குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள், சிறார் இலக்கியம் என தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். இன்றைய டிஜிட்டல்மய வாழ்க்கையில் எழுத்துக்கான தேவை இன்னமும் இருக்கிறது என நினைக்கிறீர்களா?"

"அனலாக் காலத்திலிருந்து டிஜிட்டல் காலத்துக்கு மாறியிருக்கிறோம் என்பது நேற்றைய நம் வசதிகளிலிருந்து இன்று இன்னும் சற்றே மேம்பட்ட வசதிகளை நோக்கி வந்திருக்கிறோம் என்பதுதான் பொருள். விறகு அடுப்பிலிருந்து மண்ணெண்ணெய் அடுப்புக்கு மாறி, பிறகு எரிவாயு அடுபுக்கும் மின்சார அடுப்புக்கும் வந்து நிற்பதுபோல, நேற்று இருந்ததைவிட சற்றே வசதியான இடத்துக்கு வந்து நிற்கிறோம். இன்று மரப்பாச்சிகளை வைத்துக்கொண்டு எந்தக் குழந்தையும் வீட்டில் விளையாடுவதில்லை. யாருடைய வீட்டிலும் மரக்குதிரைகள் இல்லை. பாட்டியோ, அம்மாவோ இடுப்பில் குழந்தையை தூக்கிவைத்துக்கொண்டு நிலாவையும் கோழிகளையும் காட்டி சோறூட்டுவதில்லை. மாறாக, ரிமோட் வழியாக இயக்கி ஓடவோ உருளவோ வைக்கும் பொம்மைகள் வந்துவிட்டன. ஏராளமான வீடியோ விளையாட்டுகளை உட்கார்ந்த இடத்திலிருந்து விளையாடலாம். தொலைக்காட்சியையோ, கைப்பேசியையோ இயக்கி காணொளிகளை ஓடவிட்டு, வேறு வேலைகளையும் கவனித்தபடியே சோறூட்டலாம். இவையெல்லாமே வசதிகள். புறத்தேவைகள். இலக்கியம் என்பது அகத்துக்குத் தேவையான ஒன்று. டிஜிட்டல் யுகம் வழங்கும் வசதிகளுடன் அத்தேவையை எப்படி வழங்குவது அல்லது பெற்றுக்கொள்வது என்பதுதான் இந்தக் காலகட்டத்தின் முக்கியமான சவால். உ.வே.சா. காலத்தில் பனையோலையில் எழுதும் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து தாளில் மை நிறைக்கப்பட்ட தூவலால் எழுதும் பழக்கம் உருவாகி நிலைத்து நின்றதுபோல, நமது காலத்தில் தாளில் எழுதும் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து கணிப்பொறித்திரையில் விசைப்பலகை வழியாக எழுதும் பழக்கம் உருவாகி நிலைக்கும். இனி நாம் வாக்கியங்களை பேனாவின் உதவியோடு கையால் எழுதவேண்டிய அவசியமில்லை. விரல்கள் வழியாக விசைப்பலகையின் எழுத்துகளைத் தொட்டு கணிப்பொறித் திரையில் எழுதிச் சேமிக்கவேண்டும். வாசிப்பவர்களும் அச்சிதழைப் புரட்டி பக்கங்களைத் தள்ளிப் படிக்கவேண்டிய அவசியமில்லை. கணிப்பொறி வழியாகவே பக்கங்களைத் தள்ளிப் படித்துக்கொள்ளலாம். ஒரு சிறிய கால இடைவெளியில் தொடர்ச்சியான பயிற்சி வழியாக இதை எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். இலக்கியத்துக்கான தேவை எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும்."

எழுத்தாளர் பாவண்ணன்
எழுத்தாளர் பாவண்ணன்

"ஓர் எழுத்தாளனுக்கு அரசியல் பார்வை தேவைதானா..? தமிழில் எழுத்தாளர்கள் பலர், ஏதோ ஓர் இயக்கம் சார்ந்தவர்கள் அல்லத்து ஏதாவது ஒரு கட்சிப் பின்னணி உடையவர்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பது, அந்த எழுத்தாளர் ஒரு சார்பு நிலையுடையவர் என்கிற பிம்பத்தை பொதுவெளியில் ஏற்படுத்திவிடாதா? இது குறித்துக் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்..?"

"அரசியல் பார்வை அல்லது அரசியல் தொடர்பு என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட தேர்வு. அதைப்பற்றி இன்னொருவர் கருத்துரைக்க ஒன்றுமில்லை. ஒரு எழுத்தாளர் தன் சார்புநிலையை பொதுவெளியில் காட்டிக்கொள்வதில் தவறேதும் இல்லை என்றே நினைக்கிறேன். வெளிப்படைத்தன்மை எப்போதும் நல்லது. சுதந்திரப்போராட்ட காலத்தில் தம்மை காங்கிரஸ்காரர்களாகவும் காந்தியத் தொண்டர்களாகவும் வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டவர்கள் பலர். சோமசுந்தர பாரதியார், ச.து.சு.யோகியார், சா.கணேசன், திரிகூடசுந்தரம், ஜீவா, கல்கி, சின்ன அண்ணாமலை, அங்கு சுப்பிரமணியன், டி.எஸ்.சொக்கலிங்கம் என பலரும் தம் அரசியல் சார்புநிலைகளை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டவர்களே. இவர்களில் பெரும்பாலானோர் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர்கள். எதையும் அவர்கள் மறைத்ததில்லை. அதே சமயத்தில் புதுமைப்பித்தன் போன்ற சிலர் எந்த அரசியல் சார்புமற்று விலகி நிற்கவும் செய்தார்கள். இன்று அவர்களை மதிப்பிட முற்படுகிறவர்கள் யாரும் அவர்களுடைய சார்புநிலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு மதிப்பிடுவதில்லை. மாறாக, என்ன எழுதினார்கள், எப்படி எழுதினார்கள் என்பதை வைத்துத்தான் அவர்களுடைய இலக்கிய இடத்தை மதிப்பிடுகிறார்கள். இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து இதேபோல இலக்கிய இடத்தை மதிப்பிடும் ஒருவருடைய பார்வையும் இன்றைய அரசியல் சார்புநிலைகளை ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் மதிப்பிடுமே தவிர, சார்புநிலைகளுக்காக எந்தச் சலுகையையும் காட்டாது."

"காலம் காலமாகத் தொடர்வது விருதுகளுக்கான சர்ச்சை. 2005-ல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?"

"என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களில் அதுவும் ஒன்று. அந்தப் பொன்னான காலைப்பொழுது இன்றும் என் நினைவில் பசுமையாக பதிந்துள்ளது. தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் செய்தி வெளியானதால், காலையிலிருந்தே தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கிவிட்டன. சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சா.கந்தசாமி, வண்ணதாசன் என மூத்த எழுத்தாளர்கள் பலரும் அழைத்துப் பாராட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நண்பர்களும் எழுத்தாளர்களுமான எம்.கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன், ராஜேந்திரன், நிர்மால்யா, பவா செல்லத்துரை என பலரும் அன்றும் மறுநாளும் அழைத்து வாழ்த்து சொல்லிக்கொண்டே இருந்தார்கள். தி.சிவக்குமார், நாகராஜன், சுந்தரமூர்த்தி, துரைக்கண்ணு, வளவ.துரையன் ஆகிய நண்பர்கள் இணைந்து எங்கள் வளவனூரில் ஒரு பராட்டு விழா ஏற்பாடு செய்தனர். எல்லாச் சிற்றிதழ்களிலும் நிழற்படத்தோடு வாழ்த்துச்செய்தியை வெளியிட்டிருந்தார்கள். எல்லாக் கொண்டாட்டங்களும் செய்திகளும் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் வரைக்கும் எங்கள் வீடே ஒரு திருவிழா மேடை போல இருந்தது. எதிர்மறையாகவோ கேள்விக்குட்படுத்துவதுபோலவோ ஒருவரும் ஒரு வரி கூட எங்கும் எழுதவில்லை. பேசவுமில்லை. என் மனநிறைவுக்கு அது ஒரு முக்கியமான காரணம்."

எழுத்தாளர் பாவண்ணன்
எழுத்தாளர் பாவண்ணன்

"இப்போது வாசிக்கக் கிளம்பியிருக்கும் புதிய தலைமுறை நம்பிக்கைக்குரியதாக இருக்கிறதா? வாசிப்புப் பழக்கம் நீடிக்குமா?"

"நான் வாசிக்கத் தொடங்கிய எழுபதுகளில் ஒரு மூத்த எழுத்தாளரின் தொகுப்பைத் தேடியெடுத்துப் படிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. நூலகத்தில் தேட வேண்டும். அல்லது மூத்த நண்பர்கள் வைத்திருக்கிறார்களா என்று கேட்கவேண்டும். கிடைத்தால் படிக்கலாம். கிடைக்காவிட்டால் கிடைக்கும்வரை தேடிக்கொண்டேதான் இருக்கவேண்டும். அப்போது ஜெராக்ஸ் வசதி கூட கிடையாது. எண்பதுகளில் ஐந்திணை பதிப்பகம் புதுமைப்பித்தன் சிறுகதைகள் அடங்கிய பெருந்தொகுதியை க.நா.சு. முன்னுரையோடு கொண்டுவரும் வரை, ஒவ்வொரு கதைக்காகவும் தேடித்தேடி ஓடியதெல்லாம் நினைவிருக்கிறது. பிச்சமூர்த்தி சிறுகதைகள் அவருடைய நூற்றாண்டுவிழாவைக் கொண்டாடும் நாள் வரைக்கும் பெருந்தொகுதியாக வரவில்லை. அதற்குள் நான் எழுதத் தொடங்கிவிட்டேன். எழுதிக்கொண்டேதான் எல்லா மூத்த எழுத்தாளர்களையும் தேடிப் படித்தேன். இன்றைய தலைமுறையைச் சேர்ந்த ஓர் இளம்வாசகனுக்கு அந்தச் சிரமமே இல்லை. டிஜிட்டல் உலகம் எல்லாவற்றையும் அவன் கைக்கு அருகில் வைத்திருக்கிறது. தேடி ஓடும் அலைச்சலே இல்லை. நான்கு ஆண்டுகளில் முக்கியமான தமிழ் எழுத்தாளுமைகள் அனைவரையும் படித்துவிடலாம். அதுமட்டுமல்ல, அவர்களைப்பற்றி இதுவரை வெளிவந்திருக்கும் எல்லா விமர்சனக்கட்டுரைகளையும் படித்து பரிசீலனை செய்யலாம். அலசி ஆய்வு செய்து தனக்கேயுரிய ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்ளலாம். பெரும்பாலான இளைய தலைமுறை வாசகர்கள் இந்த வாசிப்புக்கலையில் டிஜிட்டல் உதவியுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி அல்லவா? என்னுடன் உரையாட வரும் பல இளம்வாசகர்களிடம் வெளிப்படும் ஆற்றலை அறிந்துகொண்டவன் என்கிற வகையில் அதை நான் உறுதியாகச் சொல்லமுடியும். இன்றைய தலைமுறை மிது எனக்கு முழுஅளவில் நம்பிக்கை உள்ளது. இன்று, வாசிக்கும் வழிமுறையும் எழுதும் வழிமுறையும் காலத்துக்குத் தகுந்தபடி மாறிவிட்டன. இன்னும் பத்து இருபதாண்டுகளில் இந்த மாற்றத்திலும் மாற்றம் வரலாம். மாற்றங்கள் எப்படி வந்தாலும், வாசிப்புப்பழக்கம் என்றென்றும் நீடிக்கும் என்று மட்டும் உறுதியாக நம்புகிறேன்."