Published:Updated:

``கூழாங்கல்லின் மௌனம் போன்றதே எனது நிதானம்"- எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்

எஸ்.ரா
News
எஸ்.ரா

"டால்ஸ்டாயை ஒரு கதாபாத்திரமாக்குவது எளிதானதல்ல. ரஷ்ய தேசத்தின் அடையாளமாக அவரைக் கொண்டாடுகிறார்கள்."- எஸ்.ரா

தமிழ் இலக்கிய உலகின் வசீகர படைப்பாளுமைகளில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். தன் எழுத்து வாழ்வில் காவிய கட்டத்தில் நிற்கிற அவர் தற்போது 'மண்டியிடுங்கள் தந்தையே' என்ற தலைப்பில் டால்ஸ்டாயை முன்வைத்து நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். வரும் ஆண்டின் புத்தகத் திருவிழாவின் முக்கியமான புத்தகமாக இந்நாவல் வாசகர் மனம் கவரக் காத்திருக்கிறது. அதற்கான உரையாடலாக நடந்தது இந்த சந்திப்பு.

அயல் எழுத்தாளரை முன்வைத்து நாவல் எழுதத் தூண்டியது எது?

எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜே.எம்.கூட்ஸி தஸ்தாயெவ்ஸ்கி பற்றி ஒரு நாவல் எழுதியிருக்கிறார். வர்ஜீனியா வுல்ப், சில்வியா பிளாத், ஷேக்ஸ்பியர், பாப்லோ நெரூதா போன்றவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு மேற்குலகில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழில் அத்தகைய முயற்சிகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. டால்ஸ்டாயை ஒரு கதாபாத்திரமாக்குவது அவ்வளவு எளிதானதல்ல. ரஷ்ய தேசத்தின் அடையாளமாக அவரைக் கொண்டாடுகிறார்கள். டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. அவரே டயரி எழுதியிருக்கிறார். அவரது மனைவி டயரி எழுதியிருக்கிறார். அச்சில் அவை வாசிக்கக் கிடைக்கின்றன.

டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும்போது ஒரு நிகழ்வு என் மனதை மிகவும் பாதித்தது. அதை மையமாகக் கொண்டு டால்ஸ்டாயின் ஆளுமையை விவரிக்கும் விதமாக இந்த நாவலை எழுதியிருக்கிறேன்.

நாவலின் தலைப்பு ‘மண்டியிடுங்கள் தந்தையே.’ 250 பக்கங்கள் கொண்ட நாவலிது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்படி ரஷ்ய எழுத்தாளரை மையமாகக் கொண்டு தமிழில் வெளியாகும் முதல் நாவல் இதுதான் என்று சொல்லலாமா?

ஆமாம். தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்றே இதை அழைக்க விரும்புகிறேன். இதுவரை தமிழில் ரஷ்ய எழுத்தாளரை மையமாகக் கொண்டு நாவல் எதுவும் வெளியானதில்லை. இதுவே முதன்முறை. இந்திய அளவில் பார்த்தாலும் டால்ஸ்டாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் இதுவே. ரஷ்யாவிலும் கூட நான் எழுதியுள்ள மையக்கருவில் யாரும் நாவல் எழுதவில்லை. ஆகவே இந்த நாவலின் ரஷ்ய மொழியாக்கம் விரைவில் வெளியாக இருக்கிறது. உண்மையில் இது ஒரு சர்வதேச நாவல் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக `அஸ்தபோவ் ரயில் நிலையம்' என்ற சிறுகதையை எழுதினேன். அது வீட்டை விட்டு வெளியேறிய டால்ஸ்டாயின் கடைசி நாட்களைப் பற்றியது. அப்போதே டால்ஸ்டாயைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்ற ஆசை உருவானது.

'மண்டியிடுங்கள் தந்தையே' புத்தகத்தின் முகப்புப் பக்கம்
'மண்டியிடுங்கள் தந்தையே' புத்தகத்தின் முகப்புப் பக்கம்

இந்நாவலை எழுதுவதற்காக நீங்கள் எடுத்த முன்முனைப்புகள் எவை?

சூரியன் தகிக்கும் கரிசல் மண்ணில் பிறந்து வளர்ந்த என்னால் ரஷ்யப்பனியை எப்படி எழுத முடியும். அதுவும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ரஷ்ய கிராமங்களை, விவசாய வாழ்க்கையை, அன்றைய மாஸ்கோவை எழுதுவது என்பது பெரும் சவால். நான் இதுவரை ரஷ்யா சென்றதில்லை. கதைகளின் வழியே அந்த நிலம் என் மனதில் விரிந்துள்ளது. என்னைப் பீட்டர்ஸ்பெர்க் வீதியில் விட்டால் தனியே சுற்றிவர முடியும் என்று வேடிக்கையாகச் சொல்வேன். அந்த அளவு ரஷ்யாவை வாசிப்பின் வழியே அறிந்திருக்கிறேன்.

ஆனால் நான் எழுதப்போகும் களம் நூற்று முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய ரஷ்யா. அதுவும் யாஸ்னயா போல்யானா என்ற டால்ஸ்டாயின் பண்ணை. டால்ஸ்டாய் போன்ற பன்முக ஆளுமையைக் கதாபாத்திரமாக்கும் போது நிறைய வாசிக்கவும் தெரிந்து கொள்ளவும் வேண்டியிருந்தது. கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் புத்தகங்கள், காணொளிகள், இசை, ஆவணத்திரட்டுகள் வழியாக ரஷ்யாவை ஆழ்ந்து அறிந்து கொண்டேன். டால்ஸ்டாய் என்ன ஆடை உடுத்தியிருப்பார். அவரது காலணி என்ன நிறத்தில் இருக்கும். அவரிடம் எத்தனை குதிரைகள் இருந்தன. அவரது நாயின் பெயர் என்ன, வீட்டு அறைகளின் சுவர் எப்படியிருந்தது, அவரது மனைவி பிள்ளைகள் எப்படியிருந்தார்கள், அவர் பனியில் நடந்து செல்லும் போது சூரியன் எந்தப் பக்கம் ஒளிரும், அவரது வீட்டில் நடந்த விருந்து எப்படியிருக்கும், அவர் ஏறிச் செல்லும் குதிரை வண்டி எவ்வளவு வேகத்தில் பயணம் செய்யும் என நூற்றுக்கணக்கான தகவல்களைத் தேடிச் சேகரிக்க வேண்டியிருந்தது.

அத்தோடு அன்றைய ரஷ்ய அரசு, நிர்வாகம். சமூக மாற்றங்கள். பண்ணை அடிமைகளின் நிலை, மதச் சடங்குகள் பற்றியும் நிறைய வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருந்தது. இந்தத் தகவல்களைக் கேக் செய்பவன் கேக்கின் மீது க்ரீமினால் வண்ண மலர்கள் வரைவாரே அப்படிப் பயன்படுத்தியிருக்கிறேன். நாவலின் மையம் எனது கற்பனை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாவலின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே!

’மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற தலைப்புதான் நாவலின் மையப்பொருள். டால்ஸ்டாய் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வுதான் நாவலின் கதைக்கரு. அவரது வாழ்க்கை வரலாற்றில் இரண்டு வாக்கியங்களில் அந்த நிகழ்வு விவரிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நான் எனது கதையை உருவாக்கிக் கொண்டேன். டால்ஸ்டாய் முன்பாக அமர்ந்து சிறுவர்கள் கதை கேட்பதுபோல ஒரு புகைப்படம் இருக்கிறது. நாவலை எழுதும் நாட்களில் அந்தச் சிறுவர்களில் ஒருவனாகவே என்னை உணர்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாவலை எழுதினேன். ஐந்தாறு முறை திருத்தி எழுதியிருப்பேன். லாக்டவுன் காலம் என்பதால் நிறைய நேரம் கிடைத்தது. காலை சென்னையில் எனது வீட்டின் எழுதும் அறைக்குள் நுழைந்த மறுநிமிடம் ஒரு கால இயந்திரம் என்னை டால்ஸ்டாய் பண்ணைக்கு அழைத்துப் போய்விடும். பகல் முழுவதும் ரஷ்யாவில் சுற்றிக் கொண்டிருப்பேன். டால்ஸ்டாய் குடும்பத்தில் ஒருவன் போலவே என்னையும் உணர்ந்தேன்.

நாவலை எழுதியதன் வழியே டால்ஸ்டாயை மிகவும் நெருங்கி உணர முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.

எஸ்.ரா
எஸ்.ரா

இன்றுள்ள தமிழ் நாவல்களின் போக்குகள் பற்றி உங்கள் கருத்தென்ன?

பொதுவாகத் தமிழ் நாவல்கள் தமிழ் வாழ்க்கையின் எல்லைக்குள்தான் எழுதப்படுகின்றன. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் வருகின்றன.. சொந்த அனுபவங்களைத்தான் பிரதானமாக எழுதுகிறார்கள். அது தப்பில்லை. ஆனால் புனைவின் முழுவீச்சினை காட்ட வேண்டும் என்றால் புதிய சவாலை முன்னெடுக்க வேண்டும். தமிழ் நாவலின் எல்லையை நாம் விஸ்தரிக்க வேண்டும்.

இத்தாலிய எழுத்தாளர் ராபர்ட் டோகலாஸ்ஸோ இந்தியாவைப் பற்றி ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அதுவும் பண்டைய இந்தியாவின் தத்துவங்களை ஆராயும் விதமாக எழுதியிருக்கிறார். ஹெர்மன் ஹெஸ்ஸே, சித்தார்த்தா என்ற நாவலை 1922லே எழுதியிருக்கிறார். நாம் ஏன் தமிழில் புத்தரை மையமாகக் கொண்டு இதுவரை நாவல் எதையும் எழுதவில்லை. அல்லது பீதோவன், வான்காவை மைய கதாபாத்திரமாகக் கொண்டு ஒரு நாவலை எழுத விரும்பவில்லை.

உம்பர்தோ ஈகோவின் நாவல்கள், இதாலோகால் வினோவின் நாவல்கள். யோசே சரமாகோ நாவல்கள். லோஸாவின் நாவல்கள். போன்று புதிய கதையை, புதிய கதை மொழியைக் கொண்ட நாவல்கள் தமிழில் வரவில்லை. ஆனால் நாம் செல்ல வேண்டிய திசை அதுவே.

தமிழ் வாசகர்கள் சிறந்த படைப்புகளைச் சரியாக அடையாளம் கண்டுகொள்ளக் கூடியவர்கள், அங்கீகாரம் தரக்கூடியவர்கள். ப.சிங்காரம் இரண்டே நாவல்கள் தான் எழுதியிருக்கிறார். அது இந்நாள் வரை யாரும் தொடாத கதைக்களன்கள். அப்படியான திசையில் பயணம் செய்யவே நான் விரும்புகிறேன்

எப்போதும் ஒரு படைப்பாளியாக உங்களிடம் வெளிப்படும் நிதானம் அசாதாரணமானது. அதை எப்படி அடைந்தீர்கள்?

எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணன்

எழுத்தாளராக வேண்டும் என்று விரும்பி வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் இந்தியா முழுவதும் அலைந்து திரிந்திருக்கிறேன். எழுத்தை மட்டுமே நம்பி சென்னைக்கு வந்தேன். இந்த வாழ்க்கை புறக்கணிப்பாலும் நெருக்கடியாலும் என்னை மிகவும் வாட்டியிருக்கிறது. நிறையப் பொருளாதாரச் சிரமங்களை அனுபவித்திருக்கிறேன். அன்றும் இன்றும் குடும்பம் தந்த துணையும் நம்பிக்கையும் தான் என் நிதானத்திற்கான முக்கியக் காரணம். நல்ல ஆசான்களால் வழிநடத்தப்படுகிறேன். நல்ல நண்பர்கள் துணையிருக்கிறார்கள். என்னை முழுமையாகப் புரிந்துகொண்ட மனைவி பிள்ளைகள் உடனிருக்கிறார்கள். என்மீது அளவில்லாத அன்பு கொண்ட வாசகர்கள் நிறையவே இருக்கிறார்கள். இவர்களே என் படைப்பின் சுடரைத் தனது கரங்களால் பாதுகாத்து வருபவர்கள்.

ஆற்றின் வேகத்தில் சிக்கிப் பட்ட வேதனைகளைக் கூழாங்கல் ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை. அது தண்ணீர் உருவாக்கிய சிற்பம் போலவே தன்னைக் கருதுகிறது. கூழாங்கல்லின் மௌனம் போன்றதே எனது நிதானம்.