Published:Updated:

மூன்று துறைகளில் முத்திரை பதித்த விகடனின் பெருமிதம்... பரணீதரன் அஞ்சலிக் குறிப்பு!

பரணீதரன்
பரணீதரன்

விகடனிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, வேறு சில பத்திரிகைகள் அவரைத் தேடி வந்தபோது, 'விகடனோடு என்னை அடையாளப்படுத்திக்கொண்டேன். அதுவே போதும்' என மறுத்துவிட்டார்.

"ஒருவர் ஒரு துறையில் சாதிப்பதே பெரிய விஷயம் பரணீதரன் மூன்று துறைகளில் ஆழகமாகத் தடம் பதித்தவர்!" என்று பேசத்தொடங்கினார் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன்.

பத்திரிகை உலகிலும் எழுத்துலகிலும் பலராலும் அறியப்பட்டவர் எழுத்தாளர் பரணீதரன். இவர் ஆனந்த விகடன் இணை ஆசிரியராகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர். அப்போது, இவர் எழுதியவை சிறப்பு வாய்ந்த படைப்புகள். எழுத்தோடு மட்டுமல்லாது, ஶ்ரீதர் எனும் பெயரில் கார்ட்டூன் வரைவதில் புகழ்பெற்றவர். மூன்றாவதாக, மெரீனா எனும் பெயரில் நாடகத் துறையிலும் முத்திரை பதித்தார். 95 வயதான இவர், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாது இருந்தார். இந்நிலையில் நேற்று (03.01.2020) அவர் காலமானார். இன்று, பல எழுத்தாளர்களும் பரணீதரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரை நன்கு அறிந்தவர்களில் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திருப்பூர் கிருஷ்ணன் முக்கியமானவர். அவரிடம் பேசினோம்.

திருப்பூர் கிருஷ்ணன்
திருப்பூர் கிருஷ்ணன்

"இப்போதுதான் பரணீதரனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன். மனம் கனத்திருக்கிறது. விகடனில் அவர் ஆற்றிய பணிகள் உலகம் அறியும். விகடனிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, வேறு சில பத்திரிகைகள் அவரைத் தேடி வந்தபோது, 'விகடனோடு என்னை அடையாளப்படுத்திக்கொண்டேன். அதுவே போதும்' என மறுத்துவிட்டார். இந்தப் பதில் மூலமாகவே விகடனுக்கும் அவருக்குமான பந்தத்தை நாம் புரிந்துகொள்ளலாம். விகடனில் அவர் ஏராளம் எழுதி, பல்லாயிரக்கணக்கான வாசகர்களைச் சம்பாதித்தார்.

அவரின் நாடகங்களில் நடித்த பலரும் பின்னாளில் புகழ்பெற்ற நடிகர்களாகத் திகழ்ந்தார்கள்.
திருப்பூர் கிருஷ்ணன்
கிரேஸி மோகனுடன் பரணீதரன்
கிரேஸி மோகனுடன் பரணீதரன்

மெரீனா - நாடகம்:

ஊர்வம்பு, தனிக்குடித்தனம், மாப்பிள்ளை முறுக்கு, சாமியாரின் மாமியார், அடாவடி அம்மாக்கண்ணு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியவர். அவற்றில் ஊர்வம்பும் தனிக்குடித்தனமும் பலமுறை மேடையேறிய நாடகங்கள். நானே பலமுறை தேடித்தேடிப் போய்ப் பார்த்திருக்கிறேன். அவரின் நாடகங்களில் நடித்த பலரும் பின்னாளில் புகழ்பெற்ற நடிகர்களாகத் திகழ்ந்தார்கள். ஆனால், நாடகம் மேடையேறிய காலத்தில் அவர்கள் நடிப்பின் ஆரம்பத்தில் இருந்தார்கள். இருந்தபோதும், அவ்வளவு பயிற்சி அளித்துச் சிறப்பாக நடிக்க வைத்திருப்பார். குறிப்பாக, பிராமண மொழி என்பது அச்சு அசலாக இருக்கும். விகடனில் பணிபுரிந்த பா.கிருஷ்ணன் இவரின் நாடகங்களில் நடித்திருக்கிறார்.

பரணீதரனின் நாடக முறையே மற்றவர்களைவிட வித்தியாசமாக இருக்கும். திடீர் திருப்பம், ஆக்ரோஷமெல்லாம் இருக்காது. தனிமனிதர்களின் வாழ்க்கையிலிலுள்ள அன்றாடப் பிரச்னைகள், கூட்டுக்குடும்பத்தின் மகிழ்ச்சி, சிக்கல் எனப் பேசும். சுருக்கமாகச் சொன்னால், ஒரு வாழ்க்கையிலிருந்து சின்ன பகுதியை மேடையில் பார்த்த திருப்தியைப் பார்வையாளர்கள் நிச்சயம் அடைவார்கள். அந்த நிறைவு எனக்குக் கிடைத்திருக்கிறது. இவரின் நாடகப் பிரதி மூன்று வகைகளில் வெற்றியடைந்தது. முதலில் அது எழுத்துப் பிரதியாகவும், மேடையில் காட்சிகளாகவும், பின், கேசட்டுகளாக ஒலி வடிவத்திலும் பலரையும் சென்றடைந்தது.

ஸ்ரீதரின் கார்ட்டூன்
ஸ்ரீதரின் கார்ட்டூன்

ஶ்ரீதர் - ஓவியம்:

கேலிச்சித்திரத் துறையில் அவரின் குரு ஓவியர் மாலி. சுதேசமித்திரன் பத்திரிகையில்கூட இவரின் ஓவியங்கள் வந்துள்ளன என்பது மாபெரும் பெருமை! சுதேசமித்திரனின் பொறுப்பாசிரியர் 'நீலம்' என்பவருக்கு இவரின் ஓவியங்கள் ரொம்பவும் பிடிக்கவும். அதனால் இவரின் ஓவியங்களை விரும்பி வாங்கிப் பயன்படுத்தினார். இவரும் 'நீலம்' அவர்களை இறுதிக்காலம் வரை நன்றி மறவாமல் குறிப்பிட்டுப் பேசுவார்.

பரணீதரன் - ஆன்மிக எழுத்து:

'இலக்கியம் என்பதே எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான தூரத்தைக் குறைப்பதுதான்' என்பார்கள். அதை எழுத்தாளர் பரணீதரன் மிகச் சிறப்பாகச் செய்தார் என்றே சொல்வேன். ஏனெனில், ஆன்மிக எழுத்து என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் இரு எழுத்தாளர்கள்தாம். ஒருவர் ரா.கணபதி மற்றொருவர் பரணீதரன். கணபதி, ஆன்மிகச் சரித்திர நாவல்கள் எழுதுவதில்தான் ஆர்வம் காட்டினார். பரணீதரன், வாசகர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளும் விதத்தில் காசி, ஷீர்டி மாதிரியான ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று அங்கு அவர் அனுபவித்த ஆன்மிகத் தரிசனத்தை அந்தப் பரவசம் குன்றாமல் வாசகர்களுக்குக் கட்டுரைகளாக வடித்துத்தந்தார். இது எளிதான விஷயமல்ல. மனம் ஒன்றிச் செய்ய வேண்டிய பணி. அதை மகிழ்ச்சியோடு செய்தார் பரணீதரன்.

பிரபல எழுத்தாளர், கார்ட்டூனிஸ்ட் பரணீதரன் மரணம்!
பரணீதரன்
பரணீதரன்

ஒரு பேட்டிக்காக, பரணீதரனைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் தனது அனுபவங்களை அவ்வளவு சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார். மணிக்கணக்கில் பேச்சு நீண்டபோதும் கொஞ்சமும் சோர்வோ சலிப்போ அடையவில்லை. பரணீதரனின் அப்பா, சேஷாசலமும் ஒரு பத்திரிகையாளர்தான். 'காலநிலையம்' எனும் இதழை நடத்தியவர். தன் அப்பா, காந்தியைச் சந்தித்த நிகழ்ச்சியை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துகொண்டார் பரணீதரன். இவரின் மரணம் மனவருத்தத்தைக் கொடுக்கிறது" என்றார் திருப்பூர் கிருஷ்ணன்.

அடுத்த கட்டுரைக்கு