Published:Updated:

எம்.ஜி.ஆர் - சிவாஜி இணைந்து நடித்த ஒரே படத்தின் வசனகர்த்தா விந்தன்! #VinthanMemories

Writer Vinthan
Writer Vinthan

எழுத்தாளர் விந்தன் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!

தமிழ் இலக்கிய உலகில், குறிப்பிடத்தக்க மூன்று மாபெரும் ஆளுமைகள் விந்தன், மயிலை. சீனி வேங்கடசாமி, ஜெயகாந்தன். ஒரே விதமான போக்கில் உழன்றுகொண்டிருந்த தமிழ் இலக்கிய உலகில் விந்தனும் ஜெயகாந்தனும் தமது மாறுபட்ட படைப்புகளால் ஒரு புயலை உருவாக்கியவர்கள். மயிலை சீனி வேங்கடசாமி, தமிழ்ப் பண்பாட்டின் கலைகளின், கருத்தியலின் வேர்களைத் தேடித்தேடிப் பதிவுசெய்த ஆய்வாளர்.

இம்மூவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருமே அச்சுக்கோக்கும் தொழிலில் ஈடுபட்டு, தமது படிப்பறிவினாலும் பட்டறிவினாலும் மிக உயரிய இலக்கிய ஆளுமைகளாகப் பரிணமித்தவர்கள்.

 தமிழ்
தமிழ்

விந்தனின் இயற்பெயர், கோவிந்தன். பிறந்த ஊர், செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள நாவலூர். பெற்றோர், வேதாச்சலம் – ஜானகி அம்மாள். இளம் வயதிலேயே குடும்பச்சூழலின் காரணமாக சென்னைக்கு வந்து, அங்கு அச்சுக்கோக்கும் தொழிலாளியாக வேலைசெய்தார். அச்சுக் கோப்பதின் அடிப்படை, கூர்மையான வாசிப்பு. வாசிக்க வாசிக்க அவரின் இலக்கிய ஆர்வமும், சுயமாகப் படைக்கும் திறமையும் மெருகேறிச் செழுமையடைந்தன. தன்னைச் சுற்றிலும் உள்ள சாதாரண மக்களின் வாழ்க்கைத் துயரங்கள் விந்தனின் மனதில் குமுறலைக் கிளப்பின. எழுத்தில் எரிமலை கனலைக் கக்கியவர் விந்தன்.

விந்தன், 'கல்கி' இதழ் அலுவலகத்தில் அச்சுக்கோக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மெய்ப்புத் திருத்திய விதத்தைப் பார்த்து வியந்துபோன கல்கி , இவரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். கல்கியில் தொடர்ந்து கதைகள் எழுதவும் வாய்ப்பளித்திருக்கிறார். அதோடு, அவரின் கதைகளைத் தொகுத்து 'முல்லைக்கொடியாள்' எனும் சிறுகதைத் தொகுப்பையும் கொண்டுவர உதவியிருக்கிறார். 1947–ம் ஆண்டில், தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பின் பரிசு அந்தத் தொகுதிக்குக் கிடைக்க உதவியவர் கல்கியே.

Writer Vinthan
Writer Vinthan

1930 – 1942-ம் ஆண்டுகளில் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார். இந்த காலகட்டத்தில்தான், அவர் ஓர் எழுத்தாளராகப் பரிணமித்தார். கல்கி இதழில் பணியாற்றிய காலம், 1942-1951–ம் ஆண்டுகள். சுமார் 120 சிறுகதைகள் வரை எழுதிய விந்தன், பாலும் பாவையும் நாவலின் மூலம் சட்டென்று தமிழ் இலக்கிய உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார். பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் கண்டது. கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. கல்கியில் தொடராக வெளிவந்தபோதே மிகுந்த பரபரப்பையும், விமர்சனங்களையும் இந்த நாவல் உருவாக்கியது. பெண்களை ஆண் வர்க்கம் எந்தப் பார்வையில் அணுகுகிறது என்பதற்குக் குறியீடாகப் பாலைப் பயன்படுத்தினார் விந்தன். கெட்டுப்போன பாலையும் , பாவையையும் ஒப்புமை செய்து பேசும் ஆண்களுக்குச் சவுக்கடி கொடுக்கும் நாவல் இது.

60 வயதிலும் ஆசை நரைக்காத ஆண்கள், 20 வயது இளம்பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் மனநிலையைக்கூட மேன்மைப்படுத்தி, தியாகம் அல்லது பரிவு என்று நியாயப்படுத்தும் கதைகள் வந்துகொண்டிருந்த காலத்தில், விந்தன் எழுதிய 'அன்பு அலறுகிறது' நாவல், நேர் எதிரான விமர்சனப் பார்வையைக் கடுமையான தொனியில் முன்வைத்தது. ‘கண் திறக்குமா‘, ‘மனிதன் மாறவில்லை‘, ‘காதலும் கல்யாணமும்‘, ‘சுயம் வரம்‘ ஆகிய நாவல்கள் விந்தன் எழுதியவை. தொடர்கதைகளாக வந்த நாவல்கள் இவை என்பதால், நாவல் வடிவம் சார்ந்த இலக்கணக் கோட்பாடுகளுக்கு இவை நியாயம் வழங்கியவை என்று சொல்ல முடியாதுதான். ஆனால், சமூகத்தின் சீர்கேடுகளை விமர்சித்துத் தோலுரித்துக் காட்டிவிட வேண்டும் என்ற தீவிர வேட்கையுடன் எழுதிய விந்தன், வடிவ நேர்த்தி, கலை நுணுக்கங்கள் பற்றி அவ்வளவாகக் கவலைப்படவில்லை எனலாம்.

நவீன இலக்கியம் சிரிக்குமா?

முதல் கதைத் தொகுதியை அடுத்து, ‘ஒரே உரிமை‘, ‘சமுதாய விரோதி விந்தன் கதைகள்‘, ‘நாளை நம்முடையது‘, ‘ஏமாந்துதான் கொடுப்பீர்களா?‘, ‘முதல் தேதி‘, ‘இரண்டு ரூபாய்‘, ‘எங்கள் ஏகாம்பரம்‘ – ஆகிய சிறுகதைத் தொகுதிகள் விந்தன் எழுதி வெளியானவை.

சிறுகதை, நாவல் தவிர குழந்தைகளுக்கென்று குட்டிக்கதைகள் எழுதியவர் விந்தன். இவை இரண்டு தொகுதிகளாக வந்திருக்கின்றன. கல்கியில் இவர் எழுதிய பல குட்டிக்கதைகள் இன்னமும் நூல்வடிவம் பெறாமல் இருக்கின்றன. இந்தியா விடுதலை பெற்றவுடன், உழைப்பாளி மக்கள் கனவு கண்ட முன்னேற்றம் எதுவும் அவர்களுக்கு வசப்படாத நிலையில், நாடு முழுவதும் மாபெரும் வேலை நிறுத்தங்கள் வெடித்தன. ரயில்வே தொழிலாளர்கள், நெசவாலைகளிலும் பொறியியல் தொழிற்சாலைகளிலும் வேலைசெய்துவந்த இயந்திரத் தொழிலாளிகள், விந்தனைப் போன்ற அச்சுத் தொழில் செய்வோர் உள்பட, எல்லாப் பிரிவினரும் வேலைநிறுத்தங்களில் இறங்க நேர்ந்தது. விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷாரை எதிர்த்து இதே உழைப்பாளிகள் வேலைநிறுத்தம் செய்தனர். அவற்றுள் பெரும்பாலான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய காங்கிரஸ்காரர்கள், இப்போது அரசுகட்டிலில். ஆனால், உழைப்பாளிகள் வேலைநிறுத்தம் செய்தது ஆள்வோருக்குப் பெரும் எரிச்சலைத் தந்தது. இத்தனைக்கும், இந்தியா முழு விடுதலை பெற்றுவிடவில்லை. இடைக்கால அரசுகளில்தான் காங்கிரஸ்காரர்களும், சுதந்திராக்கட்சி, நீதிக்கட்சி உள்படப் பல மாநில அரசியல்வாதிகளும் பதவிகளில் இருந்தனர்.

விந்தன்
விந்தன்

அடக்குமுறை தாண்டவமாடியது; பத்திரிகைகள், முதலாளிகள் , கட்சித்தலைவர்கள் எல்லாரும் வேலைநிறுத்தம் செய்வது தேசத்துரோகம் என்ற அளவுக்குப் பொதுவாக ஓர் எதிர்ப்புநிலையில் நின்றபோது, விந்தன் துணிந்து நேர் எதிர்முனையில் நின்றிருக்கிறார். அவர் அப்போது எழுதிய 'வேலைநிறுத்தம் என்?‘ என்ற சிறுநூல், இன்றைக்கு வாசித்தாலும் புதுமை குன்றாமல், பொருத்தமான சமூக விமர்சனமாக இருக்கிறது. இந்த நூலை ஓர் பழைய புத்தகக்கடையில் தேடிக்கண்டுபிடித்து வாங்கிப்படித்த அனுபவம் மறக்கவே முடியாதது. இத்தனைக்கும் அந்தப் பிரதி ஓர் ஒளிநகல் பிரதிதான். விந்தனின் புதல்வர் ஜனார்த்தனம், அதை என்னிடமிருந்து வாங்கி மறுபதிப்புச் செய்தார்.

'தினமணி கதிர்' இதழில் அவர் சில ஆண்டுகள் வேலை செய்தபோது, 'இதோ ஒரு மக்கள் பிரதிநிதி' என்ற தொடரை எழுதினார். எம்.கே.தியாகராஜ பாகவதரின் வரலாற்றையும், நடிகவேள் எம்.ஆர். ராதாவின் வரலாற்றையும் தொடர்களாக எழுதியவர் விந்தன். தமிழ்ச்சமூகமே எம்.ஜி.ஆர் என்ற ஆளுமையின் பேரொளியில் மயங்கிநின்றபோது, சிறையிலிருந்த எம்.ஆர்.ராதாவைச் சந்தித்து, அவரின் சமூக அரசியல் சிந்தனைகளை, நாடகமேடைப் போராட்டங்களை மக்கள்முன் வைத்தவர்.

Vikatan

ராஜாஜி, மரபுவழியில் நின்று 'பஜகோவிந்தம்' எழுதினார். அதைப் பகடி செய்து அந்த நாள்களிலேயே 'பசி கோவிந்தம்' எழுதும் துணிச்சல் விந்தனுக்கு மட்டுமே இருந்தது என்பது இன்னுமோர் எடுத்துக்காட்டு. பாரதக் கதையைப் ‘பாட்டினில் பாரதம்‘ என்று கவிதை வடிவில் எழுதினார். பெரியார் அறிவுச்சுவடி என்ற தலைப்பில், சுயமரியாதை நாத்திகச் சிந்தனைகள் அடங்கிய அரிச்சுவடி தந்தவரும் அவரே. ‘ஓ மனிதா‘, ‘மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்‘ ஆகியனவும் விந்தன் படைப்புகளே.

அன்றைய பல இலக்கியவாதிகளைப்போல், சினிமா உலகிலும் முத்திரை பதித்திருக்கிறார். சிவாஜி–எம்.ஜி.ஆர் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி' இவரின் வசனங்களும், பாடல்களும் அடங்கிய ஒரு படம்தான். ‘பாலும் பாவையும்‘ நாவலை ஏ.வி.எம். நிறுவனம் படமாக எடுத்தபோது, கதை வசனம் நீலகண்டன் என்று குறிப்பிடப்பட்டதை எதிர்த்து, அதிலிருந்து வெளியேறியிருக்கிறார். 'அன்பு', 'வாழப்பிறந்தவள்' போன்று இன்னும் சில படங்களுக்கும் கதை வசனம் எழுதியுள்ளார்.

இன்றளவும் புகழ்பெற்ற பாடலான 'மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ, இனிக்கும் இன்ப இரவே நீ வா' விந்தனுடையதுதான்.

கூண்டுக்கிளி
கூண்டுக்கிளி

கல்கியிலிருந்து வெளியேறி, பட வாய்ப்புகளுக்காக விந்தன் முயன்ற காலத்தில், மனிதன் என்ற இதழையும் சொந்தமாக ஓராண்டுக்குமேல் நடத்தியவர். ஜெயகாந்தன் எழுதிய பல சிறுகதைகளை ‘மனிதன்‘ இதழ் மூலம் விந்தன் வெளியிட்டார். அதோடு, அவரின் முதல் சிறுகதைத் தொகுதியான ‘ஒரு பிடி சோறு‘ நூலை புதுமைப் பிரசுரம் மூலம் வெளியிட வகை செய்தவரும் விந்தனே. விந்தன் பின்பற்றிய இலக்கியக்கொள்கை எதுவாக இருந்தது என்று புரிந்துகொள்ள, அவர் எழுதிய கடிதம் ஒன்றின் பின்வரும்வரிகள் உதவும்...

"இருப்பவனைப் பற்றி எழுதி, அவனுடைய பணத்துக்கு உண்மை இரையாவதைவிட, இல்லாதவனைப் பற்றி எழுதி, அவனுடைய உண்மை இறையாவதே மேல் என்று நான் எண்ணுகிறேன். அதனால், இனிக்கும் தமிழ் இன்று கசந்தாலும், கசக்கும் வாழ்க்கை என்றாவது ஒருநாள் இனிக்கும் என்று நான் நம்புகிறேன்.“

- கமலாலயன்

அடுத்த கட்டுரைக்கு