Published:Updated:

``அவர் தனி மனிதரல்ல... ஓர் இயக்கம்!’’ - கோவை ஞானியின் நினைவுகள் பகிரும் படைப்பாளிகள்

கோவை ஞானி
கோவை ஞானி

தமிழ் அறிவுச்சூழலில் பலரும் மதிக்கக்கூடிய மகத்தான ஆளுமை கோவை ஞானி. மார்க்சியம், மெய்யியல், ஈழம், தமிழ் தேசியம், இலக்கியம் எனப் பல தளங்களிலும் தனது செறிவான உரையாடல்களை தொடர்ச்சியாகப் பதிவு செய்தவர்.

அவரது நூல்கள் பல புதிய திறப்புகளுக்கு வழிகோலுபவையாக இருந்துள்ளன. அவரது இறப்பு தமிழகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது ஆளுமைத்திறன் குறித்தும், அவருடனான தங்களின் அனுபவம் குறித்தும் எழுத்தாளர்கள் சிலரிடம் பேசினோம்.

எழுத்தாளர் சோ.தர்மன்

``தமிழின் மிக முக்கியமான ஆளுமை கோவை ஞானி. மார்க்சியம் குறித்த அவரது பார்வை வித்தியாசமானது. அனைத்து தரப்பினருடனும் ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுப்பவர். வயது வித்தியாசம் பார்க்காமல் சகஜமாக அனைவரது சந்தேகங்களுக்கும் பதிலளிப்பவர். அதிகம் கற்றவர்களுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் `ஞானச் செருக்கு' என்பது கிஞ்சித்தும் அவரிடத்தில் இருக்காது. அனைவரையும் மதிக்கும் எளிமையான பண்பாளர். மிகவும் கடுமையான சூழலிலும் இரண்டு இதழ்களை நடத்தியவர். தீராத லட்சிய தாகம் கொண்டவர்களால் மட்டுமே இவ்வாறு தொடர்ச்சியாக செயல்பட முடியும். இறுதிவரை தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர். நாம்தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம் அவருக்கு பார்வை பறிபோய்விட்டது என்று.

சோ.தர்மன்
சோ.தர்மன்

ஆனால், தனது நுண்ணுணர்வால் தனது பார்வை சவாலை எளிதில் கடந்துவிடுகிறார். சமீபத்தில் அவருடனான தொலைபேசி உரையாடலின்போது எனது பேச்சை கவனித்தவர், ``என்ன தர்மன் முன் வரிசையில் பல் விழுந்துவிட்டதா" என்று கேட்டார். அந்த அளவிற்கு நுட்பமாக அனைத்தையும் கவனிக்கக்கூடியவர். எனது `கூகை' நாவல் பற்றி என்னிடம் ஆழமாகப் பேசியுள்ளார். அதுகுறித்து ஒரு கட்டுரை எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். அவருடைய இழப்பு தமிழுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு."

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

``கோவை ஞானி நான் சந்தித்த மனிதர்களில் வியப்பான மனிதர். இரண்டு கண்களிலும் பார்வை இழந்தபோதும்கூட தனது வாசிப்பை குறைத்துக்கொள்ளதாது அவரிடமிருந்து பின்பற்ற வேண்டிய ஒரு குணமாகப் பார்க்கிறேன். வாசிப்பில் அவர்காட்டிய தீவிரம் ஆச்சர்யமளிக்கக் கூடியது. தமிழாசிரியராகப் பணியாற்றி பின் முழுநேர திறனாய்வாளராக, மார்க்சியக் கருத்துகளை பேசக்கூடியவராக இருந்தார். மார்க்சியம் குறித்த அவருடைய பார்வைக்கும் என்னுடைய பார்வைக்கும் முரண்பாடு உண்டு. ஆழமான முரண்பாடுகள் இருப்பினும்கூட நட்பாக பழகக்கூடிய பண்பாளராகவே அவர் இருந்தார்.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

அவரது உடல்ரீதியான சவால்களைப் பொருள்படுத்தாமல் அவர் `நிகழ்' என்ற இதழை நடந்தி வந்தது சவாலான ஒன்று. அவரது வலைதளத்திலும்கூட அவர் தொடர்ச்சியாக இயங்கி இருக்கிறார். மிகக் காரசாரமான விவாதங்களோடுதான் அவரது நட்பு தொடர்ந்தது. இலக்கிய உலகத்தில் சதா விவாத அலைகளைக் கிளப்பக்கூடியவராக அவர் இருந்தார். இலக்கிய உலகத்துக்கு அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.'’

கவிஞர் மனுஷ்யபுத்திரன்

``கோவை ஞானி, ஒரு மார்க்சிய அறிஞர் மட்டுமல்ல. ஒரு தலைசிறந்த இலக்கியத் திறனாய்வாளரும்கூட. மார்க்சியத்தை இந்தியாவுக்கேற்ற அல்லது மண்ணுக்கேற்ற மார்க்சியமாக நாம் பின்பற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் ஞானியும், எஸ்.என். நாகராஜனும் இணைந்து உழைத்தார்கள். `கீழை மார்க்சியம்' என்கிற கோட்பாட்டை முன்வைத்து விவாதத்தை முன்னெடுத்தார்கள். அதோடு மட்டுமல்லாமல், தமிழ் அடையாள அரசியல், இந்தியத் தத்துவ மரபு, மார்க்சியம் மூன்றிற்குமிடையில் ஒரு இணக்கத்தைக் கொண்டு வர ஞானி முயற்சி செய்தார் என்று சொல்லலாம். அந்த வகையில், ஞானி தன்னுடைய பங்களிப்பால் தத்துவம் சார்ந்த விவாதங்களுக்கு புதிய பாதை வகுத்தார். அதுதவிர நவீன இலக்கியம் சார்ந்தும், நவீன கவிதை சார்ந்தும் புதிய பார்வைகளைக் கொண்டிருந்தார். முக்கியமாக கவிதையைப் புரிந்துகொள்வது, கவிதையினுடைய தத்துவார்த்த பின்புலங்களைக் கண்டறிவது குறித்து மிக விரிவாக ஏராளமான கவிதைகள் குறித்தும், கவிஞர்கள் குறித்தும் எழுதியுள்ளார். கண்பார்வை குன்றிய நிலையில் பிறர் உதவியுடன் எழுதியும் படித்தும் இவ்வளவு பெரிய செயல்பாட்டை முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

ஞானி அவர்கள் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய அளவில் இளைஞர்களுக்கு உத்வேகமாக இருந்துள்ளார். குறிப்பாக, எனக்கு ஞானி அவர்கள் மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்தார். என்னை சிறுபத்திரிகை உலகிற்கு அறிமுகப்படுத்தி, எனது கவிதைகள் மீது கவனத்தை ஏற்படுத்தினார். 1990-களின் தொடக்கத்தில் அவர் நடத்திய `நிகழ்' பத்திரிகையில் எனது கவிதைகளை மிகப்பெரிய அளவில் வெளியிட்டார். அது என்மீது மிகப்பெரிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. என்னுடைய புகழ்பெற்ற கவிதையான `கால்களின் ஆல்பம்' கவிதை, ஞானியின் `நிகழ்' இதழில்தான் வெளியானது. நான் வெளியுலகத் தொடர்புகள் அற்ற காலகட்டத்தில் நண்பர்கள் மூலமாக எனக்கு புத்தகங்களையும் சிற்றிதழ்களையும் கொடுத்தனுப்பினார். இந்தக் காரணங்களால்தான் நான் ஞானியை ஒரு தனிமனிதராக இல்லாமல் ஒரு இயக்கமாகப் பார்க்கிறேன். அப்படி ஒரு இயக்கமாகச் செயல்பட்டவர் அவர். அவர் என் ஆசிரியர். நான் என்னுடைய ஆசிரியரில் ஒருவரை இழந்துவிட்டேன்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு