Published:Updated:

கலகக்கார கலைஞன்... வாழ்க்கையைக் கொண்டாடும் போகன்! - பாப் மார்லே பிறந்தநாள் பதிவு

தார்மிக் லீ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கலகக்கார கலைஞன்... வாழ்க்கையைக் கொண்டாடும் போகன்! - பாப் மார்லே பிறந்தநாள் பதிவு
கலகக்கார கலைஞன்... வாழ்க்கையைக் கொண்டாடும் போகன்! - பாப் மார்லே பிறந்தநாள் பதிவு

கலகக்கார கலைஞன்... வாழ்க்கையைக் கொண்டாடும் போகன்! - பாப் மார்லே பிறந்தநாள் பதிவு

இசையால் உலக மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். காரணம், இவர் பாடல்களில் புதைந்திருக்கும் அரசியல் உணர்வு, விடுதலை வேட்கை. சிக்கு விழுந்த தலைமுடி, வசீகரிக்கும் குரல், எதைப்பற்றியும் கவலைப்படாத யதார்த்த பேச்சு... இதற்குச் சொந்தக்காரரான பாப் மார்லேயின் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய சில தகவல்கள்!

நார்வல் மார்லே கப்பல் துறையில் வேலை செய்து வந்தார். 1944-ல் கருப்பினத்தைச் சேர்ந்த சிடெல்லா மால்கம் பூக்கர் என்பவரைச் சந்தித்ததும் காதல் வயப்பட்டு, திருமணம் செய்துகொள்கிறார். அப்போது சிடெல்லாவுக்கு 18 வயது மட்டுமே ஆகியிருந்தது. பிப்ரவரி 6, 1945-ல் இருவருக்கும் பிறந்தவர் ராபர்ட் நெஸ்டா மார்லே. பிறக்கும்போது தன் மகனை உலகமே போற்றிப் புகழப்போகிறது என்பதை அவர்கள் அப்போது கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆம், ராபர்ட் நெஸ்டா மார்லே என்பவர்தான் காலப்போக்கில் பாப் மார்லே என்றழைக்கப்பட்டார். மார்லேயின் பாடல் வரிகளுக்குள் புதைந்திருக்கும் விஷயங்கள் அனைத்தும் அவர் சிறுவயதில் கண்ணுற்றவை. மார்லே பிறந்த கொஞ்ச நாள்களிலேயே நார்வல் மார்லே மனைவியையும் குழந்தையையும் விட்டுப் பிரிந்துவிட்டார். அதற்குப்பின் தன் தாயுடன் நைன் மைல் என்ற இடத்தை வந்தடைந்தார். அங்கு வந்த பின்னர், தன் தந்தையை 10 வருடங்களுக்குப் பிறகு ஒருமுறை மட்டுமே சந்தித்தார். பின், திடீரென ஒருநாள் மார்லேயின் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார். அதன் பின்னர், அங்கிருந்து ட்ரென்ச் டவுன் எனும் இடத்துக்கு வந்து சேர்ந்தனர். 

இங்குதான் ஏழ்மை, அதிகார வர்க்கம், ஆளுமைகளின் கோரமுகம், தொழிலாளர்கள் வர்க்கத்தின் வலி என வாழ்க்கையின் பல கேள்விகளுக்குப்  பதில் கிடைத்தன. சிறு வயதிலிருந்தே இசையின் மீது அதிக நாட்டம் கொண்டுள்ளார் மார்லே. ஆனால், தன் தாய்படும் கஷ்டங்களைப் பார்த்துவிட்டு தன் இசை ஆசையைத் தள்ளி வைத்துவிட்டு வெல்டிங் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றார். இருப்பினும் கிடைக்கும் நேரங்களில் தன் இசைப்பயிற்சியைத் தொடர்ந்துகொண்டேதான் இருந்தார். ஆச்சர்யம் என்னவென்றால், இவர் தானாகத்தான் இசையைக் கற்றுக்கொண்டார். யாரிடமும் பயிற்சி எடுக்கவில்லை. விடுமுறை தினங்களில் தன் அம்மாவை உட்கார வைத்து, அவர் முன் பாடுவார். வாழ்க்கையில் தான் அனுபவித்த வலிகளையும் மக்கள் படும் வலிகளையும் இசை வாயிலாக அனைவருக்கும் கொண்டு சேர்த்தார். மக்களும் தாங்கள் அனுபவிக்கும் வலியை வரியாகக் கேட்கவும், இவரைக் கொண்டாடித் தள்ளினர். 

தற்போது கொண்டாடப்படும் பல வெற்றி நாயகர்களின் முதல் முயற்சி தோல்வியில் இருந்துதான் ஆரம்பிக்கும். இவரின் முதல் முயற்சியும் தோல்வியில்தான் ஆரம்பித்தது. முதலில் இவர் வெளியிட்ட `Judge not', `One cup of coffee' போன்ற பாடல்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. இருப்பினும், தன் முயற்சியைக் கைவிடாமல் போராடிக்கொண்டே இருந்தார். அதன் பயன், 1964-ல் நிகழ்ந்தது. அந்த ஆண்டு இவர் வெளியிட்ட 'Simmer down' என்ற பாடல், ஜமாய்க்கா ஹிட் லிஸ்ட் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. அது பாப் மார்லேவுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. ஆனாலும், அடுத்த பாடலை வெளியிடுவதற்கான முதலீட்டில் பல கஷ்டங்களை எதிர்கொண்டார்.

1966-ல் ரீடா ஆண்டர்சன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்தச் சமயத்தில்தான் அவருக்கு `ரஸ்தஃபரி' என்கிற மதம் அறிமுகம் ஆனது. பார்த்ததும் அவர்களின் கொள்கைகள் பிடித்துப்போனது. அதற்குப் பிறகு, தன் தலைமுடியை நீளமாக வளர்க்கத் தொடங்கினார். அது மட்டுமில்லாமல் அங்கு வளர்க்கப்பட்ட கஞ்சா செடி புனித மூலிகையாகப் பார்க்கப்பட்டது. அதையும் புகைக்கத் தொடங்கினார். இதுபோன்ற தோற்றம் கொண்டவர்களை `ட்ரெட்லாக்ஸ்' (Dreadlocks) என்று அழைப்பார்கள். அந்த மதத்தில் பின்பற்றும் சில வழிமுறைகளை பாப் மார்லே பின்பற்றினார். 

`Get up stand up' என்ற பாடல், இவரின் புகழை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. கறுப்பின மக்களைப் பார்த்து `எழுந்து நில்லுங்கள், உங்களுக்கான உரிமையை மீட்கப் போராடுங்கள், உங்களுக்கான உரிமையைப் பெற நீங்கள்தான் போராட வேண்டும்' என்று அர்த்தம் வரும் இப்பாடலின் மூலம் உலகம் முழுக்க இவருக்கு ரசிகர்கள் குவிந்தார்கள். அதற்குப் பின் இவரது குழுவிலிருந்து ஆட்கள் வெளியேற, அவர் மனைவியே இவரது குழுவில் சேர்ந்து பாடத் தொடங்கினார். அதற்குப் பின் குழுவின் பெயர் `பாப் மார்லே & தி வெய்லர்ஸ்' (Bob Marley & The Wailers' என மாற்றப்பட்டது. பின் `No woman no cry' என்று இவர்கள் பாடிய பாடல் உலகின் மூலை முடுக்குகள் எங்கும் ஒலித்தது. உலகம் முழுக்க மார்லே பிரபலமாகத் தொடங்கினார். அதோடு சேர்த்துக் கலப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. ஆனால், அப்படித் தன்னை அறிமுகம் செய்துகொள்ளாமல் `ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கருப்பினத்தவன்' என்றே தன்னை அடையாளம் காட்டினார். இது ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. எவ்வளவு உச்சத்துக்குச் சென்றாலும் இவரின் எளிமையும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. அதற்கு உதாரணமாக ஒருமுறை நிருபர் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மார்லே கூறிய இந்தப் பதிலைக் கூறலாம்.

Reporter: ``Are you rich?'' 

Bob Marley: ``What do you mean rich?''

Reporter: ``A lot of possessions, A lot of money in the bank?''

Bob Marley : ``Possession makes you rich?, I don't have that type of riches, My rich is life forever.'' என்று எளிமையாக பதிலளித்தார்.

பாடல் மூலம் புரட்சி செய்த மார்லே, உலகம் முழுக்க நீக்ரோ மக்களுக்கு ஆதரவாகத் தன் குரலை உயர்த்தினார். மக்கள், இவரது கொள்கைக்கு மட்டுமின்றி, குரலுக்கும் ரசிகர்களாக மாறத் தொடங்கினர். ஒருபக்கம் மக்கள் ஆதரவு முழுவதும் பாப் மார்லேவுக்குக் கிடைத்தது. கூச்சல் போடவில்லை, போராட்டம் செய்யவில்லை, கலவரம் வெடிக்கவில்லை. ஆனால், அதிகார வர்க்கத்துக்கு எதிராக மக்களை எழுச்சிபெற வைத்தார். அதிகார வர்க்கம் நடுங்கியது. இதற்கு இவர் பரிசாகப் பெற்றது 1976-ல் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு. ஆனால், அதிலிருந்து எப்படியோ சில காயங்களுடன் தப்பிவிட்டார். இரண்டு நாள்கள் கழித்து `ஸ்மைல் ஜமாய்க்கா' என்ற ஓர் இசை விழாவில் கலந்துகொண்டார் மார்லே. `இந்த நிலையில் எதற்குக் கலந்துகொண்டீர்கள்’ எனப் பலரும் கேட்ட கேள்விக்கு, `இந்த உலகுக்குக் கேடு விளைவிக்கும் அவர்களே ஒருநாள்கூட விடுமுறை எடுப்பதில்லை, அவர்களே அப்படியென்றால் நல்லது செய்யும் நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும்' என்று உத்வேகமாகப் பதிலளித்தார். 1990-ல் நிறுவப்பட்ட ஒரு சட்டத்தில், இவரின் பிறந்தநாளான இன்று ஜமாய்க்காவில் தேசிய விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது. 

மார்லேயைப் பற்றித் தெரிந்துகொள்ள அவரின் வரலாற்றைப் படிக்கத் தேவையில்லை. அவரின் பாடல்களைக் கேட்டாலே போதும். ஏனென்றால் அவர் வாழ்க்கையின் அனுபவங்களைத்தான், அவரது பாடல் வரிகளும் பிரதிபலிக்கும். பிறந்தநாள் வாழ்த்துகள் மார்லே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு