Published:Updated:

பரத - இசையோடு திருக்குறளைச் சொல்லித்தரும் தமிழ் ஆசிரியர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பரத - இசையோடு திருக்குறளைச் சொல்லித்தரும் தமிழ் ஆசிரியர்!
பரத - இசையோடு திருக்குறளைச் சொல்லித்தரும் தமிழ் ஆசிரியர்!

பரத - இசையோடு திருக்குறளைச் சொல்லித்தரும் தமிழ் ஆசிரியர்!

``எல்லோர் மனதுக்குள்ளும் ஆக்கத்துக்கான எழுச்சியும் இருக்கும்; அழிவுக்கான வீழ்ச்சியும் இருக்கும். திருக்குறள் கருத்துகளை

உள்வாங்கிட்டோம்னா, ஒவ்வொருத்தர்குள்ளேயும் இருக்கும் சாத்தான், பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிடும்; கொலை, கொள்ளை, சூதுவாது எல்லாமே குறைஞ்சிடும். திருக்குறள் படிச்சா, வீடும் நாடும் நல்லா இருக்கும். அதனால்தான், பரதநாட்டிய அபிநயங்கள் மூலமா இசையோடு சேர்த்து மாணவர்கள் விரும்பும் வகையில திருக்குறளின் ஆற்றலை அவங்களுக்குள்ள விதைச்சுக்கிட்டிருக்கேன்" என்று சமூக அக்கறையோடு பேசுகிறார் சுந்தர மகாலிங்கம்.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள தரகம்பட்டியில் வசிக்கிறார் சுந்தர மகாலிங்கம். 68 வயதாகும் இவர், ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர். சினிமாவில் பத்மினி, வைஜெயந்திமாலா, கமல் போன்றோரின் நடன அசைவுகளைப் பார்த்துப் பார்த்து நடனத்தைக் கற்றுக்கொண்டவர். பரத அசைவுகளை திருக்குறள்களுக்கு ஏற்ப மாற்றி, ஒவ்வொரு திருக்குறளையும் ராகமிட்டுப் பாடி குறளுக்கான பொருளை விளக்குகிறார். மாணவர்கள், கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கிறார்கள். நாம் சென்றபோது, `அகரமுதல எழுத்தெல்லாம்...' என்ற முதல் குரலை மாணவர்களுக்கு ராகத்தோடு, அபிநயம் பிடித்து அவர் சொல்லித்தந்தவிதம்... நம்மை பிரமிக்கவைத்தது.

ஆச்சர்யம் விலகாமல் அவரிடம் பேசினோம்.

``சொந்த ஊர் மதுரை. 1980-ல் கரூர் மாவட்டம், கடவூர் தொடக்கப் பள்ளியில் தமிழ் ஆசிரியரா பணியில் சேர்ந்தேன். மாணவர்களின் கவனம் முழுவதையும் படிப்புல மட்டுமே செலுத்துற அளவுக்கு, புதுமையான கற்பித்தல் முறையை உருவாக்க நினைச்சேன். அதுக்கு, நான் படங்களைப் பார்த்துக் கத்துக்கிட்ட நடனமும் பாடும் திறமையும் கைகொடுத்துச்சு.

பாரதியார், பாரதிதாசன் மற்றும் தமிழ்ப் பாடத்தில் உள்ள பாடல்களை இசையோடு பாடி, அந்தப் பாடல்கள்ல இருக்கும் கருத்துகளை நடன அசைவுகளோடு சொல்லிக்கொடுக்கத் தொடங்கினேன். மாணவர்கள் ஆர்வமா கேட்கவும் பார்க்கவும் ஆரம்பிச்சாங்க. அவங்க மனசுல நான் சொல்லிக்கொடுக்கும் பாடல்கள் அப்படியே ஸ்படிகமா பதிய ஆரம்பிச்சுச்சு. தொடர்ந்து எல்லா வகுப்புகள்லயும் அப்படியே பண்ண ஆரம்பிச்சேன். எல்லா இலக்கியங்களைவிடவும் ஒரு மனிதனை பண்புள்ளவனா, அறமுள்ளவனா மாற்ற, திருக்குறளை அவன் முழுமையா உள்வாங்கிட்டாவே போதும்.

கடந்த 1998-ல இருந்து திருக்குறள்களை இசை, நடனத்தோடு சொல்லித்தர ஆரம்பிச்சேன். சரியான வரவேற்பு. இதுக்காக, 600-க்கும் மேற்பட்ட குறள்களை மனப்பாடம் செய்தேன். 20,000 ரூபாய் செலவுசெஞ்சு இதுக்குனு பிரத்யேகமான உடை, நகை வாங்கினேன். என்னோட இந்த பாணி வெளிய தெரியவே, தமிழகத்துல மட்டுமில்லாம புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவுல இருக்கும் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், 2,400-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குப் போய், இப்படி பரதம் மற்றும் இசையோடு திருக்குறளை நடத்தும் முறையை மாணவர்கள் முன் அரங்கேற்றும் வாய்ப்பு கிடைச்சுச்சு.

இதுதவிர, தமிழகத்தில் உள்ள தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்னு 7 பல்கலைக்கழகங்கள், தமிழகத்தில் உள்ள பல சிறைச்சாலைகள், தனியார் நிறுவனங்கள், பல்வேறு தனியார் அமைப்புகள் முன்பும் திருக்குறள் பரதத்தை அரங்கேற்றி இருக்கிறேன். எல்லோருக்கும் இந்தக் கற்பித்தல் முறை பிடிச்சிடுச்சு.

சிறைக்கைதிகள் பலர், `முன்னாடியே திருக்குறள்களைத் தெரிஞ்சுக்கிற வாய்ப்பு கிடைச்சிருந்தா, தப்பு செஞ்சிருக்கவும் மாட்டோம், சிறைக்கு வந்திருக்கவும் மாட்டோம்'னு கண்ணீர் மல்க சொல்வாங்க. இதுவரைக்கும் 5 லட்சம் மாணவர்கள் முன்னாடி, இப்படி பரதம் - இசை மூலம் திருக்குறளைச் சொல்லித்தரும் நிகழ்ச்சியை நடத்தியிருக்கேன். இதுக்காக, கடந்த 20 வருஷங்கள்ல 7 லட்சம் ரூபாய் வரைக்கும் சொந்த காசைச் செலவழிச்சிருக்கேன்.

புதுச்சேரி மாநிலக் கல்வித்துறைச் செயலாளர் மீனாட்சி, `புதுச்சேரியில் எப்போ வேண்டுமானாலும் பள்ளி, கல்லூரிகளில் இப்படி பரதம் மூலம் திருக்குறள் கருத்து நிகழ்ச்சியை நடத்தலாம்'னு எனக்கு அனுமதி கடிதம் கொடுத்திருக்கார்.

சென்னையில் ஆசிரியர் பயிற்சி வளர்ச்சி நிறுவனம் சார்பில் `பணித்திறச் செம்மல்' விருது, கிருஷ்ணகிரி `குறள் நாட்டிய வேந்தர்' விருது, முசிறி தமிழ்ச்சங்கம் வழங்கிய `நாட்டியக் குறளார்' விருதுனு 10-க்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கியிருக்கேன். குறைந்தபட்சம் பத்து லட்சம் பேரிடமாவது இந்தத் திருக்குறளின் மேன்மையை பரதம்-இசை மூலம் கொண்டுசேர்ப்பதையே என் வாழ்நாள் லட்சியமா வெச்சிருக்கேன். இதுக்காக யார்கிட்டயும் பத்து பைசா வாங்கினதில்லை. சேவை அடிப்படையிலேயே செய்றேன்.

`உங்களால்தான், திருக்குறளை ஆழ்ந்து படிக்க ஆரம்பிச்சிருக்கோம்; எங்க மனசுல கிடக்கிற கெட்ட எண்ணங்களை எல்லாம் சுக்குநூறா உடையுது'ன்னு பலரும் சொல்லும்போது, ஆசிரியர் பணியில் கிடைக்காத ஆனந்தம் இந்தத் திருக்குறளால் கிடைக்கும். நாம இன்னிக்கு பரதம்-இசை மூலம் விதைக்கிற திருக்குறள் விதை, நாளைக்கு வளமான சமுதாயத்தை உருவாக்க சின்னக் காரணியா இருக்கும். அந்தத் திருப்தியோடு ஓடிக்கிட்டிருக்கேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு