Published:Updated:

அம்மாவின் பொய்களை நாம் கண்டுகொள்வதே இல்லை?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அம்மாவின் பொய்களை நாம் கண்டுகொள்வதே இல்லை?!
அம்மாவின் பொய்களை நாம் கண்டுகொள்வதே இல்லை?!

`அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, தனித் தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா!’ - எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம். 

`அம்மா என்றால் ஓர் அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, தனித்தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா!’
- எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம். 

லா.ச.ரா `சிந்தா நதி' என்ற தன் நினைவலைகளைத் தொகுத்து எழுதிய தொகுப்பில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பார். ``அம்மான்னா யாருக்குத்தான் பிடிக்காது" என தனுஷ் `புதுப்பேட்டை' படத்தில் போகிறபோக்கில் பேசுகிற வசனத்தை அவ்வளவு எளிதில் நம்மால் கடந்து போய்விட முடியுமா. சக உயிர்களுக்குத் துயரம் வருகையில் துடித்துப்போய் உதவும் பலரும், தாயுள்ளம்கொண்டவர்களாகக் கூறப்படுவதன் காரணமும் அதுதான்.

அம்மா என்ற சொல்லுக்குள் அன்பு, கருணை போன்ற உணர்வுகள் கலந்திருக்கும். இதை நம்மில் பலரும் உணர்ந்திருப்போம். அன்பு, பேரன்பு போன்ற வார்த்தைகள் க்ளிஷேவாகிவிட்டதாகச் சொல்லப்படும் இந்தக் காலத்தில்கூட, தெருவில் தனது குழந்தையைச் சுமந்துகொண்டு யாசகம் கேட்கும் வடஇந்திய இளம் தாயைப் பார்த்ததும் நம் கைகள் சட்டைப்பைக்குள் நுழைந்துவிடுகிறதுதானே! 

நம்மைக் கருவில்  சுமந்து  பெற்றெடுத்த தாய் மட்டுமன்றி, வாழ்வில் நாம் பல தாய்மார்களால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். பாட்டிகள் இல்லாத வீடுகளில் பிறந்த குழந்தைகளை ஒரு மாத காலம் அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள தாய்மார்தான் குளிப்பாட்டியிருப்பார்கள். இன்று நாம் சொந்த ஊர்களுக்குப் போகும்போது ``உன்னைய ஒருகாலத்துல தூக்கி வளத்ததே நான்தான் சாமி, உங்க அம்மாவவிட நான்தான்டா உன்னைய அதிகமா தூக்கிச் சுமந்துருப்பேன்" எனச் சொல்லும் அண்டைவீட்டு அம்மா, எல்லோர் வாழ்விலும் இருப்பார்.

நம் உறவுகளில் உள்ள பெரியம்மா, சின்னம்மா இவர்களைவிட நம் எல்லோர் வாழ்விலும் நீக்கமற நிறைந்திருப்பர் நம் நண்பர்களின் அம்மாக்கள். நம் நண்பனின் வீடுகள், நம் வீட்டைப்போல சகஜமாக நம்மால் அணுகப்படுவதற்குக் காரணம் நண்பர்களின் அம்மாக்கள்தான். எத்தனையோ நாளில் நமக்குப் பிடித்தமான உணவை தங்கள் வீட்டில் சமைக்கும்போது நம் நண்பனிடம், ``டேய், அவனை மத்தியானம் சாப்பிட வரச் சொல்லுடா" என அழைக்கும் அம்மாக்கள் நம் நினைவிலிருந்து அகலாமல்தானே இருக்கிறார்.

நம் நண்பனின் அக்கா திருமணத்தில் ஃப்ளெக்ஸ் வைப்பதிலிருந்து, சாம்பார் வாளி தூக்குவது, மொய் எழுதுவது, சீர்வரிசை சாமான்களை வண்டியில் ஏற்றி மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புவது வரை நம்மை உரிமையோடு இயக்குவது நண்பன் மட்டுமல்ல, அவனின் அம்மாவும்தான். திருமணம் முடிந்த பிறகு அவர் அழுதுகொண்டிருக்கையில், ``இவ்வளவு நாள் அக்காவ திட்டிட்டே இருந்த. இப்ப ஏன்மா ஓவர் ஆக்ட் பண்ற'' என்றதும், ``அட போடா..." என அம்மாக்களின் முகத்தில் புன்னகை வரவழைக்க நம்மால்தானே முடியும். 

யார் குழந்தை என்றே தெரியாமல் பராமரிக்கும் செவிலியர்கள், பள்ளிக்கூட ஆயாக்கள் எனப் பல அம்மாக்களால் முழுமை அடைந்ததுதான் நம் வாழ்வு. இன்னும் சொல்லப்போனால், யாரோ ஒருவர் வளர்க்கப்போகிற குழந்தையைச் சுமந்து பெற்றெடுக்கும் வாடகைத் தாய்மார்கள் அன்னையர் தினத்தன்றுகூட கண்டுகொள்ளப்படாதவர்கள். குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் முகத்தைக்கூடப் பார்க்க அனுமதிக்கப்படாமல் விரட்டியடிக்கப்படும் கெடு வாழ்வு `வாடகைத் தாய்மார்'களுடையது. 50 வயதைக் கடந்த/நெருங்குகிற பலரும்  கடைசியாக அதிகம் அழுதது, அவரது தாயை இழந்த கணமாகத்தான் இருக்கும்.  

நமக்கு வயதாக வயதாக, தாயுடன் ஏற்படும் தூரத்தைப் பற்றிய ஞானக்கூத்தன் கவிதை ஒன்று உள்ளது.

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சிநேகம்கொண்டால்
காதறுந்துபோகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற்கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனை பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனை பொய்கள் முன்புசொன்ன நீ
எதனாலின்று பொய்களை நிறுத்திக்கொண்டாய்

தவறுமேல் தவறு செய்யும்
ஆற்றல் போய்விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென்றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல்போலத்
தாய் பொய்யை நிறுத்தலாமா?

உன்பிள்ளை உன்னைவிட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

- ஞானக்கூத்தன்.

இளவயதில் காதல் தோல்வியோ, பெரும் அவமானமோ நேர்ந்தால் தாயின் மடியில்தானே நம்மை மீட்டெடுத்திருப்போம். வேலை நிமித்தம் எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும் அம்மாவுக்கு போன் பண்ணிப் பேசுங்க. அம்மா என்றால், நம்மை வாழ்வில் நிறைந்த எல்லா அம்மாக்களும்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு