Published:Updated:

மும்மடங்கு லாபம் தரும் மியூரல் பெயின்ட்டிங்!

மும்மடங்கு லாபம் தரும் மியூரல் பெயின்ட்டிங்!

பிரீமியம் ஸ்டோரி

''பெரிய பெரிய ஹோட்டல்கள், ரசனைமிக்க வீடுகள் என சுவர்களில் அழகழகான அலங்காரப் படங்களை ஃப்ரேம் செய்து மாட்டியிருப்பாங்க. அதில் ஒருவகைதான், மியூரல் பெயின்ட்டிங். இந்த அலங்காரப் பெயின்ட்டிங்குகளை உருவாக்க, ஓவியரா இருக்கணும்கிற அவசியம் இல்லை. கிராஃப்ட்டில் ஆர்வம் இருந்தாலே போதும்!''

பெயின்ட், பிரஷ்களை எடுத்து வைத்தவாறே பேசினார், ராஜபாளையத்திலுள்ள 'சரவணா அகாடமி’யின் உரிமையாளர் ஜெயராணி. அரசாங்கப் பள்ளியில் கிடைத்த ஓவிய ஆசிரியைப் பணியைக்கூட விட்டுவிட்டு, ஆர்ட் அண்ட் கிராஃப்ட் தொழில் மற்றும் பயிற்சி வகுப்புகளில் பிஸியாக இருக்கும் பி.காம் பட்டதாரி.

மும்மடங்கு லாபம் தரும் மியூரல் பெயின்ட்டிங்!

''தஞ்சாவூர் ஓவியங்கள், டெரக்கோட்டா ஜுவல்லரி, டிசைனர் ஜுவல்லரி, குழந்தைகளுக்கு பேப்பர் டிசைன் வகுப்புகள், பெண்களுக்கு ஃபேப்ரிக் பெயின்ட்டிங் வகுப்புகள்னு இதெல்லாமே இப்போ நான் செய்துட்டு இருந்தாலும், மியூரல் பெயின்ட்டிங்கை இங்கே கற்றுக் கொடுக்கக் காரணம், மார்க்கெட்டில் அதுக்கு இருக்கிற காஸ்ட்லி வரவேற்பு. இன்னிக்கு மிடில் கிளாஸ் வீடுகளில்கூட இன்டீரியருக்கு மியூரல் பெயின்ட்டிங்கை விரும்பி வாங்குறாங்க. இதை லாபகரமான பிசினஸ் ஆக்கலாம். இன்னொரு பக்கம், ஆயிரக்கணக்கில் பணம் செலவழிச்சு மியூரல் பெயின்ட்டிங் வாங்கி வீட்டுல மாட்டுறதுக்கு, நீங்களே அதை சுலபமா செய்துவிடலாம்!'' என்ற ஜெயராணி, தேவையான பொருட்களை புகைப்படத்துக்கு அடுக்கி ஆயத்தமானார்.

தேவையான பொருட்கள்:

படம் - 1: கார்ட் போர்டு (பெரிய சைஸ்) 5 எம்.எம் - 1, 8 எம்.எம் - 1, மஞ்சள் கார்பன் பேப்பர், எம்சீல், பென்சில், ஆயில் கலர்கள், பிரஷ் 000-1, நார்மல் பிரஷ் (ஏதாவது ஒரு சைஸ்) - 1, சிறிய ஆணி - 6, வொயிட் கலர் பிரைமர் (மட்டி), கண்ணன் ஓவியம் தேவையான வடிவத்தில்.

செய்முறை:

படம் - 2: 8 எம்.எம். கார்ட் போர்டில் மஞ்சள் கார்பன் பேப்பரை விரித்து, ஓவியத்தில் இருக்கும் கண்ணன், மாடு மற்றும் கன்று ஆகிய உருவங்களின் அவுட் லைன் மட்டும் வரைந்துகொள்ளவும்.

படம் - 3: அதை கார்பென்டரிடம் கொடுத்து, வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

படம் - 4: வெட்டி எடுத்த படத்தை, 5 எம்.எம். கார்ட் போர்டு அட்டையின் நடுவில் வைத்து, படம் நகராமல் ஐந்து இடங்களில் சிறிய ஆணிகளை அடித்துக் கொள்ளவும்.

மும்மடங்கு லாபம் தரும் மியூரல் பெயின்ட்டிங்!

படம் - 5: ஒட்டிய படம் மற்றும் 5 எம்.எம். கார்ட் போர்டு அட்டை முழுக்க மட்டி அடித்து காயவைக்கவும்.

படம் - 6: பிறகு, கண்ணன், மாடுகன்று ஓவியத்தை தெளிவாக டிரேஸ் பேப்பரில் வரைந்து, இதை கார்ட் போர்டில் வெட்டி ஒட்டப்பட்டிருக்கும் உருவங்களின் மீது வரைந்து கொள்ளவும்.

படம் - 7:  பின்பு அணிகலன்கள், மாலை போன்றவற்றை எம்சீல் கொண்டு செய்து, ஒட்டவும்.

படம் - 8: கண்ணன் படத்தைச் சுற்றி சில அலங்காரங்களை, காட்சிகளை கற்பனைத் திறனுக்கேற்ப வரைந்து கொள்ளவும். ஆயில் கலர்கள் கொண்டு படம் முழுக்க வண்ணம் தீட்டவும்.

படம் - 9: மியூரல் பெயின்ட்டிங் ரெடி!

''வேலைப்பாடுகளுக்கு ஏற்ப மியூரல் பெயின்ட்டிங்குக்கு குறைந்தது ஐந்தாயிரம் ரூபாயில இருந்து, ஏழாயிரம் ரூபாய் வரை விலை வைக்கலாம். எத்தனை வருடங்கள் ஆனாலும் நிறம் மங்காமல் பெயர் காப்பாற்றும் இந்த பெயின்ட்டிங் என்பது குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் உழைப்பும், கொஞ்சம் கற்பனைத்திறனும் இருந்தா, மும்மடங்கு லாபம் அள்ளித்தரும் பிசினஸ் இது. ஒரு மியூரல் பெயின்ட்டிங் செய்ய ஒரு நாள் தேவைப்படும். உங்க உழைப்பைப் பொறுத்து லாபத்தை கணக்குப் போட்டுக்கோங்க!'' என்று வழிகாட்டுகிறார் ஜெயராணி!

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...

சு.சூரியா கோமதி, படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு