Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ` 200 ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன!

இரும்பு மனுஷி!

ணவரை இழந்து தனியே இருக்கும் அந்த ஐம்பது வயதுப் பெண்மணி, எனக்குத் தெரிந்தவர். அமெரிக்காவில் உள்ள மகனுடன் சென்று வசிக்கலாம். ஆனால், செல்ல மறுத்ததுடன், அவன் பணம் எதுவும் அனுப்ப வேண்டாமென்றும் கூறிவிட்டார். மிக நெருங்கிய உறவினர்கள் அழைத்தும் போகவில்லை. ``தனிமை ஒரு துயரமல்ல. நான் வேலை பார்ப்பதாலும், கணவரின் சேமிப்பு வட்டி வருவதாலும் பணக்கஷ்டமும் இல்லை. நான் ஏன் பிறருக்குப் பாரமாக இருக்க வேண்டும்? என் சுதந்திரத்தையும் இழந்து, அவர்களின் சுதந்திரத்துக்கும் இடையூறாக இருக்க விரும்பவில்லை. தனியாக வாழும் அதேசமயம், உறவுகளையும், நட்பையும் விட்டுக் கொடுக்காமல் தொடரவும் செய்யலாம். தன்னம்பிக்கையுடன் போராடி வாழ்வதில் உள்ள மன நிறைவு வேறு எதிலும் வராது!’’ என்கிறார் அவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`அப்பப்பா... இவரல்லவோ புதுமைப் பெண்!’ என வியந்தேன். அந்த இரும்பு மனுஷிக்கு பெண்களின் சார்பில் ஒரு சல்யூட்!

- பி.பத்மாவதி, ராம்நகர்

அனுபவங்கள் பேசுகின்றன!

ரயில் பயணங்களில்...

கோயில் விசேஷத்துக்காக குடும்பத் தினருடன் கோவையிலிருந்து, திருச்சிக்கு ரயிலில் சென்றேன். முன்பதிவு இல்லாத அந்த பொதுப்பெட்டியில், 4 பேர் அமரக் கூடிய இருக்கையில் ஒரு பயணி படுத்துக்கொண்டு, எங்களுக்கு இடம் தர மறுத்தார். கேட்டால் உடம்பு சரியில்லை என்று காரணம் சொன்னார். அதற்கு எதிர்புறம் உள்ள 4 பேர் கொண்ட இருக்கையில் ஒருவர் படுத்துக்கொண்டு `ஆள் வருவார்கள்’ என்றார். `ஆள் வந்தால் எழுந்துவிடுகிறோம்’ என்று கூறி அமர்ந்தோம். நாங்கள் இறங்கும் வரை ஆளே வரவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

`நான் மட்டும் சவுகரியமாக இருந்தால் போதும்; மற்ற பயணிகள் எவ்வளவு கஷ்டப்பட்டால் எனக்கென்ன!’ என்று நினைத்து செயல்படும் இரக்கமற்றவர்கள், திருந்த வேண்டியது அவசியம்!

- அ.வாணி கணபதி, கோவை

அனுபவங்கள் பேசுகின்றன!

மணியான மாமியார்!

மீபத்தில் எங்கள் குழந்தைகள் இருவருக்கும் காதணி விழா நடத்தினோம். அப்போது மண்டபத்தின் மாடியில் விருந்து பரிமாறுவதில் எல்லோரும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம். திடீரென என் மாமியார் என்னை அழைத்து, “அங்கே ரெண்டு பொம்பளைங்க போறாங்களே... அவங்க நமக்கு தெரிஞ்சவங்க மாதிரியில்லை. நீ அவங்களை தூரமா நின்னு கண்காணிச்சுக்கோ. நேரா பந்தியில போய் உட்கார்ந்தா விட்டுவிடு. சாப்பிட்டு போகட்டும். இல்லைன்னா, வேற எங்காவது போறாங்களா... சமையல் சாமான், பாத்திரம், நகை, புடவைனு கைவைக்கிறாங்களானு கவனமா பார்த்துக்கோ” என்றார். அவர் கூறியது போலவே மேலே சென்று பார்த்தேன். அந்த இருவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு, கைகழுவிவிட்டு நேராக வெளியே சென்றனர். அதை மாமியாரிடம் தெரிவித்தேன். அவர் நிம்மதியடைந்தார்.

முகம் தெரியாதவர்கள் என்றாலும், `பசியாறிவிட்டு போகட்டும்’ என்ற மனிதாபிமானத்தையும், அதே நேரம் எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்திய மாமியாரை நினைத்துப் பெருமைகொண்டேன்.

- ஆர்.கவிதா, மதுரை