Published:Updated:

‘கலகல’ க்ளிக்ஸ்!

‘கலகல’ க்ளிக்ஸ்!

ல்யாண மண்டபம் முழுக்க நிரம்பி வழியும் உறவுகள், கலர் கலராக சேட்டைகளுடன் வலம் வரும் பெண்கள், கலாசார ரீதியான பல சம்பிரதாயங்கள் என தென் இந்திய திருமணங்கள், வெறுமனே வார்த்தைகளில் சொல்லி முடிக்கும் கொண்டாட்டங்கள் அல்ல! 

திராவிட மாநிலங்கள் எனப்படும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் திருமண வைபவங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், நெருங்கிப் பார்த்தால்... கலாசார ரீதியாக கண்ணைக் கவரும் பல்வேறு வித்தியாசங்களையும் பார்க்க முடியும். அந்த வகையில், ஆந்திர மாநில திருமணங்கள் பற்றிய படங்கள் இங்கே உங்கள் கண்முன்னே விரிகின்றன. இந்தக் காட்சிகளில் இருக்கும் தாத்பர்யங்களை விவரிக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த சௌமியாஸ்ரீ .

‘கலகல’ க்ளிக்ஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘கலகல’ க்ளிக்ஸ்!

”பொதுவாக தெலுங்கு திருமணங்கள் எல்லாமே இரவு நேரத்தில்தான் நடக்கும். ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போதே கல்யாணம் நடக்க வேண்டிய நேரமும் நிச்சயிக்கப்பட்டுவிடும். அது இரவு பத்து மணியாகவும் இருக்கலாம், நள்ளிரவு இரண்டு மணியாகவும்கூட இருக்கலாம். மஞ்சளில் நனைத்து எடுத்து காயவைத்த வெள்ளைப் புடவை, வேட்டியைத்தான் பொண்ணும் பையனும் திருமணத்தன்று அணிய வேண்டும். இன்றும் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டாலும், சில்க் ஆடைகளை அணிவதும் பரவலாக நடக்கிறது.

‘கலகல’ க்ளிக்ஸ்!

மணவறைக்கு மணமக்கள் வருவதற்கு முன்பாக, மணமகன் காசியாத்திரை கிளம்ப, தன் சகோதரியை கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி மணப்பெண்ணின் சகோதரர் அவருக்கு குடை பிடிப்பதோடு பாதை பூஜையும் செய்வார். தன் காலைப் பிடித்த எதிர்கால மச்சினன் கைக்கு மாப்பிள்ளை மோதிரம் போட்டு விட்டுட்டுதான் மணவறைக்கு செல்ல வேண்டும்.

‘கலகல’ க்ளிக்ஸ்!

தாலி கட்டும் முன்பாக பெண் மற்றும் மாப்பிள்ளை இருவரும் பார்த்துக்கொள்ளவே கூடாது. இரண்டு பேருக்கும் நடுவில் திரை போட்டு எதிரெதிராக பிரித்துதான் உட்கார வைத்திருப்பார்கள். இருவரிடமும் இளநீர்காய் கொடுக்கப்பட்டு, அதற்கு இருவரும் பால், தண்ணீர் எல்லாம் வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த இளநீரைத்தான் தாம்பூல தட்டில் தாலியுடன் வைத்து ஆசீர்வாதத்துக்காக எல்லோரிடமும் கொண்டு செல்வார்கள். இது நாயுடு இனத் திருமணங்களில் இடம்பெறும். மற்ற இனத்தாரின் திருமணங்களில் இதற்குப் பதிலாக தேங்காயை வைத்து அட்சதைக்காக எடுத்துச் செல்வார்கள். இந்தத் தேங்காயை கல்யாணம் முடிந்த பிறகு வரும் முதல் வெள்ளிக்கிழமையன்று பூஜைக்குப் பயன்படுத்துவார்கள். அந்த தேங்காய் எந்த அளவுக்கு நன்றாக இருக்கிறதோ... அந்த அளவுக்கு அவர்களின் கல்யாண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

‘கலகல’ க்ளிக்ஸ்!

முகூர்த்தத்துக்கு கொஞ்ச நேரம் முன்பாக மணமக்களிடம் ஒரு கிண்ணத்தில் வெல்லம்  சீரகம் கலவையை கொடுப்பார்கள். அதை சரியாக முகூர்த்த நேரத்தில் இருவரும் மாற்றி மாற்றி வாயில் வைப்பதோடு தலையிலும் வைக்க வேண்டும். தாலி கட்டுவதைவிட இந்த வெல்லம் வைக்கும் அந்த நிமிஷம்தான் தெலுங்கு திருமணங்களில் மிகவுமே முக்கியமானது. ஏனெனில் வெல்லம் வைத்துவிட்டாலே கல்யாணம் முடிந்த மாதிரிதான். அதன்பிறகு திரையை விலக்கிவிட்டுகூட தாலி கட்டலாம். ஆனால், தாலி கட்டும் வரையில் அந்த வெல்லத்தை சாப்பிட்டுவிடக் கூடாது. அதுவாகவே அப்படியே கரைந்து போகவிட வேண்டும். அந்த வெல்லம் போலவே மணமக்களும் இனிப்பாக அன்போடு உருக்கமாக வாழ வேண்டும் என்பதை

‘கலகல’ க்ளிக்ஸ்!

உணர்த்தத்தான் இந்த சடங்கு'' என்ற சௌமியாஸ்ரீ.

”இப்படி வரிசையாக ஏகப்பட்ட சடங்குகள் நடக்கும். கல்யாணம் முடிந்த பிறகு தளம்பராலு விளையாட்டு விமரிசையாக நடக்கும். மாப்பிளையும் மணமகளும் எதிரெதிரே அமர, தலையில் அரிசியை மாற்றி மாற்றி கொட்டி விளையாடும் இந்த விளையாட்டு வித்தியாசமாக இருப்பதோடு அவ்வளவு அழகாகவும் இருக்கும். மணமக்கள் கன்னங்களில் அப்பளம் வைத்து அடித்து விளையாடுவது, குடத்துக்குள் போட்ட மோதிரத்தை போட்டிப் போட்டு எடுப்பது என்று ஒவ்வொரு விளையாட்டுமே புதிதாக கல்யாணமான தம்பதிகளுக்குள் அவர்களையறியாமல் அந்நியோன்யத்தை இன்னும் அதிகமாக்குவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன'' என்று சொன்னார்.

- க.தனலட்சுமி

படங்கள்: ஸ்ரீ நிவாஸ், கார்த்திக் யாதவ்