கைகொடுக்கும் கிராஃப்ட்! - 47

சில்க் த்ரெட் வளையல்... செம பிசினஸ்!

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 47

‘‘எங்க அக்கா நிறைய ஆர்ட் வொர்க் செய்வாங்க. பொழுதுபோக்கா அவங்ககூட சேர்ந்து நானும் செய்ய ஆரம்பிச்சு, இன்னிக்கு பாட் பெயின்ட்டிங், கிளாஸ் பெயின்ட்டிங், க்வில்லிங் நகைகள், டெரக்கோட்டா நகைகள், பேப்பர் பூக்கள், சில்க் த்ரெட் வளையல்கள்னு எல்லா ஏரியாவிலும் என் கற்பனைத் திறனால் புகுந்து விளையாடுறேன். விளையாட்டா கத்துக்கிட்ட விஷயம் இப்போ பெரிய அளவில் லாபம் ஈட்டித் தருது. குறிப்பா, சில்க் த்ரெட் வளையல்களை அமெரிக்கா வரை அனுப்புறேன். அந்தளவுக்கு இது பெண்களோட ஃபேவரைட் ஆகியிருக்கு!’’

- விருதுநகர், ராஜபாளையம் முகவூரைச் சேர்ந்த ஷியாமளாகௌரி, அந்த சில்க் த்ரெட் வளையல்களைச் செய்யக் கற்றுத்தருகிறார் இங்கு...

தேவையான பொருட்கள்:

பிளெய்ன் பிளாஸ்டிக் வளையல் - 2, சில்க் நூல் - இரண்டு நிறங்களில் (பச்சை, ஆரஞ்சு), டபுள் ரோ செயின் ஸ்டோன் - ஒன்றரை மீட்டர், ஃபெவிக்கால், கத்தரிக்கோல், ஸ்கேல்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 47

செய்முறை:

படம் 1: ஸ்கேல் அல்லது ஏதேனும் ஒரு நீளமான பொருளில் 20 முறை நீளவாக்கில் ஆரஞ்சு நூலைச் சுற்றிக்கொள்ளவும்.

படம் 2: சுற்றிய நூலைக் கழற்றி அதன் ஒரு முனையைக் கத்தரித்து நூலை நீளமாக்கிக்கொள்ளவும். இப்போது நீளமான ஆரஞ்சு நூல்  துண்டுகள் 20, கையில் இருக்கும்.

படம் 3: வளையலில் சுற்றுவதற்குத் தோதாக நூலின் இரு முனைகளையும் சமமாகக் கத்தரித்துவிட்டு, 5 நூல் துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

படம் 4, 4A: இரண்டு பிளாஸ்டிக் வளையல்களை ஃபெவிக்கால் தடவி இணைத்து ஒட்டி சிறிது நேரம் காயவிடவும்.

படம் 5: வளையல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி நன்றாகக் காய்ந்த உடன் வளையலின் மேல், கீழ் என எல்லா பகுதிகளிலும் ஃபெவிக்கால் தடவி, வெட்டி வைத்துள்ள 15 ஆரஞ்சு நூல் துண்டுகளையும் ஒருசேர கீழிருந்து மேலாக வளையலில் உள்விட்டுச் சுற்றிக்கொள்ளவும்.

படம் 6, 6A: வளையலில் சரிபாதி அளவு ஆரஞ்சு நூல் வந்தவுடன், வளையலின் அடிப்புறம் ஃபெவிக்கால் தடவி நூலை ஒட்டிவிட்டு, மீதமுள்ள நூலைக் கத்தரித்துவிடவும். பிசிறாக இருக்கும் நூலை ஃபெவிக்கால் கொண்டு ஒட்டிவிடவும்.

படம் 7: ஆரஞ்சு நூலை வெட்டியது போலவே பச்சை நூலையும் 20 முறை நீளவாக்கில் ஸ்கேலில் சுற்றி, அதைக் கழற்றி ஒரு முனையைக் கத்தரித்து, சுற்றிய நூலை இரு முனைகளையும் வெட்டி நீளமாக எடுத்துக்கொள்ளவும். 5 நூல் துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

படம் 8: ஆரஞ்சு நூல் துண்டுகள்  சுற்றி முடித்திருக்கும் இடத்தில் இருந்து, ஃபெவிக்கால் தடவி பச்சை நூல் துண்டுகளை கீழிருந்து மேலாக இறுக்கமாகச் சுற்றவும். வளையல் முழுவதும் சுற்றி முடித்ததும் சிறிது நேரம் காயவிடவும். 
  
படம் 9: வளையல் காய்ந்ததும் டபுள் ரோ செயின் ஸ்டோனை ஸ்டிக்கர் பிரிக்காமல் வளையலின் மீது வைத்து, ஸ்டோன்களுக்கு நடுவில் உள்ள இடைவெளியில், தனியாக எடுத்து வைத்துள்ள 5 ஆரஞ்சு மற்றும் 5 பச்சை நூல் துண்டுகளைக் கொண்டு ஒரு முறை சுற்றவும் (ஆரஞ்சு நூல் சுற்றப்பட்ட இடத்தில பச்சை நூலையும், பச்சை நூல் சுற்றப்பட்ட இடத்தில ஆரஞ்சு நூலையும் கான்ட்ராஸ்டாக பார்டர் போல் இறுக்கமாகச் சுற்றவும்).

படம் 10: சில்க் த்ரெட் வளையல் தயார்!

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 47
கைகொடுக்கும் கிராஃப்ட்! - 47

``நாம செஞ்சிருக்கிறது டபுள் ரோ செயின் ஸ்டோன் கொண்ட வளையல். இதை பார்டர் வளையலாவும், இதேபோல சிங்கள் ரோ ஸ்டோன் கொண்டு நூல் சுற்றிய வளையல்களில் ஒட்டி பார்டர் வளையல்களோட இணைத்து செட் வளையல்களாவும் பயன்படுத்தலாம்.

கற்பனைத் திறனைப் பொறுத்து 350 ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரை விலைவைத்து விற்கலாம். ரெண்டு மடங்கு லாபம் தரும் பிசினஸ் இது. ஒரு செட் வளையல் செய்ய அதிகபட்சம் ஒரு மணி நேரம்தான் ஆகும். ஒரு நாளைக்கு நாலு செட் வளையல்கள் செய்தால்கூட நல்ல வருமானம் கிடைக்கும். ஃபேன்ஸி கடைகளுக்குச் செய்து கொடுக்கிறது, ஆர்டர் எடுத்து செய்றதுனு இதையே ஒரு தொழிலா எடுத்துச் செய்தா, ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் வரை சம்பாதிப்பது உறுதி! - சில்க் த்ரெட் வளையலின் சிறப்புகளை சொல்லி முடித்தார் ஷியாமளாகௌரி!

- கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...