
சாரா டீஸ்டேல்
அமெரிக்காவின் சிறந்த பெண் கவிஞர்களுள் ஒருவர் (1884-1933). 1918-ம் ஆண்டு கவிதைக்கான புலிட்சர் விருதை பெற்றவர். சாரா டீஸ்டேலின் கவிதைகள், ஒரு பெண்ணின் தீவிரமான அகவுணர்வை வெவ்வேறு நிலைகளில் பிரதிபலிப்பவை. 49 வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார் சாரா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பழைய காதலும் புதிய காதலும்
எனது இதயத்தில்
பழைய காதல்
புதிய காதலுடன்
போரிட்டுக்கொண்டிருக்கிறது
இரவு முழுவதும்
உறக்கமின்றி.
எனது பழைய காதல்
சொன்ன
இன் சொற்கள்
என் கட்டிலைச் சுற்றி
இப்போது
மிரட்டிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் அவற்றை
என்னால் கேட்க முடியவில்லை.
என்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும்
எனது புதிய காதலைத்தான்
நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
எப்படி நான் உண்மையாக இருக்க முடியும்
என் பழைய காதலே?
நான் உனக்கு துரோகம் இழைக்கவா?
அல்லது எனக்கா?
நான் கவலைப்பட மாட்டேன்
நான் இறந்த பிறகு,
ஒளிரும் ஏப்ரல்
அவளது மழைக் கூந்தலை
என் மீது அசைத்து
நீர்த்துளிகள் சிந்தும்போது
மனமுடைந்து நீ என் மீது சாய்ந்தாலும்
நான் கவலைப்பட மாட்டேன்.
மழை, கிளைகளை உடைத்துப்போடும்போது
அமைதியாய் இருக்கும் மரங்கள்போல
நானும் அமைதியாய் இருப்பேன்.
இப்போது நீ இருப்பதைவிட
மேலும் அமைதியாகவும்
மேலும் இறுகிய இதயத்துடனும்.