Published:Updated:

வலிகளை நாடகமாக்கிய 'சண்டக்காரி'... போராட்டங்களை உரக்கச் சொன்ன திருநங்கைகள்!

வலிகளை நாடகமாக்கிய 'சண்டக்காரி'... போராட்டங்களை உரக்கச் சொன்ன திருநங்கைகள்!
வலிகளை நாடகமாக்கிய 'சண்டக்காரி'... போராட்டங்களை உரக்கச் சொன்ன திருநங்கைகள்!

"ம்மை புரிந்துகொண்டவர்கள் நம்கூட இருந்தால் போதும் !

அவர்கள் நம் கனவை சிதைக்கிறவர்கள் அல்ல !

நம் கனவை ஊக்கப்படுத்துகிறவர்கள் !"...

இப்படிதான் ஒலித்தது அவர்கள் ஒவ்வொருவரின் குரலும்! 'சண்டக்காரி' என்னும் வித்தியாசமான பெயர் சூட்டப்பட்டிருந்த அந்த நாடகத்துக்கு வந்திருந்த பலரும் இளைஞர்கள்! இதுவரை திருநங்கைகளை தூரமாகவே வைத்துப் பார்த்து பழக்கப்பட்டிருந்த சமூகத்தின் தயக்கத்தை அவர்கள் தங்கள் கல்வியின் மூலமும், ஓங்கிய குரல்களின் மூலமும் மாற்றிக் காட்டியிருந்ததை தான் அங்கு கூடியிருந்த கூட்டம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.   

ஆம்.. 'திருநங்கைகள்' என்று அறியப்பட்டிருந்த அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பொறியாளராக, ஒரு சித்த மருத்துவராக, ஒரு காவல்துறை உதவி ஆய்வாளராக, ஒரு சமூக சேவகராக தங்கள் நிலைகளை உயர்த்திக்கொண்டதோடு, தங்களைச் சார்ந்த ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கான தீர்வாக கல்வியையும், அதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு என்னும் ஆயுதத்தையும் ஏந்தத் தொடங்கியிருக்கிறார்கள்!

'சண்டைக்காரி' என்னும் பெயரில் சென்னையில் நடைபெற்ற இந்த நாடகம் மூலம், வலி மிகுந்த தங்களின் வாழ்க்கை நிகழ்வுகளை, தங்களின் அனுபவங்களை, இல்லை இல்லை தாங்கள் அடைந்த அவமானங்களை, தாங்கள் பெற்ற வெற்றியின் ருசிகரத்தை தாங்களே சுயமாக நடித்துக்காட்டினர். இதன்மூலம் தங்களுக்கு வஞ்சனை செய்த இந்தச் சமூகத்தின் கோரமுகத்தைக் கிழித்திருந்தார்கள்! நடிப்பின் உக்கிரமே மனதை நெருட, வலிமிகுந்த வார்த்தைகள் வந்திருந்தோர் மனதைக் கேள்விக்கணைகளால் தைக்கத் தொடங்கியிருந்து!

பிரித்திகா யாஷினி, கிரேஸ் பானு, செல்வி, தாரிகா என்று நீண்டுகொண்டிருக்கும் இந்தப் பட்டியலில் திருநங்கை சமூகம் முழுவதையும் இணைத்துவிட வேண்டும் என்று துடிப்போடு பேசிய இவர்களின் வலி அவர்களின் நடிப்பில் தெறித்தது.

"எங்களை பாலியல் தொழிலாளியாக, பிச்சை எடுப்பவராக அடையாளப்படுத்தி கொச்சைப்படுத்துகிறீர்கள் நீங்கள்! அநாகரிகமாக நாங்கள் நடந்து கொள்வதாக குற்றப்பத்திரிகையும் வாசிக்கிறீர்கள்! ஆமாம் துணியைக் கலைந்து ஆபாசமாக தான் நடந்துகொள்கிறோம்! ஆனால், உங்கள் கேள்விகளால் எங்களின் பெண்மையை சந்தேகிக்கும் ஒவ்வொரு நொடியும் நாங்கள் மீண்டும் நிர்வாணம்தான் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தெரியுமா?" என்ற கேள்வியில் அவர்களின் கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது! "முன்பு வேலை கேட்டு உங்கள் வீட்டு முன்வாசல் கதவைத் தட்டிய எங்களை, பின் வாசல் வழியாக படுக்கைக்கு அழைத்தீர்கள்! மனதால் பெண்ணாக இருக்கும் எங்களைப் பார்த்தாலே கேளிக்கை பார்வையை வீசிவிட்டு போகும் உங்களின் பார்வைகளை சமாளிக்க நாங்கள் எடுக்கும் ஆயுதங்கள்தான் இந்தத் தொழில்கள்! எங்களின் ஆபாச செயல்களுக்கான காரணமும் அதுதான்! எப்போதும் எங்களின் வெளித்தோற்றத்தை மட்டும் கொண்டு ஆபாசப் பார்வையை வீசிச் செல்லும் நீங்கள், எங்களின் ஒழுக்கத்தைக் குறைச் சொல்வதை விட்டுவிட்டு உங்களின் ஆபாசப் பார்வையை மாற்றுங்கள்" என்பதை அழுத்தமாய் சொல்லியது அவர்களின் ஒருமித்த குரல்!

அவர்களைப் பற்றி நாம் சித்திரித்த நிலைகளை எல்லாம் உடைத்து அவர்கள் வெளியே வருவது நிச்சயம் அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்கவில்லை என்பது மட்டும் உறுதி! ஆண், பெண் என்னும் இருபாலினம் மட்டும்தான் பிரதானம் என்ற சமூகத்தின் மனப்பான்மையை 'மூன்றாவது சமூகமாக நாங்களும் இங்குதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்' என்று உரக்கக் கூறி மகிழ்ந்தன இவர்கள் பெற்ற ஒவ்வொரு வெற்றியும்!

இந்த நாடகத்துக்கான கதைக்களத்தை வடிவமைத்தவர் இயக்குநர் ஶ்ரீஜித் சுந்தரம். ஏற்கெனவே இவர் இயக்கத்தில் உருவான "மஞ்சள்" நாடகம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒன்று. இந்நாடகத்தில் நாடகமாந்தர்களாக சம்பந்தப்பட்டவர்களையே நடிக்கச் செய்தது தான் கதைக்கும், சொல்ல வந்த கருத்துக்கும் வலிமை சேர்ப்பதாக இருந்தது. 2014-ம் ஆண்டு தமிழக அரசாங்கம் திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைத்ததை நினைவுகூரும் வகையில் ஏப்ரல் 15-ம் தேதியை 'திருநங்கைகள் தின'மாகக் கொண்டாடி வருகிறார்கள்.

'மகளிர் தின'த்தை மட்டும் கோலாகலமாக கொண்டாடும் நீங்கள் எப்போது 'திருநங்கைகள் தினம்' என்ற ஒன்று இருப்பதை அறிந்து கொள்ளப்போகிறீர்கள் என்னும் கேள்வியிலே இந்தச் சமூகத்தில் அவர்களின் நிலைக்கான விடை தொக்கி நின்றுகொண்டிருப்பதை உணரமுடிந்தது.

மாற்றமாக உருவெடுத்திருக்கும் இவர்கள்! அவர்கள் சமூகம் முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும் உத்வேகத்தில், மீண்டும் ஒருமுறை சொன்னார்கள்,  

"நம்மைப் புரிந்துகொண்டவர்கள் நம்கூட இருந்தால் போதும் !

அவர்கள் நம் கனவை சிதைக்கிறவர்கள் அல்ல !

நம் கனவை ஊக்கப்படுத்துகிறவர்கள் !

ஊக்கப்படுத்துபவர்களாக இருந்துவிடமாட்டோமா என்னும் ஏக்கத்தோடு...!"