Published:Updated:

கலக்கல் ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!

அவுட்டோர் ஷூட்

பிரீமியம் ஸ்டோரி
கலக்கல் ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!

பிரமாண்ட மண்டபங்களில் சுற்றம் சூழ நடை பெறும் திருமண நிகழ்வில், விருந்தினர்களோடு சேர்ந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் காலாகாலத்துக்கும் திருமண வீட்டாரின் மனதில் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தும். அதே நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் திருமண ஜோடிகளுக்கென பிரத்யேகமாக கிடைப்பதற்கான ஒரு கான்செப்ட்தான், திருமணத்துக்கு முன்போ அல்லது திருமணத்துக்குப் பிறகோ எடுக்கப்படும் ‘அவுட்டோர் கப்பிள் ஷூட்’. விதம்விதமான இடங்களில், பல்வேறு கான்செப்ட்டுகளுடன் எடுப்பதுதான் இந்தப் புகைப்படக்கலை. உள்ளூரில் மட்டும் இல்லாமல், புகைப்படக் குழுவுடன் வெளிநாடு வரை பறந்து சென்று போட்டோ ஷூட் நடத்துவது இன்றைய தலைமுறையினரின் ட்ரெண்ட் டாகவே மாறிவிட்டது. இதுபோன்று பல ஜோடிகளின் மகிழ்ச்சித் தருணங்களைப் படமாகப் பிடித்துள்ள சென்னை ஃபோகஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் சந்துரு பாரதியிடம் பேசினோம்...

கலக்கல் ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!
கலக்கல் ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!

“வெட்டிங் போட்டோகிராஃபின்னா திருமண மண்டபத்தில் புகைப்படம் எடுப்பதைத் தாண்டி பலவிதங்களில் வளர்ந்துடுச்சு. அதிலும் அவுட்டோர் ஷூட்னா நாம போட்டோ எடுக்கவிருக்கும் ஜோடிகளோட வாழ்க்கைமுறை, பட்ஜெட், சௌகரியம் மற்றும் அவங்களோட ரசனைனு எல்லாமே ஒத்துப்போனாதான் அந்த ஷூட் முழுமையாவும் திருப்தியாவும் அமையும். இதுவரைக்கும் சென்னை மட்டும் இல்லாம வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என பல இடங்களில் அவுட்டோர் போட்டோ ஷூட் செஞ்சிருக்கேன். ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு அழகு, ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கும். சூழலின் அழகோடு ஜோடிகளின் அழகையும் சேர்த்து மிக அழகாக செய்யும் `க்ளிக்’கில்தான் இருக்கிறது கலைஞனின் திறமை” என்பவர், அவர் எடுத்த அவுட்டோர் ஷூட்டில் அவருக்குப் பிடித்த இடங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்ற வகையில் ஆடை, மேக்கப், போஸ்கள் என அனைத்தையும் எப்படி திட்டமிடவேண்டும் என பகிர்கிறார்...

கலக்கல் ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!

ஈஞ்சம்பாக்கம், சென்னை

“கடற்கரை... குழந்தைங்க பெரிய வங்கன்னு எல்லாருக்குமே ரொம்பப் பிடிச்ச விஷயம்.. அப்படிப்பட்ட கடற்கரை சார்ந்த இடங்களில் போட்டோ எடுக்கும்போது, ஜோடிகளுக்கு ஒரு ரொமான்டிக் மூட் செட் ஆவதால், நாம எதிர்பார்க்கிறதைவிட நல்ல க்ளிக்ஸ் கிடைக்கும். சென்னையை எடுத்துக்கிட்டீங்கனா மெரினா, பெசன்ட் நகர் பீச்னு நிறைய கடற்கரைகள் இருக்கு. ஆனா, பீச் ஷூட்னா என்னோட ஃபர்ஸ்ட் சாய்ஸ், வி.ஜி.பி தீம் பார்க் பக்கத்துல இருக்குற ஈஞ்சம்பாக்கம்தான். இது `பீச் அவுட்டோர் ஷூட்’டுக்கான பெஸ்ட் பிளேஸ். கடற்கரைன்னா பெரும்பாலும் மணல்தானே இருக்கும்... ஆனா, இந்த பீச்ல அங்கங்க பச்சைப்பசேலென புல்வெளி படர்ந்திருக்கும். இந்த இடத்தோட ஸ்பெஷலே அதான். மணல், காற்று, கடல் நீர், ஆகாயம்னு பஞ்சபூதங்கள்ல நாலு விஷயத்தைக் கவர் பண்ணிடலாம். இன்னும் சொல்லப்போனா ராத்திரி நாமளே கேம்ப் ஃபயர் மாதிரி ஒரு செட்டப் செஞ்சு அக்னியையும் கவர் பண்ணிடலாம். புற்களை நோக்கி வேகமாக வரும் அலைகளை அதிகாலை நேரத்துல பாக்குறதே அவ்ளோ அழகா இருக்கும். அப்புறமென்ன அந்த அழகை அப்படியே ஜோடிகளோட சேர்த்து படம் புடிச்சுட வேண்டியதுதான். 

கலக்கல் ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!

பீச் ஷூட்டுக்கான சரியான நேரம் காலை 6 மணி முதல் 7.30 மணி வரைக்கும்தான். அந்த டைம்ல ரம்மியமான சில்-அவுட் படங்களை க்ளிக் பண்ணலாம். இந்த சில்-அவுட் ஷாட்ல சில விஷயங்களை மிஸ் பண்ணிடாம எடுத்துடுவேன். முதல்ல ஜோடிகள் இருவரது மூக்கும் ஒன்றோடு ஒன்று ஒட்டி நின்றால்... ஹார்ட்டின் வடிவம் கிடைக்கும். அடுத்து, கடல் அலைகள் காலைத் தொடும் இடத்துல பெண்ணை நிக்க வெச்சு, அவங்க எதிர்ல பையனை முட்டிபோட்டு பூங்கொத்து கொடுத்து புரஃபோஸ் பண்றமாதிரி படம் பிடிக்கலாம். இந்த ஷாட்ல கடல் அலைகள் ஜோடிகளை வந்து முட்டும்போது எடுத்தா போதும், ட்ரிப்போட பெஸ்ட் ஷாட் அதான். சில்-அவுட் படங்கள் எடுக்கும்போது ஜோடிகளோட டிரெஸ் லூஸா இல்லாம ஃபிட்டா இருக்கறது ரொம்ப முக்கியம். லோ பட்ஜெட்ல ரிச்சான அவுட்டோர் போட்டோ ஷூட்டுக்கு இந்த இடம் பெஸ்ட் சாய்ஸ்.”

கலக்கல் ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!

மஞ்சக்குப்பம், கடலூர்

“ஆரோவில், கடற்கரை, பிரெஞ்சு தெருக்கள் என பாண்டிச்சேரி பயங்கர கலர்ஃபுல்லான ஏரியா. ட்ரெண்டியான லைஃப் ஸ்டைல்ல வாழுற ஜோடிகளை படம் பிடிக்க இது சரியான இடம். எல்லா இடமும் ரொம்ப ஸ்டைலிஷ்ஷா இருக்கும். அதுவும் பாண்டிச்சேரியில் உள்ள கடற்கரைப்பகுதிகள்ல பிரமாதமா படம் பிடிக்கலாம். ஆனா, அப்படியே இதுக்கு பக்கத்துல உள்ள கடலூருக்குப்போனா கான்ட்ராஸ்டா பக்கா லோக்கலா ஒரு இடம் இங்க இருக்கு. அதுதான் மீனவர்கள் வாழும் மஞ்சக்குப்பம். இங்க படகு, துடுப்பு, மீன்பிடி வலைகள், வெரைட்டியான மீன்கள்னு வேற லெவல்ல இருக்கும். ஒரு கான்செப்ட் போட்டோ ஷூட்டுக்கான செட் போடுற செலவு பட்ஜெட்டைத் தாண்டிடும். அந்தமாதிரி கான்செப்ட் ஷூட் பண்றதுக்கு இது கரெக்ட் பிளேஸ். ஒரு மீனவ கிராமம் போல செட் போட முடியாது. ஆனா, மீனவ கிராமத்தின் இயல்பான அழகு இங்க கொட்டிக் கெடக்கறதால, நாம எடுக்கும் படங்களும் இயற்கையாவும் இயல்பாவும் அமையும். இதுக்கு காஸ்ட்யூம் செலவுகூட பெருசா இருக்காது. பையனுக்கு ஒரு லுங்கி, பனியனும், பொண்ணுக்கு ரொம்ப சிம்பிளான காட்டன் புடவையுமே போதும். மீன் பிடிக்கப் போகும் மீனவக் கணவர்; அவருக்கு உதவிகள் செய்யும் மனைவி... இதான் கான்செப்ட்னு சின்ன ஸ்டோரியாவே புகைப்படங்கள் எடுக்கலாம். இதுவும் கடற்கரை சார்ந்த பகுதிங்கறதால அதிகாலை அல்லது சூரியன் அஸ்தமிக்கும் முன்புன்னு மஞ்சள் வெயிலில் படம் பிடிச்சு தெறிக்கவிடலாம். சிம்பிள் பட்ஜெட்ல வித்தியாசமா ஷூட் பண்ணலாம்.”

கலக்கல் ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!

குமரகம், கேரளா

“கேரளாவுல இருக்கும் டூரிஸ்ட் ஸ்பாட்ல குமரகம் கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல். காரணம், இங்க இருக்கும் போட் ஹவுஸ். நிறைய வெரைட்டியான படகுகள் வாடகைக்குக் கிடைக்கும். அதுல ஒண்ணை வாடகைக்குப் புடிச்சு ஏறிட்டா, படகு ஸ்டார்ட் ஆனதுல ஆரம்பிச்சு திரும்பி வர்றவரைக்கும் நாள் முழுக்க போட்டோக் களை எடுத்துத் தள்ளலாம். சிம்பிளாகச் சொல்லணும்னா... ‘விண்ணைத் தாண்டி வருவாயா...’ படத்துல சிம்பு உருகி உருகி ‘மன்னிப்பாயா’ பாடலுக்குப் படகுல நின்னுட்டே குட்டி டான்ஸ் போடுவாரே... அப்படித் தம்பதிகள் இருவரையும் சேர்த்து டான்ஸ் ஆட வைத்துக்கூட படங்கள் எடுக்கலாம். செம்ம ரொமான்ட்டிக் பிளேஸ்.

கலக்கல் ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!

ஆனா, `இதுக்கு ஒரு பெரிய படகு, ஒரு சின்னப் படகுன்னு ரெண்டு படகுகளை வாடகைக்கு எடுத்துக்கணும். சின்னப் படகுல போட்டோகிராஃபர் யூனிட்டும். பெரிய படகுல ஜோடிகளும் இருக்கணும். முக்கியமா இந்த போட்டோ ஷூட்டுக்கு படகு ஓட்டறவங்களோட ஒத்துழைப்பு ரொம்ப ரொம்ப முக்கியம். அங்கங்கே போட்டை நிறுத்தி படம் எடுக்குறமாதிரி எல்லாம் தேவைகள் இருக்கும். ஆனா, ஷூட்டுக்கு நடுவுல ‘படகை எல்லாம் நிறுத்தமாட்டோம்’, ‘ நேரம் ஆகுது’ இப்படி எல்லாம் சொல்லி சில படகுக்காரங்க முரண்டு பிடிப்பாங்க. அதனால், படகுல ஏறுவதுக்கு முன்னாடியே ‘ஷூட் பண்ணப்போறோம் அதனால எங்க வசதிக்கு ஏத்தமாதிரி போட்டை ஓட்டணும்’னு தெளிவா பேசி படகை புக் செய்யுங்க. கேரளா முழுக்க பச்சை பசேல்னு மரங்களா நிறைஞ்சு இருக்கும். இதுக்கு ஏத்தமாதிரி காஸ்ட்யூம்ஸ் செலக்ட் செஞ்சுக்கோங்க. என்னோட அனுபவத்துல பையனுக்கு பட்டு வேஷ்டி - சட்டை, பொண்ணுக்கு சேலைன்னு இருந்தா, ட்ரெடிஷனலாவும் அதே சமயம் ரிச்சாவும் இருக்கும். இந்த எடத்துலயும் ஷூட்டிங் பண்ண அதிகாலை நேரம்தான் பெஸ்ட்.

கலக்கல் ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!

பாரிஸ்

“கப்பிள் ஷூட்டிங்குக்கான ட்ரீம் வேர்ல்டு பாரிஸ் நகரம். காதல் நகரமான பாரிஸ்ல புதுசா கல்யாணம் ஆன ஜோடிகளை கூட்டிட்டுப் போய் ஷூட் பண்ணணும்னா நமக்கு இருக்கும் க்ரியேட்டிவிட்டி டபுளா ஆகிடும். பட்ஜெட் பேக்கேஜ் அதிகம்தான். ஆனா, படங் களோட திரும்பி வர்றது மட்டுமில்லாம அவ்வளவு ஸ்வீட் மெமரிஸோடவும் திரும்பி வரலாம். எடுக்குற ஒவ்வொரு புகைப்படமும் காலத்துக்கும் ஒவ்வொரு கதை சொல்லும். பையனுக்கு கோட் சூட், பிளேசர், பொண்ணுக்கு ரிச் லுக்குல ஒரு கவுன் இருந்தா போதும். இங்க ஷூட்டிங் இடங்களுக்குப் பஞ்சமே இல்ல. ஒவ்வொரு ரோட்லயும் படங்களைப் பிடிச்சுத் தள்ளலாம். அதுலயும் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம், அங்க இருக்க பாலங்கள், காபி ஷாப்னு பாக்குற எடங்கள்லாம் ஷூட்டிங் ஸ்பாட்தான்.

கலக்கல் ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!

குறிப்பா, லவ் லாக் ப்ரிட்ஜ் பாரிஸில் பிரபலமான இடங்கள்ல ஒண்ணு. காதல் ஜோடிகள் அவங்களோட காதல் நிறைவேற, இந்தப் பாலத்துல பூட்டை லாக் பண்ணிட்டு சாவியை ஓடுற ஆத்துல தூக்கிப் போட்டுடுவாங்க. இந்த எடத்துல ஜோடிகளை கேஷுவல் டிரெஸ்ஸில் படம் பிடிக்கலாம். பிளான் இல்லாம போனா பாரிஸ் நகரத்தை சுத்திச்சுத்தி 15 நாட்களுக்கு மேல் படம் எடுக்கலாம். அதனால ஷூட்டுக்கு கெளம்பறதுக்கு முன்னாடியே ஷூட்டிங்குக்கான இடங்களை பிளான் பண்ணிக்கோங்க. கொஞ்சம் ஃப்ரீக்கியான ஜோடிகள்னா ஷூட்டிங் செம்ம மாஸ்தான்.” - கலக்கலாக முடித்தார் சந்துருபாரதி.

- நா.சிபிச்சக்கரவர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு