Published:Updated:

பெண்மையையும் பசுமையையும் போற்றும் ஆச்சர்ய கிராமம்!

பெண்மையையும் பசுமையையும் போற்றும் ஆச்சர்ய கிராமம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்மையையும் பசுமையையும் போற்றும் ஆச்சர்ய கிராமம்!

புதிய நம்பிக்கைஸ்ரீலோபாமுத்ரா

பெண்மையையும் பசுமையையும் போற்றும் ஆச்சர்ய கிராமம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ளது பிப்லாந்திரி கிராமம். பெண்களைப் போற்றும் முன்மாதிரி கிராமம் என உலகமே வியந்து நோக்கும் வகையில், பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் கம்பீர கிராமம் இது!

 பத்தாண்டுகளுக்கு முன் வரை, சமூக, பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கி, இந்தியாவின் மற்றுமொரு கிராமமாகவே இருந்தது பிப்லாந்திரி. 2005-ம் ஆண்டு இதன் பஞ்சாயத்துத் தலைவராக ஷ்யாம் சுந்தர் பொறுப்பேற்ற பின், நல்ல மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. பள்ளிக் கல்வியைக்கூடத் தாண்டாத ஷ்யாம், தொலைநோக்குப் பார்வையுடன் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டு, மக்களின் ஏகோபித்த ஒத்துழைப்புடன் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, பத்து ஆண்டுகளுக்குள் பிப்லாந்திரியை முற்றிலும் முன்னேறிய கிராமமாக மாற்றியுள்ளார். 

பெண்மையையும் பசுமையையும் போற்றும் ஆச்சர்ய கிராமம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஷ்யாம் சுந்தருக்கு அவள் விகடனின் வாழ்த்துகளைத் தெரிவித்தோம். பணிவு, எளிமை, மக்கள் நலனில் அக்கறை... இம்மூன்றும் அவர் பேச்சில் புலப்பட்டன. அந்த கிராமத்தின் வளர்ச்சிப் பயணத்துக்கான ஆரம்பப் புள்ளியாக, ஷ்யாம் சுந்தர்  மகளின் மரணம் இருந்தது நாம் எதிர்பாரா அதிர்ச்சி.

‘`நான் பொறுப்பேற்றவுடன் வீடு வீடாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தேன். குடிநீர்ப் பற்றாக்குறை, கல்லாமை, பெண் சிசுக்கொலை, குற்றங்கள், மார்பிள் (வெள்ளை சலவைக்கல்) குவாரிகளில் இருந்து வெளியேறும் கழிவு எனப் பல சவால்கள் காத்திருந்தன. முதல் கட்டமாக, நீர்த்தேக்கங்களை ஏற்படுத்தி மழைநீர் சேகரிப்புப் பணிகளை மேற்கொண் டேன். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர்த் தட்டுப்பாடு தீர்ந்தது.

பெண்மையையும் பசுமையையும் போற்றும் ஆச்சர்ய கிராமம்!

என் மகள் கிரண், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாள். அவளின் நினைவாக 111 மரங்களை கிராமம் எங்கும் நட முடிவெடுத்தேன். இதுபற்றி மக்களிடம் பேசினேன். குறிப்பாக, பெண்களின்  முன்னேற்றத்துக்கு இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் நிச்சயம் கைகொடுக்கும் என்பதை விளக்கிச் சொல்லி நம்பிக்கை அளித்தேன். ஆரம்பத்தில் யாரும் ஒத்துழைக்கவில்லை. ஆனால், ஒரு பஞ்சாயத்துத் தலைவராக, அரசின் நலத்திட்டங்களை நான் வெற்றிகரமாகச் செயல்படுத்தி கிராமத்தின் அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்த பின், மக்கள் எனக்கு ஒத்துழைப்புக் கொடுக்க ஆரம்பித்தனர்’’ என்கிற ஷ்யாம், அந்த முயற்சி கிராமத்திலும், கிராமத்துப் பெண்களிடமும் ஏற்படுத்திய மலர்ச்சியைப் பற்றிக் கூறினார்.

‘`கடந்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் மரங்களை உருவாக்கியுள்ளோம். மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தி, அந்த மரங்களைப் பராமரிக்கிறோம். இப்போது எங்கள் கிராமம் முழுவதும் நல்ல வருமானம் தரக்கூடிய வேம்பு, மா, நெல்லி, ஸ்ரீஷம் (தேக்கு மர வகை) மற்றும் மூலிகை மரங்கள் வளர்ந்து சோலையாகவே காட்சி அளிக்கின்றன. பெண்கள் இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் பொருட்களை விற்றுக் கிடைக்கும் தொகையை, பிள்ளைகளின் கல்விச் செலவுக்கும், பெண் குழந்தை வளர்ப்புக்கும் பயன்படுத்திக் கொள் கிறார்கள். இதைத் தொடர்ந்து, நகரங்களுக்கு வேலை தேடிச் செல்கிறவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இப்படி எங்கள் கிராம மக்கள் பொருளா தாரத் தன்னிறைவைப் பெற்றனர். அடுத்த அவசிய நடவடிக்கையாக, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த குடும்பத் தலைவிகளின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கும் திட்டத்தைச் செயல்படுத்தினேன்’’ என்கிற ஷ்யாம், பெண் குழந்தை பிறந்தால், அதைத் தங்கள் கிராமம் வரவேற்கும்விதம் பற்றிச் சொன்னபோது, வியந்துபோனோம். 

பெண்மையையும் பசுமையையும் போற்றும் ஆச்சர்ய கிராமம்!

‘`பெண் குழந்தைகளின் மேற்கல்வி மற்றும் திருமணச் செலவுகளைக் கருத்தில் கொண்டோம், குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் தங்களின் பங்களிப்பாக ரூ. 10 ஆயிரம் மற்றும் கிராம மக்கள் தங்களுக்குள் வசூலித்த ரூ.21 ஆயிரம் என, மொத்தம் ரூ. 31 ஆயிரத்தை 20 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதியாக (Fixed deposit) அக்குழந்தையின் பெயரில் வங்கியில் முதலீடு செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினேன். அதைப் பெற, பெற்றோர் மூன்று விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவாதம் அளித்து, உறுதிமொழிப் பத்திரத்தை பஞ்சாயத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விதிமுறைகள்...

1. வனத்துறையின் ஒத்துழைப்புடன் நல்ல வருமானம் தரும் 111 மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும்.

2. தங்கள் பெண்ணுக்கு 18 வயதுக்கு முன் திருமணம் செய்யக் கூடாது.

3. இருபது ஆண்டுகளுக்குப் பின் பல லட்சங் களாகப் பெருகியிருக்கும் நிரந்தர வைப்பு நிதிப் பணத்தை மகளின் மேற்கல்வி அல்லது திருமணச் செலவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்!’’

- இப்படி அசரவைக்கும் ஷ்யாமின் அதிரடி இன்னும் நீள்கிறது.

பெண்மையையும் பசுமையையும் போற்றும் ஆச்சர்ய கிராமம்!

அரசின் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, மின்சாரம், தெருவிளக்குகள் போன்ற பயன்கள் மக்களை அடையச் செய்திருக்கிறார். தங்கள் கிராமத்தில் மதுக்கடைகள் கிடையாது என்று பெருமையுடன் சொல்பவர், இதனால் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து அமைதியும் ஒற்றுமையும் நிலவுவதாகவும் சொல்கிறார்.

சமூக சேவகர் அன்னா ஹஸாரே இந்த கிராமத்தைப் பார்வையிட்டு, பெண்கள் நலன் மற்றும் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதாரத் தன்னிறைவு என மும்முனைப் பயனுடன் பிப்லாந்திரி வளர்ச்சியடைந்ததாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இப்போது ‘பிப்லாந்திரி’ என்ற பெயரிலேயே இந்த கிராமத்தின் வெற்றிக் கதை இந்தி மற்றும் மலையாள மொழிகளில் திரைப்படங்களாகவும் தயாராகி வருகிறது.

 ‘`சிறந்த பஞ்சாயத்துக்கான பல விருதுகளை எங்கள் கிராமத்துக்கு வழங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள், பிப்லாந்திரியை மாதிரி கிராமமாக அங்கீகரித்து, மற்ற கிராமங்களிலும் இந்த நிர்வாக நேர்த்தியைச் செயல்படுத்த முயற்சி எடுத்து வருகின்றன. நாங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள். இந்த கிராமத்தின் வெற்றிக்குப் பின்னால், என் மகள் கிரண் இருக்கிறாள்!”

அந்த அப்பாவின் நெகிழ்வும் அன்பும் சமூக அக்கறையாக ஆக்கம் பெற்ற கதையைச் சலசலக்கின்றன பிப்லாந்திரி மரங்கள்.