Published:Updated:

இலக்கியமும் வாழ்க்கையும் - சித்தலிங்கையா

இலக்கியமும் வாழ்க்கையும் - சித்தலிங்கையா
பிரீமியம் ஸ்டோரி
News
இலக்கியமும் வாழ்க்கையும் - சித்தலிங்கையா

தமிழில்: பாவண்ணன் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

இலக்கியமும் வாழ்க்கையும் - சித்தலிங்கையா

ழுபதுகளில் கன்னட இலக்கியப் பரப்பில், எழுச்சியுடன் உருவான தலித் எழுத்து முயற்சிகளின் ஆரம்பப்புள்ளிகளில் ஒருவராகத் தொடங்கி, முக்கியமான ஆளுமையாக மலர்ந்தவர் சித்தலிங்கையா. மாணவப் பருவத்திலிருந்தே இலக்கியத்திலும் சமூகச் செயல்பாடுகளிலும் வற்றாத ஆர்வத்துடன் செயலாற்றிவருபவர். இவருடைய முதல் கவிதைத் தொகுதியான ‘ஹொலெமாதிகர ஹாடு’ கர்நாடகமெங்கும் இவருடைய பெயரும் புகழும் பரவக் காரணமாகியது. அடித்தட்டு வர்க்கத்திலிருந்து பல புதிய படைப்பாளிகள் எழுத்துலகில் அடியெடுத்து வைப்பதற்குத் தேவையான உந்துசக்தியாக இந்தத் தொகுதி அமைந்தது. கர்நாடக மாநிலத்தில் ‘தலித் சங்கர்ஷ சமிதி’ என்னும் அமைப்பைக் கட்டி எழுப்பியவர்களில் சித்தலிங்கையாவும் ஒருவர். இதுவரை இவருடைய ஆறு கவிதைத் தொகுதிகளும் இரண்டு நாடகங்களும் மூன்று கட்டுரைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. பெங்களூரு பல்கலைக்கழகத்தில் கன்னடத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். கன்னட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் சில ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார். கன்னடக் கவிஞர் சித்தலிங்கையா எழுதிய `ஊரும் சேரியும்’ – தன்வரலாற்று நூலின் இரண்டாவது பாகம் சமீபத்தில் வெளிவந்து, கன்னட வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த நூலிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள் இங்கே...

இலக்கியமும் வாழ்க்கையும் - சித்தலிங்கையா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quizபுரட்சிகரக் கவிதைக்குத் தீ

என் கவிதைகளைக் கேட்ட சிலர், ஒருநாள் என் அப்பாவைச் சந்தித்தார்கள். என் அப்பா மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர். `நாம் யாருக்கும் தொல்லை கொடுக்கக் கூடாது, நமக்கு யாரும் தொல்லை கொடுக்கக் கூடாது’ என்பது என் அப்பாவின் கொள்கை. `ஒருவேளை யாராவது தொல்லை கொடுத்தாலும், அவர்களுக்கு நாம் எந்தத் தொல்லையும் கொடுக்கக் கூடாது’ என்பது இன்னொரு கொள்கை. என் அப்பாவைச் சந்தித்தவர்கள், என் கவிதைகளைப் பற்றி இல்லாதது, பொல்லாததை எல்லாம் சொல்லி பயத்தை உண்டாக்கிவிட்டார்கள்.

 “இந்தக் கவிதைகளால் உங்கள் மகன் சிறைக்குச் சென்றுவிடுவான்” என்று அவர்கள் சொன்னபோது அப்பா பயந்துவிட்டார். என் அப்பாவின் பயத்தை அதிகமாக்கும் பொருட்டு, என் கவிதையின் சில வரிகளைச் சொன்னார்கள். அப்போது நான் எழுதிய ஒரு கவிதையின் வரி இப்போதும் எனக்கு நினைவில் இருக்கிறது. ‘பணக்காரர்களின் தலையுருளத் தொடங்கட்டும் கலகம், பொங்கியெழுந்து பாயட்டும் செங்குருதியின் கங்கை’ என்பதே அந்த வரி. இந்த வரியின் பொருளைப் புரிந்துகொண்டதும் என் அப்பா, மிகவும் பயந்து நடுங்கிவிட்டார்.

“என் மகன் சிறைக்குச் செல்லாமலிருக்க, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று என் அப்பா அவர்களிடமே கேட்டார்.

இலக்கியமும் வாழ்க்கையும் - சித்தலிங்கையா

“உங்கள் மகனுடைய கவிதைத் தொகுதியைத் தேடியெடுத்து, நெருப்பில் போட்டுப்  பொசுக்கிவிடுங்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.

அச்சத்தில் மூழ்கியிருந்த என் அப்பாவுக்கு அதுவே சரியான யோசனை என்று தோன்றியது. என் அப்பாவிடம் இத்தகைய  ஆலோசனையைச் சொன்னவர்கள்கூட, என் நலவிரும்பிகளாகவே இருந்தார்கள். அவர்கள், என் கவிதைகளைப் படித்தும் கேட்டும் மிகவும் நடுங்கிப் போய்விட்டார்கள். நான் மிக அதிகமாகக் கவிதைகள் எழுத எழுத, அவர்களுடைய அச்சமும் அதிகரித்தது. ஆனால், அவர்கள் அதை என்னிடம் காட்டிக்கொள்ளவில்லை. கவிதைகளால் எனக்கு நேரக்கூடிய ஆபத்தை ஊகித்து, என்னைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் அப்படி ஒரு திட்டத்தைத் தீட்டினார்கள்.

தன் மகனுக்கு எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதே என் அப்பாவின் கவலை. அவர்கள் அனைவரும் சேர்ந்து என் நோட்டுப்புத்தகத்தைத் தேடினார்கள். நோட்டுப்புத்தகமும் கிடைத்துவிட்டது. அதுவரைக்குமாக நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் அந்த நோட்டுப் புத்தகத்தில்தான் இருந்தன.

அந்தக் கவிதைகளை என் நலவிரும்பிகள் ஒருமுறை என் அப்பாவிடம் படித்துக் காட்டியபோது, அப்பா மிகவும் பயந்துவிட்டார். எல்லோரும் சேர்ந்து தீ மூட்டினார்கள். நோட்டுப் புத்தகத்தைக் கிழித்து, நெருப்பில் போட்டார்கள். அந்தப் புரட்சிகரக் கவிதைகள் நெருப்பில் பொசுங்கிச் சாம்பலாயின.

சாயங்காலமாக நான் வீட்டுக்குத் திரும்பியபோது, என் அப்பா தானாகவே இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தினார். `கவிதைகள் நெருப்பில் எரிந்து சாம்பலாகி விட்டதால், இனிமேல் உனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று சொன்னார். எனக்கு உதவி செய்துவிட்ட திருப்தி அவருடைய முகத்தில் வெளிப்படையாகப் பரவியிருந்தது. ஆனால், எதையோ இழந்துவிட்ட உணர்வு எனக்குள் பரவியது.

நெருப்பில் பொசுங்கிவிட்ட கவிதைகள் அப்படியே இருந்திருந்தால்கூட எனக்கு எவ்விதமான தொல்லையும் நேர்ந்திருக்காது. அந்தப் பாடல்களைப் பிரசுரித்து வெளியிடுவதற்கும், வெளியிடாமல் இருப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நான் அந்தக் கவிதைகளை என்னுடைய நலவிரும்பிகள் முன்னிலையில் படித்துக் காட்டிய முறை, அவர்களிடம் ஒருவகையான அச்சத்தை மூட்டிவிட்டது. ஒவ்வொரு நாளும் அந்த அச்சம் அவர்களிடம் பல மடங்காகப் பெருகி வளர்ந்துவிட்டது. அவர்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்னும் அவசரத்தில் என் கவிதைகளை அழித்துவிட்டார்கள். என் அப்பாவும் என் நலவிரும்பிகளும் செய்த செயலை, நான் சில சமயங்களில் விமர்சனபூர்வமாக யோசித்துப் பார்ப்பேன்.

அந்தக் கவிதைகளை எரிக்கும்போது அவர்களிடம் எந்தவிதமான கெட்ட நோக்கமும் இல்லை. அந்தக் கவிதைகள் அனைத்துமே நல்ல கவிதைகள் அல்ல. ஆயினும், அவற்றில் ஒன்றிரண்டாவது நல்ல கவிதைகளாக இருந்திருக்குமோ என்கிற எண்ணம் அடிக்கடி எனக்குள் எழுகிறது. இது நடந்து முடிந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் கவிதைத் தொகுதி வெளியான சமயத்தில் என் அப்பா அதை மிகவும் மகிழ்ச்சியோடு வாசிப்பதை நான் பார்த்தேன்.

இலக்கியமும் வாழ்க்கையும் - சித்தலிங்கையா

ஒயின் ஸ்டோரில் கவியரங்கம்

ஒருநாள் மாலை வேளையில், கலாசிபாளையம் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருந்த ஒயின் ஸ்டோரில் ரம் அருந்தியபடி உட்கார்ந்திருந்தேன். எல்லா ஒயின் ஸ்டோர்களிலும் செய்வதுபோல, அந்த ஒயின் ஸ்டோரிலும் ஒரு மூலையில் ஒரு பெரிய பெஞ்சைப் போட்டு, அதில் வாடிக்கையாளர்களை அமரவைத்து அங்கேயே மது வகைகளை விநியோகித்து வந்தார்கள். பாருக்குச் சென்று மது அருந்துவதைவிட ஒயின் ஸ்டோரில் மது அருந்துவதில் செலவு குறையும் என்று எண்ணி,  ஒயின் ஸ்டோருக்குச் சென்று மது அருந்துவதையே நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

ஒரு பெக் ரம் குடித்தேன். ஒயின் ஸ்டோரின் மூலையொன்றில் தொலைக்காட்சி இருப்பது தெரிந்தது. தொலைக்காட்சியைப் பார்த்ததுமே என் தலைக்குள் மின்னலடித்ததுபோல இருந்தது. ஒருவகையான பதற்றம் மனத்தில் குடிபுகுந்தது. ஏன் அப்படி ஆனது என்பது வெகு சீக்கிரம் புரிந்துவிட்டது. பெங்களூர் தொலைக்காட்சி நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த கவியரங்க நிகழ்ச்சி இன்னும் சில நிமிடங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பது நினைவுக்கு வந்தது.

ஒயின் ஸ்டோர் முதலாளியிடம் தொலைக்காட்சியை ‘ஆன்’ பண்ணச் சொல்லிக் கேட்டுக்கொண்டேன். அவரோ, என் வேண்டுகோளை நயமான சொற்களில் மறுத்தார். நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேன். அவரும் உறுதியான குரலில், `முடியாது’ என்பதையும் தொலைக்காட்சியை வைத்துவிட்டால் வாடிக்கையாளர்கள் மது அருந்துவதை விட்டு தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள் என்றும் அதனால், தன் வியாபாரம் கெட்டுவிடும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

தொலைக்காட்சியில் அன்று கவியரங்க நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் செய்தியே எனக்கு முற்றிலும் மறந்துபோய்விட்டது. ஒருவேளை நினைவுக்கு வந்திருந்தாலும்கூட, என்ன செய்வது, தொலைக்காட்சி இருப்பவர்கள் வீட்டைத் தேடிப் போகவேண்டியது இருந்திருக்கும். ஒயின் ஸ்டோரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்துதான், கவியரங்கம் ஒளிபரப்பாக இருக்கும் செய்தியே நினைவுக்கு வந்தது. முதலாளியோ மறுத்துவிட்டார். நிகழ்ச்சியைப் பார்க்க இயலாமல் போவது பற்றிய வருத்தம் மனதை அரிக்கத் தொடங்கியது.

எனக்கும் ஒயின் ஸ்டோர் முதலாளிக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலை அக்கம்பக்கத்தில் உட்கார்ந்திருந்த வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் கவனித்தார்கள். மது போதையில் தொலைக்காட்சியை வைக்கும்படி சத்தமிட்டு நான் கலாட்டா செய்யக்கூடும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். முதலாளியும் என்னை யாரோ வேலைக்கு ஆகாத வாடிக்கையாளன் என நினைத்திருக்கக்கூடும். என் வேண்டுகோளுக்கு அந்த முதலாளி செவிகொடுக்கவில்லை.

தொலைக்காட்சியில் என் முகம் தெரியப்போவது முதல்முறை என்பதால், எப்படியாவது நிகழ்ச்சியைப் பார்க்கவேண்டும் என ஆவலுற்றேன். கடைசியாக, “டி.வி-யில என்னைக் காட்டப் போறாங்க. போடுங்க” என்று சொன்னேன். முதலாளியும் அங்கு இருந்த வாடிக்கையாளர்களும் நான் பொய் சொல்வதாக நினைத்துக்கொண்டு என்னைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினார்கள்.

என் முகம் தொலைக்காட்சியில் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்த முதலாளி, தனக்குத் தொல்லைகொடுக்க வேண்டாம் என என்னிடம் கடுமையாகச் சொன்னார். நான் கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்தேன்.

இலக்கியமும் வாழ்க்கையும் - சித்தலிங்கையா


“டி.வி-யை வைங்க. என் முகம் வரலைனா, நான் உங்களுக்கு நூறு ரூபா அபராதம் கொடுக்கிறேன். வந்துட்டா நீங்க எனக்கு நூறு ரூபா கொடுக்கணும்” என்றேன். நான் சொல்வதைக் கேட்ட முதலாளி, குடிபோதையில் நான் நூறு ரூபாயை இழந்துவிடக் கூடாது என்று அறிவுரை சொன்னார்.

“தைரியம் இருந்தா என் சவாலை ஏத்துக்கோங்க” என்று அழுத்தமான குரலில் சொன்னேன்.

ஒயின் ஸ்டோரில் இருந்த வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு விளையாட்டுபோலத் தோன்றியது. அவர்கள், “இந்தப் பந்தயத்துல நீங்க ஜெயிப்பீங்க. தைரியமா கட்டுங்க” என்று முதலாளியை ஊக்கப்படுத்தினார்கள்.

நூறு ரூபாய் வெல்லப்போகும் மகிழ்ச்சியான மனநிலையில் பந்தயத்துக்கு உடன்பட்டார் அவர். தொலைக்காட்சியை வைத்தார். எல்லோரும் தொலைக்காட்சியையே வைத்தகண் வாங்காமல் பார்த்தார்கள்; தொலைக்காட்சியில் என்னைக் கண்டு ஆச்சர்யத்தில் உறைந்து போய்விட்டார்கள். தொலைக்காட்சியில் தெரிந்த முகத்தையும் என் முகத்தையும் ஒன்றிணைத்துப் பார்த்துவிட்டு, தன் ஸ்டோரில் மது அருந்திக்கொண்டிருக்கும் வாடிக்கையாளரே கவிஞர் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள். முதலாளி அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். நூறு ரூபாயை இழக்கப்போகும் நஷ்ட உணர்வு அவர் முகத்தில் தெரிந்தது. ஆனாலும், சமாளித்துக்கொண்டு கவியரங்க நிகழ்ச்சியை முழுமையாக ஆர்வத்துடன் பார்த்தார். வாடிக்கையாளர்களும் கவிஞர்களின் கவிதையைக் கேட்டு மகிழ்ச்சி கொண்டார்கள்.   நான் படித்த கவிதையை முதலாளியும் வாடிக்கையாளர்களும் மிகவும் ரசித்துக் கேட்டார்கள். அவர்களுக்கு என்மீது அன்பு பிறந்தது. பந்தயத்தில் தோற்றுவிட்டதால், என்னிடம் நூறு ரூபாய் கொடுக்க முன்வந்தார் முதலாளி. நான் மறுத்துவிட்டேன். நூறு ரூபாய்க்கு ஏதாவது மது வகைகளை வாங்கி அருந்துமாறு வற்புறுத்தினார். என்னிடம் போதுமான பணம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அவர் கொடுக்க வந்த பணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ``உங்களைப் போன்ற  கவிஞர்கள் இந்த ஒயின் ஸ்டோரில் மது அருந்துவது பெருமைக்குரிய விஷயம்’’ என்று முதலாளி சொன்னார். தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக முதலாளிக்கு நான் நன்றியைச் சொன்னேன். கவிதையைக் கேட்ட வாடிக்கையாளர்கள், தமது கணக்கில் எனக்கு ரம் ஆர்டர் செய்தார்கள். எல்லோருடைய வேண்டுகோள்களையும் நான் ஏற்றுக்கொண்டால், வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது என்பது எனக்குப் புரிந்தது. என்னைப் பற்றி நல்லவிதமாகப் பேசியவர்களை வணங்கிவிட்டு ஒயின் ஸ்டோரிலிருந்து வெளியே வந்தேன்.