பிரீமியம் ஸ்டோரி

புகைப்படங்கள் எப்போதுமே பொக்கிஷங்கள்தாம். ஆனால், பொக்கிஷங்கள் எப்போதுமே அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுமா என்ன? காத்திருப்பு, சமயோசிதம், வித்தியாசமான ஐடியாக்கள் என்று ஒவ்வொரு புகைப்படத்துக்கும் அவ்வளவு மெனக்கிட வேண்டும். அப்படித் தங்களது அனுபவத்தில் கிடைத்த மற்றும் தங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஸ்பெஷல் புகைப்படங்கள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் இந்தக் கலைஞர்கள்...

ஸ்பெஷல் தருணங்கள்!

அமர் (ஸ்டூடியோ ஏ) 

“நான் வளர்ந்தது, படிச்சது எல்லாமே சென்னையில்தான். சத்யபாமாவில் இன்ஜினீயரிங் படிச்சேன். படிச்சு முடிச்சதும் அமெரிக்காவில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை கிடைச்சது. ஆனா, மனசு முழுக்க

ஸ்பெஷல் தருணங்கள்!

போட்டோகிராஃபி ஆசைதான் ஓடிட்டு இருந்துச்சு. வேலையை விட்டுட்டு சென்னையில ஒரு போட்டோ ஸ்டூடியோ ஆரம்பிச்சேன். ஆறு வருஷங்களா வெடிங் போட்டோகிராஃபி பண்ணிட்டு இருக்கேன். எங்க டீம்ல இப்போ 30 பேர் இருக்கோம். வெடிங் போட்டோகிராஃபியோட சேர்த்து ஹெரிட்டேஜ் போட்டோகிராஃபி எனக்கு ரொம்பப் பிடிக்கும்! தமிழகத்துல இருக்கும் பாரம்பர்யமான, பழைமையான விஷயங்களைப் பதிவு பண்ணிட்டு இருக்கேன். இப்போ சமீபத்துல காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலைப் படம் எடுத்து அதை ஷோ பண்ணினோம். திருமணத்திலும் நம்ம பாரம்பர்யமான விஷயங்களைச் செய்யும்போது ஆர்வமாகிடுவேன். இந்த போட்டோ ஒரு தெலுங்கு கல்யாணத்துல எடுத்தது. தாலிகட்டுறத்துக்கு முன்னாடி மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தர் தலையில இன்னொருத்தர் வெல்லமும் சீரகமும் வைப்பாங்க. இதுக்கு `ஜீலகாரா’னு பேரு. `வாழ்க்கை எப்பவுமே இனிப்பும் கசப்பும் நிறைஞ்சது; நாமதான் பொறுமையா எல்லாத்தையும் அனுபவிச்சுக் கடந்து போகணும்’னு சொல்றதுக்காகத்தான் இந்தச் சடங்கு. வாழ்க்கையில இரண்டு பேர் தங்களோட அடுத்தக்கட்டத்துக்கு போகும்போது இது ரொம்ப முக்கியமான தருணம்; அதோட ரொம்பவே அழகான தருணமும்கூட! மாப்பிள்ளை, பொண்ணோட தலையில வெல்லம், சீரகம் வைக்கும்போது கல்யாணப் பொண்ணோட அந்தச் சிரிப்பு அவ்ளோ அழகா இருக்கும்! இது எல்லாமே சேர்ந்து இந்த போட்டோ எனக்கு ரொம்பப் பிடிச்சுடுச்சு!”

ஸ்பெஷல் தருணங்கள்!

அருண் டைட்டன் (அருண் டைட்டன் ஸ்டூடியோ)

“ஆறு வருஷங்களா வெடிங் போட்டோகிராஃபி பண்ணிட்டு இருக்கேன். ஸ்ட்ரீட் போட்டோகிராஃபியும், ட்ராவல் போட்டோகிராஃபியும்தான் என்னோட ஆரம்பம். நான் படிச்சது சென்னை கவின் கலைக் கல்லூரியிலதான். இப்போ கமர்ஷியல் போட்டோகிராஃபிலயும் கவனம் செலுத்திட்டு இருக்கேன்.

ஸ்பெஷல் தருணங்கள்!

ஒருமுறை டேட்ஸ் பிக்ஸ் பண்றதுக்காக என்னைப் பார்க்க ஒருத்தர் வந்தாரு. அப்போ ‘கல்யாணத்துக்கு அப்புறம்கூட என் பொண்ணுக்கு டி.வி, வாஷிங் மெஷின்னு எதைக் கேட்டாலும் என்னால வாங்கி கொடுத்துட முடியும். ஆனா, இந்த மாதிரி கல்யாண போட்டோக்களை வாங்க முடியாதுல்ல தம்பி. அதான் முதன்முதல்ல உங்களைப் பார்க்க வந்தேன்’னு சொன்னார். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. இப்படி வெடிங் போட்டோகிராஃபி பண்ணும்போது நிறைய விஷயங்கள் நம்மைச் சந்தோஷப்படுத்திக்கிட்டே இருக்கும். இந்தப் படம் எடுத்து ரெண்டு வருஷங்கள் ஆகப்போகுது. மேலோட்டமா பாக்குறதுக்கு கல்யாணப் பொண்ணுதான் கண்ணாடியைப் பிடிச்சுட்டு இருப்பதைப் போலத் தெரியும். ஆனா, இந்த போட்டோவில் கல்யாணப் பொண்ணோட ஃப்ரெண்ட்தான் கண்ணாடியைப் பிடிச்சுட்டு இருப்பாங்க. இப்படித்தான் நிக்கணும்னு செட் பண்ணி எடுக்காம எதார்த்தமா இந்த போட்டோ அமைஞ்சது. தாலிகட்டுறதுக்கு கொஞ்சம் முன்னாடி மேக்கப் முடிச்சு கண்ணாடி பார்த்துட்டு இருந்தாங்க. கல்யாணப் பொண்ணோட தலையும் அவங்க ஃப்ரெண்டோட உடல்ல கச்சிதமா பொருந்தி இருக்கும். அவங்க ஃப்ரெண்ட் கொஞ்சம் உயரமா இருந்திருந்தாலோ... இல்லை உயரம் குறைவா இருந்திருந்தாலோ இப்படி வந்திருக்காது. இன்னொரு விஷயம், கண்ணாடியை அவங்க எப்படி வேணா பிடிச்சு இருந்திருக்கலாம். ஆனா, அவங்க கழுத்து இவங்களோட மேட்ச் ஆகுறது போல அழகா பொருந்துற மாதிரி பிடிச்சுட்டு இருந்தாங்க. படம் எடுத்ததும் பார்த்தா... இயல்பா இருந்த எல்லா விஷயங்களும் இந்த போட்டோவுக்காகவே செட் பண்ணின மாதிரி இருந்ததுதான் இதோட ஸ்பெஷலே!”

ஸ்பெஷல் தருணங்கள்!

கார்த்திக் (யது போட்டோகிராஃபி)

“ `போட்டோகிராஃபிதான் எனக்கான அடையாளம்; என்னோட லைஃப்’னு முடிவெடுத்து கிட்டத்தட்ட எட்டு வருஷங்களா வெடிங் போட்டோகிராஃபி பண்ணிட்டு இருக்கேன். ட்ராவல், வைல்ட் லைஃப் போட்டோகிராஃபி

ஸ்பெஷல் தருணங்கள்!

பண்ண ரொம்பப் பிடிக்கும். தொடர்ந்து ட்ராவல் பண்ணிட்டே இருக்கறதால, ஒவ்வொரு போட்டோவிலும் டீட்டெயில் இருக்கணும்னு நினைப்பேன். அது வெடிங் போட்டோகிராஃபியிலும் வெளிப்பட ஆரம்பிச்சது.  போன வருஷம் ஓர் ஈழத்தமிழர் கல்யாணம் சென்னையில நடந்தது. கல்யாணம் முடிஞ்சதும் பொண்ணு - மாப்பிள்ளையை வெச்சு சின்னச் சின்னதா விளையாடுவாங்க. பானையில மோதிரத்தை ஒளிச்சு வெச்சு ரெண்டு பேரையும் கண்டுபிடிக்கச் சொல்றதைப் பார்த்திருப்போம். அப்போ ரெண்டு பேரும் போட்டிப் போட்டு மோதிரத்தை எடுக்க முயற்சி பண்றது; மோதிரம் கிடைக்காம ஏமாந்து போறது; ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்குறதுன்னு அவ்வளவு அழகா நமக்கு நிறைய தருணங்கள் கிடைக்கும். அதேபோல மோதிரத்தை பானைக்குள்ள போடாமலே ஐயர் விளையாடுறதும் நடக்கும். அப்படிப் போடாம இருக்கிறப்போ அந்த மோதிரத்தைப் பொண்ணும் மாப்பிள்ளையும் தேடிட்டு இருந்தாங்க. ஐயர், அதை அவங்க சொந்தக்காரங்ககிட்ட காட்டிட்டு இருந்தாரு. சில நொடிகள் அப்படி மோதிரத்தைக் காட்டிட்டு கையை மூடி வெச்சுட்டாரு. இரண்டாவது முறை அப்படி காட்டினப்போ `கிளிக்’ பண்ணிட்டேன். இந்த விஷயம் தெரியாம பொண்ணும் மாப்பிள்ளையும் மோதிரம் தேடுறதும் பதிவாகி இருக்கும். இந்தப் புகைப்படம் எதேச்சையான அந்தத் தருணத்தையும், சந்தோஷத்தையும் அவ்வளவு அழகா சொல்லும்!”
 
நிகழ்வை மட்டுமல்லாமல் அதன் மகிழ்வையும் சேர்த்துப் பதிவு செய்யும் கலைஞர்களுக்கு சபாஷ் போடலாமே!

- க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு