ட்டு வருடங்களாக ‘இதுதான் அமெரிக்காவில் என்னுடைய கடைசி மாதம்’ என எண்ணியபடியே வாழ்ந்தேன். ஆனால், சில தனிநபர்களின் பெருந்தன்மையால், எனக்கு ஏற்பட்ட இடையூறுகளை என்னால் கடக்க முடிந்தது. 1995-ம் ஆண்டின் கோடைக்காலத்தில் நியூயோர்க் நகருக்குள் நான் நுழைந்தபோது, கலைஞர்களுக்கே உரித்தான முரட்டு இலட்சியவாதம் என்னை நிறைத்திருந்தது. அப்போது நான் பெனிங்டன் கல்லூரியில் என்னுடைய முதுகலைப் படிப்பை முடித்திருந்தேன். ‘புரூக்ளின் நகரத்துக் கலைஞர்கள் சமுதாயம்’ அறிமுகம் செய்த அமெரிக்கக் கலாசாரத்தால் நான் தலைகால் தெரியாமல் ஈர்க்கப்பட்டிருந்தேன். அதே சமயம் அமெரிக்கக் குடிமகனாவதில் எனக்கு ஒருவிதமான வெறுப்பும் இருந்தது. அது ஏதோ என்னுடைய இனக்குழுவின் பெருமையை விட்டுக்கொடுப்பதுபோலவும், நான் பிறந்து வளர்ந்த எனது நாடான கானாவுக்குத் துரோகம் செய்வதுபோலவும் எனக்குப் பட்டது. நான் அமெரிக்கக் குடிமகன் ஆனதும் ஒரு கலைஞனின் சுதந்திரமான குரல் என்னைவிட்டுப் போய்விடும் என்பதும், என்னுடைய மக்களை புனைவுக் கதைகள் மூலம் அறிமுகப்படுத்தும் தார்மீக மனசாட்சி எனக்கு இல்லாமல் ஆகிவிடும் என்பதும்தான் என்னுடைய பயம்.

அடுத்து வந்த ஆறு வருடங்களுக்கு உத்தரவாதம் தரும் எச்1பி விசா வேலை கிடைத்ததும், என் ஆப்பிரிக்க நண்பர்கள் ஏறக்குறைய மன்றாட்டமாகச் சொன்ன அறிவுரைகளை நான் முட்டாள்தனமாக உதாசீனம் செய்தேன். குடிவரவாளர்கள் பின்பற்றும் முக்கியமான  விதியை – முதலில் கிரீன் கார்டைக் கைப்பற்று, அதன் பின் எல்லாமே தானாக நடக்கும் – நான் சட்டைசெய்யவில்லை. அமெரிக்க வாழ்க்கை தந்த ஆனந்தத்தில் மூழ்கிய என் காதுகளுக்குள்  மற்றவர்கள் அறிவுறுத்தியது போகவில்லை. அத்துடன், இளம் வயதானபடியால், எனக்குத் தோல்வியே கிடைக்காது என இறுமாந்திருந்தேன். கிரீன் கார்டுக்காகத் திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்தை இகழ்ந்தேன். சியாராலியோன், லைபீரியா போன்ற ஆப்பிரிக்காவின் கலக நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் செய்வதுபோல, பொய் ஆவணங்களைத் தயாரித்து அகதி நிலை பெறுவதைத்  துப்புரவாக வெறுத்தேன்.

நீண்ட பயணம் - அ.முத்துலிங்கம்

என்னுடைய எச்1பி விசாவின் இறுதி ஆண்டில், நான் வேலைசெய்த பதிப்பகத்தினர் என்னைத் தொடர்ந்து வேலைக்கு அமர்த்தத் தீர்மானித்து, அவர்களாகவே கிரீன் கார்டு விண்ணப்பம் ஒன்றைத் தயாரித்து எனக்காக அனுப்ப முடிவு செய்தனர். அது எனக்குக் கிடைத்த நியாயமான வெற்றி என நினைத்தேன். என்னுடைய லட்சியத்துக்குக் கிடைத்த ஆசீர்வாதம். ஆனால், ஒரு புத்திசாலிக் குடிவரவாளன்போல நான் சிந்திக்கவில்லை. ஒரு வருடம் முன்னர்தான் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்திருந்தது. அந்தச் சூழ்நிலையில், சட்டத்துக்கு உட்பட்டு அமெரிக்காவில் வாழ முயலும் என் போன்ற ஒருவரின் பெயர், மற்றும் முஸ்லிம்  அடையாளம் எப்படிப் பார்க்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்ளவில்லை. பூமியில் மதிப்புமிக்க ஒரு நிலையில் இருந்த என்னுடைய பெயர், அந்தக் காலகட்டத்தில் பழிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போது நான் அது பற்றி எழுதியிருக்கிறேன்.

இடையில், என்னுடைய பதிப்பகத்தினர் அனுப்பிய கிரீன் கார்டு விண்ணப்பம் விசாரணையில் இருக்கும்போதே, குடிவரவுத் திணைக்களம் முஸ்லிம் விண்ணப்பங்களை நிறுத்திவைத்தது. நிறுவனச் சட்டவாளர் என்னுடைய விசா விசாரணை மேலும் தொடர்வதற்கு, ‘அமெரிக்கப் பாதுகாப்புக்கு என்னால் ஒருவிதக் குந்தகமும் வராது’ என்று ஒரு சான்றிதழ் பெற வேண்டும் என்றார். அப்போதுதான் எனக்கு முதன்முதலாகக் கிலி பிடித்தது. வேறு ஒரு புதிய சட்டவாளரின் ஆலோசனையை நாடினேன். அன்றைய அமெரிக்காவின் அரசியல் நிலைமையில் என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுவது சந்தேகமே என்று பச்சையாக என்னிடம் சொன்னார்.

அடுத்த எட்டு வருடங்களின் ஒவ்வொரு மாதமும் ‘அதுதான் அமெரிக்காவில் என்னுடைய  கடைசி மாதம்’ என்று எண்ண ஆரம்பித்தேன். ஒருசமயம் மூட்டைமுடிச்சுகளைக் கட்டிக்கொண்டு திரும்பவும் கானா போய்விடுவோமா என்றுகூட நினைத்தேன். நான் வேலைபார்த்த பதிப்பகம், மும்பையிலும் மானில்லாவிலும் புது ஆட்களுக்குப் பயிற்சிகொடுத்து, அமெரிக்காவில் ஆள்குறைப்பு செய்யத் தொடங்கியது. 2007-ம் ஆண்டு வசந்தகாலம் பிறந்தபோது, வருடாந்தரச் சடங்குபோல பல பெயர்கள் வேலைநீக்கப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. அதில் என் பெயரும் இருந்தது என அறிந்தேன். அந்த நிறுவன இயக்குநருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய விண்ணப்ப முடிவு தெரியும்வரை நான் அங்கே வேலையில் தொடரலாம் என அறிவித்தார்.

இந்தக் கவலைக்கிடமான நேரத்தில்தான் இபி1 விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற எண்ணம் தற்செயலாக எனக்குத் தோன்றியது. இபி1 என்றால் அது வியத்தகு ஆற்றல் வாய்ந்த குடியேற்றவாசிக்கு வழங்கப்படும் ஒருவகை விசா. இந்தத் திட்டத்தின் கீழ், குடியேற்றவாசிக்கு ‘கௌரவ நிரந்தர வதிவிட உரிமை’ வழங்கப்படும். அதிலிருந்து நேராக அமெரிக்கக் குடியுரிமை பெற்றுவிடலாம். சம்பந்தப்பட்ட குடியேற்றவாசி விஞ்ஞானம், கலை, கல்வி, வணிகம், உடற்பயிற்சி இப்படி ஏதாவது ஒரு துறையில் தேசிய அல்லது சர்வதேசத் தரத்தில் போற்றப்படும் அளவுக்கு உயர் சாதனை புரிந்திருக்க வேண்டும். அமெரிக்கக் குடிவரவு மற்றும் குடியுரிமை சேவை இணையதளம், ‘புலிட்சர்’, ‘ஒஸ்கார்’, ‘ஒலிம்பிக் பதக்கம்’ இப்படி ஏதாவது அதி உயர் சாதனைச் சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று சொன்னது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீண்ட பயணம் - அ.முத்துலிங்கம்


 அமெரிக்கக் கலாசார உயர்வுக்கு என்னுடைய பங்களிப்பின் தகுதி பற்றி எனக்குக் கடுமையான சந்தேகம் இருந்தது.  ஆனால், என்னுடைய சட்டவாளர் நான் படைத்த இலக்கியப் படைப்புகளை ஒருசேரப் பார்த்த பிறகு, என்னை அந்தப் பிரிவின் கீழ் விசாவுக்கு விண்ணப்பிக்கச் சொல்லித் தூண்டினார். உண்மையிலேயே எனக்கு வேறு வழி கிடையாது. மேலும் மூன்று வருடங்களுக்கும், இரண்டு முயற்சிகளுக்கும் பிறகு, தினம்தினம் கவலைப்பட்ட நாள் ஒன்றில், 2010-ம் ஆண்டின் ஒரு காலை,  அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. என்னுடைய இபி1 விசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

ஆறு மாதங்களுக்குப் பின்னர் என் வீட்டு அஞ்சல் பெட்டியில் கிரீன் கார்டும் வந்து சேர்ந்தது. எனக்கு ஆரம்பத்தில் இருந்த அமெரிக்கக் குடியுரிமை வெறுப்பு மறைந்தது. என்னை மிகவும் துன்புறுத்திய கொடிய அனுபவமும்,  மூன்று பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைக்க வேண்டும் என்ற  ஆரம்ப எண்ணமும், என் லட்சியத்தைப் பொருட்படுத்தாமல்விடச் செய்தன. ஆனால், குடிவரவுத் திணைக்கள  விதிகளின்படி நான் மேலும் ஐந்து வருடங்கள் காத்திருந்த பின்னர்தான் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.  

கடந்த ஒன்றரை மாதத்தில், நாடு கடத்தலைத் தவிர்ப்பதற்கும், குடிவரவுத் திணைக்களத்தின்  அச்சுறுத்தல்களில்  இருந்து தப்புவதற்கும் கிரீன் கார்டு மாத்திரம் போதாது என்பது புலனாகியது. இந்தப் புதிய ஆட்சியாளர்களின் குடிவரவு எதிர்ப்பு நிலை, என்னுடைய அமெரிக்கக் குடியுரிமை கனவுக்கும் என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குடிவரவாளர்களுக்கு முகப்புத்தகமாக விளங்கும் வாட்ஸ்அப்பில் தினமும் செய்திகள் எனக்கு வருகின்றன: நாட்டின் பல இடங்களில் தாக்கப்படும் முஸ்லிம்கள், எரிக்கப்படும் மசூதிகள் பற்றிய செய்திகள், ஆட்சியாளரின் புதிய கடுமையான விதிகள் பிரகாரம் கைதுசெய்து நாடுகடத்தப்பட்ட ஆப்பிரிக்கக் குடியேற்றவாசிகள் பற்றிய கதைகள், சட்ட வல்லுநர்களும் முஸ்லிம் தலைவர்களும் மக்களுக்கு அறிவுரை சொல்லும் காணொளிகள்.

முன்னைநாள் குத்துச்சண்டை உலக சாம்பியன்  மொகமதுஅலியின் மகன் சமீபத்தில் இரண்டு விமானநிலையங்களில் மறிக்கப்பட்டு அவரிடம் கேள்விகள்  கேட்கப்பட்டன. ஃப்ளோரிடாவில் அவர் இரண்டு மணி நேரம் தடுத்துவைக்கப்பட்டார். தான் ஒரு போற்றுதலுக்குரிய அமெரிக்க வீரரின் மகன், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த குடிமகன் என்று சொன்னபோதும், மதம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தனிப்பட்ட முறையில் எனக்கு ஆறுதல் அளித்த விஷயமும் உள்ளது. 1800-களில் ஜேர்மனியரும் ஐரிஸ்காரரும் வேற்றுமைப்படுத்தப்பட்டது போலவும்,  இரண்டாம் உலகப் போர் சமயம்  ஜேர்மனியிலிருந்து வெளியேறிய யூதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது போலவும்தான் இது.  இந்த அருவருப்பான காலமும் அமெரிக்கச் சரித்திரத்தில் கடந்துபோகும்.

நீண்ட பயணம் - அ.முத்துலிங்கம்

மறைந்த என் தகப்பனார் அமெரிக்காவின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். இந்த நாடு  பெரியது. இதன் பயத்திலும் பார்க்க, பிழைகளிலும் பார்க்க இது மிகப் பெரியது என்பார்.

கடந்த 28 வருடங்களில் நான் அமெரிக்காவின் ஆதரவிலும் பெருந்தன்மையிலும் நன்மை பெற்றிருக்கிறேன். மிச்சிக்கன் மாநிலத்தில், நான் வெளிநாட்டு மாணவனாக விடுதியில் தங்கியிருந்தபோது, ஜானிஸ் குரோக்கட் என்பவர் என்னை அழைத்துப்போய், தன் வீட்டில் தங்கவைத்து அவருடைய சொந்தப்பிள்ளைபோல நடத்தினார்.  புரூக்ளின் நகரத்து வீட்டு உடமையாளர், எனக்கும் என்னோடு வதிய சம்மதித்து வந்த சிலி நாட்டு நண்பருக்கும் எங்கள் முதல் சந்திப்பிலேயே மதிய உணவு வாங்கித் தந்ததோடு,  நியூயோர்க் நகரத்தில் இரண்டு அறைக் குடியிருப்பை, அப்போதுதான் படிப்பை முடித்த எங்களுக்கு வேலை இல்லை என்பது தெரிந்தும்,  வாடகைக்குத் தந்தார்.

எங்கள் நிறுவன அதிபர், என்னுடைய திறமை அவருக்குத் தேவை இல்லாதபோதும், எனக்குத் தொடர்ந்து வேலை தந்து உதவினார். ஓர் இளைஞனுடைய  எதிர்காலத்துக்குக் கெடுதி வரக் கூடாது என அவர் நினைத்தார். அந்த இளைஞன் நம்புகிறான், அமெரிக்காவை அவன் அணைப்பதுபோல அதுவும் ஒருநாள் அவனை அணைக்கும் என்று.

          **  **  **

மெரிக்காவில் வாழும் கானா நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட மொகமட் நசீகு அலி ஓர் எழுத்தாளரும் இசைஞரும் ஆவார். Prophet of Zongo Street சிறுகதைத் தொகுப்பு,  இவருக்குப் புகழ் வாங்கிக் கொடுத்தது. இவர் தொடர்ந்து நியூயோர்க்கர், நியூயோர்க் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதுவதுடன்  நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் படைப்பிலக்கியமும் கற்றுக்கொடுக்கிறார். இவருடைய ‘ரிவல்ஸன்’ சிறுகதைத் தொகுப்பும், ‘Black Man’s Cry’ என்ற நாவலும் விரைவில் வெளிவர இருக்கின்றன.

மேலே மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை தொடர்பாக சில கேள்விகளை இவரிடம் கேட்டேன்.

“அமெரிக்காவில் புதிய ஆட்சி வந்த பின்னர் இப்படி ஒரு கட்டுரையை நியூயோர்க்கரில் எழுதியிருக்கிறீர்களே. இது ஆபத்தான காரியம் அல்லவா?”

“எழுத்தாளர்களுக்கு ஒரு தர்மம் உண்டு. நாட்டுக்குக் கேடு விளைவிக்கும் சம்பவம் ஒன்று நடந்தால், அதுபற்றி உடனேயே எழுதிவிட வேண்டும். பல மாதங்கள், வருடங்கள் கழித்து எழுதுவதால் என்ன பயன்? கட்டுரையை எழுதி அனுப்பிய பின்னர் நியூயோர்க்கர் பத்திரிகை ஆசிரியர் என்னை அழைத்து ‘கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. ஆனால், அதில் கோபம் கூடியிருக்கிறது’ என்றார். விஷயத்தை வலிமையாக எழுதுவது வேறு; கோபமாக எழுதுவது வேறு. ஆகவே திரும்பவும் திருத்தி எழுதி அனுப்பிவைத்தேன். என்னதான் புதிய அரசாக இருந்தாலும் ஓர் எழுத்தாளரின் சுதந்திரத்தில் கைவைக்க, அது தயக்கம் காட்டும்.”

“ஆனால், உங்களுக்கு இன்னும் அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கவில்லையே. உங்கள் விண்ணப்பம் பரிசோதனையில் இருக்கும்போது  இப்படி எழுதியது துணிச்சல்தானே?”


“உண்மைதான். ஆனால், அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் அப்படியெல்லாம் பழிவாங்க முடியாது. ஒரு வாரம் முன்பு படைப்பிலக்கியம் சம்பந்தமான பட்டறை ஒன்றை நடத்துவதற்காக, ஆப்பிரிக்கா சென்றிருந்தேன். திரும்பும்போது விமான நிலையத்தில் எனக்குப் பிரச்னை ஏற்படலாம் என நினைத்தேன். நியூயோர்க்கர் பத்திரிகையும் எனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கத் தயாராக இருந்தது. அதிகாரிகளுக்கு என் பெயர் தெரிந்திருக்கும்போல; என்னை இரண்டாம்கட்ட விசாரணைக்கு உள்ளே அழைத்தார்கள். 20 நிமிடங்கள் என்னை பரிசோதனை செய்த பின்னர் வெளியே  விட்டார்கள். இப்படியான சின்னத் தொல்லைகள் அவ்வப்போது நடக்கும்.”

“இது தவிர, உங்கள் அமெரிக்க வாழ்க்கையில் அவமானம் ஏற்படுத்திய சம்பவங்கள் ஏதாவது இருக்கின்றனவா?”

“சின்னச்சின்னச் சம்பவங்கள் நிறைய உள்ளன. என் நினைவில் இருப்பதை மட்டும் சொல்கிறேன். பல வருடங்களுக்கு முன்னர் ஐடகோ மாகாணத்துக்குப் போயிருந்தேன். ஒரு கோப்பிக் கடையில் பலர் கோப்பி அருந்திக்கொண்டிருந்தார்கள். எல்லோருமே வெள்ளைக்காரர்கள். நான் “கோப்பி கிடைக்குமா?” என்றேன்.  “ஓ... தாராளமாக. ஆனால், இங்கே கிடைக்காது” என்றார் விற்பனையாளர்.

நான் வேலைசெய்த ஒரு நிறுவனத்தில் ஒரே வேலை செய்யும் பலருக்குச் சமமான சம்பளம் கிடைத்தது. எனக்கு மட்டும் மூன்று வருடங்கள் 5,000 டொலர் குறைவாகத் தந்தார்கள். இது எனக்குத் தெரியாது. ஒரு புதிய மேலாளர் வந்தபோது, என்னுடைய சம்பளத்தைச் சரியாக்கினார். நல்லவர்கள் இருக்கிறார்கள்; கெடுதி செய்பவர்களும் இருக்கிறார்கள்.”

நீண்ட பயணம் - அ.முத்துலிங்கம்

“நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் படைப்பு இலக்கியம் கற்றுக்கொடுக்கிறீர்கள். அது சாத்தியமா?”

“படைப்பு இலக்கியத்தைச் சொல்லிக் கொடுக்க முடியாது. அது அவர்களுக்குத் தெரியும்; எனக்கும் தெரியும். இசை கற்பது போல, ஓவியம் கற்பதுபோலத்தான் இதுவும். உங்கள் உள்ளேயிருந்து ஏதாவது பிறக்க வேண்டும். தொழில்நுட்பத்தை நாங்கள் கற்றுக்கொடுக்கலாம். ஆனால், படைப்பை எப்படிக் கற்றுக்கொடுப்பது? ‘படைப்பு’ என்ற வார்த்தையிலேயே பதில் உள்ளது.  ஒருவருக்காக இன்னொருவர் படைக்க முடியாது. தன் குழந்தையை ஒரு பெண் தானாகவேதான் பெறவேண்டும். வேறு ஒருவர் பெற முடியாது.

ஒரு படைப்பை 15–20 மாணவர்கள் வகுப்பில் விமர்சிப்பார்கள். பெரும் வாக்குவாதம் நிகழும். மாணவர்கள் படைப்புஇலக்கியம் பற்றிய அறிவை அப்படி விருத்தி செய்கிறார்கள். நான் படிப்பிப்பது இல்லை; நெறிப்படுத்துகிறேன். நான் திரும்பத்திரும்பச் சொல்லும் ஒரு வாசகம் உண்டு. ‘சொல்லாதே, காட்சிப்படுத்து.’ படைப்பிலக்கியத்தில் அதுதான் நுட்பம்.”

“இபி1 விசாவுக்கு நீங்கள் ‘மேதை’ என்பதை நிரூபிக்க வேண்டுமல்லவா? அதை எப்படிச் சாதித்தீர்கள்?”

“நான் மேதை இல்லை என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது. தனித்துவமான இலக்கியம் எதுவும் இன்னும் படைக்கவில்லை என்பதும் தெரியும். ஆனால், அமெரிக்காவின் தலைசிறந்த எழுத்தாளர்கள், பத்திரிகைகள், பதிப்பகங்கள், பல்கலைக்கழகங்கள் என்னுடைய படைப்புத்திறன் பற்றியும், மேதைமை பற்றியும் பரிந்துரை செய்தன/ர். அதிகாரிகள் ஏற்றுக்கொண்டார்கள்.”

“இந்தக் கட்டுரையை எழுதியபோது நியூயோர்க்கர் பத்திரிகை அதை உடனேயே ஏற்கவில்லை என்று எழுதியிருந்தீர்கள். எத்தனை முறை திருப்பித் திருப்பி எழுதவேண்டி நேர்ந்தது?”


பத்திரிகை எடிட்டருடன் ஒரே சண்டைதான். நியூயோர்க்கர், 90 வருடங்கள்  வயதான மதிப்பு வாய்ந்த பத்திரிகை. சிலதை விட்டுக்கொடுப்பார்கள்; சிலதை நான் விட்டுக்கொடுக்க வேண்டும். ஏறக்குறைய 13 தரம் கட்டுரை போய்ப்போய் திரும்பி வந்தது. அதன் நீளமும் குறைக்கப்பட்டது. என் கோபமும் ஆறியது.

இப்போது திரும்பிப் பார்க்கும்போது அந்த எடிட்டரின் சாமர்த்தியம் வியக்க வைக்கிறது. கட்டுரையின் சாராம்சம் சிறிதளவும் கெடவில்லை. நீங்கள் சொல்ல வந்த விஷயம் ஆற்றலை இழப்பதும் இல்லை. கட்டுரை சுருக்கமாகவும் ஆழமாகவும் மேம்படுத்தப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் எடிட்டரைப் பிடிக்காது. ஆனால், கட்டுரை முடிவுக்கு வரும்போது அவர்களுடைய அற்புதமான நெறிப்படுத்தும் முறையில் உங்களுக்கு மரியாதை பிறக்கும்.”

“நீங்கள் ஆரம்பத்தில் இசையில் நாட்டமுடையவராக இருந்தீர்கள். ரொறொன்ரோவுக்கு வந்து இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறீர்கள். இப்போது இசைத் துறையில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டீர்களா?”

“எனக்குப் பெரிய பிரச்னை இருக்கிறது. எழுத்து எனக்குப் பிடிக்கும். அதற்கு நிறைய உடல்உழைப்பு தேவை. உட்கார்ந்து எழுதுவது ஒரு சோம்பேறிக்கு ஏற்ற வேலையல்ல. இசை அப்படியல்ல. அதை நினைத்தவுடனேயே என் மனம் குதூகலிக்கிறது. என் அகம் நாடுவதும் அதைத்தான். இசை படைப்பது எனக்குள் இயற்கையாகவே நேர்கிறது. பெரிய தயாரிப்புகள் தேவையில்லை. சில வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு முடிவு எடுத்தேன். இரண்டு துறைகளிலும் இயங்குவது கடினம். என் முழுநேரத்தையும் எழுத்துக்குக் கொடுப்பதாகத் தீர்மானித்துவிட்டேன். எழுத்துதான் இனிமேல் என் மூச்சு.”

“ `The Visitor’ படம் பற்றிச் சொல்லுங்கள்.  அதற்கு இசை அமைத்திருந்தீர்கள். டிஜெம்பே எனும் ஆப்பிரிக்க மேளவாத்தியம் அதில் முக்கியமாக இருந்தது. படத்தின் இறுதியில் அந்த மேளத்தை கதாநாயகன் ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் தனியாக உட்கார்ந்து வாசிப்பான். அந்த இசை அப்படியே வியாபித்து எல்லோர் மனங்களையும் கவர்ந்து உட்கார்ந்துவிடும். படம் அத்துடன் முடிகிறது.  அது பற்றிச் சொல்லுங்கள்?”

“அப்போது நான் எழுதிய ஆப்பிரிக்கச் சிறுகதை ஒன்று நியூயோர்க்கர் இதழில் பிரசுரமாகியிருந்தது. இயக்குநர் ரொம் மக்கார்தி அதைப் படித்துவிட்டு என்னைத் தொடர்புகொண்டார். அவர் திட்டமிட்ட ஆப்பிரிக்கப் படத்தைத் தயாரிப்பதில் அவருக்கு உதவி செய்தேன். பின்னர் படத்தின் இசையமைப்பாளராகவும் மாறிவிட்டேன். டிஜெம்பே மேளத்தை படத்தின் இறுதியில் பின்னணியாக வாசித்தது நான்தான். படம் அமோக வெற்றி அடைந்தது. 4 மில்லியன் டொலர்கள் செலவில் எடுத்தது, 18 மில்லியன் டொலர்களை ஈட்டிக் கொடுத்தது.  அதிலே நடித்த ரிச்சார்ட் ஜென்கினின் பெயர் சிறந்த நடிகர் பிரிவில் ஒஸ்கார் விருதுக்குத் தேர்வாகியிருந்தது. ஆனால், விருது கிடைக்கவில்லை. அந்த வருடம்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு இரண்டு ஒஸ்கார் விருதுகள் பெற்றார்.”

“சீக்கிரத்தில் உங்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்க என் வாழ்த்துகள்.”

“நன்றி.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism