Published:Updated:

ஒளியோடு ஒரு விளையாட்டு...

ஒளியோடு ஒரு விளையாட்டு...
பிரீமியம் ஸ்டோரி
News
ஒளியோடு ஒரு விளையாட்டு...

போட்டோகிராபி

பாரம்பர்ய திருமணம், ரெஜிஸ்டர் மேரேஜ், தீம் வெடிங், டெஸ்டினேஷன் வெடிங், ஆகாயத்தில், நீருக்கடியில் என காலத்துக்கு ஏற்றாற்போல திருமண நிகழ்வுகள் பல்வேறு பரிணாமங்களில் வளர்ந்துவருகின்றன. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் திருமணப் புகைப்படத்துறையும் ஃப்ரீ வெடிங், போஸ்ட் வெடிங், கேண்டிட் போட்டோகிராபி, கான்செப்ட் போட்டோ ஷூட் எனப் பல புதுமைகளைப் புகுத்திக்கொண்டே இருக்கிறது.

ஒளியோடு ஒரு விளையாட்டு...

“போட்டிகள் நிறைந்த துறையாக இருந்தாலும், இதில் நுழைவதற்குப் புகைப்படக்கலை பயில வேண்டிய அவசியம் இல்லை. ரசனை இருந்தாலே போதும்” என்று தன் அனுபவம் பகிர்கிறார், சென்னையில் உள்ள ‘ஸ்ரீராம் ரகு போட்டோகிராபி’  நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீராம்.

“நான் படிச்சது மெக்கானிக்கல் இன்ஜினீயர். காலேஜ்ல படிக்கும்போதே போட்டோகிராபின்னா அவ்ளோ இன்ட்ரஸ்ட். எஸ்.எல்.ஆர் கேமராவை வாங்கி காலேஜ் கேம்பஸ், ஃப்ரெண்ட்ஸ்னு போட்டோ எடுத்துட்டே இருப்பேன். இப்படி எடுத்து எடுத்து நானே லைட்டிங், ஃப்ரேம்னு கொஞ்சம் கொஞ்சமாக போட்டோகிராபி கத்துக்கிட்டேன்.

என்னோட காலேஜ் ஃபங்ஷன் எல்லாத்துக்கும் நான்தான் போட்டோகிராபர். ஒரு பக்கம் ஸ்பேனர், ஸ்க்ரூ டிரைவர்னு மெக்கானிக்காவும், இன்னொரு பக்கம் கேமரா, லென்ஸ்னு போட்டோகிராபராவும் இரண்டு ரோல் பண்ணிட்டே படிப்பை முடிச்சேன். அப்புறம், மெக்கானிகல் இன்ஜினீயராவும் ஆகிட்டேன். ஆனா, வேலை நேரம்போக மீதி நேரத்துல என்னோட கேமரா பசிக்குத் தீனி போடுற மாதிரி, நண்பர்கள், உறவினர்கள் வீட்டுத் திருமணங்களை போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். பொண்ணு மாப்பிள்ளையை உறவினர்களோடு நிக்க வெச்சு போட்டோ எடுக்கறதைத் தாண்டி, கல்யாண மண்டபத்துல இருப்பவர்களின்  வினோதமான முக பாவனைகள், மைக்ரோ உணர்வுகள்னு சின்னச் சின்னச் சுவாரஸ்யங்களை படம் எடுக்க ஆரம்பிச்சுட்டேன். இதைத்தான் ‘கேண்டிட் போட்டோகிராபி’ன்னு சொல்றாங்கன்னு அப்புறமாதான் தெரிஞ்சுது” என்ற ஸ்ரீராம், `இப்போதிருக்கும்  பெரும்பாலான புகைப்படக் கலைஞர்கள் இன்ஜினீயர்ஸ் தான்’ எனச் சுவாரஸ்யத் தகவல் கொடுத்தபடியே தொடர்ந்தார்...

ஒளியோடு ஒரு விளையாட்டு...
ஒளியோடு ஒரு விளையாட்டு...

“இத்துறையில எனக்கு இருந்த ஆர்வத்தால, இன்னும் என்ன புதுசா செய்யலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு மாதிரி திருமணச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பாங்க. அதை எல்லாத்தையும் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். சடங்கு சம்பிரதாயங்கள் எப்போ ஆரம்பமாகுதோ, அதிலிருந்து திருமணம் முடியற வரை நடக்குற எல்லா நிகழ்வுகளையும் பதிவு செய்ய ஆரம்பிச்சேன். இதெல்லாமே வீடியோவில் சாத்தியம்னாலும், ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படமா பார்க்கும்போது கிடைக்குற அனுபவம் எப்பவுமே ஸ்பெஷல்தான். இதையே என்னோட ஸ்டைலா மாத்திக்கிட்டேன். இன்ஜினீயரிங் வேலையை விட்டுட்டு முழுநேரப் புகைப்படக் கலைஞனாக மாறும்போது என்னோட கையில் அடுத்த ஆறு மாதங்களுக்கான வெடிங் புக்கிங் இருந்துச்சு” என்றவரிடம், ``முன்பெல்லாம் திருமண பட்ஜெட்டில் புகைப்படம் எடுக்க ஆகும் செலவு என்பது மிக மிகக் குறைவாக இருந்தது. உங்களைப் போன்ற நியூ-ஜென் போட்டோகிராபர்களின் வருகைக்குப் பிறகு, நடுத்தரக் குடும்பத்தினர்கூட அதிக பட்ஜெட் செலவழிக்க வேண்டியிருக்கி கிறதே?” என்றோம்.

ஒளியோடு ஒரு விளையாட்டு...
ஒளியோடு ஒரு விளையாட்டு...

“ஒவ்வொருவருக்கும் அவங்களோட கல்யாணம் மறக்கமுடியாத நிகழ்வா  இருக்கும். அந்த நிகழ்வின் தருணங்களைப் புகைப்படமாகப் பார்க்கும்போதெல்லாம், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வமான அனுபவமாக இருக்கும். ‘எனக்கு குரூப் போட்டோவெல்லாம் வேண்டாம். என் திருமணத்தில் என்னைச் சுற்றி நடந்த அத்தனைத் தருணங்களையும் அப்படியே பதிவு செஞ்சு தந்தாலே போதும்’னு சொல்றவங்கதான் இப்போ அதிகமா இருக்காங்க. கல்யாண மண்டபத்தில் பிஸியா இருக்கும் பொண்ணும் மாப்பிள்ளையும் கல்யாண மண்டபத்தில் நடக்கும் பல சுவாரஸ்யமான சம்பவங்களை மிஸ் பண்ணிடுவாங்க.  அதனால, அதையெல்லாம் கேப்ச்சர் பண்ணி எக்ஸ்க்ளூஸிவ் கேண்டிட் வெர்ஷனா  கொடுக்கிறோம். குரூப் போட்டோ, ஃபேமிலி போட்டோ என்பதெல்லாம் ஃப்ரேம் போட்டு மாட்றதுக்கு நல்லா இருக்கும். ஆனா, ‘ஸ்டோரி போர்ட்’ போன்ற போட்டோகிராபிதான் இப்ப எல்லாருடைய விருப்பமா இருக்கு.

ஒளியோடு ஒரு விளையாட்டு...
ஒளியோடு ஒரு விளையாட்டு...

முன்னாடியெல்லாம் திருமணத்துக்கு நூத்துக்கணக்குல போட்டோ எடுத்துட்டு இருந்தது போய், இப்ப ஆயிரக்கணக்குல எடுக்குற அளவுக்குத் திருமண நிகழ்வு பிரமாண்டமா மாறிடுச்சு. அதனால, போட்டோகிராபிக்கான செலவும் தவிர்க்க முடியாததா மாறிடுச்சு. புகைப்படங்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களின் உணர்வு சம்பந்தப்பட்டது. கல்யாணப் பொண்ணோட அம்மாவின் ஆனந்தக் கண்ணீரில் ஆரம்பித்து, கழுத்தில் தாலி ஏறும் தருணம்வரை அனைத்து நிகழ்வுகளும், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் திருமண ஆல்பத்தை எடுத்துப் பார்க்கும் ஒவ்வொரு முறையும்  சந்தோஷமான நினைவுகளாக நிலைக்கணும்... இந்த மனநிலையில் இருப்பவர்கள் அதற்கான பட்ஜெட் பற்றித் தெரிந்துதான் புகைப்படக் கலைஞர்களை அணுகுகிறார்கள்.

ஒளியோடு ஒரு விளையாட்டு...

இதுதான் கேண்டிட் போட்டோகிராபி எனத் தெரியாமலேயே அதைச் செய்துட்டிருந்ததுபோய், இப்ப அதைத்தாண்டி நான் விளையாடும் ஏரியா ‘லைட்டிங்’. கூட்டத்தில் ஒரே ஒருத்தரோட உணர்வுகளை மட்டும் தனித்த லைட்டிங் மூலம் காட்டுவது, படம் எடுக்கும் விஷயம் இருட்டுலயும், அதைச் சுற்றி இருக்குற ஏரியா வெளிச்சத்துலயும்னு டெக்னிக்கலா நிறைய விஷயங்கள் எக்ஸ்பெரிமென்ட் செய்துட்டு இருக்கேன். மொத்தத்துல மனசுக்குப் பிடிச்ச விஷயத்தை வேலையா செய்யும்போது வாழ்க்கை ரொம்ப திருப்தியா இருக்குங்க” என்கிறார் எக்ஸ் மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஸ்ரீராம்.

- வரவனை செந்தில்