நல் வாழ்க்கை - ட்ரேஸி கே ஸ்மித்

காலையில் பால் வாங்க வெளியில் சென்று
பின்பு வீடு திரும்பாத ஒரு மர்மக் காதலனைப்போல
பணத்தைப் பற்றிச் சிலர் பேசுகிறார்கள்.
எனக்கு அது பழைய நினைவுகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது.
காப்பியும் ரொட்டியுமே உண்டு பல வருடங்களைக் கழித்திருக்கிறேன்.
எப்போதும் பசியோடும் சம்பள நாளில் வேலைக்கு நடந்தே சென்றபடியும்
கிணறில்லா சிற்றூரில் வசிக்கும் பெண்ணின் தண்ணீருக்கான பயணத்தைப்போல
பின்பு ஓரிரு இரவுகள் பொரித்த கோழிக்கறியும்
சிவப்பு வைனும் அருந்தியபடி எல்லோரையும் போலவும் வாழ்ந்திருக்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ட்ரேஸி கே ஸ்மித்: (1972)
அமெரிக்கக் கவிஞர். கல்வியாளர். 2011- ல் வெளியிட்ட ‘Life on Mars’ என்ற கவிதைத் தொகுப்புக்கு Pulitzer பரிசு வென்றார். 2017-ல் ‘United States Poet Laureate’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். வீரியம் மிக்க வார்த்தைகளால் ஒரே நேரத்தில் மாற்றவும், ஆற்றுப்படுத்தவும் செய்பவர் என்று பெயர் பெற்றவர்.
கறுப்பினச் சிறுவர்களுக்கு வேறு பெயர்கள் - டானேஷ் ஸ்மித்
1. எரியும் புதர்களுக்கு மேலுள்ள புகை
2. வெயில்கால இரவின் தலையாயப் பகைவன்
3. மண்ணின் முதல் மைந்தன்
4. காற்றுக்கும் கங்குக்கும் காத்திருக்கும் கரி
5. இறந்தவன் என்று நிரூபிக்கப்படும்வரை குற்றமுள்ளவன்
6. எண்ணெய் கனக்கும் நட்சத்திர ஒளி
7. பேய் என்று நிரூபிக்கப்படும்வரை அசுரன்
8. போனவன்
9. சாம்பலை உதிர்க்க மறந்த ஃபீனிக்ஸ் பறவை
10. போகிறான், போகிறான். போய்விட்டான்.
11. மண்வாரிகளுக்கும் கருப்பு முகத்திரைகளுக்குமான கடவுள்
12. எரியூட்டக்கூடிய சிறு குச்சியாக ஒரு காலத்தில் கருதப்பட்டவன்
13. விடியல் நேர வானவேடிக்கை
14. வெகு அழகான நிழல் வண்ணப் பவளப்பாறை.
15. (இதை வெறுமையாக விட எண்ணினேன்.
ஆனால், நமக்குப் பெயரற்றவன் எனப் பெயரிட நான் யார்?)
16. கடித்துவிட்டு ஓடக் கற்றுக்கொண்ட பிரார்த்தனை
17. ஓர் அம்மாவின் களிப்பு மற்றும் இறுக்கிப்பிடித்த மூச்சுக் காற்று

டானேஷ் ஸ்மித் (1990)
மின்னிஸோட்டாவில் பிறந்தவர். ‘Dont call us Dead’ (2017), ‘Boy’ (2014) இரு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். Lambda literary மற்றும் Kate Tufts Discovery அவார்டும் வென்றவர். இவரது எழுத்துகள் பெரும்பாலும் இனம், பாலினம், சமூக நீதி பற்றியதாகவே இருக்கிறது.
தாழ ஆடு - ரிக்கி லாரெண்டிஸ்
நாங்கள் திடமான மனிதர்கள் இல்லை
எண் ஏழைப்போல (7) வளைபவர்கள்
ஓரங்களைத் தோண்டுபவர்கள், ஒட்டடையைத் தின்பவர்கள்
வெறுங்காலும் வெறுங்கையும்கொண்டவர்கள்
இலையுதிர்கால மரத்தின் இலைபோல தொங்குபவர்கள்.
நாங்கள் நம்பிக்கைக்குரிய நிலையானவர்கள் அல்ல
பழக்கப்பட்ட மையால் அந்தியையும் இரவையும் கிறுக்குபவர்கள்
வானத்தின் வெண்மையைக் கண்டு பெருமூச்செறிபவர்கள்
தற்காலிகப் புன்னகைகளுடன் பொய்யுரைப்பவர்கள்
நாங்கள் ஆண்கள் இல்லை, எந்த வகையான ஆண்களும்.
கழுத்தில் கிழித்தெறியப்பட்டும்
ஆரவாரம் கேட்கையில் ஏனென்று வியப்பவர்கள்
எண்ணைப்போல வளைந்து, கோணி
இரண்டாக வகுத்து எறியப்பட்டவர்கள்.
நாங்கள் பயனற்ற மின்னலும் இல்லை
கருப்பு இடியும் இல்லை.

ரிக்கி லாரென்டிஸ் (1989)
நியூ ஆர்லியன்ஸ்-ல் பிறந்தவர் ‘Boy with thorn’ என்ற கவிதைத் தொகுப்பு 2014-ல் ‘Cave Canem Poetry Prize’ பெற்றது. 2013-ல் ‘Creative Writing Fellowship’ பெற்றவர். 2012-ல் ‘Ruth Lilly Poetry
Fellowship’ உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
சாத்தானுடனான ஒப்பந்தக் கலவி - கிரிஸ்டோஃபர் சோட்டோ
அவன் புகைக்கிறான் // தொடர்ச்சியாக // ஓராயிரம் தேவதூதர்களின்
// தற்கொலையைப்போல // மணக்கிறான்
அவன் படுக்கை விரிப்புகளிலும் // புராதான ஆண்குறி பொம்மை //
கனவுகளிலும் // பிரபஞ்ச சாம்பல் படர்ந்துள்ளது
நான் // விலங்குக் காதல்கொண்டு// கடிதங்கள் எழுதுகிறேன்.
கோதிக் கல்லறைகளுடனும் // வழிபாடுகளுடனும் // இணக்கமாயிருக்கிறேன்
அம்மா சொல்கிறாள் // என் விநோதங்களை // ஆலகாட்ராஸ்
தீவைப்போல // உள்ளாழத்தில் // புதைத்துவைத்துக்கொள்ளும்படி
கட்டுண்டு காயப்பட்டு // விபத்துக்குள்ளான கப்பல் போலவும்,
அபாயச் சங்குபோலவும் ஆகிவிட்டேன் // தனிமை என்பதன் மறு பெயர் //
கலவி என்பது எனக்கு // சோகமான வன்முறை // அல்லது
கத்தோலிக்கத் தேவாலயத்தில் // சூனியம் பயில்வது போன்றது.
என் நாசித் துவாரங்களை அடைக்கிறான் // என் டான்சில்கள்
விரியத் திறக்கின்றன // ஆண்குறி என் இதயத்துள் நுழைகிறது //
விளக்குக் கம்பங்கள் விட்டில் பூச்சிகளைப் பரிகசிக்கின்றன //
வானில் தோன்றும் வலிப்புகளை முன்னிட்டு // அவற்றின்
சிமிட்டல்களையும் கவலைகளையும் கண்டு
குடித்திருக்கிறேன் // நண்பர்களுடன் எண்ணங்களால்
பேசப் பயிற்சி செய்துகொண்டிருக்கிறேன் // எல்லோரும் ஆண்மை குன்றியவர்கள் //
அவன் விந்தை வெளியேற்றுகிறான் // லைலாக் மலர்கள்
அறையை நிறைக்கின்றன // பாலும் தேனும் நிறைந்த
ஜாடிகள் // சுவரின் மேல் பூச்சுக்கடியில்.
காலையில் // விழித்துத் தனிமையாயிருக்கிறேன் //
கால் நகங்களைப் பிறை நிலாக்களாய் வெட்டுகிறேன் //
எங்கோ ஓரிடத்தில் // எல்லாமுமே சட்டப்படி குற்றமற்றதே //

கிரிஸ்டோஃபர் சோட்டோ (1991)
கிரிஸ்டோஃபர் சோட்டோ அல்லது லோமா, லாஸ் ஏஞ்சல்ஸ் -ல் பிறந்தவர். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 2016-ல் ‘sad girl poems’ என்ற தொகுப்பு வெளி வந்தது. 2017- ல் கவிதைக்கும் சமூகப் பணிக்குமான ‘The Freedom Plow Award for Poetry & Activism’ விருதைப் பெற்றவர்.
அதிகாரம் : 150 - ஜெரிக்கோ பிரெளன்
நம்பிக்கையற்ற தொடுதல்களின் உச்சத்தில்
என் இணையும் நானும், நேரத்தை ஒன்று நிறுத்திவிடலாம்
அல்லது எங்கள் குறைந்த வாழ்நாள்களிலிருந்து அகற்றியேவிடலாம்
என்றே நம்புகிறோம்.
இது நான் முன்பு அறிந்த ஒன்று, இன்றும் அறிந்திருக்கிறேன்.
சிலர் இது தெரிந்ததுபோல தங்களையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் ஒருவரிடம் மற்றொருவர் உறவுகொள்வதில்லை
இருவரும் மற்றவருக்காக உறவுகொள்கிறோம்.
பாராட்டா, வழிபாடா என்ற கேள்வி எழுகையில்
நான் வழிபாட்டையே விரும்புகிறேன்.
நினைவுகளே நம்மை மண்டியிடவைக்கின்றன
அமைதியாகவும் அசைவற்றும் செய்கின்றன
நான் சொல்வது கேட்கிறதா?
இடி பயங்கொள்ளச் செய்கிறது. மின்னல்
பார்க்கவைக்கிறது. பின்பு முக்காடிட்டு
மழைக்காகக் காத்திருக்கிறோம். அன்பான ஆண்டவரே
தலைகுனிந்தபடி
அவன் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.
எல்லாவற்றையும் தோற்ற பின்பும் வாழ்பவன்போல தலையாட்டியபடி
எதோ ஒன்று முயற்சித்துக்கொண்டேயிருக்கிறது
ஆனால், நான் இன்னும் கொல்லப்படவில்லை.

ஜெரிக்கோ பிரெளன் (1976)
இயற்பெயர் நெல்சன் டிமெரி. அமெரிக்காவின் லூயிஸியானா மாகாணத்தில் பிறந்தவர். கல்வியாளர். 2016-ல் ‘Guggenheim fellowship’ உட்பட பல விருதுகளை வென்றவர். ஹீஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
நீல ஆடை - சயீத் ஜோன்ஸ்
அவளின் நீல ஆடை என்பது, தரையில் பின் புரளும் பட்டு
ஒரு நதி, என் துக்கத்தின் தெருக்களில் இடப்பட்ட
கற்களுக்கிடையில் கசியும் நீர் பெய்துகொண்டிருக்கும் மழை
மழைக்காலத்து சரிகை வேலைப்பாடு, தேங்கிய மழை நீருக்குள்
தைக்கப்பட்ட குளிர்காலத்து விண்மீன்கள்,
நீர் உட்புகுந்த புராதன அறையில் ஒரு விடைபெறுதல்
கண்ணாடிக் கோப்பைகளும் கிண்ணங்களும் நிறைந்த அறையில் விடைபெறுதல்
கண்ணாடிக் கோப்பை, கிண்ணங்களின் வாயினின்று
ரிங் - டிங் - ரிங் எனச் சொட்டும் நீர்,
மிஸிஸிப்பி நதி, ஒரு கூடம், நீரில் முங்கிய
வீட்டின் ஜன்னல் ஓரங்களினின்று கண்ணீரைப்
போல ஒழுகுவது, அருவிகளைப் பார்த்தபடி திறந்திருக்கும்
ஜன்னல்கள், ஒரு படுக்கை, ஒரு சிறு படகு, ஒரு கப்பல்
என்னைக் கையில் ஏந்தி தெருக்களில் அலையவந்த
மின்சாரம், அவளின் உடையின் ஊடே தெருக்களில்
மிதக்கும் நான், நிலவு மட்டுமே பார்க்க தெருவில் அலையும் நான்,
கடல் பரப்பில் நீல உடையில் நான்,
என் தாய், அது கடல்பரப்பில் நிலவு.

சயீத் ஜோன்ஸ் (1985)
அமெரிக்க மெம்ஃ பிஸ்-யில் பிறந்தவர். 2014 -ல் முதல் தொகுப்பான ‘Prelude to Bruise’ வெளியிடப்பட்டது. 2015-ல் ‘National Book Critics Circle’ விருதுக்கு இறுதிச்சுற்று வரை வந்தது. ‘Pushcart’ விருது வென்றவர். பஸ்ஃ பீட்-யில் லிட்டரரி ஆசிரியராக இருக்கிறார்.
பவேரியா - மேரி ரூஃபில்
மழை வானம் தெளிவாய் இருந்தது.
கொக்கியைப்போல ஒரு மேகம் மட்டும்
சிற்றூரின் மேல் தொக்கி நின்றது.
சிறு பெண் மஞ்சள் கையுறைகள் அணிந்திருந்தாள்.
கதவுத் துவாரத்தின் வழி பார்த்தாள்.
உபயோகப்படுத்தப்படாத நூலில் ஆடும் பொம்மைகள்
அடுக்கிவைக்கப்பட்டிருந்தன
ஆனாலும் அவள் யோசித்தாள்.
எளிதாய் வைத்திருத்தல்
மரக் குவியலுக்கு மேல் உள்ள ஒரு பறவையை எடுக்கிறேன்
அதன் செயல்பாட்டிலிருந்து அதைப் பிரிக்கிறேன்
ஒவ்வொரு சிறகாய்
அதை அளவில் பெரிதாய் ஊதுகிறேன்
முழு வாழ்வையும் அதிலிருந்து சமைக்கிறேன்
நான் இருக்கும் இடத்திலெல்லாம்
அந்த அலைவுறுதல் என் தோள்களில்
மெதுவாய் வந்தமர்கிறது.

மேரி ரூஃபில் (1952)
அமெரிக்கக் கவிஞர், கட்டுரையாளர், பேராசிரியர், 11 கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அண்மையில் 2016-ல் ‘My Private Property’ என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளார். ‘Guggenheim fellowship’, ‘Robert Creely Award’ சேர்த்துப் பல பரிசுகளை வென்றுள்ளார். இப்போது ‘Vermont college of Fine Arts’-ல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
நீங்கள் இவ்வுலகத்தோடு உங்களைப் பைத்தியக்காரத்தனமாய் பிணைத்து சேணம் பூட்டியிருக்கிறீர்கள். - லூசி பராக் - ப்ராய்டோ
உண்மையைச் சொல் நான் என்னிடம் சொன்னேன்... பேச இயலாதபோது
துக்கம் ஒரு காட்டுமிராண்டித்தனமான கலை,
கடல் கொள்ளையர்களின் பண்படுத்தப்படாத கப்பலைப்போல
இல்லை 1930-ன் கோடையினின்று அகன்று, புள்ளியிட்ட
சிறு குதிரையில் குளத்தை நோக்கிச் சவாரி செய்த
ஒரு குழந்தையைப்போல்
போலியோவின் இரும்பு நுரையீரல்களை நோக்கி
மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி எனக்குக் கல்யாணமாகவில்லை
ஆலயங்களுக்குச் செல்பவளுமில்லை.
வயலில் வேலை செய்யும் பெண் வெயிலை மட்டுமே உடுத்தியிருக்கிறாள்.
ஆர்டிக் வளையத்தின் பேரழிவைத் தடுக்க முடியாமல் கைமீறிப் போய்விட்டது
பெரிய அழகான வெள்ளைப் பனிக்கரடிகள் தங்களுடைய
கடைசிப் பனித்துண்டத்தைப் பற்றிக்கொள்கின்றன.
நான் என்னால் முடியும்வரை சாகாமல் என்னைக் காத்துக்கொள்ளும்
நிர்பந்தத்தில் உள்ளேன்.
யார் மீதி இருக்கிறார்கள். நான் முதலாவதாகவா இருக்கிறேன்?
நாம் நம் நிலையை தெளிவாய் அறிந்துகொண்டோம் -
சின்னஞ்சிறிய மார்மோசெட் குரங்கொன்று தன் பெரிய கருங்குரங்கு
சட்டையைக் கழற்றி வெளிவருவதைப்போல.

லூசி பராக் ப்ராய்டோ (1956)
பிட்ஸ் பர்கில் பிறந்தவர். நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். 2013-ல் ‘stay, illusion’ என்ற தொகுப்பு ‘Book Critics Circle award’-க்கு பரிந்துரைக்கப்பட்டது. ‘Witter-Bynner Prize of Poetry’ உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
வெடிக்கவைத்தல் - ஓஷன் வோங்க்

‘அப்படித்தானே’ என்று முடியும் ஒரு விகடம் இருக்கிறது.
உன் தந்தை இங்கிருக்கிறார் என்று கூறும் வெடிகுண்டு அது
இப்போது உன் நுரையீரலின் உள் உன் தந்தை இருக்கின்றார்.
பார் எவ்வளவு கனமின்றி
இருக்கிறது உலகம் - பிறகு
தந்தை என்ற வார்த்தையை எழுதுவதுகூட
வெடிகுண்டால் வெளிச்சமான பக்கத்திலிருந்து
ஒரு நாளின் பகுதியைச் செதுக்குவதாகும்.
மூழ்கும் அளவு வெளிச்சம் இருக்கிறது ஆனால்,
என்றுமே எலும்புகளின் உள்புகுந்து தங்கும் அளவு இருந்ததில்லை.
“இங்கே இருக்காதே” என்றார், என் மகனே
பூக்களின் பெயரால் உடைக்கப்பட்டு அழாதே
இனிமேல். அதனால்தான் இரவுக்குள் ஓடினேன்
அந்த இரவு. என் நிழல் என் தந்தையை நோக்கி வளர்ந்தபடி.

ஓஷன் வோங்க் (1988)
வியட்நாமின் ஹோ சி மின் சிட்டியில் பிறந்து அமெரிக்க ஹார்ட்ஃபோர்டுக்குக் குடிபெயர்ந்தார். கவிஞர், கட்டுரையாளர். ‘Night sky with exit wounds’ என்ற தொகுப்பை 2016-ல் வெளியிட்டுள்ளார். ‘Stanley Kunitz Prize’, ‘Narrative Prize’ உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
மிகுவலிப் பெட்டகம் - ப்ரையன் டார்னர்
காயங்களைத் தவிர வேறொன்றும் இங்கில்லை
துப்பாக்கிக் குண்டுகளையும், வலிகளையும் தவிர
ரத்தம் முழுதும் வடிந்துவிட்ட கீழே சரிதலும்
அடிபட்டவர்களின் கெட்டவார்த்தை வசவுகளும்
`ஜீசஸ் க்ரைஸ்ட்’களையும் தவிர
காயங்களைத் தவிர வேறொன்றும் இங்கில்லை.
பார்க்கும்போது நம்புங்கள் அதை
பன்னிரண்டு வயதானவன் ஓர் எறிகுண்டை
அறையில் உருட்டும்போதும்
அல்லது மறைந்திருந்து சுடுபவன்
எவர் மண்டையோட்டிலோ ஆழமான துளை
ஒன்றைப் போடும்போதும்
மோசூல் நகரத்தில் ஒரு காரிலிருந்து
நான்கு பேர் இறங்கி
அந்தத் தெருவையே துப்பாக்கிக் குண்டுகளால்
நிறைக்கும்போதும் நம்புங்கள்
மிகுவலிப் பெட்டகத்தைத் திறந்து
அங்கிருக்கும் கத்திகளும் பற்களும் என்னவாயின என்று பாருங்கள்
முரட்டு மனிதர்கள் ஆன்மாக்களை எப்படி
வேட்டையாடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்
மிகுவலிப் பெட்டகத்தைத் திறந்து பாருங்கள்.

ப்ரையன் டார்னர் (1967)
கலிஃபோர்னியாவில் பிறந்த அமெரிக்கக் கவிஞர். கட்டுரையாளர், பேராசிரியர். ஈராக் போரில் பங்குபெற்ற அனுபவங்களை Here, Bullet என்ற பெயரில் கவிதைத் தொகுப்பாக வெளியிட்டவர் . இந்த தொகுப்பு Beatrice Hawley Award...உட்பட பல விருதுகளை பெற்றது .இரண்டாவது தொகுப்பு Phantom noise-க்கு T.S.Elliot Prize கொடுக்கப்பட்டது .
மகிழ்ச்சி - லூயி க்ளக்
ஒரு வெள்ளைப் படுக்கையில் ஓர் ஆணும் பெண்ணும் படுத்திருக்கிறார்கள்.
அது காலைவேளை. சீக்கிரமே எழும்பிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
படுக்கைப் பக்க மேசையில் அல்லிப்பூக்கள்கொண்ட
ஜாடி உள்ளது. வெயில் அவர்களின்
கழுத்தில் குளம் கட்டி நிற்கிறது.
அவன் அவளை நோக்கித் திரும்புவதைப்
பார்க்கிறேன். அவள் பெயரைச் சொல்பவனைப்போல்
ஆனால், சப்தமில்லாமல் அவளுடைய வாயின் அடியாழத்தில்
திறந்திருக்கும் ஜன்னல் ஓரத்தில்
ஒருமுறை, இருமுறை
ஒரு பறவை கத்துகிறது.
பின் அவள் சிறிது அசைகிறாள். அவளுடம்பு
அவன் மூச்சுக்காற்றால் நிறைகிறது.
நான் என் கண்களைத் திறக்கிறேன். நீ என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்.
அறையெங்கும் வெயில் சறுக்கி வந்துகொண்டிருக்கிறது.
கண்ணாடியைப்போல உன் முகத்தை எனதருகில் வைத்தபடி
“உன் முகத்தைப் பார்” என்று சொல்கிறாய்.
“எவ்வளவு அமைதியாய் இருக்கிறாய் நீ” எரியும் உருளை
நம் மேல் மெதுவாக நகர்ந்து செல்கிறது.

லூயி க்ளக் (1943)
அமெரிக்கக் கவிஞர். இவரின் ‘Faithful and virtuous night’- தொகுப்புக்காக 2014-ல் ‘Narional Book Award for Poetry-யை வென்றவர். ‘Wild Iris’ என்ற தொகுப்புக்காக ‘Pulitzer’ பரிசை வென்றவர். இதுவரை 12 தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.
பையனும் முட்டையும் - நயோமி ஷிஹாப் நையி
சிறிது நேரத்திற்கு ஒருமுறை அவன்
தட்டையாக்கப்பட்ட கம்பங்கதிர்களின் பாதை வழி நடந்து
கோழிகள் முணுமுணுத்துக்கிடக்கும் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறான்.
விட்டால் வைக்கோலிலேயே தன் படுக்கையை
அமைத்துக்கொள்வானாயிருக்கும்.
நேற்று அந்தப் புதிய முட்டையின் கதகதப்பு அவன் கைகளில்
மிகவும் சிறியவனாய் எனினும் விளையாட்டுகளில் மிகுந்த மறதிகொண்டவனாய்
பந்து தன் மேல் உரசிவிட்டால் உடன் அழத் தயாராக இருக்கும் அவனை விட்டு
மற்ற பிள்ளைகள் சிரித்தபடி கையில் பந்துடன் ஓடுகிறார்கள்.
அவன் முட்டையைக் காதில்வைத்து கேட்டுக்கொண்டிருக்கிறான்
தன் கைகளுள் பிடிபட்ட பறவைகளின் ரகசியத்தில்
முழுக்கவனம் வைத்து
குளிர்சாதனப் பெட்டிக்கோ, இல்லை மீதமிருக்கும் நாளுக்கோ
இதை ஒப்புக்கொடுக்கத் தயாரில்லை அவன்.

நயோமி ஷிஹாப் நையி (1952)
அமெரிக்காவில் பிறந்த கவிஞர். பாடலாசிரியர், எழுத்தாளர். நான்கு முறை ‘Pushcart’ முதலிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். (தந்தை பாலஸ்தீனியர்) தன்னை ‘Wandering poet’ என்று கூறிக்கொள்பவர்.
நாம் வாழ்வோம் - ஜோஷுவா ஜெனிஃபர் எஸ்பினோசா

வடிவில்லாமை என்னைச் சோர்வுறச் செய்கிறது
யாரும் அதற்குப் பொருள் கூறுவதில்லை
மேலும், இதனால் மக்கள் இறக்கிறார்கள்
இந்த உலகம் எங்கிருந்து வந்தது ?
எங்கிருந்து இல்லை என்பதல்ல
எதிலிருந்தும் இல்லை என்பதல்ல
நீங்கள் முகநூலில் சில மணித்துளிகள் பார்த்துப் பகிரத் தகுதியானதா என யோசிக்கும்,
இறந்த திருநங்கைகள் எல்லாம்
எங்கிருந்தோ வந்தவர்கள்தாம்.
அவர்கள் உடம்பு ஒன்றும் பூக்கள் அல்ல, நீங்கள் தெரிந்துகொள்ளவே விரும்பாதவர்களிடம் ரகசியமாய்க் கூற.
வார்த்தைகளே இதைச் செய்தன.
கைகளும் இருந்தன
துப்பாக்கிகளும்
பற்களும்
சதைகளும்
முடியும்
ரத்தமும்
ஆண்களும்
பெண்களும்
சட்டங்களும்
கொள்கைகளும்
காவல் துறையினரும்
சாட்சிகளுமே
இதைச் செய்தன
எங்களை வாழவிடும்படி நான் உங்களிடம் இறைஞ்சவில்லை
வெறும் கவிதைதான் எழுதுகிறேன் என்று எத்தனை நாள்கள்தான்
உங்களை ஏமாற்ற முடியும்?

ஜோஷுவா ஜெனிஃபர் எஸ்பினோசா
கலிஃபோர்னியாவில் பிறந்த திருநங்கை ஆவார். 2014 -ல் முதல் கவிதைத் தொகுப்பான ‘I’m Alive / it Hurts / i Love It’ வெளியிட்டார். இதில், தான் திருநங்கையாக உணர்ந்த தருணங்களைப் பற்றிய கவிதைகளும் உண்டு. இரண்டாவது தொகுப்பு ‘There Should Be Flowers’ 2016-ல் வெளிவந்துள்ளது. பல முக்கிய இலக்கிய இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
பார்வை - ஏமி கிங்
தொலைக்காட்சிப் பெட்டியில் இரு போலீஸ்காரர்கள் சிரித்தபடி
குண்டடிபட்டு ஒருவரின் காயம் மீது இன்னொருவர் அழுத்தியபடி
“உனக்கு ஒன்றுமில்லை - சரியாகிவிடும் ஹாஹா” என்றும்
“தெரியும் ஹாஹா” என்று மற்றொருவரும் சொல்ல
ஒரு ஆம்புலன்ஸ் வந்தால் -
அவர்கள் வெள்ளை இனத்தவர்கள் என்று எனக்குத் தெரியும்.
தொழில்முறை அல்லாத புகைப்படக்காரர் ஒருவரால் எடுக்கப்பட்டு
மணிக்கணக்காக ஓடும் ஒரு காணொளியில் ஒரு முச்சந்தியில்
ஒருவன் சுடப்பட்டு வீழ்ந்துகிடக்கிறான். - பக்கத்தில் நிற்கும்
போலீஸின் கால்களுக்கு அருகில் குளம் காட்டும் கருஞ்சிவப்பு ரத்தத்தை
வைத்துதான் அவன் ரத்தம் சிந்துகிறான் என்று
பார்வையாளர்களுக்குத் தெரிகிறது.
தன் துப்பாக்கியை அதன் பிடியில் வைத்துவிட்டு கூடும் கூட்டத்திடம்
பின் செல்லும்படி கத்திக்கொண்டிருக்கிறான் அவன்.
இதில் இறந்தவன் கறுப்பினத்தவன் என்றும்
பக்கத்தில் நிற்பவன் வெள்ளையினத்தவன் என்றும் எனக்குத் தெரியும்.
இன்று காலையில் என் வகுப்பறையில் - தனியே ஒரு மனிதன்
தன் நெஞ்சின் மீதே நீரை ஊற்றிக்கொள்ளும் காட்சியைப்
பார்த்துவிட்டு ஒரு மாணவன் `வெள்ளை வானத்தின் பின்புலத்தில்
சுயபாலின ஈர்ப்பு’ என்று எழுதியதை எண்ணிப் பார்க்கிறேன்.
யார் பார்க்கிறார்கள்? யார் பின்தொடர்கிறார்கள்? யாருடைய நாடகம்?
நான் என் மாணவர்களைக் கேட்கிறேன்
யாருடைய வரிகள் இவை? எந்த கைகளால் இவை எழுதப்பட்டன?

ஏமி கிங் (1971)
அமெரிக்காவில் வளர்ந்தவர். ‘The Missing Museum’ என்ற கவிதைத் தொகுப்பு ‘Tarpaulin sky’ விருதை வென்றது. ‘WNBA’ (Women’s National Book Association) விருதும் ‘Lambda Literary award for Lesbian Poetry’ என்ற சிறப்புப் பரிசும் அளிக்கப்பட்டது.