Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200 ஓவியம்: ராமமூர்த்தி

கனிவை விதைத்தால்... காலமெல்லாம் அறுவடை!

என் பேத்தி, வீட்டுக்கு வருவோரை கனிவுடன் உபசரிப்பாள். அப்பா, அம்மா, தாத்தா, ஆச்சி என யாரைத் தேடி வந்தாலும், வந்தவரை வீட்டில் உள்ள இருக்கையில் அமரச்சொல்லி, முதலில் ஒரு டம்ளரில் குளிர்ந்த நீரைத் தந்து, பிறகு அவர்களுக்கு டிபனும் காபியோ, டீயோ போட்டுத் தருவாள். பின்னர்தான் பேசுவாள். இதைக்கண்டு உறவினர்களும் நண்பர்களும் வியந்து, என் பேத்தியை மனதார வாழ்த்திச் செல்வர். எல்லாருடைய ஆசீர்வாதங்களும் அவளைச் சென்றடைகிறபோது, அவளின் வாழ்க்கை வளமாக அமையுமென்பதில் எள்ளளவும் ஐயப்பாடில்லை. `நல்ல பண்போடு வளர்த்திருக் கிறார்கள்’ என்ற சான்றிதழும் எங்களுக்குக் கிடைக்கிறது.

அனுபவங்கள் பேசுகின்றன!

நாம் நல்ல விதையை விதைத்தால், விளையும் பயிர் நிச்சயம் வளமாக இருக்கும். விதைத்துப் பாருங்கள்; அறுவடை செய்து மகிழுங்கள்.

- சு.இலக்குமணசுவாமி, மதுரை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விட்டொழியுங்கள்... விவஸ்தையற்ற பேச்சை!

அண்மையில் எங்கள் குடும்ப நண்பர் வீட்டில் திடீரென ஒரு நடுத்தர வயது மனிதர் மாரடைப்பில் இறந்துவிட்டார். நடுக்கூடத்தில் அந்த உடல் கிடக்க... மனைவி, மகன், வயதான தந்தை... மூவரும் அருகில் அமர்ந்து தேம்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது துக்கம் கேட்கவந்த அவர்களின் உறவுக்காரப் பெண்மணி, ``ஐயோ! சின்ன வயசுல இவன் போகணுமா... வயசானவங்க எல்லாம் வரம் வாங்கிட்டு வந்த மாதிரி வாழ்ந்திட்டு இருக்காங்களே... பட்டமரம் இருக்க, பசுமரம் சாயணுமா?” என ஒப்பாரி வைக்கவும், இறந்தவரின் தந்தை முகம் சட்டென தாழ்ந்துபோனதைக் கவனித்தேன்.

அனுபவங்கள் பேசுகின்றன!

எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டுமென்று சிலருக்குத் தெரியாமலிருப்பது வேதனையாக இருக்கிறது.

 - என்.ஸ்ரீநிதி, நங்கநல்லூர்

ஃபிங்கர் லாக் ப்ளீஸ்!

கடைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர், எங்கள் வீட்டுக்கு அருகில் மயங்கி விழுந்துவிட்டார். எங்கள் குடியிருப்பினர் அவர் கைப்பையில் இருந்த கைப்பேசியை எடுத்து, அவர் வீட்டினரைத் தொடர்புகொள்ள எத்தனித்தபோதுதான் தெரிந்தது, ஆண்ட்ராய்டு கைப்பேசியான அவருடைய மொபைல்போனில் `பேட்டர்ன்' என சொல்லக்கூடிய லாக் செய்யப்பட்டிருந்தது. பின்னர், ஒருவழியாக அவ்வழியே வந்த அவரது உறவினர்மூலம் அவருடைய வீட்டுக்கு அவர் சென்றது தனிக்கதை.

அனுபவங்கள் பேசுகின்றன!

நம் ஆண்ட்ராய்டு மொபைலில் கைரேகை (ஃபிங்கர் பிரின்ட்) லாக் செய்தால், இதுபோன்ற தவிர்க்கமுடியாத நேரங்களில் மயக்கமானவர் விரலை வைத்துக்கூட மொபைல்போனை `ஆன்’ செய்துவிடலாம். ஃபிங்கர் ப்ரின்ட் லாக் செய்வது சில சிரமங்களைத் தவிர்க்க உதவும் என்பதால், அந்த வசதி உள்ள போன்களைப் பயன்படுத்துவது பற்றி யோசிக்கலாமே!

- பி.அனிதா ரோசலின், சேலம்

அனுபவங்கள் பேசுகின்றன!

கரன்ட் பில்... கவனம் தேவை!

எங்கள் வீட்டில் கரன்ட் பில் திடீரென இரு மடங்காக உயர்ந்தது. `அதிக அளவு மின் பயனீடு காரணமாக இருக்கலாம்’ என்று அசட்டையாக இருந்துவிட்டோம். அடுத்த முறையும் இதேபோல வரவே எலெக்ட்ரீஷியனை அழைத்துச் சோதித்தோம். பிறகுதான் தெரிந்தது... இன்வெட்டர் பழுதினால் மின்சாரம் அதிகமாகச் சேமிக்கப்பட்டு, மின் கட்டணம் அதிகரித்துள்ள விஷயம்.

தோழிகளே... குறிப்பிட்ட கால இடைவெளியில் இன்வெட்டரையும் சோதித்துப் பராமரியுங்கள்.

 - என்.சாந்தினி, மதுரை - 9