Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200ஓவியம்: ராமமூர்த்தி

மணமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டுமா?

என் நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு நானும் கணவரும் சென்றிருந்தோம். அங்கு வந்திருந்தவர்கள் வழக்கம்போல வால்கிளாக், ஃபிளாஸ்க் எனப் பரிசுகள் கொடுத்தனர். மாப்பிள்ளையின் மாமாவோ ஊட்டிக்குச் செல்ல இரண்டு பயண டிக்கெட்டுகளை ஒரு கவரில் வைத்துக் கொடுத்தார். அதைப் பார்த்ததும் மணமக்கள் மட்டுமன்றி, அருகில் இருந்தவர்கள் முகத்திலும் சந்தோஷம். திருமணத்துக்கு முன்பே மாப்பிள்ளையிடம் `ஹனிமூனுக்கு எங்கே, எப்போது செல்லப்போகிறீர்கள்... எப்போது திரும்பப் போகிறீர்கள்?’ என்று கேட்டு அதற்கேற்ப டிக்கெட் வாங்கிக் கொடுத்ததாகக் கூறினார்.

அனுபவங்கள் பேசுகின்றன!

இதுபோன்று மணமக்களிடம் முன்கூட்டியே பேசி அவர்களுக்கு உபயோகமான பரிசை வழங்குவது குறித்து நாமும் யோசிக்கலாமே!

- எஸ்.சாந்தி, திருச்சி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அனுபவங்கள் பேசுகின்றன!

இப்படியும் `சம்பாதிக்கிறார்கள்’ ஜாக்கிரதை!

அனுபவங்கள் பேசுகின்றன!

சமீபத்தில் காஞ்சிபுரத்திலிருந்து  சென்னை திரும்பும்போது பூந்தமல்லிக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிடச் சென்றோம். எல்லா மேஜைகளிலும் வாட்டர் ஜக், ஊறுகாய் கிண்ணங்கள், டிஷ்யூ பேப்பர் ஸ்டாண்ட் வைக்கப் பட்டு, கூடவே வாட்டர் பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தது. பொதுவாக, நாம் ஆர்டர் கொடுக்கும்போது `வாட்டர் பாட்டில் வேண்டுமா’ என்று கேட்டபிறகுதானே தருவார்கள். ஆனால், இங்கு எல்லா டேபிள்களிலும் இருக்கிறதே என ஆச்சர்யப்பட்டோம். வாட்டர் பாட்டிலுக்கும் சேர்த்து பில் வந்தது. விசாரித்தால்... `நீங்கள் பாட்டிலைத் திறக்காமல் வைத்திருந்தால் சார்ஜ் செய்திருக்க மாட்டோம்’ என்றனர். `முன்பே ஏன் சொல்லவில்லை... வாட்டர் பாட்டில் வேண்டும் என்று கேட்டவுடன் தந்திருக்கலாமே’ என்றதற்கு, `நீங்கள் ஏன் கேட்காமல் பாட்டிலைத் திறந்தீர்கள்?’ என்று விதண்டாவாதம் செய்தார்கள். `இதுபோன்ற பகல் கொள்ளைகளைத் தடுக்க முடியவில்லையே’ என்று மனம் நொந்துகொண்டே பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பினோம்.

ஆர்.சியாமளா, சென்னை-28

அவசரம் + கஞ்சத்தனம்  = அவஸ்தை!

எங்கள் வீட்டு ஃப்ரிட்ஜின் கதவு சரியாக மூட முடியாமல் இருந்தது. அதனால் தேவையான குளிர்ச்சியில்லாமல், உள்ளே வைத்த பொருள்கள் கெட்டுப்போக ஆரம்பித்தன. கம்பெனியிலிருந்து, ஆட்களைக் கூப்பிட்டால் ஏற்படக்கூடிய அதிக பொருள் செலவு, நேர விரயத்தைத் தவிர்க்க... பக்கத்துத் தெருவில் இருக்கும் ஃப்ரிட்ஜ் ரிப்பேர் செய்பவரை அழைத்துக் கேட்டோம். கதவின் உள்பக்கம் இருக்கும் காந்தம், சக்தி இழந்துவிட்டது என்றும் அதை மாற்ற நான்காயிரம் ரூபாய் வரை ஆகும் என்றும் சொன்னார். அட்வான்ஸ் இரண்டாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு போனவர் வரவே இல்லை. தொலைபேசியில் தொடர்புகொண்டாலும் சரியான பதில் இல்லை.

அனுபவங்கள் பேசுகின்றன!

பணம் போனால் போகிறது என்று கம்பெனி ஊழியரை வரவழைத்தோம். ஃப்ரிட்ஜைத் திறந்தவுடன் பிரச்னையைச் சொல்லிவிட்டார். கையில் கிடைத்த பாட்டில்களில் எல்லாம் தண்ணீர் நிரப்பி (கிட்டத்தட்ட 16 லிட்டர்) கதவில் வைத்திருந்திருக்கிறோம். `அதன் கனம் காரணமாக கதவு இறங்கியிருக்கிறது’ என்று அவர் சொன்னதைக் கேட்டு, பாட்டில்களை எடுத்தவுடன் கொஞ்சம் சரியானது. பிறகு கதவைக் கழற்றி, ஆணிகளை இறுக்கமாக்கியதும் பிரச்னை தீர்ந்தேவிட்டது.

இதிலிருந்து இரண்டு பாடங்கள் கிடைத்தன... `இடம் இருக்கிறதே என்று, அளவுக்கு அதிகமாக கனம் சேர்க்கக் கூடாது’,  `யார் யாருக்கு, எந்தெந்த வேலை தெரியுமோ அவர்களிடமே வேலையைத் தர வேண்டும். இதில் அவசரமோ, கஞ்சத்தனமோ கூடாது.’

அந்த இரண்டாயிரம் ரூபாய் என்னவாயிற்று என்று கேட்கிறீர்களா? போயே போச்சு!

- ர.கிருஷ்ணவேணி, நொளம்பூர்