Published:Updated:

``பல நாள் தபேலா இசைதான் என் குடும்பத்துக்கு உணவு!" - பார்வையற்ற தபேலா கலைஞர்

"மாசத்துல பத்து நாளைக்குமேல ஒருவேளை சாப்பிடக்கூட வருமானம் இருக்காது. மொத்தக் குடும்பமும் தண்ணீரைக் குடிச்சு ஒப்பேத்துவோம். அப்புறம் ஈரத்துணியை வயித்துல கட்டிட்டுப் படுத்துக்குவோம். அதுவும் தாங்கலைன்னா, நான் வீட்டு மூலையில் தபேலா வாசிப்பேன். மொத்தக் குடும்பமும் அதை கேட்கும். பல நாள், என் தபேலா இசைதான் எங்களுக்குச் சாப்பாடு."

``பல நாள் தபேலா இசைதான் என் குடும்பத்துக்கு உணவு!" - பார்வையற்ற தபேலா கலைஞர்
``பல நாள் தபேலா இசைதான் என் குடும்பத்துக்கு உணவு!" - பார்வையற்ற தபேலா கலைஞர்

``என்னை ரெண்டு கண்ணும் தெரியாதவனா படைச்ச கடவுள், தபேலா கலைஞரா ஆக்கினதுனாலதான் நானும் என் குடும்பமும் இன்னிக்கு உசுரோடு இருக்கோம். இல்லைன்னா, என்னிக்கோ போய்ச் சேர்ந்திருப்போம். இசைக்கு, கவலைகளைத் துடைச்சு எறியுற சக்தி இருக்கு. அதனாலதான், கழுத்தை நெரிக்கும் வறுமையில, மூணு வேளை சோத்துக்கே வக்கத்துப்போன நிர்கதியான நிலையைச் சடாரெனக் கடந்துபோய் என்னால தன்னம்பிக்கையோட வாழ முடியுது" என்று துணி போட்டு போத்திவைத்திருக்கும் அவரது தபேலாவிலிருந்து கிளம்பும் இசைபோல் காமராஜ் வார்த்தைகளிலிருந்து வலி தெறிக்கிறது.

கரூர் நகரத்தையொட்டி இருக்கும் பசுபதிபாளையம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் காமராஜ். இரு கண்களும் 100 சதவிகிதம் பார்வைத் திறனற்ற இவரின் மனைவி ரோஸ்லினும் கண் பார்வையற்றவர்தான். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.

புறாகூண்டுபோல ஒரு வீட்டில் 1,200 ரூபாய்க்கு வாடகைக்கு இருக்கிறார்கள். `காமராஜின் தபேலாவுக்குள் இருந்து இசை மட்டுமல்ல, பணமும் வந்து விழாதா' என எதிர்நோக்கும் வறுமை பிழிந்தாலும், இசையோடு இயைந்த தன்னம்பிக்கை வாழ்வை வாழ்கிறது காமராஜ் குடும்பம்.

தபேலாவை மூடி இருக்கும் துணியை விலக்கி, வாசித்துக்காட்டுகிறார். நம் காதுகளை நிறைக்கிறது அவரின் அற்புதமான இசை. 

``எங்களுக்கு பூர்வீகம் சேலம் மேட்டூர். எங்கப்பா காலத்துலேயே பொழப்பு தேடி இங்க வந்துட்டோம். எங்க அப்பாவும் சித்தப்பாவும் பேண்டு இசைக்குழு வெச்சிருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் எல்லாத் தோல் இசைக் கருவிகளையும் அட்டகாசமா வாசிப்பாங்க. நான் மூணு மாசக் குழந்தையா இருந்தப்ப, எனக்கு 100 சதவிகிதம் பார்வை தெரியாமப்போயிட்டு. பார்வை போனா என்ன, காதுகள் நல்லா கேட்டதால எங்கப்பாவும் சித்தப்பாவும் வாசிக்கும் இசையைக் கேட்டுக் கேட்டு எனக்குள்ளயும் லயம் வந்து உட்கார்ந்துட்டு.

ஒன்பதாவதுக்குமேல படிப்பு ஏறலை. இசைதான் உலகம்னு ஆயிட்டு. சேர், பெஞ்ச், பலகைன்னு கிடைக்கிற இடத்துல எல்லாம் கைகளால் தாளம் போட ஆரம்பிச்சுட்டேன். எங்கப்பா என்னை 12 வயசுலயிருந்து இங்க பக்கத்துல நடக்கும் கச்சேரிகளுக்கு தபேலா வாசிக்க அனுப்புவார். சொந்தமா தபேலா வாங்க காசு இல்லை. கச்சேரி நடத்துறவங்க வெச்சிருக்கிற தபேலாவுல வாசிப்பேன். அஞ்சோ, பத்தோ கூலி தருவாங்க. அப்போ ஒண்ணும் தெரியலை. அதுக்கப்புறம் வாலிபன் ஆனதும் நான் ஒரு இடத்துல வாசிச்சதைக் கேட்டுட்டு, மின்னாம்பள்ளியைச் சேர்ந்த ரோஸ்லின் என்னை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. பிரகாஷ், உமாமகேஸ்வரின்னு ரெண்டு குழந்தைகள் பிறந்தாங்க.

அப்புறம்தான் வறுமையின் வீரியம் எங்களுக்குப் புரிய ஆரம்பிச்சது. திருச்சி, சென்னை, பாண்டிச்சேரினு ஆர்கெஸ்ட்ரா ட்ரூப் வெச்சிருக்கிறவங்க என்னைத் தபேலா வாசிக்கக் கூப்பிடுவாங்க. முழுக்க முழுக்கப் பார்வையற்ற கலைஞர்களைக்கொண்ட திருச்சி `ராஜபார்வை' ஆர்கெஸ்ட்ரா ட்ரூப்பிலிருந்து கூப்புடுவாங்க. நார்மலான கலைஞர்கள் வாசிக்கும் கச்சேரிகள்லயும் என்னை வாசிக்கக் கூப்புடுவாங்க. ஆனா, சென்னை, கோவை, பாண்டிச்சேரினு போனா, ஒரு நிகழ்ச்சிக்கு 1,500 ரூபாய் கொடுப்பாங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மாசத்துக்கு 15 நிகழ்ச்சிகள் வரை கிடைக்கும். அப்போ பிரச்னை இல்லாம இருந்துச்சு. பாட்டைப் போட்டுட்டு குத்தாட்டம் போடுற ரெக்கார்டு டான்ஸ் குரூப்புகள் கிளம்பினதுக்குப் பிறகு, மக்கள் மத்தியில் ஆர்கெஸ்ட்ராவுக்கான மவுசு குறைஞ்சுபோயிட்டு. இப்போ மாசத்துக்கு மூணு நிகழ்ச்சி கிடைச்சாலே பெருசுங்கிற நிலைமை.

சீஸன் காலங்கள்ல அஞ்சு நிகழ்ச்சிகள் வரை கிடைக்கும். என் கஷ்டத்தைப் பார்த்துட்டு 2005-ல் அப்போ கரூர் கலெக்டரா இருந்த வெங்கடேஷ் சார் இந்தத் தபேலாவை வாங்கிக் கொடுத்தார். ஆனா, கச்சேரி கிடைக்கணுமே. மாசம் வருமானம் 5,000-த்தைத் தாண்டலை. பக்கத்துல உள்ள மூலனூர்ல உள்ள ரெண்டு சர்ச்ல வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகள்ல வாசிக்கக் கூப்புடுறாங்க. ஒரு சர்ச்சுல மாசம் 1,000 ரூபாயும், இன்னொரு சர்ச்சுல 500 ரூபாயும் தர்றாங்க. ரெகுலர் வருமானம்னு பார்த்தா இதுதான். அதுவும் வாடகைக்குப் போயிரும். வயித்துப்பாடு, குடும்பச் செலவுக்கு..?

என் கஷ்டத்தைப் பார்த்துட்டு, என் மனைவி ஒரு வருஷமா கரூர்ல இருந்து திருச்சி வரைக்கும் ரயில்ல பேனா, பென்சில், செல்போன் கவர் விற்கிறாங்க. ஆனா, அவங்களுக்கு தினமும் 100 ரூபா லாபம் வந்தாலே பெருசு. மாசத்துல பத்து நாளைக்குமேல ஒருவேளை சாப்பிடக்கூட வருமானம் இருக்காது. மொத்தக் குடும்பமும் தண்ணீரைக் குடிச்சு ஒப்பேத்துவோம். அப்புறம் ஈரத்துணியை வயித்துல கட்டிட்டுப் படுத்துக்குவோம். அதுவும் தாங்கலைன்னா, நான் வீட்டு மூலையில் தபேலா வாசிப்பேன். மொத்தக் குடும்பமும் அதை கேட்கும். பல நாள், என் தபேலா இசைதான் எங்களுக்குச் சாப்பாடு. இதுவரை 2000 மேடைகள்ல வாசிச்சிருப்பேன். கே.ஜே.ஜேசுதாஸ், தீபன் சக்கரவர்த்தி, பி.சுசீலா, பி.எஸ்.சசிரேகா, எஸ்.என்.சுரேந்தர், அனுராதா ஸ்ரீராம்னு பல சினிமா பாடகர் பாடகிளுக்கு கரூர்ல நடந்த கச்சேரிகள்ல தபேலா வாசிச்சிருக்கேன். எல்லோரும் `பிரமாதம். உங்க இசைத் திறமைக்குப் பல உயரங்கள் காத்திட்டிருக்கு'னு பாராட்டுவாங்க. மனசு முழுக்க சந்தோஷ போதை நிறைஞ்சுடும். 

ஆனா, வீட்டுக்குப் போனா வறுமையும், சாப்பிட வழியில்லாத பட்டினியும்தான் காத்திட்டிருக்கும். சமயத்துல பசியாத்த பச்சத்தண்ணிகூட இல்லாமப்போயிரும். `பேசாம குடும்பத்தோடு செத்துப்போயிரலாமா'னு மனைவி கேட்பாங்க. நான் அந்த எண்ணத்தை ஆரம்பத்துலேயே தடுத்திருவேன். `இன்னிக்கு உலகத்துல பல பேரோட கவலைகளைத் தீர்ப்பது இசைதான். இசையே மருந்துனு சொல்லியிருக்காங்க. நம்ம வீட்டுல செல்வச்செழிப்பு, படாடோபம்வேணும்னா இல்லாம இருக்கலாம். தன்னம்பிக்கை தரும் இசை நிறைஞ்சு இருக்கு. இந்த இசையால எல்லாத்தையும் கடந்திருவோம். இந்த நிலைமை இப்படியே இருக்காது. நம்ம பிள்ளைங்க வளர்ந்து, அவங்ககூட நல்ல நிலைமைக்கு நம்ம குடும்பத்தைக் கொண்டாந்துடலாம் இல்லையா. கடவுள் கணக்கு அப்படிக்கூட இருக்கலாம். நீ தன்னம்பிக்கையை மட்டும் விட்டுறாத'னு ஒரு துள்ளலான பாடலுக்கு உரிய இசையை தபேலாவில் வாசிப்பேன். மொத்தக் குடும்பத்துக்கும் புது உற்சாகம் வந்துரும். இத்துணூண்டு எறும்பு போராடுது சார். கண் தெரியலைன்னாலும் மனுஷன் நான் போராட மாட்டேனா. இந்தத் தபேலாவை வாசிக்க என் கையில தெம்பு இருக்கிறவரைக்கும் எனக்கோ, என் குடும்பத்துக்கோ எந்தத் தீங்கும் வராது சார்" என்று தன்னம்பிக்கையைத் தெறிக்கவிட்டு முடிக்கிறார்.

அங்கே ஒரு புதிய இசை, யாருக்கும் எட்டாத ஒரு புதிய திசை பிறக்கிறது. அது எல்லோருக்குமானது!