Published:Updated:

கலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்!
கலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்!

நினைவுகள்

பிரீமியம் ஸ்டோரி
கலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்!

“சின்ன வயசுல இருந்தே எனக்கு ஓவியம் வரையுறதுன்னா ரொம்ப பிடிக்கும். நான் பார்க்கிற காட்சிகளை என்னோட கற்பனைக்குத் தகுந்த மாதிரி வரைஞ்சு பார்ப்பேன். ஓவியக்கலை மீதான விருப்பம்தான் எனக்கு போட்டோகிராபி மேலயும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கணும்”  - தெளிந்த தமிழில் நிதானமாகப் பேசுகிறார் கேரளாவைச் சேர்ந்த காயத்ரி.

வெடிங் போட்டோகிராபிக்காக இந்தியா முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கும் காயத்ரி, சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்தவர். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்புதான் போட்டோகிராபி துறையில் கால்பதித்து இருக்கிறார். `ஆர்வம் உள்ள துறையை எந்த வயதில் தேர்வு செய்தாலும் அதில் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு முத்திரையைப் பதிக்க முடியும்’ என்பதற்கு உதாரணமாக நிற்கிறார் காயத்ரி.

கலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்!

“என்னோட சொந்த ஊர் கேரளா. அப்பா ஏர்ஃபோர்ஸ்ல வேலை பார்த்தவரு. நாங்க ஃபேமிலியோட அடிக்கடி வேற வேற மாநிலங்களுக்கு மாற்றலாகிடுவோம். அதனால நிறைய ஊர்களை சுத்திப்பார்க்கிற வாய்ப்பும், புதுப்புது கலாசாரங்களை ரசிக்கிற அனுபவமும் கிடைச்சது. நான் சிங்கப்பூர்ல கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு அங்கேயே ஒரு ஜெர்மன் பேங்க்ல ஏழு வருஷங்களா வேலை பார்த்துட்டிருந்தேன். என்னோட கணவருக்குச் சென்னைதான் சொந்த ஊர். நாங்க காலேஜ் படிக்கும்போதே காதல் கல்யாணம் பண்ணிக்கிட்ட ஜோடி.

கலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்!

அவர் வீட்டுக்கு ஒரே பையன்ங்கிறதுனால பொறுப்புகள் கொஞ்சம் அதிகமாவே இருந்தன. அதனாலதான், நாங்க சிங்கப்பூர்ல இருந்து சென்னை வர வேண்டியதாச்சு. 2011-ல நாங்க சென்னை வந்தப்போ நான் வேலைக்கு முயற்சி செஞ்சுட்டிருந்தேன். அப்போதான் எனக்கு போட்டோகிராபி மேல இருந்த ஆர்வத்தைப் பயன்படுத்திக்கலாமேன்னு தோணுச்சு. சென்னையில் இருக்கும் பிரபல போட்டோகிராபர்கிட்ட ரெண்டு வருஷம் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன். அந்த ரெண்டு வருஷத்துல போட்டோகிராபியில எந்த ஏரியாவைத் தேர்ந்தெடுக்கிறதுனு ரொம்பக் குழப்பமா இருந்தது.

கலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்!

அந்தச் சமயத்துல என் கணவரோட சேர்ந்து ஒரு திருமணத்துக்குப் போயிருந்தேன். அங்க நிறைய விஷயங்கள் எனக்குப் பிடிச்சிருந்தது. தமிழ்நாட்டுல திருமணத்தை ரொம்ப கிராண்டா கொண்டாடுறாங்க. முக்கியமா போட்டோகிராபிக்காகவே நிறைய செலவு செய்றதை கவனிச்சப்போதான், நான் வெடிங் போட்டோகிராபியை `டிக்’ செய்தேன். கணவருக்கு இணையா இதில் வருமானமும் பார்க்க முடியும்னு மனசுல ஒரு கணக்கு வந்தது. தவிர, ஒவ்வொரு ஊர் மக்களோட கலாசாரத்தையும் பதிவு பண்ணும் வாய்ப்பை நினைச்சும் பரவசமா இருந்தது.

ஆரம்பத்துல தெரிஞ்சவங்களோட திருமண ஷூட்களுக்குப் போயிட்டிருந்தேன். அங்க எடுக்கிற படங்களைக் கொஞ்ச நாள் கழிச்சு பார்க்கும்போது எனக்கு அது ஒரு மேஜிக் மொமென்ட் மாதிரி இருக்கும். அப்போ எனக்குள்ள ஏற்படுற உணர்வை வார்த்தைகளால சொல்ல முடியாது. நமக்குள்ள ஏற்படுற அந்த உணர்வை அந்தக் குடும்பத்துல உள்ளவங்களும் அனுபவிக்கணும். அப்போதான் நாம நல்லா போட்டோ எடுத்துருக்கோம்னு நினைக்க முடியும்” - அனுபவித்துப் பேசுகிறார் காயத்ரி.

கலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்!

போட்டோகிராபிக்காக ஊர் தாண்டி, மாநிலங்கள் கடந்து பயணிக்கும் காயத்ரியிடம் அவர் ரசித்த திருமணம் எது என்று கேட்டோம். “கேரளாவுல நான் பார்த்த மேரேஜ்தான். ஏன்னா, நான் இதுவரை போயிருந்த எல்லா கல்யாணங்களுமே ரொம்ப கிராண்டா நடக்கும். ஆனா, அந்த கல்யாணத்துல மொத்தமே ஏழு பேர் மட்டும்தான். அதுல நானும் ஒருத்தி. மாப்பிள்ளை இந்து, பொண்ணு முஸ்லிம். அதனால ரெண்டு வீட்டினரும் பயங்கர எதிர்ப்பு. வீட்டைவிட்டு வந்து ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. என்னைத் தவிர்த்து அங்க ஆறு பேர்தான் இருந்தாங்க. அந்தத் திருமணத்தை போட்டோ எடுக்கும்போது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.

கலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்!

பொதுவா, வெடிங் போட்டோ ஷூட் செய்யும்போது நான் டென்ஷன் ஆகமாட்டேன். எப்பவுமே போட்டோ எடுக்கும்போது ஓப்பன் மைண்ட்டடா இருக்கணும். இந்து, முஸ்லிம், கிறிஸ்டி யன்னு எந்தக் கல்யாண வீடுகளுக்குப் போனாலும் அங்க இருக்குறவங்களோட உணர்வுகளை வெளிக்கொண்டு வந்துட்டாலே போதும்... லைஃப் லாங் உங்களை அவங்க நினைச்சுட்டே இருப்பாங்க. அப்படித்தான் நான் இந்த ஆறு வருஷத்துல என் போட்டோகிராபி மூலமா நிறைய சொந்தங்களைச் சம்பாதிச்சு வெச்சிருக்கேன்.

கலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்!

ராமேஸ்வரம், கும்பகோணம், சென்னை, மும்பை, டெல்லி, திரிச்சூர், ஜெய்ப்பூர், கொச்சின்னு நிறைய இடங்களுக்குப் பயணம் செஞ்சுகிட்டே இருக்கேன். என்னோட விருப்பம் தெரிஞ்சு எப்போதும் என்னைத் தட்டிக்கொடுக்குற கணவர் என் பக்கத்துல இருக்குறதுனாலதான் என்னால தொடர்ந்து டிராவல் பண்ண முடியுது. அதேபோல, புதுசா கல்யாணம் பண்ணிக்கிற மாப்பிள்ளையும் பொண்ணும் என்னை நம்பி அவங்க ஃபங்ஷனை என்மேல நம்பிக்கை வெச்சு கொடுக்குறாங்க. அவங்களோட சந்தோஷமான தருணங்களை அவங்க நினைக்கிற மாதிரியே அழகா கொடுக்கறது எனக்கான பொறுப்பு.

கலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்!

ஒவ்வொரு போட்டோகிராருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். என்னோட ஸ்டைல் இன்ஸ்டன்ட் போட்டோஸ் எடுத்துக் கொடுக்கறதுதான்.  தங்களோட திருமண நாளிலேயே திருமணப் புகைப்படங்களை கையில் பார்க்கும் புதுமண ஜோடிகளின் வியப்பு கலந்த சந்தோஷத்தையும் அப்படியே க்ளிக் செய்துடுவேன். நான் போட்டோ எடுத்துக்கொடுக்குற ஒவ்வொரு தம்பதியரும் தங்களைப் புகைப்படங்களில் பார்க்கும்போது ஆச்சர்யப்படணும், சந்தோஷப்படணும். அதுதான் எனக்கு வேணும்!”

- சொல்லும்போது காயத்ரியின் முகத்தில் விரிந்து பிரகாசிக்கிறது புன்னகை.

- மு.பார்த்தசாரதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு