Published:Updated:

அடிக்கல் முதல் இன்றைய ஏ.சி. ஜில்லிப்பு வரை... புகைப்படங்களின் வழியே மெட்ரோ ரயில் பயணம்!

``லாங்ல இருந்து கோயம்பேடு போற வழியில் இருக்கிற பிரிட்ஜ்ல வாகனங்கள் போக, மேல மெட்ரோ போக ஒரு க்ளிக் பண்ணிருக்காங்க. வேற லெவலுங்க அந்தப் புகைப்படம்!" என ஆச்சர்யத்துடன் கூறுகிறார்கள் பார்வையாளர்கள்.

அடிக்கல் முதல் இன்றைய ஏ.சி. ஜில்லிப்பு வரை... புகைப்படங்களின் வழியே மெட்ரோ ரயில் பயணம்!
அடிக்கல் முதல் இன்றைய ஏ.சி. ஜில்லிப்பு வரை... புகைப்படங்களின் வழியே மெட்ரோ ரயில் பயணம்!

`மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற மலையாளத் திரைப்படத்தில் புகைப்படக்காரரான அப்பா, தன் மகன் ஃபஹத் பாசிலிடம் `நல்லொரு மொமென்ட் சம்பவிக்குங்காயினு தொட்டு முன்புள்ள நிமிஷம், அது நம்மளு திரிச்சறியணும். க்ளிக் செய்யான் ரெடியாயிருக்கணும். அத்தரே உள்ளது காரியம்' என்பார். புகைப்படம் எடுக்கவேண்டிய சரியான தருணத்துக்கு, பல மணி நேரம், பல நாள், பல மாதம்கூட ஆகலாம். ஆனால், அப்படிக் காத்திருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைத்தாம் சிறந்த புகைப்படங்களாக நாம் கொண்டாடுகிறோம். இன்றைய அளவில் புகைப்படங்கள் எல்லாமே மொபைல் வழியாகத்தான் அதிகம் எடுக்கப்படுகின்றன. அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அதன் திரையில் மட்டுமே பார்க்கப்படுகின்றன. ஆனால், அதைப் பெரிய அளவில் ஃபிரேம் போட்டு பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. சென்னை மெட்ரோவும் போட்டோகிராஃபிக் சொசைட்டி ஆஃப் மெட்ராஸும் நடத்திவரும் கண்காட்சி, அப்படியான ஓர் அனுபவத்தைக் கொடுத்தது.

சென்னை வடபழநியில் உள்ள மெட்ரோ ரயில்நிலையத்தின் முதல் தளத்தில்தான் கண்காட்சி நடைபெறுகிறது. உலகப் புகைப்பட தினத்தையொட்டி, இந்தப் புகைப்படக் கண்காட்சியை ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 29 வரை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பிரபல புகைப்படக் கலைஞர் வெங்கட் ராம், இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். மெட்ரோ இயக்குநர் சுஜாதா ஜெயராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அந்தப் புகைப்படக் கண்காட்சியின் சிறப்பம்சங்கள் இதோ...

மெட்ரோ ரயில் பணி தொடங்கிய நாளிலிருந்து படிப்படியாகக் கட்டி முடித்து அதில் மக்கள் பயணம் செய்வது வரை வரிசையாக சுமார் 100 படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பணியாள் கம்பி கட்டுவது, மெட்ரோ பாதை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது, டனல்களுக்கான வளைவுகள் அமைப்பது, மெட்ரோ ரயில்நிலையத்தில் முதன்முதலாக வந்து நிற்பது, மக்கள் அதில் ஏறி பயணம் செய்வது, முதல் தடவை மெட்ரோவில் போகும்போது செல்ஃபி எடுக்கும் பயணிகள்... என, புகைப்படங்களின் வழியே மெட்ரோவின் கதையைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

``லாங்ல இருந்து கோயம்பேடு போற வழியில் இருக்கிற பிரிட்ஜ்ல வாகனங்கள் போக, மேல மெட்ரோ போக ஒரு க்ளிக் பண்ணிருக்காங்க. வேற லெவலுங்க அந்தப் புகைப்படம்!" என ஆச்சர்யத்துடன் கூறுகிறார்கள் பார்வையாளர்கள்.

இந்தப் புகைப்படங்களை எடுத்த போட்டோகிராஃபிக் சொசைட்டி ஆஃப் மெட்ராஸின்  உறுப்பினர்களுடன் பேசினோம்.

``மெட்ரோவோட ஆபீஸர்ஸ் எங்களைக் கூப்பிட்டு சைட் போட்டோகிராஃபி எடுக்கணும்னு சொன்னாங்க. இதெல்லாம் இண்டஸ்டிரியல் போட்டோகிராஃபினு சொல்வாங்க. எங்களுடைய ஐடியா எல்லாம் வைல்டு லைஃப், லேண்ட்ஸ்கேப், ஆர்க்கிடெக்சர் பக்கம்தான். இண்டஸ்டிரியல் போட்டோகிராஃபி இதுதான் முதல் தடவை. மிகப்பெரிய சவாலா இருந்தது. மண் பரிசோதனையிலிருந்து ஆரம்பித்து இந்த அளவுக்குக் கொண்டுவந்திருக்காங்க இந்த புராஜெக்ட்டை. இதைப் புகைப்பட ஆவணமா பண்ணினது எங்களுக்கு மிகப்பெரிய எக்ஸ்பீரியன்ஸ்.

மெட்ரோவுக்குப் பின்னாடி இருக்கிற மிகப்பெரிய உழைப்பெல்லாம்தான் இன்றைக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கு. டனல்குள்ளயெல்லாம் லைட்டிங் கிடையாது. அங்க போட்டோ எடுக்கிறதெல்லாம் ரொம்பப் பெரிய சவாலா இருந்துச்சு. 36 பேர் எங்கள் போட்டோகிராஃபிக் சொசைட்டியில இருந்து போய் புகைப்படம் எடுத்தார்கள். மொத்தமா 500 படத்துக்குமேல வந்துச்சு. அதுல பெஸ்ட்டான 100 போட்டோஸ்தான் இங்கே வெச்சிருக்கோம்” என்று தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.

மெட்ரோ ரயில் ஸ்டோரியைத் தவிரவும், போட்டோகிராஃபிக் சொசைட்டி மெம்பர்ஸ் எடுத்த அற்புதமான பல புகைப்படங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மிகப்பெரிய கண்ணாடிச் சுவர்கள் அடங்கிய கட்டடத்தின் கண்ணாடிகளில், கூவம் நதியும் அதன் கரையோரம் இருக்கும் குடிசைமாற்று வாரிய வீடுளும் பிரதிபலிப்பதை `REFLECTION OF INDIA' என்ற பெயரில் காட்சிப்படுத்தியுள்ளனர். இரவு நேரம், கடற்கரையோரம், காதலன் தோளில் காதலியின் கண்ணம், அப்படியே அவர்களுக்கு இடதுபுறம் கடற்கரை ஐஸ்க்ரீம் வண்டி, தூரத்தில் சிவந்த வெட்கத்துடன் நிலா இதையெல்லாம் பார்த்து ரசிப்பதுபோல ஒரு புகைப்படம் `SUPERMOON' என்ற பெயரில் வைக்கப்பட்டிருக்கிறது.

வருகிற பார்வையாளர்கள் எல்லோருடைய பார்வையையும் தன்வசம் கட்டி இழுத்துக்கொண்டது இந்தப் புகைப்படம். மின்னலில் மஞ்சள் குழைத்து, மணலாகத் திரித்து, ஆழமான இருட்டில் தூக்கி வீசி, ஃப்ளாஷ் ஒளியோடு ஒரு புகைப்படம் எடுத்தால் எப்படிப் பதிவாகுமோ அப்படித்தான் இருந்தது `GLOW OF HIMALAYA' என்ற புகைப்படம். இப்படிப் பல படங்கள் நம் கண்கள் வழியே நுழைந்து சிந்தனையில் தங்கிவிடுகின்றன. சில புகைப்படங்களைப் பார்க்கும் நேரத்தில் காலம்  நம்மைப் புகைப்படமாக்கி, புகைப்படங்களை  நம்முன் உயிர்பெறச்செய்கிறது. இப்படியோர் அனுபவம் அங்கு கிடைக்கிறது. நமக்காக அதே இடத்தில் காத்திருக்கின்றன பல உயிர்ப்புள்ள தருணங்கள்!