Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200

Published:Updated:
அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் பேசுகின்றன!

புத்தகம் இருக்க சாக்லேட் எதற்கு?

சமீபத்தில் பேருந்து நிலையம் ஒன்றை ஒட்டியுள்ள தேநீர் மற்றும் சிற்றுண்டி உணவகத்துக்கு சென்றேன். டீ, டிபன் அனைத்தும் நியாயமான விலையில் கிடைத்த துடன், சுவையாகவும் இருந்தன. சாப்பிட்டு முடித்துப் பணம் செலுத்துகிறபோது `சரியான சில்லறை கொடுத்து உதவவும்’ என்ற அறிவிப்பு கண்ணில்பட்டது. உண்மையிலேயே அந்த நேரத்தில் சரியான சில்லறை இல்லாததைத் தாழ்மையாக உணர்ந்தேன்.

பணம் பெறுபவர் என் நிலையை உணர்ந்துகொண்டு, `உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், இதில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்கிறீர்களா?’ என்றார். அப்போதுதான் கவனித்தேன்... தினசரி நாளிதழ் ரூபாய் 1, வார இதழ் ரூபாய் 2, மாத இதழ் ரூபாய் 3 எனக் குறிப்பிட்டு பழைய இதழ்களை அடுக்கி வைத்திருந்தனர். உணவுத் தயாரிப்பு, மாணவர்களுக்கான வினா - விடை, கல்விச் செய்தி எனப் பயனுள்ள விஷயங்களை உள்ளடக்கியதாக அந்த இதழ்கள் இருந்தன. மீதி சில்லறைக்கு மட்டுமன்றி, கூடுதலாகவும் பணம் செலுத்தி சில வார, மாத இதழ்களையும் வாங்கிக் கொண்டேன். மீதி சில்லறைக்குச்  சாக்லெட்டுகளைக் கொடுத்துக் காசு பார்ப்பவர்கள் மத்தியில், இந்த வித்தியாசமான முயற்சி பாராட்டும்படி இருந்தது.

- கோமதி பூபாலன், வேலூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

ஆளுக்கொரு  சாவி!

பிள்ளைகளுக்குத் திருமணமாகி அவர்கள் வெளியூரில் செட்டிலாகிவிட, இப்போது நானும் கணவரும்தான் வீட்டில் இருக்கிறோம். நான் அரசு வேலையில் இருக்கிறேன். கணவர் ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். நான் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும் நேரத்தில், அவர் பெரும்பாலும் வீட்டில்தான் இருப்பார். எங்காவது வெளியில் செல்ல வேண்டிய அவசரச் சூழல் என்றால், சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்.

ஒருநாள் இதேபோல, என் கணவர் பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டு வெளியில் சென்றுவிட, நான் வரும்போது பக்கத்து வீடும் பூட்டிக்கிடந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அவர்கள் அவசர அவசரமாக வெளியே கிளம்பிச் சென்றது தெரியவந்தது. வெளியில் சென்றிருந்த என் கணவரும் திரும்பிவர, நாங்கள் இருவருமே அவர்கள் திரும்பி வரும்வரை வெளியிலேயே காத்துக்கிடந்தோம். அன்றிலிருந்து ஆளுக்கொரு சாவி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டோம்.

 - சி.விஜயலெட்சுமி, திருச்சி

இப்படியும் காட்டலாமே... அக்கறையை!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரைப் பார்க்கச் சென்றிருந்தேன்.

அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு எதுவும் சாப்பிட முடியாத நிலையில் இருந்ததால், நலம் விசாரிக்க வந்தவர்கள் கொண்டுவந்த பழம், பிஸ்கட், பிரெட் போன்றவை பயனின்றி ஒருபுறம் குவிக்கப்பட்டிருந்தன. இதற்கு மாறாக அவரைப் பார்க்க வந்திருந்த தோழி ஒருவர் மட்டும் `கெட் வெல் சூன்’ (get well soon) என்று எழுதப்பட்ட கவரில் பணம் வைத்துக்கொடுத்துச் சென்றிருந்தார்.
விழா மற்றும் சுப காரியங்களில் அன்பளிப்பு செய்யும்போது, `அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ளட்டும்' எனப் பணமாகப் பரிசளிப்பது போல நோயாளிகளுக்கும் பணமாகக் கொடுத்தால், மருத்துவர் பரிந்துரைப்பதை வாங்கிக்கொள்ளவும், மருத்துவமனைச் செலவைச் சமாளிக்கவும் வசதியாக இருக்குமே!

- விஜயலட்சுமி, பெங்களூரு

அடடே  ஆஃபர்!

நானும் தோழியும் குடந்தை யிலுள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். அங்கே எல்லா டைனிங் டேபிள்களிலும் எலெக்ட்ரானிக் கடிகாரம் இருந்தது. ``என்ன இது?’’ என்று சர்வரிடம் கேட்டோம். ``ஸ்பெஷல் ஆஃபர் போயிட்டிருக்கு. ஒரு நிமிடம் சாப்பிட 12 ரூபாய். நீங்கள் எந்த டிஷ்ஷையும், எத்தனை நிமிடங்கள் வேண்டு மானாலும் சாப்பிடலாம்’’ என்றார். ‘`எதற்கு அந்த ஆஃபர்?’' என்று விசாரித்தபோது, ``சாப்பிட வர்றவங்க வேகமா சாப்பிட்டுட்டு வெளியே போக மாட்டேங்கிறாங்க. `சீக்கிரமா சாப்பிட்டுட்டு போங்க’னு கண்டிஷனா சொல்லவும் முடியலை. அதான் இப்படி ஒரு ஆஃபர் கொடுத்தோம். இப்போ இடம் கிடைப்பதற்காக யாரும் காத்திருப்பதே இல்லை. தவிர, லாபகரமாகவும் இருக்கு’’ என்றார்.

`வியாபார மூளை எப்படியெல்லாம் வேலை செய்கிறது’ என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

- எஸ்.சாந்தி, திருச்சி