Published:Updated:

இஷிகுரோ: பாடகராக விரும்பிய இலக்கியவாதி - சா.தேவதாஸ்

இஷிகுரோ: பாடகராக விரும்பிய இலக்கியவாதி - சா.தேவதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இஷிகுரோ: பாடகராக விரும்பிய இலக்கியவாதி - சா.தேவதாஸ்

இஷிகுரோ: பாடகராக விரும்பிய இலக்கியவாதி - சா.தேவதாஸ்

“வாழ்க்கை என்பது உங்களை அறிந்துகொள்வதில்லை, உங்களை உருவாக்குவது”

-பெர்னாட் ஷா


இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட மாத்திரத்தில், இங்கிலாந்திலுள்ள இஷிகுரோவின் வீட்டின் முன்பு பத்திரிகையாளர்கள், புகைப்படக் காரர்கள் எனத் திரண்டுவிட்டனர். இதைப் பார்த்த இஷிகுரோ, “அடுத்தடுத்து கொலைகள் செய்த ஒருவனைப் பிடிக்க வந்திருக்கும் காவல்துறையினர் போலிருக்கிறதே எனப் பக்கத்து வீட்டுக்காரர்கள் நினைத்துக்கொள்வார்கள்” என்று பரிகசித்திருக்கிறார்.  

இஷிகுரோ: பாடகராக விரும்பிய இலக்கியவாதி - சா.தேவதாஸ்

“இந்தப் பரிசு கனடா நாட்டு இலக்கியவாதி மார்கரெட் அட்வுட்டுக்குக் கிடைக்காமல் போனமைக்காக மன்னிப்புக் கோருகிறேன். சீக்கிரமே இப்பரிசு அவருக்குக் கிடைத்துவிடும் என்றெண்ணினேன். எனக்குக் கிடைக்கும் என்று ஒரு கணமும் நினைக்கவில்லை...” என்பது இஷிகுரோவின் இன்னொரு எதிர்வினை.

தனது தகுதி, அத்தகுதிக்கான கௌரவம் என்று கொண்டாட்ட மனநிலையில் இல்லாமல், பகடி செய்வதும் தகுதியுள்ள சக எழுத்தாளருக்கு அது கிடைக்காமல் போனதற்கு வருந்துவதும்தான் இஷிகுரோவைத் தனித்தன்மை வாய்ந்தவராக ஆக்குகிறது.

“ஜேன் ஆஸ்டினையும் காஃப்காவையும் கலந்து விட்டால் கஷூவோ இஷிகுரோ கிடைத்துவிடுவார். அத்துடன் சிறிது ஃமார்ஸெல் ப்ரெஸ்டை சேர்த்துக்கொள்ளுங்கள். சிறிது கலக்குங்கள், போதும் அதிகம் வேண்டாம். அவரது எழுத்துக்கள் வந்துவிடும்” என்பது நோபல் குழுவின் நிரந்தரச் செயலர் சாரா டேனியஸின் சுவையான விவரிப்பு.

“உலகத்துடனான நமது தொடர்பு குறித்துள்ள மயக்க உணர்வின் கீழுள்ள அதலபாதாளத்தை வெளிக்காட்டி யிருப்பவர்” என நோபல் ஒரு மதிப்பீடு செய்து இஷிகுரோவுக்கு பரிசை அறிவித்துள்ளது. ‘தனக்கேயான அழகியல் பிரபஞ்சத்தை உருவாக்கி இருப்பவர்’ என்றெல்லாம் கொண்டாடப்படுகிறார்.

இஷிகுரோவின் இலக்கியப் பரிச்சயம் துப்பறியும் கதைகளிலிருந்தும் காமிக்ஸ் தொடர்களி லிருந்தும்தான் தொடங்கியது. பியானோவும் கிதாரும் இசைப்பதில் ஈடுபாடுகொண்டு, நவீன இசையில் பாடல் புனைபவராகவும் பாடுபவராகவும் விளங்கினார். நவீன இசையில் இவரது நாயகன் பாப் டிலன். பாப் டிலன் சென்ற ஆண்டுதான் நோபல் பரிசு பெற்றார். பாடல்கள் புனைந்து இசைக்கலைஞராக செல்வாக்குப் பெற்று நோபல் பரிசு பெற்றவர் பாப் டிலன். பாடகராகி வெற்றி பெற முடியாமல் இலக்கியவாதியாக முத்திரை பதித்து நோபல் பரிசு பெற்றிருப்பவர் இஷிகுரோ. 

இஷிகுரோ: பாடகராக விரும்பிய இலக்கியவாதி - சா.தேவதாஸ்இஷிகுரோவுக்கு  ஐந்து வயதிருக்கும்போதே இங்கிலாந்து வந்துவிட்டது அவரது குடும்பம். சீனாவில் வளர்ந்து சீனப் பண்புநலன்கள் கொண்டவராயிருந்தார் அவரது அப்பா. ஜப்பானிய மரபுப்படி வளர்ந்திருந்த அவரது அம்மா, நாகசாகி குண்டுவீச்சின்போது காயம்பட்டு, அதிர்ச்சி அடைந் தவர். மாணவப் பருவத்திலேயே ஹிப்பியாகக் கிளம்பி அமெரிக்காவைச் சுற்றி வந்தவர் இஷிகுரோ. அமெரிக்காவில் ஏகப்பட்ட வாசகர்களைக்கொண்டுள்ள இஷிகுரோவுக்கு, பிரான்ஸில் இசை ஆர்வலர்கள்/ரசிகர்கள் ஏராளம். அவரது ஜாஸ் இசைக்கு அங்கு அதிக செல்வாக்கு உள்ளது.

துப்பறியும் கதை, அறிவியல் புனைவு, முற்றிலும் மாயக்கதை என விதவிதமாக எழுதி வந்துள்ள இஷிகுரோ, ஒரே புத்தகத்தையே திரும்பத் திரும்ப எழுதுகிறார் அல்லது ஒரு மைய இழையை விரும்பியபடி யெல்லாம் பின்னிப் பார்க்கிறார் என்று குறிப்பிடப்படுவது உண்டு. பிசகும் நினைவுகள், தோன்றி மறைதல், கசிந்துகொண்டிருக்கும் காலம், நோய்மைத்தன்மையுள்ள தனிநபர், சமூகத்தின் கூட்டு ஞாபகம் என்னும் இழைகள்தான் அவரது எழுத்தில் ஊடும் பாவும்.   

இஷிகுரோ: பாடகராக விரும்பிய இலக்கியவாதி - சா.தேவதாஸ்

“அந்தத் தருணத்திலும் அப்புறம் நினைத்துப் பார்க்கையிலுமாக இருமுறை வாழ்வை ருசிப்பதற்காக எழுதுகின்றோம்” என்பார் அனைஸ் நின். ‘‘அந்தத் தருணத்தில் ருசித்தது பற்றி வாசகன் உறுதிகொள்ள முடியாது. ஆனால், அப்புறம் நினைத்துப் பார்த்தது பற்றி உறுதிகொள்ள முடியும்’’ என்கிறார் இஷிகுரோ. அதற்குச் சான்றாக அவரது சிறுகதைகளும் நாவல்களும் உள்ளன.

The Remains of the Day (1989) நாவல் அவரது படைப்புகளில் முக்கியமாகக் கருதப்படுவது. 1998-ல் புக்கர் பரிசு பெற்றது. மெர்ச்சண்ட் அய்வரியால் திரைப் படமாக்கப்பட்டது. ஆங்கிலத்தில் 10 லட்சம் பிரதிகள் விற்பனையானது இந்த நாவல். 28 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள் இஷிகுரோ, திரைக் கதைகளும் தொலைக்காட்சி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது கதை ஒன்றும் நாடகம் ஒன்றும் ஜி.குப்புசாமியால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.    

இஷிகுரோ: பாடகராக விரும்பிய இலக்கியவாதி - சா.தேவதாஸ்

‘Cellists’ என்னும் சிறுகதையில் ஓர் அமெரிக்கப் பெண் ஹங்கேரிய இளைஞனுக்கு இசை கற்பித்து வருகிறாள். செல்லோ இசைக்கலைஞராக. ஆனால், உண்மையில் அவளுக்கு செல்லோ மீட்டவே தெரியாது. இசை பற்றிய பேச்சு/உரையாடல் என்றால் அவ்வளவு உற்சாகமாகிவிடுவாள். ‘இது எப்படிச் சாத்தியம்?’ இந்தச் சந்தேகம் அந்த இளைஞனுக்குள் எழுந்து, இதை எப்படிக் கேட்பது என்று தவிக்கையில், அந்தப் பெண்ணே அப்புதிரை இப்படி அவிழ்க்கிறாள்: “எனக்கு செல்லோ இசைக்கத் தெரியாது. ஆனால், மாபெரும் செல்லோ கலைஞராகிவிடும் ஆற்றல் இருப்பதாக நம்புகிறேன். எந்த ஆசிரியரும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அமையாத
தால் என் ஆற்றலைப் பாழடிக்காமல், கற்றுக்கொள்ளாமலே இருந்துவிட்டேன்.”

இதுபோன்று ஐந்து கதைகள் கொண்ட ‘Nocturnes’ என்னும் தொகுப்புக் கதைகளெல்லாம் இசை/இசைக் கலைஞர்கள்/ இசைப்பிரியர்களை மையமிட்டவை. “ஒரு நாவலாசிரியராக இந்த ஐந்து கதைகளை எழுதியுள்ளேன். அது ஐந்து பகுதிகளாக / இசைக் கோலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வளவே” என்று இஷிகுரோ குறிப்பிடுகிறார். ‘சொல்லாமலே ஒரு விஷயத்தைச் சொல்வது கலையென்றால், இஷிகுரோ அக்கலையைக் கச்சிதமாகச் செய்துள்ளார்’ என்று பாராட்டுகிறார் விமர்சகர் ஜெயந்த் ஸ்ரீராம். சொல்லலின் மேற்பரப்பின் கீழே நிறைய அர்த்தங்களை விட்டுவைப்பவர் இஷிகுரோ.

இவரது The unconsoled (1995) நாவல் மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. நனவோடை உத்தியில் 500 பக்கங்கள் விரிந்து செல்லும் இந்த நாவல், “தனக்கேயான மோசமான இலக்கிய வகைமையைக் கண்டறிகிறது” என்றார் ஜேம்ஸ் வுட்.

தோற்றமும் நிஜமும் மயங்கி, நினைவும் கனவும் கலந்து, அந்நியமாகி அல்லாடும் தவிப்பை, சிக்கலை ஓர் எழுத்தாளன் சொல்ல முற்படுகையில் கருப்பு-வெள்ளையாக அப்படியே முன்வைக்க இயலாது
போகிறது. அப்போது அதை புனைவாக்க வேண்டியதும் அதன்மீது மாயத்தன்மை பூசுவதும் அவசியமாகின்றது. பூடகம் தேவைப்படுகிறது. தனது படைப்புகளின் வழியே 64 வயதில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ள இஷிகுரோ, தமிழுக்கு அவசியமான எழுத்தாளர்.