Published:Updated:

தண்ணீருக்கடியில் தையத்தக்கா!

தண்ணீருக்கடியில் தையத்தக்கா!
பிரீமியம் ஸ்டோரி
News
தண்ணீருக்கடியில் தையத்தக்கா!

க்ளிக்யாழ் ஸ்ரீதேவி

மாற்றி  யோசிப்பதற்கு எல்லைகள் ஏது? இந்தத் தத்துவமே ட்ரெண்டாகி கைத்தொடும் துறைகளையெல்லாம் பிரமாதப்படுத்துகிறது. நம் திருமணங்களும் அப்படியான பிரமாண்டத்தின் ஒரு பகுதியே. ஆடம்பரம் என்பது பிரமாண்டமல்ல. எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதைவிட எப்படியெல்லாம் விட்டுக்கொடுக்கிறோம் என்பதில்தான் ஆரம்பிக்கிறது இதன் வெற்றி. அப்படியொரு ஜோடி தங்களது வித்தியாசமான போட்டோகிராபிக்காக செய்த முயற்சி, இன்று வைரலாகி விழிவிரிய வைத்துள்ளது. இந்த மாயாஜால நிமிடங்களைத் தனது கேமராவில் ஃப்ரீஸ் செய்து தந்திருப்பது ‘ஷட்டர் மங்கி’ ஸ்டுடியோவின் பரத் சத்யமூர்த்தி...

தண்ணீருக்கடியில் தையத்தக்கா!

இவரது தாரக மந்திரம் குரங்கு! ``மனித இனத்தின் தொடக்கம் என்பதற்காக மட்டுமல்ல... ஒரு நல்ல புகைப்படத்துக்காக ஓடியும் தொங்கியும் உடல் வளைத்தும் பரபரப்பாகும் எங்களைத் தொலைவிலிருந்து பார்த்தாலும் அப்படித்தான் இருப்போம். அதனால் குரங்கின் பரபரப்பு எப்பவும் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் என் நிறுவனத்துக்கு `ஷட்டர் மங்கி’ என்று பெயர்’’ என்கிறார் பரத்.

பரத் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களுக்குப் பின்னே ஓர் அழகிய அர்த்தம் ஒளிந்திருப்பதை அவரது புகைப்படங்கள் நமக்குச் சொல்கின்றன. அண்டர் வாட்டர் போட்டோகிராபியும் அப்படியொரு தருணத்தில் அமைந்ததே. இனி பரத் தன் போட்டோகிராபி பயணம் குறித்து உங்களோடு...

தண்ணீருக்கடியில் தையத்தக்கா!

‘‘மாயவரம் எனக்குச் சொந்த ஊர். பள்ளிப்படிப்பு திருச்சியில. சென்னை லயோலாவுல மாஸ் கம்யூனிகேஷன். போட்டோகிராபில எப்பவும் மனம் லயிக்கும். விளம்பரப்படங்கள், டி.வி-க்கான போட்டோஸ்னு என்னோட கரியர் கிராப் போயிட்டு இருந்தது. என் கசின் திருமணத்துல கேண்டிட் போட்டோகிராபி பண்ற வாய்ப்பு கிடைச்சது. எப்பவும், எதையும் வித்தியாசமான கோணத்துல யோசிக்கிறதால, அந்தத் திருமணத்துல வழக்கமான போட்டோகிராபிக்குப் பதிலா வித்தியாசமான உணர்ச்சிகளைப் புகைப்படங்களா பதிவு   செய்திருந்தேன். எனக்குள்ள இப்படி ஒருத்தன் இருக்கிறதை எனக்கே காட்டிய அனுபவம் அது. கேண்டிட் போட்டோகிராபில அவ்வளவு வாய்ப்புகள் இருக்கு என்பதைப் பத்தி  அதுவரை யோசிச்சதே இல்லை.

தண்ணீருக்கடியில் தையத்தக்கா!

அந்தத் திருமணத்துல நான் எடுத்தப் படங்களுக்கு கிடைச்ச வரவேற்பு என்னை கேண்டிட் போட்டோகிராபி பக்கமா திருப்பியது. அதன்பின் ஏராளமான திருமணங்கள்ல என் கேமரா கண்கள் வலம்வர ஆரம்பிச்சது. திருமணங்கறது ஆயிரம் உணர்வுகளின் குவியலான ஓர் அனுபவம். அங்கே அன்பு கலந்த ஒரு பிரமாண்டம் நம்மைச் சுத்திட்டே இருக்கும். வாழப்போறவங்க, வாழ்த்த வர்றவங்க, குஷியா ஓடற குழந்தைங்கன்னு திரும்பின பக்கம் எல்லாம் ஒரு மகிழ்ச்சி வெள்ளம் மனதில்பட்டு திரும்பறதை உணரமுடியும். மழையில நனையுறது எவ்வளவு பிடிக்குமோ... அவ்வளவு பிடிக்கும், இதுமாதிரி சந்தோஷத் தருணங்களை கேமரால துரத்திப் பிடிக்கிறதும். இதெல்லாம் மின்னல் மாதிரி எதிர்பார்க்காத இடத்துல மின்னி மறைஞ்சிடும். ஒரு கேமராக்காரனுக்கு ஆயிரம் கண்கள் இருக்கணும். நெற்றிக்கண் வரை அத்தனை கண்களாலும் ஆத்மார்த்தமா ஒரு விஷயத்தைப் பார்க்க கேமராதான் எனக்குக் கத்துக்கொடுக்குது’’ எனத் தனது  க்ளிக் அனுபவங்கள் பற்றிச் சிலாகிக்கிறார் பரத்.

``அண்டர்வாட்டர் போட்டோகிராபி முன்னாடியே பிளான் பண்ணலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னால நடந்த நிகழ்வு அது. அனாமிகா - ராகேஷ் கல்யாணம் வி.ஜி.பி கோல்டன் பீச்ல நடந்தது. வாட்டர் தீம்பார்க் என்பதால் `தண்ணீருக்குள்ள போட்டோ எடுத்தா என்ன?’ன்னு மனசுக்குள்ள தோணுச்சு. என்கிட்ட தண்ணீருக்குள்ள போட்டோ எடுக்கிற கேமரா இருந்தாலும்கூட, அதுவே  என் முதல் அனுபவம்.

சாதாரணமாகவே, வெளியில்போகும் பெண்கள்  மழைவந்தாலே ரொம்பக் கஷ்டப்படுவாங்க. கல்யாணப் பொண்ணுன்னா கேட்கவே வேண்டாம். மேக்கப், பட்டுச்சேலை, தங்க நகைகள்னு போட்டுட்டு, வாட்டர் தீம்பார்க்ல குளோரின் கலந்த தண்ணீர்ல நனைஞ்சு போட்டோவுக்கு போஸ் கொடுக்கறது ஈஸியில்லை. கல்யாணப் பொண்ணு நிறைய சங்கடங்களை  அனுபவிக்கணும். தண்ணீருக்குள்ள மூச்சுப்பிடிச்சு  இருந்து போஸ் கொடுக்கணும். போட்டோ எடுக்கிறதுக்கு முன்னாடியே இதுபத்தி ரெண்டு பேர்கிட்டேயும் பேசினேன். அனாமிகா `எதுக்கும் ரெடி’ன்னு முன்வந்தாங்க. அந்தப் பெண்ணின் தைரியம்தான் அண்டர்வாட்டர் போட்டோகிராபியா வந்திருக்கு. ராகேஷும் என்னோட ஐடியாவை ஏத்துக்கிட்டார்.

தண்ணீருக்கடியில் தையத்தக்கா!

தண்ணிக்குள்ளே என்ன மாதிரியான போஸ் என்கிறதை முன்னாடியே முடிவு பண்ணிட்டோம். அப்புறம் டக்குன்னு தண்ணிக்குள்ள இறங்கி சில நொடிகள்ல போட்டோ எடுத்துட்டு மேல வந்தோம். வந்தபின் உடனடியா செக் பண்ணிட்டோம். அதனால ஒரு ஷாட்கூட வீணாகலை. நாங்க கற்பனை பண்ணினதைவிட போட்டோஸ் ஒவ்வொண்ணும் அவ்வளவு `ரிச்’சா வந்திருந்தது. என் கேமரால தண்ணீருக்குள்ள படம் மட்டும்தான் எடுக்க முடியும். அதில் வேற எந்த அட்வான்ஸ்டு டெக்னிக்கும் இல்ல. ஆனாலும், நானா சில விஷயங்களைப் முயற்சித்துப் பார்த்தேன். அந்த முயற்சிகளால் போட்டோக்கள் எதிர்பார்த்ததைவிட அழகா வந்திச்சு.

அந்தக் கல்யாணம் முடிஞ்சதும் வேற வேற வேலைகள்ல இறங்கிட்டேன். ஒவ்வொரு முறை திருமண ஜோடியை போட்டோஸ் எடுக்கும்போதும் புதுசா  ஒரு டச் இருக்கும்படி பார்த்துட்டேன். அதுதான் என்னைப் பற்றி பலரையும் பேச வெச்சது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஷான் - ரேகா ஜோடி தமிழ்நாட்டுப் பாரம்பர்ய அடையாளங்களோடு போட்டோ எடுக்க விரும்பினாங்க. கும்பகோணம், காரைக்குடி வீடுகள், சென்னை உள்பட பல இடங்கள்ல அந்த ஜோடிக்கு காஸ்ட்யூம்ஸ் ரெடி பண்ணி போட்டோ ஷூட் நடத்தினேன். அது ஒரு பிரீ வெட்டிங் போட்டோஷூட். ரொம்ப அழகா வந்திருந்தது.

இன்னிக்குக் கல்யாணப் பொண் ணுங்களோட எதிர்பார்ப்பு ரொம்பவே மாறியிருக்கு. அவங்களோட எதிர் பார்ப்பை ஈடுகொடுக்க புதுசா யோசிக்க வேண்டியிருக்கு. சவாலான விஷயங்களைப் செய்யும்போது அதில் ஒரு த்ரில், தில் ரெண்டும் வெளிப்படுது. சமீபகாலமா ஏரியல் போட்டோகிராபி ட்ரெண்ட்ல இருக்கு. கேண்டிட் போட்டோகிராபில புது விஷயங்களைச் சேர்த்துப் பண்றது எனக்கு ஹாபி... அவ்ளோதான்’’ என சிம்பிளாக முடித்தார் பரத் சத்தியமூர்த்தி.

ஸ்மைல்!