Published:Updated:

நான் மா.வள்ளலார் ஆனது எப்படி?

நான் மா.வள்ளலார் ஆனது எப்படி?

நான் மா.வள்ளலார் ஆனது எப்படி?

நான் மா.வள்ளலார் ஆனது எப்படி?

Published:Updated:
நான் மா.வள்ளலார் ஆனது எப்படி?
##~##

'வாடிய பயிரைக் கண்டு வாடிய’ வள்ளலாரைப்போலவே, வறண்ட பகுதிகள் வளம் பெறுவதற்காக இந்தியாவிலேயே முதல் முயற்சியாகக் குளங்களை இணைத்து வறட்சியை விரட்டியவர் திண்டுக்கல் கலெக்டர் வள்ளலார். குழந்தைகள் நலன் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் வள்ளலார், தன் வாழ்க்கை நதியின் தடத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

''எனக்குச் சொந்த ஊர் மதுரை. அப்பா, அம்மா இரண்டு பேருமே ஆசிரியர்கள். மிடில் கிளாஸ் குடும்பம். மாநகராட்சிப் பள்ளியில்தான் படிப்பு. சராசரி மாணவன். விளையாட்டு ஆர்வம் அதிகம். கராத்தே, கபடி, ஃபுட்பால்னு எல்லாம் விளையாடுவேன். ஒரு ஸ்போர்ட்ஸ்மேனா வரணும்கிறதுதான் என் ஆசை. பள்ளிப் படிப்பு முடிக்கிற வரை பெரிய நோக்கமோ, லட்சியமோ எதுவும் இல்லை.

நான் மா.வள்ளலார் ஆனது எப்படி?

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தேன். தமிழ் மீடியத்தில் படிச்ச நான், கல்லூரியில் எடுத்த பாடம் ஆங்கில இலக்கியம். நீந்தத் தெரியாதவன் கடலில் குதிச்ச கதை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தனித் திறனை வெளிக்கொண்டு வரும் அந்தக் கல்லூரியின் சூழலும், அங்கே இருந்த பேராசிரியர்கள் கொடுத்த பயிற்சியும் கடலில் நீந்தக் கற்றுக்கொடுத்தது.

அடிப்படையில் நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். விவசாயத்தில் ஏதாவது ஒரு சாதனை செய்யணும் அல்லது ஆபீஸ் வேலைக்குப் போகணும் என்பதுதான் எனது கனவாக இருந்தது. அந்தச் சமயத்தில், மதுரை உதவி (பயிற்சி) கலெக்டராக இருந்த விக்ரம் கபூரின் நட்பு கிடைச்சது. அந்த அறிமுகம்தான் என் வாழ்க்கையின் திசையைத் தீர்மானிச்சது. குரூப்-1 தேர்வு எழுதச் சொல்லி என்னை ஊக்கப்படுத் தியதோடு, நிறைய ஆலோசனைகளையும் வழங்கினார். குரூப்-1 தேர்வுக்கு என்னைத் தயார் செய்துட்டு இருந்த கால கட்டத்தில் புத்தகங்கள் மேல் ஆர்வம் அதிகமானது. குறிப்பாக, வரலாறு. வாசிப்பின் ருசியை அறிந்துகொண்ட பிறகு, நூலகங்களிலேயே வசிக்கத் தொடங்கினேன். விளைவு, 91-ம் ஆண்டு முதல் முயற்சியிலேயே குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று, பயிற்சி கலெக்டராக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணியில் சேர்ந்தேன். அந்த ஆண்டு வீசிய புயலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட தரங்கம்பாடி பகுதியில் நிவாரணப் பணிகளைச் சிறப்பாகச் செய்ததற்காக அரசின் பாராட்டு கிடைத்தது. அடுத்ததா, கள்ளக்குறிச்சியில் ஆர்.டி.ஓ-வாகவும், திருவண்ணாமலை யில் மாவட்ட வருவாய் அலுவலராகவும் வேலை செய்தேன். அப்புறம், சென்னை டிரேட் சென்டரின் இயக்குநராக இரண்டு ஆண்டுகள்.

அந்த காலகட்டங்களில் பணி நிமித்த மாகப் பல வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எந்த நாட்டுக்குச் சென்றாலும், அங்கே உள்ள சாலைகள், சுகாதார வசதி, கழிவு மேலாண்மை போன்ற விஷயங்களைப்பற்றி முழுமை யாகத் தெரிந்துகொள்வேன். 1,000 வருட வரலாறுகொண்ட மேலை நாட்டி னர் வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்டு, தங்களை மேம்படுத்திக்கொள்ளும் வேகம், 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாறுகொண்ட நம்மிடம் இல்லையே என்கிற ஆதங்கம் ஏற்படும்.

இப்போது, திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக இருக்கிறேன். அரசின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, அரசின் திட்டங்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டுசேர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வழக்கமான அரசுத் திட்டங்களைப் பயன்படுத்தி மக்களுக்குக் கூடுதல் பலன் கிடைக்கும் வகையில் சில புதுமையான திட்டங்களை, அரசின் ஆதரவோடுசெயல் படுத்தி வருகிறேன். உதாரணமாக, ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி, கூகுள் வரை படத்தின் உதவியுடனும், வருவாய் ஆவணங்களின் அடிப்படையிலும் தூர்ந்துபோன வாய்க்கால், குளங்களைக் கண்டறிந்து, வாய்க்கால்களைத் தூர்வாரி குளங்களுடன் இணைத்துள்ளோம். தற்போது பெய்த மழையில் அந்தக் குளங்கள் நிரம்பி இருக்கின்றன. அடுத்ததாக, சுகாதாரத் துறை மற்றும் பெங்களூரில் இருக்கும் தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து, துறுதுறுப்புடன் கூடிய கவனக் குறைவு (ADHD), கற்றலில் குறைபாடு, வளர்ச்சி குறைந்த குழந்தைகளைக் (ஆட்டிசம்) கண்டறிந்து அவர்களுக்கான சிறப்புப் பள்ளியைத் தொடங்கி இருக்கிறோம்.

வழக்கமான, குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பள்ளியாக இல்லாமல், பள்ளி இடைநின்ற குழந்தை களையும் இவர்களுடன் இணைத்து கற்றுக் கொடுக்கி றோம். இதன் மூலம் தனிமைப்படுத்துவது தவிர்க்கப் பட்டு, இயல்பான சூழலில் குறைபாடுள்ள குழந்தைகளும் கற்றுக்கொள்ள முடியும். அதேபோல பள்ளி மாணவர் களை மனோதத்துவ அடிப்படையில் அணுகி, அவர் களது மன அழுத்தத்தைப் போக்குவதற்காக, வேலூர் சி.எம்.சி-யுடன் இணைந்து 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம்.

இயற்கையில் இருந்துதான் நான் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்கிறேன். இயற்கையும் இலக்கியமும் நான் இளைப்பாறும் இடங்கள். இயற்கை மீது எனக்கு உள்ள தீராத காதலால் இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 5 லட்சம் மரக் கன்றுகளை மக்கள் பங்களிப்போடு நடவு செய்திருக்கிறேன். இன்னும் 10 லட்சம் கன்றுகளை நடுவதற்குத் திட்டம் உள்ளது. வழக்கமாக அனைவரும் செய்யும் அதே வேலையைச் செய்யாமல், அதில் ஏதாவது புதுமையைப் புகுத்த வேண்டும் என்ற உந்துதல்தான் மனதுக்கு உற்சாகத்தை அளித்துக்கொண்டே இருக்கும்.

எப்போதும் வாசித்துக்கொண்டே இருங்கள். வாசிப்பு, அறிவின் வாசலை மேலும் மேலும் அகலமாக்கும். வெற்றியைக் கை தட்டி அழைத்து வரும். பதவியை அடைவது பெரிதல்ல; பதவிக் காலத்தில், வாழ்க்கையால் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு, இயலாதவர்களுக்கு, சக மனிதர்களுக்கு என்ன செய்தோம் என்பதுதான் உங்களை வாழ்க்கையின் உயரத்துக்குக் கொண்டுசெல்லும்!''

படம் : வீ. சிவக்குமார்