Published:Updated:

உங்களிடம் உள்ளதா... தாகம்... வேகம்?

தடை தகர்க்க தடதட டிப்ஸ்!

உங்களிடம் உள்ளதா... தாகம்... வேகம்?

தடை தகர்க்க தடதட டிப்ஸ்!

Published:Updated:
##~##

'என் காலத்துல 30 வயசு வரைக்கும் நல்ல வேலைக்காகக் காத்திருந்தேன். அதுக்கு அப்புறம் வேலைக்குப் போய் சம்பாதிச்சு, கல்யாணம், குழந்தை, வீடுன்னு செட்டில் ஆக 40 வயசுக்கு மேல் ஆகிடுச்சு. ஆனா, என் பையனுக்கு இப்போ 25 வயசுதான். 23 வயசுலயே படிப்பு முடிச்சான். உடனே, கை நிறைய சம்பளத்துல வேலை கிடைச்சது. இப்ப கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டான். 28 வயசுல ஒரு குழந்தைக்கு அப்பா ஆகிடுவான். இந்தக் காலத்துப் பசங்க செம ஃபாஸ்ட்டுப்பா!’ - இப்படி ஒருவர்!

 'நானும் 30 வயசுலதான் வேலைக்குப் போனேன். அதுவரைக்கும் வெளி உலகமே தெரியாம, அப்பா, அம்மா பேச்சைக் கேட்டுட்டு நல்ல பையனா இருந்தேன். ஆனா, இப்ப என் பையனுக்கு 20 வயசுகூட ஆகலை. அதுக்குள்ள தண்ணி, சிகரெட், ஃப்ரெண்ட்ஸ்களோட ஆட்டம் பாட்டம். கண்டிச்சா, சண்டை போடுறான். இப்ப இருக்குற பசங்க ரொம்ப சீக்கிரமே கெட்டுப்போயிடுறாங்கப்பா!’ - இப்படியும் ஒருவர்!

உங்களிடம் உள்ளதா... தாகம்... வேகம்?

ஆக, இந்த இரு வீட்டு இளைஞர்களுக்கும் உள்ள ஒற்றுமை அவர்களின் வேகம் தான். ஆனால், அது ஒருவரை மேலே மேலே அழைத்துச் செல்ல... இன்னொருவரைக் கீழே தள்ளி இருக்கிறது!

''வேகம்... அதுதான் இன்றைய இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல; நம் நாட்டு வளர்ச்சிக்கும் காரணம்!'' என்கிறார் சுரேஷ்குமார். திருச்சி மண்டல வேலைவாய்ப்புத் துறையின் ஓய்வுபெற்ற இயக்குநர் இவர்.

'' 'எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு’
-என்கிறார் வள்ளுவர். நாம் எந்தத் தளத்தில் பயணிக்கிறோமோ, அந்தத் தளத்தின் வேகத்தில்தான் நாம் செல்ல வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் தொலைநோக்குப் பார்வையோடு எதிர்காலத்துக்காக அதிகம் சிந்திக் கின்றனர். இதனால், அவர்களின் துடிப்பும் வேகமும் அதிகமாகிறது. இந்தத் துடிப்பும் வேகமும் தான் அறிவியல் முதற்கொண்டு அனைத்துத் துறை களிலும் வளர்ச்சியை உண்டாக்கும் எரிபொருள். இன்றைய உலகில் எந்த ஒரு பயன்பாடும் குறுகிய காலகட்டத்தில் காலாவதியாகி, புதிய பயன்பாடு புழக்கத்துக்கும் வந்துவிடுகிறது. எனவே, வேகமாகச் சிந்திப்பதும் செயல்படுவதும் நமக்கு அவசியமான ஒன்றுதான். ஜப்பான் முன்னேறக் காரணம்,இளைஞர் கள் மட்டுமல்லாது எல்லா தரப்பு மக்களும் ஒன்றிணைந்து விவேகமாகச் சிந்தித்து வேகமாகச் செயல்பட்டதே. இன்று மாறும் உலகத்துக்கு ஏற்ப நம் வேகத்தை அதிகரிக்க வேண்டுமே தவிர, மாற்றத்தைத் தடுக்க முயற்சிக்கக் கூடாது!

உங்களிடம் உள்ளதா... தாகம்... வேகம்?

விவேகானந்தர், இந்தியாவை மாற்றிக்காட்ட அழைத்தது துடிப்பான, வேகம் மிக்க இளைஞர்களைத்தான். துடிப்பான இளைஞர்களால்தான் தாமும் முன்னேறி தம் நாட்டையும் முன்னேற்ற முடியும். சாதிக்க வேண்டிய வயதில் வேகம் காட்டாமல் இருந்தால், நாம் வாழ்ந்ததற்கான தடத்தை உருவாக்காமலே செல்லும் நிலை ஏற்படும். வேகமாகச் செயல்படும்போது சில எதிர்மறையான முடிவுகளைச் சந்தித்தாலும், அது நம் எதிர்காலத்துக்கு அனுபவமாக அமையுமே தவிர, நம் வாழ்க்கையைப் புரட்டிப் போடாது!'' என நம்பிக்கை தருகிறார் சுரேஷ்குமார்.

''இளமை வேகம்தான் இன்றைய இளைஞர்கள் தவறான வழிகளில் செல்லக் காரணம்'' என எச்சரிக்கிறார் மூத்த வழக்கறிஞரான ஜீவகுமார். ''இளமை என்பதே ஆற்றல்தான். அந்த ஆற்றலை எந்த அளவுக்கு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான், நம் முன்னேற்றம் அடங்கி உள்ளது. ஆனால், இன்றைய இளைஞர்கள் தங்களது சக்தியை அவசரகதியில் தவறான வழி களில் செலவிடுகின்றனர். எப்போதுமே நல்ல விஷயங்களைவிட மோசமான விஷயங்கள்வெகு விரைவாகப் பற்றிப் பரவும் தன்மைகொண்டவை.

அனுபவம் வாய்ந்த சச்சின் டெண்டுல்கர் எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் மக்களைத் தவறான வழிக்கு இழுக்கும் போதைப் பொருள் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார். ஆனால், அவரைக் காட்டிலும் இளைஞரான டோனியோ பணத்துக்காக அதை ஏற்றுக்கொண்டுவிட்டார். இன்றைய தலை முறையிடம் சம்பாதிக்கவும் புகழ் பெறவும் இருக்கும் வேகம், அவற்றை நல்ல வழியில் பெற வேண்டும் என்ற எண்ணத்தை உதாசீனப்படுத்துகிறது. நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களில் பெரும்பாலானவை இளைஞர்களால்தான் நிகழ்த்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்குக் காரணம் விவேகம் சிறிதும் இல்லாத வேகம்தான்! இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது நிதானமாக யோசித்து அறிவுபூர்வமாகச் சிந்தித்து முடிவெடுத்தால், அது நிச்சயம், நம்மை நல்ல பாதைக்கு அழைத்துச் செல்லும்!

இளமையில் வேகம் என்பது தவிர்க்க முடியாதது. அந்த உத்வேகம் இல்லாமல் முன்னேறவே முடியாது என்பதும் உண்மைதான். ஆனால், கட்டுப்பாடு இல்லாத வேகம் நிச்சயம் கவிழ்த்துவிடுமே தவிர, கரை சேர்க்காது. வேகத்துடன் விவேகமும் இணைந்தால், வெற்றி தானாகத் தேடி வரும்.

உங்களிடம் உள்ளதா... தாகம்... வேகம்?

சச்சின் டெண்டுல்கர், விஸ்வநாதன் ஆனந்த், சாய்னா நெஹ்வால், நரேன் கார்த்திகேயன், சானியா மிர்சா ஆகியோர் இளம் வயதிலேயே சாதிக்கக் காரணமாக இருந்தது, அவர்களின் துடிப்பும் வேகமும்தான்! இன்று செய்தித்தாள்களைப் புரட்டினால், குற்றவாளிகளாக இறுகிய முகத்துடன் புகைப்படங்களில் இளைஞர்கள் காணக் கிடைப்பதற்குக் காரணம், அவர்களின் துடிப்பும் வேகமும்தான். ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தில் வேகமாகவே நோயை வரவழைத்துக்கொள்வதும், வாகனங்களை இயக்குவதில் வேகம் காட்டி வாழ்க்கையை முடித்துக்கொள்வதும் ஏன்?'' கேள்வியுடன் முடிக்கிறார் ஜீவகுமார்.

'' 'எனர்ஜெடிக்’ என்றாலே இளைஞர்கள்தான். அப்படிப்பட்ட இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் காட்டக்கூடிய வேகத்தைப் பொறுத்துத்தான் ஒரு தேசத்தின் தலையெழுத்தே தீர்மானிக்கப்படுகிறது!'' என்று புன்முறுவலுடன் தொடங்குகிறார் சமூக அறிவியல் கல்லூரிப் பேராசிரியர், முனைவர் பிரேமலதா.

''இளைஞர்கள் தங்களுடையவேகத் தைச் சரியான வழியில் செலுத்து வதும், செலுத்தாமல் போவதும், அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்களின் அரவணைப்பில்தான் உள்ளது. இவர்களுடைய அரவணைப்பும், பக்குவப்படுத்தும் முறையும் எந்த அளவில் உள்ளதோ, அந்த அளவில்தான் இளைஞர்களும் வேகத்துடன் செயல்படுவார்கள்.

இன்றைக்கு ஒரு மேலோட்டமான கற்பனை உலகில் பயணிக்கக்கூடிய இளைஞர்கள்தான் அதிகமாக உள்ள னர். மற்றவர்கள் மத்தியில் தன்னை பெரிய ஹீரோவாகக் காட்ட வேண்டும் என்பதற்காகவே தங்களுடைய வேகங் களைக் காட்டுகின்றனர். இத்தகைய செயல்பாடானது ஒரு குறிக்கோள் இல்லாமலே போய் விடுகின்றது!'' என்று நல்வழிப்பட சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் பிரேமலதா.

வேகம்... இந்த வேகம்தான் நமது அனைத்துத் தாகத்தையும் தணிக்கிறது. இதற்கெல்லாம் வேகமாகச் செயல்பட வேண்டும், இங்கெல்லாம் நிதானிக்க வேண்டும் என்று பட்டியல் போட்டு உங்களுக்கு யாரும் சொல்லித்தர மாட்டார்கள். காரணம், காலம் வேகமாக ஓடுகிறது. 'இளைப்பாறும்போதே ஓடுவதற் குத் தயார்படுத்திக்கொள்’ என்பார்கள்.

ஒரு வேலையை முடித்துவிட்டு நீங்கள் ஓய்வில் இருக்கும்போதே, அடுத்த வேலையைத் திட்டமிடுங்கள். வேகம் வெற்றியைத் தரும்.

தேனீயும் வேகமாக இருக்கிறது. கொசுவும் வேகமாக இருக்கிறது. ஆனால், இரண்டின் வேகத் துக்கும் வித்தியாசம் இருக்கிறதே!

வேகம் பழகுவது எப்படி?

  

உங்களிடம் உள்ளதா... தாகம்... வேகம்?

ங்களை ரெஃப்ரஷ் செய்து கொள்ள வாரத்தில் ஒருநாள் உங்கள் உடல் இயந்திரத்துக்கு முழு விடுமுறை அளியுங்கள்!

 

 பரபரப்பான நேரங்களில் உங்கள் மூளையைக் காயவிடாமல், அடுத்த வேலைக்கான முயற்சியில் பயணிக்கத் தொடங்குங்கள்!

 

டார்கெட் என்ற வார்த்தையை சீரியஸான விஷயமாக எடுத்துக் கொள்ளாமல், ஸ்போர்ட்டிவ்வாக அணுகுங்கள்!

  

வேலைக்கு நடுவே சிறிது நேரம் இசை, புத்தகம் போன்ற விஷயத்தில் நாட்டம் செலுத்துங்கள். சமூக வலைதள விரும்பியாக இருந்தால் 10 அல்லது 15 நிமிடம் அதில் ரிலாக்ஸ் செய்யுங்கள்!

 

இன்று முடியாத ஒரு வேலையை, நாளை முதல் வேலையாகக்கொண்டு முடியுங்கள்!

 

அவசரத்துக்கும் வேகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து செயல் படுங்கள்!

 முறையற்ற வேகம்...
என்னென்ன பாதிப்புகள்?

 எப்போதும் பரபரப்போடு திரிந்தால், அதீத கவனம் தேவைப்படாத சின்ன வேலையிலும் அதே பரபரப்பைச் செலுத்துவீர்கள். அது தேவைஇல்லை!

 ஏதாவது தடங்கல் ஏற்பட்டால், அதில் அப்படியே தயங்கி நின்றுவிடுவீர்கள். சோர்ந்து விழும் அந்த மனநிலையில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்!

 நாள் முழுவதும் உழைக்கும் நீங்கள் நாள் இறுதியில் திருப்தி இல்லாமல் தூங்கச் செல்வீர்கள்!

 நிம்மதி என்ன விலை என்பதைத் தேடி அலையும் நபராக அடையாளப்படுத்தப் படுவீர்கள்!

 முறையற்ற வேகம் சங்கிலித் தொடர் போல உங்கள் எல்லா காரியங்களையும் கெடுத்து விடும். படபடப்பு அதிகமாகும். அந்தப் படபடப்பு எப்போதும் தொடர்ந்தால் 'ஹார்ட் அட்டாக்’ போன்ற ஆபத்துகள் விளையலாம். உஷார்!

 ''செயல் வேகம்தான் பெஸ்ட்!''    

உங்களிடம் உள்ளதா... தாகம்... வேகம்?

''வேகமாக முன்னேற வேண்டும் என நினைப்பது தவறு கிடையாது. ஆனால், அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் GSM SOFT ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தின் இயக்குநர் ஹிமாச்சலன். ''படித்து முடித்து வேலைக்காக நிறுவனங்களில் ஏறி இறங்கிய காலம் போய், படிப்பை முடிக்கும் முன்பே வேலை நம்மைத் தேடி வரும் நிலை வந்திருக்கிறது. நிறுவனங்கள் எதிர்பார்ப்பது துடிப்புமிக்க, கொடுக் கும் பணியைச் சிறப்பாகவும் வேகமாகவும் செய்து முடிக்கும் திறன்கொண்டவர்களைத்தான். ஆனால், வேலையில் சேரவும் சம்பாதிக்கவும் துடிக்கும் இன்றைய இளைஞர்கள் அதற்காகத் தம்மைத் தயார்படுத்திக்கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவது இல்லை. இது வேலைக்குச் செல்வோர் மட்டுமின்றி, சுய தொழில் தொடங்குபவர்களுக்கும் பொருந்தும்.

வேகம் என்பது செயல்படுவதில் இருக்க வேண்டுமே தவிர, முடிவெடுக்கும்போது இருக்கக் கூடாது. அவ்வாறு அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் தோல்விகளையே தரும். எங்களிடம் வரும் இளைஞர்களில் பாதிப் பேர் துடிப்புடனும் வேகத் துடனும் வருகின்றனர். அவர்கள் தங்கள் எதிர்காலத் தைச் சிறப்பாக அமைத்துக்கொள்கிறார்கள். ஆனால், மீதம் உள்ளவர்கள் அப்படி இல்லை. அவர்கள் விரும்பும் துறைக்கு ஏற்ப வேகத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். துடிப்பும் வேகமும் இல்லாத மந்தமான ஓர் இளைஞரால் எந்தப் பணிக்குமே செல்ல முடியாது. நேர நிர்வாகத்தை நாம் சரியாக முறைப்படுத்தினால், வேகம் தானாகவே கூடும். வேகத்தை விரும்பும் இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம் அதுதான்!''

ந.வினோத்குமார், க.ராஜீவ் காந்தி, ச.ஸ்ரீராம், பூ.ஜெயராமன், படம் : பா.காளிமுத்து