Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

வாசகிகள் பக்கம் ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன !

வாசகிகள் பக்கம் ஓவியங்கள்: சேகர்

Published:Updated:

 ஒவ்வொன்றுக்கும் பரிசு:150

மோசமான அனுபவம்... நல்ல பாடம்!

அனுபவங்கள் பேசுகின்றன !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

நானும் எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணும், ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்னைக்குச் சென்றிருந்தோம். திருமணம் முடிந்ததும் ஊர் சுற்றியபோது... பொம்மை, வளையல், அலங்காரப் பொருட்கள் என வாங்கிக் குவித்தார் அந்தப் பெண். ''இதெல்லாம்தான் நம்ம ஊர்லயே கிடைக்குது. அப்புறம் ஏன்..?'' என்றேன். ஆனாலும் அவர் கேட்கவில்லை. ஒரு வழியாக பேருந்து நிலையத்துக்கு வந்தால், எங்கள் ஊர் வழியாகச் செல்லும் தொலைதூர விரைவுப் பேருந்து மட்டுமே நின்றிருந்தது. அது அரை மணி நேரம் கழித்துதான் கிளம்பும் என்றனர். ''சரி வாங்க... ஏதாச்சும் சாப்பிட்டு வந்து, இதுலேயே கிளம்பலாம்'' என்று நான் அழைக்க, அவர் தயங்கினார். ''இல்ல... சாதா பஸ் டிக்கெட்டுக்கு மட்டும் பணத்தை எடுத்து வெச்சுட்டு, மிச்ச காசுக்கு எல்லாம் ஷாப்பிங் பண்ணிட்டேன். நீங்க இந்த பஸ்ல போங்க. நான் சாதா பஸ்ல பின்னாடி வர்றேன்'' என்று பாவமாகச் சொன்னார். பிறகு... நானே சிற்றுண்டி சாப்பிட வைத்து, விரைவு பஸ்ஸுக்கான கூடுதல் கட்டணத்தையும் கொடுத்து அழைத்து வந்தேன். ஊர் வந்து சேர்ந்ததும் பேக்கை திறந்து பார்த்தால், அவர் ஷாப்பிங் செய்த பல பொருட்கள் பயணத்தில் உடைந்து வேறு போயிருந்தன.

''மோசமான அனுபவம்... ஆனால், நல்ல பாடம்!’ என்று பெருமூச்சுடன் சொன்னபடியே வீட்டுக்குப் போனார் அந்தப் பெண்!

- எம்.சுந்தரம்மாள், திருப்பத்தூர்

ஸ்டிக்கர் பொட்டிலும் அலர்ஜி!

அனுபவங்கள் பேசுகின்றன !

என் உறவுப் பெண் திருமணத்துக்கு சென்றிருந்தேன். மணப்பெண்ணுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. பியூட்டிஷியன் கொண்டு வந்திருந்த ஸ்டிக்கர் பொட்டு எதுவும் பெண்ணுக்குப் பிடிக்காமல் போக, மணமகள் அறையில் இருந்த வார்ட்ரோப் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஒரு பொட்டு அழகாக இருக்க, அதையே எடுத்து வைத்துக் கொண்டாள் மணப்பெண். ஆனால், மணநாள் அன்று மதியமே அவளுக்கு நெற்றியில் எரிச்சலும், அரிப்புமாக அவதிப்பட... யாரோ பயன்படுத்திய பொட்டை தான் எடுத்து வைத்துக் கொண்டதன் விளைவுதான் என்பதை தாமதமாக உணர்ந்தவள், உடனடியாக அந்தப் பொட்டை எடுத்துவிட்டு, வேறு பொட்டு வைத்துக் கொண்டாள். இருந்தாலும், மறுநாள் டாக்டரிடம் செல்லும் அளவுக்கு அவளுக்கு அலர்ஜி ஏற்பட்டிருந்தது... அதிர்ச்சிதான்!

அடுத்தவரின் சீப்பு, பிரஷ், துண்டு போல, ஸ்டிக்கர் பொட்டிலும் ஒவ்வாமை வரலாம்... உஷார்!

- கி.மஞ்சுளா, கரூர்

கூரியரில் பார்சலா... உஷார்!

அனுபவங்கள் பேசுகின்றன !

சமீபத்தில் எனக்கு வெளிமாநிலத்திலிருந்து கூரியர் மூலம் மூன்று பார்சல்கள் வந்திருந்தன. கூரியர் சர்வீஸ் ஊழியரிடம் பார்சல்களைப் பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி கையெழுத்திட்டு, அவரை அனுப்பிவிட்டு பார்சல்களைப் பிரித்தேன். இரண்டு பார்சல்களில் பொருட்கள் சரியாக இருந்தன. மூன்றாவது பார்சலைத் திறந்தபோது, காலியாக இருந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட கூரியர் கம்பெனிக்கு போன் செய்து விவரம் சொன்னபோது, ''பார்சல்களைப் பெற்றுக் கொண்டேன் என்று கையெழுத்திட்ட பின், பார்சலில் பொருட்கள் இல்லை என்று நீங்கள் சொல்வதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது'' என்றனர் அலட்டிக் கொள்ளாமல்.

இனி, எந்தப் பார்சல் வந்தாலும்... பிரித்துப் பார்த்த பின்னரே கையெழுத்திடவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்!

- பி.சாந்தி, மதுரை

துப்பட்டா துன்பம்!

அனுபவங்கள் பேசுகின்றன !

எங்கள் தெருவில் வசிக்கும் பெண், தன் இரண்டு குழந்தைகளையும் தினமும் டூ-வீலரில் பள்ளிக்கு அழைத்துச் செல்வார். துப்பட்டாவை எப்போதும் கழுத்தைச் சுற்றியே அணிந்துகொள்வது, அவரின் வழக்கம். சமீபத்தில் அப்படி டூ-வீலரில் சென்றபோது, துப்பட்டாவின் ஒரு முனை வண்டிச் சக்கரத்தில் மாட்டிக்கொள்ள, அது இவரின் கழுத்தை இறுக்க, நிலை தடுமாறி குழந்தைகளுடன் கீழே விழுந்துவிட்டார். துப்பட்டா இறுக்கியதில், கழுத்தெல்லாம் ரத்தக் காயம். 'அது குரல்வளையை நெறுக்கியிருந்தால்... என்ன ஆகியிருக்கும்? எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து அவர் தப்பித்திருக்கிறார்' என்பதை நினைக்கும்போதே பதைபதைப்பாக இருந்தது.

டூ-வீலரில் செல்லும் பெண்கள் துப்பட்டா, முந்தானை விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பது பலமுறை பலவகைகளில் வலியுறுத்தப்பட்டாலும், சிலரின் கவனக்குறைவால் இதுபோன்ற விபரீதங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொள்வதைவிட, துப்பட்டாவை இருபுறமாகப் போட்டு, பின்னால் ஒரு முடிச்சுப் போட்டுக்கொள்வது பாதுகாப்பானது!

- வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism