சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சமத்துவமே சங்கீதத்தின் அழகு!

சமத்துவமே சங்கீதத்தின் அழகு!
பிரீமியம் ஸ்டோரி
News
சமத்துவமே சங்கீதத்தின் அழகு!

கீதா

கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெகு விமர்சையாக கொண்டாடப்படும் விழா நவராத்திரி. விழாவின் நாயகி தேவி, ஒரு பெண். ஆனால், கோயிலிலும் அரண்மனை வளாகத்திலும் ஏன் அரண்மனையின் வெளியில் உள்ள மண்டபத்திலும் கூட, நவராத்திரி விழாவின் போது, பெண்களைப் பார்க்கவே முடியாது. வெகு தொலைவில் இருந்து கொண்டு இசைக் கச்சேரியைக் கேட்டு ரசிக்கலாம். அவ்வளவுதான்!

‘தேவி ஒரு பெண். அவளுக்கு நடக்கும் விழாவில் பெண்கள் ஏன் கலந்து கொள்வதில்லை?’ என்ற கேள்வி, சாஸ்திரிய இசையை முறையாகக் கற்க ஆரம்பித்திருந்த, அந்த 16 வயது சிறுவனுக்குத் தோன்றியது. இந்த முறையை மாற்றியே தீர வேண்டும் என்று தீர்மானித்தபோது, தன்னுடைய ராஜ குடும்பத்திலும் சரி, வெளியிலிருந்தும் சரி, அந்த இளைஞனுக்கு ஒருவர்கூட ஆதரவு தரவில்லை. தேவிக்காக நடக்கும் விழாவில், பெண்கள் கலந்து கொண்டே ஆக வேண்டும்; பெண் இசைக் கலைஞர்கள் பாட வேண்டும் என்று தொடர்ந்து 22 ஆண்டுகள் போராடினார். கடந்த 2006–ம் ஆண்டு முதல், 300 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த சம்பிரதாயத்தை மாற்றி, பெண்கள் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் வசிக்கும் கர்நாடக இசை ஆசிரியை ‘பாரசால’ பொன்னம்மாள் என்ற 86 வயது பாடகியை நவராத்திரி விழாவில் பாட வைத்தார்.

சமத்துவமே சங்கீதத்தின் அழகு!

அவர்... திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் புகழ் பெற்ற மன்னரான, சுவாதித் திருநாள் ராம வர்மாவின் வழியில் வந்த பிரபல வீணை மற்றும் கர்நாடக இசைப் பாடகர், அஸ்வதி திருநாள் ராம வர்மா. 

“எனக்கு இந்த ராஜ வம்சம் என்ற உணர்வெல்லாம் இல்லை. என்னை நான் எப்போதும் ஒரு பாடகனாகவே உணர்கிறேன்.  வாய்ப்பாட்டோடு சேர்த்து வீணையும் கற்றுக் கொண்டேன். என் முதல் குரு காலமான பின், ஒரு வெறுமை உணர்வு இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமாக இருந்தது. பல்வேறு இடங்களில் குருவைத் தேடி இறுதியில் பாலமுரளி கிருஷ்ணா சாரிடம் சேர்ந்து, 18 ஆண்டுகள் இசை கற்றேன். கடந்த 2000–ம் ஆண்டிலிருந்து, மன்னர் சுவாதித் திருநாள் வசித்த, ‘குதிர மாளிகா’ அரண்மனையில், ( ‘மாளிகை முழுவதும் குதிரை சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கும்’),’சுவாதி சங்கீத உற்சவம்’ என்ற இசை விழாவை நடத்துகிறேன். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 4 முதல் 13–ம் தேதி வரை 10 நாட்கள் இந்த இசை விழா நடக்கும்.

நவராத்திரி விழாவில், இந்துக்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். பெண்கள் புடவை உடுத்த வேண்டும். பெண் குழந்தைகள் பாவாடை அணிய வேண்டும், ஆண்கள், வேட்டி கட்ட வேண்டும், மேல் சட்டை போடக் கூடாது...இப்படி, அடிப்படையான சில சம்பிரதாயங்கள், இன்றும் நடைமுறையில் உள்ளன. ஆனால், நான் நடத்தும் இசை விழாவில், எந்தக் கட்டுப்பாடும் இல்லை. உங்களுக்கு எந்த உடை வசதியோ அதை உடுத்தலாம். எந்தப் பாகுபாடும் இல்லாமல், யார் வேண்டுமானாலும் விழாவுக்கு வரலாம். ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு இசை ரசிகர்கள் வருகிறார்கள்.

இசை...பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவான விஷயம். கறுப்பு, சிவப்பு, இந்து, முஸ்லீம், கிறித்துவர், பிராமணர், பிராமணர் அல்லாதார் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவர்க்கும் பொதுவானது. ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுமே இசை சொந்தம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த விழாவில், ஹிந்துஸ்தானி பாடகர் உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் பாடுகிறார். பத்மநாப சுவாமி, சுவாதித் திருநாள் மகாராஜா இருவரின் படங்களுக்கும் முன் விளக்கேற்றி வைத்து, வணங்கிவிட்டு பாட ஆரம்பிப்பார். ஒரு முஸ்லீம் பாடகரான அவருக்கு இதில் எந்தத் தயக்கமோ சங்கடமோ இல்லை.

சமத்துவமே சங்கீதத்தின் அழகு!

இந்த விழாவில் பாடுவதற்காக, நானே ஒவ்வொரு பாடகரையும் நேரில் சென்று அழைக்கிறேன். தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை மூன்று மணி நேரம் கச்சேரி. பிரபலமானவர்களுக்கு ஒரு நேரம், மற்றவர்களுக்கு வேறு டைம் என்பதெல்லாம் இல்லை. என் குருநாதர் பாலமுரளி கிருஷ்ணா பாடினாலும்  சரி, வளர்ந்து வரும் ஒரு பாடகர் பாடினாலும் சரி, எல்லோருக்கும் ஒரே நேரம் தான். கச்சேரியில், மகாராஜா சுவாதித் திருநாள் கீர்த்தனைகளையும் பாட வேண்டும் என்பது மட்டும்தான் ஒரே நிபந்தனை.

நான் கலைஞர்களிடம் வேண்டுகோள் வைப்பது, ‘இதுவரை பாடாத புது கீர்த்தனைகளைப் பாடுங்கள்’ என்பது. அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. 10 நாட்கள் நடக்கும் இசை விழாவில், 60, 65 சதவீதம் புதுப் பாடல்கள் பாடுகிறார்கள். இசை விழா முழுவதையும் வீடியோ எடுத்து, ‘யூ ட்யூப்’பில் வெளியிடுகிறேன். ‘குதிர மாளிகா’ அல்லது ‘சுவாதி சங்கீத உற்சவம்’ என்ற பெயரில் பார்க்கலாம்.

இசையால் மயங்காத மனிதர்கள் இல்லை. ஒருவர் என்ன சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், என்ன மொழி பேசுபவராக இருந்தாலும், எந்த தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இசை அவர்களை வசப்படுத்திவிடும். எல்லோருக்கும் பிடித்த இசையை ஏன் சிலருக்கு மட்டும் சொந்தமாக்க வேண்டும். சங்கீததிலும் சமத்துவம் வேண்டும்” என்கிறார் அஸ்வதி திருநாள் ராம வர்மா.

‘சரிகம’ சொல்பவர் சொல்வது சரிதான்!