Published:Updated:

`உனக்குள் இருக்கும் நம்பிக்கையைப் படகாக்கு... கடல் துச்சமாகும்!' - தன்னம்பிக்கைக் கதை #MotivationStory

உனக்குள் இருக்கும் நம்பிக்கையைப் படகாக்கு. அதில் மன உறுதியோடு பயணம் செய். உலகம் முழுமையையும் நனைக்கும் பெருமழை பெய்தாலும் நீ நனையாமலிருக்க விரும்பினால் உனக்குத் தேவை என்னவோ ஒரு சிறுகுடைதான். பிரச்னையின் அளவைக் கண்டு பயப்படாதே. உன்னிடம் இருக்கும் சிறு திறன்கொண்டு முயற்சி செய்துகொண்டேயிரு. வெற்றியடைந்துவிடுவாய்"

`உனக்குள் இருக்கும் நம்பிக்கையைப் படகாக்கு... கடல் துச்சமாகும்!' - தன்னம்பிக்கைக் கதை #MotivationStory
`உனக்குள் இருக்கும் நம்பிக்கையைப் படகாக்கு... கடல் துச்சமாகும்!' - தன்னம்பிக்கைக் கதை #MotivationStory

நீண்ட நேரமாகத் தன்முன்னால் மௌனமாய் அமர்ந்திருந்த அந்த மனிதனை அந்த ஞானி பார்த்துக்கொண்டேயிருந்தார். பயத்தில் அவன் மனம் பருந்தைக் கண்டு படபடக்கும் கோழிக்குஞ்சைப் போல நடுங்கிக்கொண்டிருந்தது.  

என்ன ஆனது நண்பா... ஏன் இப்படி இருக்கிறாய்?" 

பயம். அதுதான் அவன் பிரச்னை. வாழ்க்கையைக் கண்டு மிரண்டு திகைக்கச்செய்யும் பயம்.   
அந்த மனிதர் அவன் தோள்களைப் பற்றி ஆறுதல்படுத்தினார். ஒரு தொடுதலில் தொலைகிற பயம் இல்லை அவனுடையது. அவன் மெள்ள அந்த ஞானியின் கண்களை ஏறெடுத்தான். பதற்றமற்ற குளிர்ந்த கண்கள் அவருடையவை. அவன் அப்படியில்லை. மனதின் பயத்தை விழிகளில் மொழிபெயர்த்தான்.

இதற்குமுன் அவன் செய்த வேலை அப்படி. முதல் நாள் வேலைக்குச் சேர்ந்தபோது அவனுக்கு வகுப்பெடுத்த மனிதர் `இந்த உலகத்தில் வலியதுதான் வாழும்' என்று பாடம் எடுத்திருக்கிறார். `எதிலும் முதலாவதாக இருந்தாலே ஒழிய ஜெயிக்க முடியாது' என்று வேறு சொல்லியிருக்கிறார். எல்லோரும் எப்படி முதலாவதாக இருப்பது? முதலாமிடம் என்பது பன்மையில்லையே... இதைக் கேட்க நினைத்தான். ஆனால் கேட்கவில்லை, காரணம் பயம். பள்ளியில், கல்லூரியில், வீட்டில் பேச, கேட்க நினைத்துக் கேட்காமல் அடங்கிவிடும் அதே பயம்.

அதன் பின் அவனுக்கு எல்லாவற்றின் மீதும் பயம் ஏற்பட்டது. பயம் அவனை இயங்கவிடாமல் செய்தது. சிறிய வேலைகளைக்கூட அவன் பிழையோடு செய்தான். அதன் பலன் அவன் விரைவிலேயே வேலையை விட்டு அனுப்பப் பட்டான்.

அப்போதுதான் வேர்பிடித்திருக்கும் குடும்பம் அவனுடையது. நல்ல மனைவி... சிறு சிறு குழந்தைகள். வீட்டில் சின்னச் சின்ன சந்தோஷங்கள். எல்லாம் இவனது வேலை சார்ந்தும் அதிலிருந்து கிடைக்கும் வருவாய் சார்ந்தும் இருப்பவை. எல்லாம் திடீரென்று சூனியமாகிவிட்டதைப் போன்ற உணர்வு. புதிய வேலைதேடும் படலமும் தோல்வியில் முடிய என்ன செய்வது என்று அறியாமல் வீட்டுக்கும் போகாமல் திக்குத் தெரியாத காட்டில் தொலைந்துபோனவனாக நிற்கிறான்.

``சரி, நண்பா. கொஞ்சம் நாம் காலாற நடக்கலாமா..."

அவனுக்கும் அது தேவைதான் என்று தோன்றியது. சில நிமிட நடையில் குளிர்ந்த காற்று அவர்களைத் தழுவியது. அவர் ஒரு கணம் கண்மூடி குளிர்காற்றின் தழுவலை ரசித்தார். ஆனால் அவனோ படபடப்புடனே நடந்துவந்தான். இன்னும் சில அடிகள் நடந்தால் கடல் நீரில் கால்களை நனைக்கலாம். அவர் அப்படியே மணல் வெளியில் அமர்ந்தார்.

``நண்பா, பார் எவ்வளவு பெரிய கடல்"

அவர் சொன்னதும் தான் அவனுக்குக் கடலைப் பார்க்கவேண்டும் என்றே தோன்றியது. பார்த்தான். 

``ஆம், மிகப்பெரிய கடல்தான்"

``அதன் கரை தெரிகிறதா..."

``இல்லையே. கண்ணுக்கு எட்டியவரைத் தண்ணீர்தான்"

``நண்பா, இந்தக் கடலில் அலைகள் அதிகம். நீந்தவே முடியாது"

``சரிதான்"

``நடுக்கடலில் சுறாக்கள் உள்ளன. எப்போதும் சின்ன மீன்களையே தின்றுகொண்டிருக்கும் அவற்றுக்கு மனிதர்களின் உடல் பெரும் விருந்து இல்லையா..."

``ஆமாம், சரியாகச் சொன்னீர்கள். எவ்வளவு பெரிய நீச்சல்காரன் ஆனாலும் சுறாவிடம் தப்புவது சிரமம்தான்"

``அப்படியானால் இந்தக் கடலைக் கடக்கவே முடியாதா நண்பா... மறுகரைக்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்றால் எப்படித்தான் போவது"

அவன் ஞானியைப் பார்த்தான். இவரிடம் பேசினால் நம் துன்பம் தீரும் என்று வந்தால் இவர் நம்மிடம் இப்படிக் கேட்கிறாரே என்று நினைத்தான் 

``அய்யா, கடலைக்  கடக்க வேண்டும் என்றால் நீந்தித்தான் போகவேண்டுமா என்ன? ஒரு கப்பலில் போனால் போயிற்று. "

``கப்பல் கிடைக்கவில்லை என்றால்..."

``அதுவும் சரிதான். ஒரு படகு கிடைத்தால் கூடத் தப்பிவிடலாம்"

``அப்படியா... அப்படியானால் அந்தப் படகு எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும்"

அட, இவர் ஏன் இப்படிக் கேட்கிறார்?  

``சிறியதா பெரியதா என்பதல்ல முக்கியம், அது படகாக இருந்தால் போதுமானது"

``அட்டகாசம் நண்பா, நீ மிகச்சரியாகச் சொல்லிவிட்டாய். இந்தக் கடலின் மேல் மிதக்கத் துணிச்சல் இருப்பவர்கள் சிறு கட்டைகளைப் பற்றிக்கொண்டுகூடக் கரையேறிவிடுவார்கள். நீந்தும் துணிச்சல் இருப்பவர்கள் நீந்திக் கடக்கிறார்கள். பெரும் செல்வத்தின் துணைகொண்டவர்கள் சொகுசாகக் கப்பலில் மிதக்கிறார்கள். இந்தப் பெரிய கடலைக் கடக்க இந்தக் கடல் அளவு பெரிய கப்பல் வேண்டும் என்று இல்லை. ஒரு சிறுபடகு இருந்தால் கூடப் போதும் கடந்துவிடலாம். அப்படித்தான் வாழ்க்கையும்"
`இந்த வாழ்க்கை கடல் என்பது சரிதான். ஆனால் நான் யார்? நீந்தத் தெரியாதவன். கட்டைகளைப் பற்றிக்கொண்டு மிதந்தால் சுறாக்கள் தின்றுவிடும். கப்பலில் போக வழியில்லை. அப்படியானால் சிறுபடகுதான் துணை. என் வாழ்வில் எது படகு? என்னிடம் படகு இருக்கிறதா?' என்றெல்லாம் அவன் தன்னுள் எண்ணிக்கொண்டான்.

``நண்பா, நமக்கு எப்போதும் நம் எதிரே இருப்பவற்றைப் பற்றிய கவலையும் பயமும் இருக்கிறதே தவிர நம்மிடம் இருப்பவை பற்றிய விழிப்பு உணர்வு இருப்பதில்லை. உன்னிடமும் ஒரு படகு உண்டு. அதை நீ பயன்படுத்துவது இல்லையா..."
அவன் மௌனமாக இருந்தான். தனக்குள் என்ன இருக்கிறது என்று யோசிக்கலானான். 

``நண்பா, கடல் ஆழமானது. சுறாக்கள் இருக்கின்றன. ஏன் அடிக்கடி புயலும் சுனாமியும் கூட அடிக்கும். ஆனால் அதற்கெல்லாம் பயப்படுபவன் கடலில் பிரவேசிக்கவே முடியாது. கரையைவிட்டு அகலும்போதே பயத்தையும் விட்டுவிட்டுத்தான் கடலுள் பிரவேசிக்கவேண்டும். அவன் தன் வசம் வைத்திருக்க வேண்டியது ஓர் உறுதியான மிதவையையும் அதன் மேலான நம்பிக்கையையும் மட்டுமே. அதே போல்தான் நண்பா, வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் முதலில் நீ செய்யவேண்டியது ஒன்றுதான். அது உன் பயத்தைக் கைவிட வேண்டியது. பயம்தான் உன்னைப் பயணிக்கவிடாமல் தடுக்கிறது. அதை விடு. உனக்குள் இருக்கும் நம்பிக்கையைப் படகாக்கு. அதில் மன உறுதியோடு பயணம் செய். உலகம் முழுமையையும் நனைக்கும் பெருமழை பெய்தாலும் நீ நனையாமலிருக்க விரும்பினால் உனக்குத் தேவை என்னவோ ஒரு சிறுகுடைதான். பிரச்னையின் அளவைக் கண்டு பயப்படாதே. உன்னிடம் இருக்கும் சிறு திறன்கொண்டு முயற்சி செய்துகொண்டேயிரு. வெற்றியடைந்துவிடுவாய்"

அவன் ஞானியைப் பார்த்தான். அவர் காற்றின் தொடுதலில் சுகித்திருந்தார்.

அவனுக்கும் இப்போது காற்றின் தொடுதல் சுகமாக இருந்தது.