Published:Updated:

எழுத்துகளுக்கு புது வடிவம்... டிரெண்டாகும் தமிழ் டைப்போகிராபி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எழுத்துகளுக்கு புது வடிவம்... டிரெண்டாகும் தமிழ் டைப்போகிராபி!
எழுத்துகளுக்கு புது வடிவம்... டிரெண்டாகும் தமிழ் டைப்போகிராபி!

எழுத்துகளுக்கு புது வடிவம்... டிரெண்டாகும் தமிழ் டைப்போகிராபி!

டைப்போகிராஃபி. இந்த வார்த்தையை நீங்கள் கேட்டதுண்டா. தமிழில் இது `எழுத்து வடிவம்’ எனப்படும். நாம் தினம்தினம் பார்க்கும் கடைகளின் பெயர்ப்பலகைகள், சினிமா போஸ்டர்கள், சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் போஸ்டர் டிசைன்கள், கட்சிப் பேனர்கள், விளம்பரங்கள் என இவற்றில் வரும் எழுத்துகள் அனைத்துமே டைப்போகிராஃபியைச் சார்ந்தவைதான். 

டைப்போகிராபியில் எழுத்துகளுக்கு அழகியல் சேர்க்கப்படும். அட்வான்ஸ்டு டைப்போகிராபியில், எழுத்து வடிவங்களிலேயே அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியும்படி வடிவமைக்கப்படும். உலகமே விரல்நுனிக்குள் வந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், மாற்றங்களே நிலையானது. இதற்கு, தமிழ் எழுத்துகளும் விதிவிலக்கல்ல.

இலக்கியக் கட்டுரைகளின் எழுத்து வடிவங்களுக்கும் தற்போதைய பத்திரிகைகளின் எழுத்து வடிவங்களுக்கும் நிறைய வித்தியாசம் காணலாம். ஆனால், அவற்றின் ஒரே நோக்கம் வாசகர்களுக்கு எழுத்துகள் புரிய வேண்டும் என்பதுதான். எழுத்துக்கூட்டிப் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து,  விஷுவலாகப் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இந்தத் தலைமுறையினருக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த, வரி வடிவங்களில் புதுமைகளை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயமுள்ளது. சமீபத்தில், தமிழ் மாடர்ன் தமிழ் டைப்போகிராபி டிரெண்டாகி வருகிறது. இப்படி, தமிழ் வார்த்தைகளுக்கும் எழுத்துகளுக்கும் கற்பனைக்கு எட்டாத அழகியல் சேர்த்து புதிய வடிவம் கொடுத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த  கிராபிக் டிசைனர் அருண் கொம்பை.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளின் வார்த்தைகளுக்கும் புதிய வரிவடிவம் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் அருண். அவர் எதிர்பாராத அளவு பெரும்வரவேற்பு கிடைக்கவே, தமிழ் டைப்போகிராபியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். தமிழ் எழுத்துகளின் புதிய வரிவடிவங்களைக் காண விரும்புவோருக்கு, `தமிழ்.அரு’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் கண்களுக்கு விருந்துவைக்கிறது. பாரம்பர்ய தமிழ்ச் சொற்கள் மட்டுமன்றி, புழக்கத்தில் இருக்கும் தமிழ் வார்த்தைகளுக்கும் புதியதொரு வடிவம் கொடுத்துள்ளார்.

``நான் ஒரு கிராபிக் டிசைனர். இந்தத் துறைக்கு வந்து பல வருஷமாச்சு. ஆங்கிலத்துல டிசைன் பண்ண நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு. ஆனா, தமிழ்ல டிசைன் செய்ய, போதுமான டூல்ஸ் இல்லை. உதாரணத்துக்கு, அழகான தமிழ் அழைப்பிதழ் டிசைன் பண்ணணும்னு கேட்டு வருவாங்க. தமிழ் எழுத்துகளுக்கு புது டிசைன் வடிவமைக்கிறது தனி வேலை. அதுக்கு கூடுதல் கட்டணம் ஆகும்னு தெரிஞ்சதும், இங்கிலீஷ்லியே டிசைன் பண்ணி வாங்கிட்டுப் போயிடுவாங்க. இது ரொம்ப நாளா தொடர்ந்துட்டே இருந்துச்சு. அப்போதான் எனக்கு ஒரு யோசனை. தமிழ்ல எழுதுறதுலயும் படிக்கிறதுலயும் ஏற்கெனவே ஆர்வம் குறைஞ்சிட்டு வருது. அதுக்கு நாமளும் ஒரு காரணமாயிடக் கூடாதுன்னு வேற வழியைத் தேட ஆரம்பிச்சேன். பொதுவாவே டைப்போகிராபியில எனக்கு ஆர்வமுண்டு. தமிழ் மொழியில டைப்போகிராபினா என்னன்னு தேட ஆரம்பிச்சு, இந்த டிசைன்களை உருவாக்கினேன்” என்று தமிழ்.அருவின் பயணத்தை விளக்கினார் அருண். 

இந்த டிசைன்கள் அனைத்தும் அடோப் இல்லஸ்ட்ரேட்டர் எனும் சாஃப்ட்வேர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போதெல்லாம், இதுபோன்ற டிசைன்களை வடிவமைக்கும் அருண், ``மக்களுக்கு, தமிழ்மொழி மீது பேரன்பு உள்ளது’’ என்கிறார்.

``தமிழ் டிசைன்களுக்கு வரவேற்பு இருக்குமானு சந்தேகம் இருந்துச்சு. ஆனா, தமிழ்மொழியை மக்கள் ரொம்பவே நேசிக்கிறாங்க. இதுபோல புதுமைகளை ஏத்துக்குறாங்க. `நிறைய டிசைன் பண்ணுங்க'னு பலர் ஊக்கப்படுத்துறாங்க. இன்னும் சிலர், இந்த வார்த்தைகளெல்லாம் வேணும்னு விருப்பப்பட்டுக் கேட்கிறாங்க. இதை நான் எதிர்பார்க்கலை. இதுமூலமா, தமிழ்மொழியின் பயன்பாடு அதிகரிக்கும். இன்விடேஷன், போஸ்டர்ஸ், டி-ஷர்ட் டிசைன்ஸ்னு பல இடங்கள்ல தமிழ் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் பயன்படுத்த முடியும். சினிமா வசனங்களையோ, பன்ச் டைலாக்குகளையோ பயன்படுத்துவதை குறைச்சு, தமிழ் வார்த்தைகளை டிரெண்டாக்கணும்” என்றார். 

இந்த வடிவங்களில் கவனிக்கவைப்பது, நிறங்கள். சுயநலம், பிழை போன்ற வார்த்தைகளுக்கு அடர் சிவப்பு, கறுப்பு நிறங்களைக்கொண்டு வடிவமைத்துள்ளார். மகிழ்ச்சியான, நிறைவான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கு பச்சை, நீல நிறங்களைப் பயன்படுத்தியுள்ளார். தமிழ்மொழிக்கு வரிவடிவம் கொடுப்பதில், ஒவ்வொரு படியாக முன்னேறியுள்ள அருண், இப்போது மெசேஜ் சொல்லும் வார்த்தைகளை வடிவமைத்துவருகிறார். இது இணையதளத்தில் டிரெண்ட். `அன்பு... அறம்', `நிற்க... கற்க' எனச் சொற்றொடர்களை வடிவமைத்து அசத்துகிறார். 

இதில் பெரும்பாலான வார்த்தைகள் பார்த்தவுடன் புரிந்துவிடுகின்றன என்றாலும், சில வடிவங்கள் தெளிவாக இல்லை. ``ஒரு டிசைன் புரியாமப்போனா அது என் தவறுதான். புதுமைகளைக் கொண்டுவரதே... மக்கள் விரும்பிப் படிக்கணும் தெரிஞ்சுக்கணும்னுதான். முடிஞ்சவரைக்கும் என்னுடைய தமிழ் டிசைன்கள் தெளிவா இருக்கணும்னு முயற்சி செய்வேன். வார்த்தைகளைத் தெரிஞ்சுக்கிறது மட்டுமல்லாமல், அர்த்தமும் மனசுல பதியணும். தமிழ்.அரு மூலமா இந்த முயற்சியைக் கையில் எடுத்திருக்கேன்” என்றார் அருண்.

பாரம்பர்ய வடிவங்களிலிருந்து, மாடர்ன் தமிழ் வரை எந்த வடிவம் கொண்டாலும் அழகியல் குறையாத மொழி, தமிழ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு