Published:Updated:

`மோனலிசா ஓவியம் உலகப்புகழ் பெற்றது எப்படி?’ டாவின்சி பிறந்ததினப் பகிர்வு! #VikatanInfographic

`மோனலிசா ஓவியம் உலகப்புகழ் பெற்றது எப்படி?’ டாவின்சி பிறந்ததினப் பகிர்வு! #VikatanInfographic
`மோனலிசா ஓவியம் உலகப்புகழ் பெற்றது எப்படி?’ டாவின்சி பிறந்ததினப் பகிர்வு! #VikatanInfographic

இந்த ஓவியத்தை வரைந்தவரை ஓவியர் என்று சொல்வதைவிட அறிவியல் கலைஞன் என்று சொல்வதே சிறந்ததாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.

1911-ம் ஆண்டு, பாரீஸின் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்திலிருந்து ஓர் ஓவியம் காணாமல்போனது. செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் ஆச்சர்யப்பட்டனர். ஆனால், உண்மையான ஆச்சர்யம் அதுவல்ல. அந்த ஓவியம் திருடப்பட்ட பிறகு, அது மாட்டப்பட்டிருந்த வெற்று இடத்தைப் பார்க்கவே மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமலும் விசாரணைக்காகவும் ஒரு வாரம் அருங்காட்சியகம் மூடப்பட்டது. ஓவியம் இருந்த இடத்தைப் பார்க்கவே இவ்வளவு ஆர்வம் என்றால், அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் இருந்தது என்ற ஒரு யோசனை நமக்குள் எழுகிறதல்லவா! அந்த ஓவியத்தின் பெயரைக் கேட்டாலே நம் உதடுகளிலும் புன்னகை தவழும், மோனலிசா ஓவியம். இரண்டு ஆண்டு கடந்த நிலையில் பல்வேறு விசாரணைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்த மகா ஓவியம், அதே லூவர் அருங்காட்சியகத்தில் இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. 

இதை வரைந்தவரை `ஓவியர்' என்று சொல்வதைவிட, `அறிவியல் கலைஞன்' என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். காரணம், கைதேர்ந்த கலைஞன், சிறந்த கவிஞர், தத்துவமேதை, விளையாட்டு வீரர், பொருளியல் வல்லுநர், கட்டடக்கலை நிபுணர், கடல் ஆராய்ச்சியாளர், வானியல் விஞ்ஞானி, மனித உடற்கூறு ஆய்வாளர், நீர்ப்பாசன நிபுணர், ராணுவ ஆலோசகர், இசை ஆர்வளர், கதாசிரியர்  என சகல துறைகளிலும் தனித்துச் செயல்பட்ட இவரை, உலகமே கொண்டாடியது.

இத்தாலியின் வின்சி நகரில் உள்ள `ஆன்கியானோ' என்ற கிராமத்தில் 1452-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி `செர் பியரோ தா வின்சி - கத்தரீனா'

இணையருக்குத் திருமணம் ஆகாமலேயே பிறந்தவர் லியோனார்டோ டா வின்சி. இவரின் முழுமையான பெயர் Leonardo di ser Piera da Vinci. அதாவது வின்சி என்ற நகரில் உள்ள பியரோ என்பவரின் மகன் லியனோர்டோ என்று பொருள்.

சிறு வயதிலேயே வரைவதிலும், மாதிரி உருவங்களை வடிவமைப்பதிலும் ஆர்வமாக இருந்தார். இடதுகை பழக்கம்கொண்ட இவர், ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் ஓவியம் வரையக்கூடிய ஆற்றல் கொண்டிருந்தார். 1466-ம் ஆண்டு தன்னுடைய 14-வது வயதில் தந்தையின் அனுமதியோடு `வெரோக்சியோ' என அழைக்கப்படும் `ஆண்ட்ரியா டி சியோன்' என்ற புகழ்பெற்ற ஓவியரிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். 1472 முதல் 1475 வரையிலான காலகட்டத்தில், ஓவியர் வெரோக்சியோவின் உதவியுடன் `மரியாளிடம் தேவதூதர் இயேசுவின் பிறப்பை உணர்த்தியது' போன்ற முதல் படத்தை வரைந்து தன்னை ஓர் ஓவியனாக வெளிப்படுத்தினார். இதனால் ஓவியர்கள் குழுவில் இவரும் ஓர் ஓவியராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

Courtesy of LeonardoDaVinci.net

மனித வாழ்க்கையின் யதார்த்த நிலையை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்த இவர், இயேசு ஞானஸ்நானம் பெறும் ஓவியத்தையும், பிரபுத்துவவர்க்கத்தின் பெண்மணியான `ஜின்விரா டி பென்சி'யின் உருவப்படத்தையும் வரைந்து மதிப்புமிக்க ஓவியராக வலம்வந்தார். அறிவியல் துறையிலும் ஆர்வமாக இருந்த டா வின்சி, 1478-ல் தானியங்கி மோட்டார் வாகனத்தின் உருவத்தை வரைகிறார். அந்த ஓவியம் பல தரப்பினரிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. பிற்காலத்தில் அதேபோன்று வாகனம் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மிகச்சிறந்த கற்பனைவளம் உடையவராக இருந்த இவர், நூல் நூற்கும் இயந்திரம், திருகாணி செய்யப் பயன்படும் கருவி, மண் தூக்கும் கருவி போன்ற பல்வேறு வரைபடங்களை வரைந்தார்.

Courtesy of LeonardoDaVinci.net

1485-ல் போர்க்களத்தில் பயன்படுத்தும் பீரங்கி, நான்கு அரிவாளுடன்கூடிய ரதம் மற்றும் ராட்சசக் குறுக்கு வில் போன்றவற்றை வரைந்தார். மருத்துவமனைக்குச் சென்று நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர்களைக் கண்டு அவர்களின் நிலையை ஓவியமாகத் தீட்டினார். அதேபோல் இறந்த மனிதர்களின் உடல்களை ரகசியமாக விலைக்கு வாங்கி, உடலின் உள் அமைப்புகளான இதயம் சுருங்கி விரிவடைவது, தாயின் வயிற்றில் குழந்தை இருப்பது, உடல் உறுப்புகளின் அளவு எனப் பலவற்றை ஓவியங்களாக வரைந்தார். ஓவிய வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காதவாறு உலகப் புகழ்பெற்ற பாரம்பர்ய ஓவியமான `தி விட்ரூவியன் மேன்' படத்தை 1487-ல் வரைகிறார். 1495 முதல் 1498 வரையிலான காலகட்டத்தில் டா வின்சிக்குப் பெருமைசேர்த்த உலகப் புகழ்பெற்ற ஓவியமான `The Last Supper' எனப்படும் `இயேசுவின் கடைசி விருந்து' ஓவியம் வரைந்தார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார்.

Courtesy of LeonardoDaVinci.net

அதன் பிறகு, ரோம், வெனிஸ் போன்ற பல இடங்களில் ஓவியம் வரைவதற்காகத் தங்கியிருந்தார். மிலன் நகரத்தில் ஆட்சிசெய்து வந்த லுடோவிகோ ஸ்பார்ஸாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார் டா வின்சி. ஆல்ப்ஸ் மலையில் பாதுகாப்பு அரண்களை அமைக்கும் பணிகளைக் கவனிக்கச் சென்ற டா வின்சி, அங்கே கண்ட இயற்கைக் காட்சிகளை வரைந்தார். மிலன் நகர் மீது பிரெஞ்சுக்காரர்கள் படையெடுத்தபோது, அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மிலனில் மீண்டும் ஸ்பார்ஸாவின் ஆட்சி வந்ததால், மீண்டும் டா வின்சி அங்கு வந்தார். ஆனால், டா வின்சிக்கு போதிய சம்பளம் கொடுக்கப்படவில்லை. அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டார். தன்னுடைய செலவுகளுக்காக, பலவிதமான ஓவியங்களை வரைந்து விற்பனை செய்தார். வயிற்றுப் பசிக்காக வரையப்பட்ட ஓவியம்தான் தன் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் என அப்போது அவருக்குத் தெரியவில்லை.

1503 - 1506 காலகட்டத்தில் அவர் வரைந்த ஓவியம்தான் `மோனலிசா'. பல ஆண்டுகளுப் பிறகு உலகின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாக பெயர்பெற்றது. இன்றளவும் டா வின்சி என்றால் முதலில் நினைவுக்கு வருவது மோனலிசாதான். இதையடுத்து 1504-ல் அவர் வரைந்த சால்வேட்டர் முண்டி (salvator mundi) ஓவியம் உலக வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம்போன ஓவியம் என்ற பெயரைப் பெற்றது. இந்திய மதிப்பில் 2,925 கோடி ரூபாய்க்கு ஏலம்போனது குறிப்பிடத்தக்கது!

1516-ல் பிரான்ஸ் மன்னர் முதலாம் பிரான்சிஸ் வேண்டுகோளின்படி, பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். மனிதர்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் மரணத்திடம் மட்டும் வெல்ல முடியாது. ஓவிய உலகில் தனி ராஜாவாக வலம் வந்துகொண்டிருந்த இவர், 1519-ம் ஆண்டு மே 2-ம் தேதி தன்னுடைய 67-வது வயதில் இயற்கை எய்தினார். இவரின் மிகக் குறைவான ஓவியங்களே இன்றைக்கு நமக்குக் கிடைக்கின்றன. காலத்தை வென்று நிலைத்து நிற்கும் `மோனலிசா' ஓவியம், டா வின்சியின் மறைவுக்குப் பிறகு, அவரின் மாணவரான சேலேயிடம் பாதுகாப்பாக இருந்தது. அதன் பிறகு, லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. 

ஆயிரம் வார்த்தைகளை எழுதி பிறருக்குப் புரியவைப்பதைவிட, ஒரே ஓர் ஓவியத்தின் மூலம் ஆயிரம் அர்த்தங்களைக் கொடுக்க முடியும் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டு வாழ்ந்த டா வின்சியின் புகழை, இவரின் ஓவியங்களே பறைசாற்றுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு