Published:Updated:

சென்னை கிறிஸ்துவக் கல்லூரியும் விசாகா கமிட்டியும்! ஹலோ... ப்ளூடிக் நண்பா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சென்னை கிறிஸ்துவக் கல்லூரியும் விசாகா கமிட்டியும்! ஹலோ... ப்ளூடிக் நண்பா!
சென்னை கிறிஸ்துவக் கல்லூரியும் விசாகா கமிட்டியும்! ஹலோ... ப்ளூடிக் நண்பா!

அன்று உச்ச நீதிமன்றம் ஒவ்வோர் அலுவலகத்திலும் அமைக்க சிபாரிசு செய்த அதே ICC தான் இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைக்கு மேலே கத்தியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. வாழ்வின் அபத்த நுட்பம் அப்படியானது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசரான ரஞ்சன் கோகோய், தன் கடமையைச் சரிவர செய்யவிடலாகாது என்ற உள்நோக்குடன் அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்யான பாலியல் குற்றச்சாட்டு பற்றியெரியும் நிலையில், இன்னோர் உள்ளூர் விவகாரம் அவ்வளவாக வெளிச்சம் பெறவில்லை. சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் இரு பேராசிரியர்கள் மீது அந்தக் கல்லூரியின் மாணவிகள் சுமத்திய குற்றச்சாட்டுதான் அது.

இந்த இரண்டு பேரும் கடந்த பிப்ரவரியில் 50 பேர்கொண்ட மாணவர்கள் குழுவை, கர்நாடகத்துக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றபோது மாணவிகளிடம் சொற்களிலும் செய்கைகளிலும் பாலியல்ரீதியாக அத்துமீறி இருக்கிறார்கள். துறைத் தலைவரிடம் புகார் அளித்தபோது பெரிதாக நடவடிக்கை ஏதுமில்லை என்றானதும், போராட்டம் வெடித்துள்ளது.

அதன் பிறகு, உட்புகார் கமிட்டி (Internal Complaints Committee – ICC) ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இப்போது குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளன. கல்லூரி நிர்வாகம் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதே பாக்கி.

இந்தியாவில் படிக்கும் இடம் மற்றும் பணி இடங்களில் பாலியல் தொந்தரவுகள் வந்தால், பாதிக்கப்பட்ட பெண்கள் வலுவாகக் கையாளும் வகையில் சட்டங்கள் இன்று இருக்கின்றன. 1997-ல் உச்ச நீதிமன்றம் சிபாரிசு செய்த விசாகா பரிந்துரைகளின் (Vishaka Guidelines) பேரில் 2013-ல் இதற்கான சட்டம் Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal Act) நிறைவேற்றப்பட்டது. அதன் பகுதியாக இத்தகைய புகார்களை விசாரிக்க, அந்த நிறுவனமோ கல்லூரியோ ICC குழு அமைக்க வேண்டும்.

விசாகா பரிந்துரைகள் வந்த கதையே ரத்தமயமானது. 1990-களில் ராஜஸ்தானில் பெண்கள் முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்த அரசு ஊழியையான பன்வாரி தேவி, தன் பணியின் ஒரு பகுதியாகக் குழந்தைத் திருமணங்களைத் தடுத்தார். இதனால் சினமடைந்த குஜ்ஜார் இனப் பண்ணையார்கள், அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர். அன்று இருந்த சட்டங்களின்படி குற்றமிழைத்தோரைத் தண்டிக்க முடியவில்லை. இந்த வழக்கில் `விசாகா' என்ற பெண்ணுரிமை அமைப்பு, உச்ச நீதிமன்றம் போய், பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொந்தரவுகளை விசாரிக்க தனிச் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று வாதாடி வென்றது.

அன்று உச்ச நீதிமன்றம் ஒவ்வோர் அலுவலகத்திலும் அமைக்க சிபாரிசு செய்த அதே ICC தான், இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைக்கு மேலே கத்தியாய்த் தொங்கிக்கொண்டிருக்கிறது. வாழ்வின் அபத்தநுட்பம் அப்படியானது!

**********************************************

தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய தடகளப் போட்டிகளில் 800 மீட்டர் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார்.

ஆனால், அவர் மாதிரி வேறு சில தமிழர்களும் இந்தப் போட்டிகளில் இந்தியாவுக்காகப் பதக்கம் வென்றிருக்கிறார்கள் என்றாலும், கோமதி செய்திகளில் நீடிக்கக் காரணம் அவரது சாதனை மட்டுமல்ல... அவரது வறுமையும்தான். அது நம் வெகுஜன உளவியல். இன்னும் குறிப்பாகச் சொன்னால், இந்திய நடுத்தர வர்க்க உளவியல்.

நமக்கு ஒரு மாணவன் மாநிலத்தில் முதல் மதிப்பெண் வாங்கினால் போதாது; அவன் இரவில் பகுதி நேரமாகப் பரோட்டாக் கடையில் பணிபுரிந்திருக்க வேண்டும். அதாவது சினிமா பார்க்கும்போது கொறிக்க தீனி தேவை என்பதுபோல, சாதனைக் கதைகள் கேட்கும்போது உடன் `உச்' கொட்டிக் கேட்க, கொஞ்சம் சோகக் கதைகளும் தேவை.

அப்படித்தான் கோமதியும். அவரது கிழிந்த ஷூக்களை வட்டமிட்டு அரசைத் திட்டுகிறோம். அவரே அவை, தன் ராசியான ஷூக்கள் என்பதால்தான் அணிந்தேன் என்று தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இரு கால்களில் வெவ்வேறு நிற ஷூக்கள் என்பதைச் சுட்டிக்காட்டிக் கொந்தளிக்கிறோம், அது உசைன் போல்ட் முதலான ஓட்டக்காரர்கள் பயன்படுத்தும் ஃபேஷன் சமாசாரம் என்றறியாமல். அவர் முறையான சத்துணவின்றி ஓடினார் என்று நம்ப விரும்புகிறோம். அதனால் அவர் தந்தை அவர் பொருட்டு மாட்டுக்கு வைத்திருந்ததை உண்டதை எல்லாம் அவரை கண்ணீருடன் பேச வைக்கிறோம்.

கோமதி வறுமையில் இருந்திருக்கிறார். ஆனால், அவர் விளையாட்டில் கவனம் செலுத்துமளவுக்கு ஸ்பான்சர்களின் பணம் கிடைத்திருக்கிறது. முறையான பயிற்சிகள் எடுத்திருக்கிறார். அதனால்தான் தோஹா வரை ஓடி வெல்ல முடிந்திருக்கிறது. இன்று வெற்றிக்குப் பிறகு ஓரளவு பண உதவிகள் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில், இந்த மிகை பிம்பம்கூட நல்லதுதான் என்றே பார்க்கலாம். கோமதி மாரிமுத்து ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்ல உழைக்கட்டும்.

***************************************

இன்ஜினீயர் என்ற சொல்லே இன்ஜின் என்பதிலிருந்து வந்ததே. எழுத்தை ஆள்பவர் எழுத்தாளர்; இன்ஜினை ஆள்பவர் இன்ஜினீயர். இன்ஜின் என்பது, ஒரு மோட்டார்தான். அது பல வகைகளில் இயங்கும். வெப்ப இன்ஜின்களில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளிலிருந்து சூடு கிளப்பி அதை வேலைக்குப் பயன்படுத்துகிறார்கள். போலவே நியூமாட்டிக் மோட்டர்களில் அழுத்தமேற்றிய காற்று, மின்சார மோட்டர்களில் மின்சக்தி, க்ளாக்வொர்க் மோட்டர்களில் எலாஸ்டிக் சக்தி என வெவ்வேறு மூலங்கள். நம் உடல் தசைகளில் மூலக்கூறு மோட்டார் உண்டு. ரசாயன சக்தியில் இயங்குபவை.

ஹாலஸ்யன் என்ற கெமிக்கல் இன்ஜினீயர் இன்ஜின்கள் பற்றியே ஒரு சிறு நூல் எழுதியிருக்கிறார். நம் பைக், கார், கப்பல், விமானம் உள்ளிட்ட வாகனங்களில் பயன்படும் வெப்ப இன்ஜின்கள் பற்றியதுதான் இது. காதலியை ஆர்வத்துடன் அணுகும் இளைஞன்போல் இன்ஜினைப் பிரித்து மேய்ந்திருக்கிறார். (`அபூர்வ சகோதரர்கள்' படத்தின் `ராஜா கைய வெச்சா...' பாடல் நினைவுக்குவருகிறது!)

இன்ஜின் என்றால், அதைப் பற்றி மட்டுமின்றி வாகனம் ஒட்டுமொத்தமாய் எப்படி இயங்குகிறது என சேசிஸ் முதல் கியர் வரை விளக்கிச் செல்கிறார். இன்ஜினின் விஞ்ஞானத்தை மட்டுமின்றி வரலாற்றையும் சொல்கிறார். கடைசியில் இன்ஜினின் நற்பராமரிப்பு ஆலோசனைகளும் நல்குகிறார். நூலில் நிறைய படங்கள் உண்டு.

வாகனத்தோடு வாசிப்பிலும் ஆர்வம்கொண்ட ஃபஸீனோ பெண்களும், புல்லட் ஆண்களும் புத்தகத்தைப் புரட்டிப்பார்க்கலாம். `யாவரும்' பப்ளிஷர்ஸ் வெளியீடு.

********************************

பா. இரஞ்சித்தின் முயற்சியான The Casteless Collective-ல் சமீபத்தில் வெளியாகியிருக்கும் இசை ஆல்பம் `மகிழ்ச்சி . மொத்தம் 9 பாடல்கள். இசை, தேன்மா என்பவர். `விவசாயம்...' என்ற பாடல் தவிர, மற்ற எல்லா பாடல்களுமே நன்றாக இருக்கின்றன. மிஷ்கின் படங்களின் இசைக்கென ஒரு தனித்தன்மை இருக்கும். லேபிள் இல்லாமல் கேட்டாலுமே மிஷ்கின் படம் என்று அடையாளப்படுத்தலாம். அப்படி `அட்டக்கத்தி', `மெட்ராஸ்', `கபாலி', `காலா' என எல்லா படங்களுக்கும் இசை சந்தோஷ் நாராயணன் என்றாலும், அதில் இரஞ்சித்தின் தாக்கம் எவ்வளவு தூரம் இருக்கிறது என வேறோர் இசைஞர் சமைத்த இந்தப் பாடல்களின் மூலம் உணரலாம்.

Special Mention: மகிழ்ச்சி என்ற பாடலும், குரலேதுமற்ற , கருவிகளின் அதிர்வுகள் மட்டும்கொண்ட Othadi.

ஆல்பத்தின் பாடல்களை யூ டியூபில் கேட்க:

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு