Published:Updated:

நான் கோகுல் நாத் ஆனது எப்படி?

ம.கா.செந்தில்குமார்

பிரீமியம் ஸ்டோரி
நான் கோகுல் நாத் ஆனது எப்படி?
##~##

''விஜய் டி.வியின் 'கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சி. நான்தான் முதல் போட்டியாளர். எனக்கு அதுதான் முதல் டி.வி நிகழ்ச்சி. எக்கச்சக்கமா ரிகர்சல் பார்த்துட்டு மேடை ஏறினேன். டைனோசர், ரோபோன்னு விதவிதமான உடல் மொழிகளில் புதுப் புது ஐடியாக்களில் மைமிங் செய்தேன். அப்ளாஸ் அள்ளுச்சு. மனசு முழுக்க சந் தோஷம், ஆனா, 'உங்க மைமிங் ஆச்சர்யப் படும்படியா இருந்துச்சு. ஆனா, சிரிப்பு வரலியே கோகுல்’னு சொல்லிட்டார் நடுவர். போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப் பட்டேன். 'நல்லாத்தானே பண்ணோம். எங்கே தப்பு, ஏன் தப்பு?’ன்னு என்  மனசுக்குள் ஆயிரம் கேள்விகள். போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டா லும் விடாமல் ரிகர்சல் பண்ணிட்டே இருந்தேன். இன்னும் நிறைய புதுப் புது ஐடியாக்கள் யோசிச்சு, மைமிங்ல சேர்த்தேன். திடீர்னு 'வைல்ட் கார்டு’ ரவுண்ட் மூலம் போட்டியில் மீண்டும் கலந்துகொள் ளும் வாய்ப்பு. ஒவ்வொரு ரவுண்டிலும் உற்சாகமாகப் போராடினேன். கடைசி ரவுண்ட் முடிஞ்சு முடிவுகள் அறிவிச்சப்போ, எனக்கு இரண்டாவது இடம். 'முதல் கோணல் முற்றும் கோணல்’ பழமொழியை என் உடல்மொழி மூலம் மாற்றிய அந்த சம்பவம் 'எதுவும் சாத்தியம்’ என்கிற நம்பிக்கையை எனக்குள் விதைச்சது!'' - மெல்லிய குரலில் சொல்கிறார் கோகுல்நாத். நடனம், நடிப்பு, மைமிங், சர்க்கஸ் என அனைத்தையும் கலந்து கட்டி, ஒரே மேடை யில் காக்டெயிலாக்கும் கலகலப்பு பார்ட்டி.

நான் கோகுல் நாத் ஆனது எப்படி?

''நான் ஒரு நடுத்தரக் குடும்பத்து சென்னை இளைஞன். பள்ளி நாட்களில் இரண்டு வருடங் கள் குச்சுப்புடி டான்ஸ் கத்துக்கிட்டதைத் தவிர, நடனத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் கிரியேட்டிவ்வான விஷயங் களில் ஆர்வம் இருந்துச்சு. அதனாலேயே வீட்டில் இன்ஜினீயரிங் சேரச் சொன்னதையும் மீறி, எஸ்.ஆர்.எம். கல்லூரியில் விஸ்காம் சேர்ந்தேன். எனக்கான வாழ்க்கை அங்கு இருந்துதான் தொடங்கியது. அங்கு முதலாம் ஆண்டு மாணவர் களை வரவேற்கும் 'ஃப்ரெஷர்ஸ் டே’ நிகழ்ச்சியில் நானும் மேடையேறி டைனோசர், மம்மி போன்று மைமிங் செய்ய, கல்ச்சுரல் குழுவில் சேர்த்துக்கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் மைமிங் செய்பவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றாலும், மைமிங்கை மட்டுமே தன்னுடைய அடையாளமாகக்கொண்டு யாரும் இல்லை. முன்னோடிகள் இல்லாதது ஒரு வகை யில் நல்லது, பல வகைகளில் கெட்டது. எனக்கு மைமிங்கின் மேல் ஆர்வம் அதிகமானதால், இன்டர்நெட்டில் தேடித் தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். Michael Marceau என்பவர்தான் மைமிங் கலையில் உலக அளவில் நெம்பர் 1. 'மூன் வாக்’ என்ற மைமிங் கலையை இவரிடம்தான் கற்றுக் கொண்டார் மைக்கேல் ஜாக்சன். அதனால் மிகுந்த ஆர்வத்துடன் அவரது மைமிங் நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். உலக அளவில் மேடைகளில் நிகழ்த்தப்படும் மைமிங் நிகழ்ச்சிகளை இன்டர்நெட் மூலம் பார்த்துவிடுவேன். என்னிடம் ஏராள மான மைமிங் வீடியோ கலெக்ஷன்கள் இருக் கின்றன.

கல்லூரியில் 'ஐசி தீஃவ்ஸ்’ என்ற பெயரில் குழு ஒன்றைத் தொடங்கினோம். சென்னையில் எல்லா கல்லூரி கல்ச்சுரல் நிகழ்ச்சிகளிலும் எங்களுக்கு நிச்சயம் ஒரு பரிசு காத்திருந்தது. கல்லூரியில் இருந்து வெளியே வந்ததும் 'நாட்-இ-தீஃவ்ஸ்’ என பெயர் மாற்றித் தொடர்ந்தோம். கார்ப்பரேட் நிறுவனங்கள், பொது மேடைகளில் நிகழ்ச்சிகள் நடத்தினோம். ஓரளவுக்குப் பெயரும், வருமானமும் கிடைத்தது.

தொடர்ந்து 'மானாட மயிலாட’ வாய்ப்பு. இந்த நிகழ்ச்சியின் உதவி இயக்குநர் மணி என்பவர், கல்லூரியில் எனக்கு ஜூனியர். அவரின் உதவியால் கலா மாஸ்டரின் அறிமுகம் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியின் சீஸன் 2-ல் கலந்துகொண்டு ஃபைனல் வரை சென்றேன். தொடர்ந்து சீஸன் 4-ல் டைட்டில் வென்று 10 லட்சம் ரூபாய் பரிசைத் தட்டினோம். அடுத்த சீஸனில் ஸ்பெஷல் பெர்ஃபார்மன்ஸ் செய்தேன். அதன் பிறகு,  நார்வே, சுவீடன், ஜப்பான், வளைகுடா நாடுகள் என நிகழ்ச்சிக்காக நண்பர்களுடன் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

சொன்னால் நம்புவது கடினம். ஆனால், உண்மை. கடந்த மாதம் ஐரோப்பா சென்றபோது, என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள நீண்ட நெடிய வரிசை காத்திருந்தது. அவர்களிடம் இருந்து தப்பிக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், 'கோகுல்நாத் துடன் போட்டோ எடுத்துக்கொள்ள இந்திய ரூபாயில் கட்டணம் 500’ என அறிவித்தார்கள். ஒருவர்கூடக் கலைந்து செல்லவில்லை. 'இந்தியன் வீடியோ’ என்ற தலைப்பில் 'மானாட மயிலாட’, 'கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சிகளில் நான் செய்தவற்றைத் தொகுத்து ஜப்பானில் வீடியோவாக விற்கின்றனர். தேங்க்ஸ் டு 'மானாட மயிலாட’, 'கலக்கப்போவது யாரு?’ அண்ட் கலா மாஸ்டர்.

இதற்கிடையில், 'சேப்டர் 6’ என்ற தெலுங்குப் படத்தில் காமெடியனாக அறிமுகமானேன். தொடர்ந்து 'அம்புலி’ என்ற 3டி படத்தில் அம்புலி கேரக்டரில் நடிக்கிறேன். இது 'அவதார்’ டைப் ஃபேன்டசி மூவி. பல ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணிபுரிய உள்ளனர். எதிர்காலத்தில் இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் இலக்கு. அதற்காக, கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்துள்ளேன்.

நாம் உணர்த்த விரும்புவதை, எந்த ஒரு பொருளின் உதவியும் இன்றி உடல்மொழி மூலமாக மட்டுமே உணர்த்துவதுதான் 'மைமிங்’. இதை ஜனரஞ்சகப்படுத்த நான் சேர்த்துக்கொண்ட விஷயங்கள்தான் நடனம், நகைச்சுவை. நம்மைக் கடந்து போகும் வாழ்க்கை சுவாரஸ்யங்களை மனதில் நிறுத்தி தினம் தினம் அப்டேட் செய்துகொண்டே இருந்தால் எல்லோருமே வெற்றியாளர்கள்தான். சக மனிதனில் தொடங்கி விலங்குகள், பறவைகள் என நம் சூழலைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் இதில்தான் நம் இலக்குக்கான எரி பொருள் இருக்கிறது!''

படம்:வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு