Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

வாசகிகள் பக்கம் ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன !

வாசகிகள் பக்கம் ஓவியங்கள்: சேகர்

Published:Updated:

 காதுக்குள் பேனா!

##~##

குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை எழுதிக் கொண்டிருந்த என் கணவர், காதில் நமைச்சல் ஏற்படவே... கையில் இருந்த பால் பாயின்ட் பேனாவைக் காதில் விட்டுக் குடைந்தார். பேனாவை வெளியே எடுத்தபோது, அடிபாகத்தில் இருக்கும் சிறிய மூடி, சற்று லூசாக இருந்ததால் காதுக்குள்ளேயே தங்கிக்கொண்டது. நானும் என் மகனும் எவ்வளவோ முயன்றும் அதை வெளியே எடுக்க முடியவில்லை. அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று காண்பிக்க... டாக்டர் காதுக்குள் தண்ணீரைப் பாய்ச்சி, குறடை உள்ளே விட்டு, மிகுந்த சிரமத்துடன் வெளியே எடுத்தார். வீண் மன உளைச்சலும் செலவும்தான் மிச்சம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'காது குடைவதற்காக கண்ட பொருட்களையும் உள்ளே விடாதீர்கள்' என்று எத்தனை தடவை பெரியவர்களும், டாக்டர்களும் எச்சரித்தாலும் மீறிக்கொண்டே இருக்கும் அனைவருக்குமே இது ஒரு பாடம்!

அனுபவங்கள் பேசுகின்றன !

- பிரேமா நாகராஜன், திருச்சி

வினையைக் கொடுத்த விளம்பரம்!

வியாபார நிறுவனங்கள், மக்களை ஈர்ப்பதற்காக தங்களைப் பற்றி விளம்பரம் செய்கின்றன. ஆனால், அத்தகைய விளம்பரங்கள், மக்களுக்குத் தொந்தரவாக அமையக்கூடாது என்கிற அக்கறை அந்த நிறுவனங்களுக்கு துளியும் இல்லாமலிருப்பதுதான் வேதனை.

அன்றிரவு டூ-வீலரில் வந்து கொண்டிருந்தபோது, ஜவுளிக் கடை ஒன்று 'மேஜிக் ரேடியம் லைட்’-ஐ வைத்து சாலைகளில் வண்ணப் பந்துகள் ஓடுவதுபோல ரிஃப்ளெக்ட் செய்து கொண்டிருந்தது. திடீரெனப் பார்க்கும்போது நம் காலில் ஏதோ உருண்டு போவது போன்ற பிரமையை அது உண்டாக்கியது. அந்த பிரமையில் நிலையிழந்த நான், சடன் பிரேக் போட, பின்னால் வந்த வண்டி என் மீது மோத, நிலை தடுமாறி கீழே விழுந்ததோடு என் டூ-வீலரில் நான் ஷாப்பிங் செய்து வைத்திருந்த பொருட்களும் கீழே இறைந்தன. அக்கம் பக்கத்தினர் உதவியோடு எழுந்து, வீடு வந்து சேர்ந்தேன். பொருட் சேதம் வேறு.

அனுபவங்கள் பேசுகின்றன !

பூசணிக்காயைச் சாலையில் உடைத்து வாகன ஓட்டிகளுக்குச் சிரமம் கொடுத்துக் கொண்டிருப்பது போதாது என்று, இப்போது ரேடியம் லைட் மூலமாகவும் டார்ச்சர். வியாபார நிறுவனங்கள் எப்போதுதான் திருந்துவார்களோ!

- ஜி.கே.எஸ்.பரிமளா மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்

கைகொடுக்கும் லேபிள்!

சிநேகிதியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். ஃப்ரிட்ஜ் ரிப்பேராகிவிட்டது என்று கூறிக்கொண்டே... ஃப்ரிட்ஜின் பின்புறம் எதையோ துழாவினாள். 'ஒருவேளை தானே ரிப்பேரில் இறங்கிவிட்டாளோ..?' என்றபடியே எட்டிப் பார்த்தேன். அங்கே... ஃப்ரிட்ஜ் வாங்கிய கடை, தேதியுடன் 'கஸ்டமர் சர்வீஸ்’ தொலைபேசி எண் என அனைத்தும் எழுதப்பட்டு, பின்புறம் ஒட்டப்பட்டிருந்த லேபிள் பளீரிட்டது.

''டி.வி., மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் என வீட்டில் உள்ள எல்லாப் பொருட்களிலும் வாங்கின கையோடு இப்படி லேபிளை ஒட்டிவிடுவோம். ஏதாவது பிரச்னை எனில், அதை சரி செய்பவரை உடனடியாக அழைக்க, கியாரண்டி எப்போது முடிகிறது என்று தெரிந்துகொள்ள என பல வழிகளிலும் இது உதவும்'' என்று விளக்கம் தந்தாள் தோழி.

அனுபவங்கள் பேசுகின்றன !

இப்போதெல்லாம் என் வீட்டிலிருக்கும் பொருட்களிலும் லேபிள்கள் சிரிக்கின்றன!

- ஆர்.சந்திரிகா, குன்னூர்

மேட்சிங்... மேட்சிங்!

என் கணவர் சமீபத்தில் புது சிம்கார்டு வாங்கியபோது, அத்தாட்சி ஆவணங்களாக அவரின் போட்டோ ஐ.டி, ரேஷன் அட்டை ஜெராக்ஸ், போட்டோ எல்லாம் கொடுத்துவிட்டு வந்தார். இரண்டு நாட்களாகியும் சிம் ஆக்டிவேட் ஆகவில்லை. சிம் வாங்கிய இடத்துக்கு சென்று கேட்டபோது, ''நாங்கள் எல்லாவற்றையும் மெயின் ஆபீஸுக்கு அனுப்பிவிட்டோமே... என்ன காரணம்னு தெரியலையே...'' என்றனர். மெயின் ஆபீஸுக்கு சென்றபோது, '’உங்களின் ஐ.டி-யில் உள்ள போட்டோவும், நீங்கள் கொடுத்திருக்கும் போட்டோவும் மேட்ச் ஆகவில்லை'' என்றார். பின் ஐ.டி-யில் உள்ள அதேமாதிரியான போட்டோவை கொடுத்தவுடன், சிம் கார்டை ஆக்டிவேட் செய்தனர்.

அனுபவங்கள் பேசுகின்றன !

முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் இடங்களில், ஐ.டி-யில் உள்ள புகைப்படமும், நாம் கொடுக்கும் போட்டோவும் அதிக வேறுபாடில்லாமல் கொடுப்பது முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டோம்!

- மகாலெஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism