ஸ்பெஷல் 1
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

வாசகிகள் பக்கம் ஓவியங்கள்: சேகர்

பொக்கிஷம் பேசுது!

அனுபவங்கள் பேசுகின்றன !
##~##

தோழிக்கு தேவையென்று சென்னை, திருவல்லிக்கேணியில் பழைய புத்தகங்கள் விற்கப்படும் பிளாட்பார கடைகளில் புத்தகங்களைத் தேடினேன். புத்தகம் கிடைத்ததும் வந்த சந்தோஷம், அதைத் திறந்து பார்த்தபோது, மெள்ள குறைந்தது... அதனுள் வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய இரண்டு 50 ரூபாய் தாள்கள் காரணமாக. என் கல்லூரி நாட்களில் உறவினர்கள் யாரேனும் அன்புடன் தரும் பணத்தை இப்படித்தான் மயிலிறகாக புத்தகத்துக்குள் வைத்து, சந்தோஷப்படுவேன். அதுபோல்தான் இந்தப் பணத்தையும் இந்தப் புத்தகத்தின் உரிமையாளர் வைத்திருக்க வேண்டும் என்று மனதில் தோன்ற, அவரிடமே அதை ஒப்படைக்க மனம் ஆசைப்பட்டது. புத்தகத்தில் ஏதேனும் முகவரி இருக்கிறதா என்று தேடினேன். பெயர் மட்டுமே இருக்க ஏமாற்றமடைந்தேன்!

புத்தகங்கள்தான் என்று இல்லை... எந்தப் பொருளை விலைக்குப் போட்டாலும், ஒரு தடவைக்கு இரு தடவையாக 'செக்’ செய்துவிட்டால்... அந்தப் பொருளையும் அதற்குள் ஒளிந்திருக்கும் பொக்கிஷ நினைவுகளையும் இழக்க நேரிடாது அல்லவா?!

- ப்ரியதர்ஷினி, சென்னை-78

சிலிண்டருக்கும் உண்டு கியாரன்டி!

அனுபவங்கள் பேசுகின்றன !

என் வீட்டுக்கு இந்த முறை கேஸ் சிலிண்டர் வந்தபோது, அதை செக் செய்த நான், அதன் கியாரன்டி முடிந்திருந்ததால்... வேறு சிலிண்டர் கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.

'அது என்ன கியாரன்டி என்கிறீர்களா..?'

சிலிண்டரை, மேலே இருக்கும் கைப்பிடி வளையத்துடன் இணைப்பதற்காக மூன்று இரும்புப் பட்டைகள் வைத்திருப்பார்கள். அதில் ஒரு பட்டையில் ஏ, பி, சி, டி என நான்கு எழுத்துக்களில் ஏதாவது ஒன்றுடன், இரண்டு எண்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஏ - ஜனவரி முதல் மார்ச் வரை, பி - ஏப்ரல் முதல் ஜூன் வரை, சி - ஜூலை முதல் செப்டம்பர் வரை, டி - அக்டோபர் முதல் டிசம்பர் வரை என அந்த எழுத்துக்கள் முறையே மூன்று மாதங்களைக் குறிக்கும். அதிலிருக்கும் எண்கள்... வருடத்தைக் குறிக்கும். இதுதான் சிலிண்டரின் கிராயன்டி காலம். எனக்கு வந்த சிலிண்டரில் டி - 11 என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது, 'டிசம்பர் 2011' என்பதுதான் அதன் பொருள். அந்த தேதியுடன் அதன் கியாரன்டி முடிந்துவிட்டதால்... மாற்றி வாங்கினேன்.

நாம் தெரிந்துகொண்ட நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்துவதும், தெரியாதவர்களுக்கு தெரிய வைப்பதும் நல்லதொரு பண்புதானே..?!

- வசுமதி கண்ணன், அம்பத்தூர்

லேட் நைட்... அலர்ட்!

அனுபவங்கள் பேசுகின்றன !

என் தங்கை, தன் தோழிகளுடன் தனி வீடு எடுத்துத் தங்கி வேலை செய்கிறாள். அவளுடைய தோழிகளில் இருவருக்கு வேலை முடிய சில நேரங்களில் இரவு 11 மணி ஆகும். அதன் பிறகே வீடு திரும்புவர். இதனைக் கவனித்த யாரோ ஒருவன், ஒரு நாள் 11 மணிக்கு முன்பாக அழைப்பு மணியை அடித்துள்ளான். கதவை திறக்கப் போன என் தங்கை... ஏதோ உள்ளுணர்வு உந்த, கதவைத் திறக்காமல், தோழியின் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறாள். பதில் வரவில்லை. உடனடியாக வாசல் விளக்கைப் போட்டுவிட்டு, மறுபடியும் பெயரைச் சொல்லி அழைக்க, 'தடதட’வென யாரோ படிகளில் இறங்கிய சத்தமும், அதைத் தொடர்ந்து வண்டி ஒன்று சீறிக் கிளம்பும் ஒலியும் கேட்டுள்ளது. ஒரு நிமிடம் யோசித்ததால் தப்பித்தோம் என்று பெருமூச்சுவிட்டிருக்கிறாள் தங்கை!

தனியே தங்கும் பெண்கள் கிரில் கேட், வாசல் விளக்குகள் என பாதுகாப்பான வீடாகப் பார்ப்பதுடன், இரவு வேலை முடிந்து வரும் தோழிகளுக்கோ அல்லது கணவருக்கோ கதவைத் திறப்பதற்கு முன், வந்திருப்பது அவர்கள்தானா என செல்போன் உள்ளிட்ட யுக்திகளின் மூலமாக உறுதி செய்த பின்னரே திறப்பது, பல ஆபத்துகளைத் தவிர்க்கும்!

- வீ.சாந்தி, நெய்வேலி

சங்கிலி உஷார்!

அனுபவங்கள் பேசுகின்றன !

சாலையில் நடந்து செல்வதற்கே பெண்கள் பயப்படும் அளவுக்கு தினம் தினம் செயின் பறிப்பு சம்பவங்கள் பயமுறுத்துகின்றன. சமீபத்தில் என் தோழி ஒருத்தி இப்படி பறிகொடுத்துவிட்டு, ''தங்கம் விற்கும் விலைக்கு அதைப் போல் வாங்குவதற்கு இன்னும் ஒரு வருஷமாவது சம்பாதிக்க வேண்டும்'' என்று புலம்பியதைக்  கேட்க வேதனையாக இருந்தது. அந்தச் சூழ்நிலையிலும் அவள் சொன்ன அனுபவ யோசனை, எல்லோருக்குமான முன்னெச்சரிக்கை டிப்ஸாகவே எனக்குத் தோன்றியது.

''அடுத்தவர் கண்களில் படும்படி சங்கிலி அணிந்திருப்பதுதான் கொள்ளையர்களுக்கு வசதியாக போய்விடுகிறது. எனவே... புடவை அணியும் பெண்கள், ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சாலையில் நடக்கும்போது, முடிந்தவரை வலதுபக்கமாகவே செல்லவேண்டும். அப்போதுதான் கழுத்தில் இருக்கும் சங்கிலியை, இடது தோளில் இருக்கும் முந்தானை மறைத்திருக்கும். அதேபோல, சுடிதார் அணியும் பெண்கள், சங்கிலியை மறைத்தபடி துப்பட்டாவை அணிந்து நடக்க வேண்டும்'' என்றார் தோழி.

உண்மைதான்... பாதுகாப்பு நம் கையிலும், கழுத்திலும்தானே இருக்கிறது..!

- கமலா ராஜசேகரன், பொள்ளாச்சி