Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

வாசகிகள் பக்கம்ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன !

வாசகிகள் பக்கம்ஓவியங்கள்: சேகர்

Published:Updated:

வாசகிகள் பக்கம்

ரயிலுக்கு கீழே மொபைல்!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு சமீபத்தில் பயணித்தேன். சாத்தூர் நிலையத்தில் ரயில் நின்றபோது, செல்போனில் பேசியபடியே பிளாட்பாரத்தில் நடந்த ஒரு பெண், எதிரே வந்த நபர் மீது மோதிவிட, கையிலிருந்த மொபைல் போன், பிளாட்பாரம் மற்றும் எங்கள் ரயிலுக்கு இடையில் விழுந்துவிட்டது. எங்கள் ரயில் கிளம்பி னால்தான் மொபைலை எடுக்க முடியும். ஆனால், அவரோ எதிர்பிளாட்பாரத்தில் நிற்கும் ரயிலில் ஏறவேண்டும். எங்கள் ரயில் புறப்படுவதற் குள்ளாகவே அது புறப்பட்டுவிடும் என்கிற நிலையில்... வேறு வழியில்லாமல் தன்னுடைய ரயிலைத் தவறவிட்டவர், பிளாட்பாரத்திலேயே காத்து நின்றார்.

முக்கியமான காரியங்களில் ஈடுபடும்போது, இப்படி மொபைலில் மூழ்குவது... இதுபோன்ற ஆபத்துகளுக்குத்தான் வழி வகுக்கும் என்பதில் கவனம் இருக்கட்டும் தோழிகளே!

அனுபவங்கள் பேசுகின்றன !

- மங்கையர்க்கரசி, சென்னை-78

உதவி... உபத்திரவம்!

பிறந்த நாளன்று புது சுடிதாரில் கலக்கலாக ஆபீஸ் கிளம்பினேன். பஸ்ஸில் உட்கார்ந்திருந்த என்னிடம், ஒரு கவரைக் கொடுத்து வைத்திருக்கச் சொன்னார் அருகில் நின்று கொண்டு பயணித்த பெண். அதை என் மடியில் வைத்துக் கொண் டேன். அப்பெண் இறங்கும் இடம் வந்ததும்... கவரை தந்தபோது, எனக்கு பயங்கர அதிர்ச்சி. என் வெள்ளை நிற சுடிதாரில் ஏதோ கறை படிந்திருந்தது. 'ஸாரிம்மா... ரெண்டு கவர் போட்டுத்தானே சாப்பாட்டை உள்ளே வெச்சேன். அதையும் மீறி உன் டிரஸ்ல குழம்புக் கறை படிஞ்சுடுச்சே?’ என்றபடியே அவர் இறங்கிச் சென்றுவிட, இதே கோலத்துடன் ஆபீஸ் செல்லப் பிடிக்காமல் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி, நொந்தபடியே வீடு திரும்பிவிட்டேன்.

அனுபவங்கள் பேசுகின்றன !

பஸ்ஸில் யார் எதை வைத்திருக்கச் சொல்லிக் கொடுத்தாலும், அலர்ட்!

- பி.இந்துராணி, சென்னை-11

அவஸ்தை தரும் ஆண்டு விழா!

தோழியின் பெண் படிக்கும் பள்ளியின் ஆண்டு விழாவுக்குச் சென்றிருந்தோம். கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு, மதியம் இரண்டு மணியில் இருந்தே மேக்-அப் செய்ய ஆரம்பித்து, 4.30 மணிக்கு ரெடி செய்து விட்டனர். ஆனால், 5 மணிக்கு வரவேண்டிய தலைமை விருந்தினர் 6 மணிக்குதான் வந்தார். அதற்குப் பிறகு அவர் நிதானமாகப் பேச்சை ஆரம்பிக்க, மேடையில் இருந்த மற்றவர்களும் பேசி முடித்து நிகழ்ச்சியை ஆரம்பித்தபோது... 7 மணியாகிவிட்டது. அதன் பிறகு... பசி, தூக்கம் எனச் சோர்ந்து கிடந்த பிள்ளைகளை மேடையேற்றியபோது, ரசிப்பதற்குப் பதில் அவர்களைப் பார்க்க பரிதாபமே ஏற்பட்டது.

அனுபவங்கள் பேசுகின்றன !

இந்த பள்ளியில்தான் என்றில்லை, ஆண்டு விழா சீஸனில் பல பள்ளிகளிலும் இதுதான் வாடிக்கையாக இருக்கிறது. குழந்தைகளை வைத்து நடத்தும் நிகழ்ச்சிகளை, துல்லியமாகத் திட்டமிட வேண்டாமா..?!

- ஆர்.அம்மு, திண்டல்

குட் குழந்தைகள் வேண்டுமா?!

ஒரு காரில், குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தோம். வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த ஸ்நாக்ஸை சாப்பிடுவதற்காக ஓர் இடத்தில் காரை நிறுத்தினோம். பேப்பர் பிளேட்டில் ஸ்நாக்ஸ் வகைகளை வைத்து, 'உனக்குத்தான் மொதல்ல..!’ என்று ஐந்து வயதாகும் என் நாத்தனார் பேத்தியிடம் கொடுத்தேன். உடனே அதை எடுத்துக் கொண்டு ஓடியவள், 'இந்தாங்க அங்கிள்!’ என்று டிரைவரிடம் கொடுத்துவிட்டு திரும்பி வந்தவள், 'நாமெல்லாம் பேசிட்டுதானே வந்தோம்... அங்கிள்தானே டிரைவ் பண்ணிட்டு வந்தார்.. அவர் டயர்ட் ஆகியிருப்பார்ல... அதான் அவருக்கு ஃபர்ஸ்ட்!’ என்றாள்.

அனுபவங்கள் பேசுகின்றன !

அவளின் சொல்லழகிலும், பண்பிலும் பூரித்து அவள் அம்மாவைப் பார்த்தேன். 'நான்தான் அவளுக்கு அப்படி கத்துக் கொடுத்திருக்கேன் மாமி. அப்பப்போ ஆதரவற்றோர் இல்லங்கள், குழந்தைகள் விடுதினு போய் இவ கையாலேயே ஏதாவது பொருட்கள் கொடுத்துட்டு வருவோம். அப்போதானே அந்தக் குணம் பெரியவளானதும் வரும்?!’ என்றாள்.

'...நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்பதுதானே உண்மை?!

- பிரபா டாக்கர், ஹைதராபாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism