Election bannerElection banner
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

ஓவியங்கள்: சேகர்

 வாசகிகள் பக்கம்

காமெடி குழந்தை!

சமீபத்தில் கணவருடன் கலகலப்பான ஒரு காமெடி படத்துக்குச் சென்றிருந்தேன். அருகிலிருந்த ஸீட்களில்... நான்கு வயதே இருக்கும் குட்டிப் பெண்ணுடன் ஒரு தம்பதி. காமெடி காட்சிகளில் அக்குழந்தையின் அப்பா சிரிக்கும்போதெல்லாம், ''எதுக்குப்பா சிரிக்கிறே?'' என்று வினாக்களால் நச்சரித்துக் கொண்டே இருந்தது வாண்டு. ஒவ்வொரு தடவையும் வாண்டு எழுப்பும் கேள்வி... அவள் பக்கமே எங்கள் கவனத்தை ஈர்த்தது. க்ளைமாக்ஸ் காட்சிகளின்போது... தந்தை மிக அதிகமாக குலுங்கி குலுங்கிச் சிரிக்க, குட்டியும் மிக அதிக கோபமாகி, ''சிரிக்காதேப்பா!'' என்று கத்த ஆரம்பித்துவிட்டது.

அனுபவங்கள் பேசுகின்றன !

குழந்தைகளை சற்று விவரம் தெரிந்த பின்னர் காமெடி படங்களுக்கு அழைத்து வந்தால், தொந்தரவும் இருக்காது, அவர்களும் புரிந்து படத்தை ரசிப்பார்கள்!

சரிதானே..?!

- மங்கையர்க்கரசி, சென்னை-78

நாசூக்காக நல்ல செய்தி!

மதுரையிலிருக்கும் அண்ணன் வீட்டுக்கு, சில மாதங்களுக்கு முன் சென்றிருந்தேன். பக்கத்து ஃப்ளாட்டில் குடியிருக்கும் பெண்மணி, தான் கோவையில் புறநகர் பகுதியில் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்ய இருப்பதாகக் கூறி, அண்ணன் வீட்டில் இனிப்புகள் வழங்கினார். அண்ணன் குடும்பத்தினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அனுபவங்கள் பேசுகின்றன !

வெகுதொலைவில் விசேஷம் வைக்கும்போது, நெருங்கிய நட்பு... நெருங்கிய உறவு என்றால் கட்டாயம் வருவார்கள். அல்லது 'நீங்க வந்தே ஆகணும்...’ என்று நாமும் வற்புறுத்தலாம். ஆனால், கொஞ்சம் அந்நியமாக இருப்பவர்களையும்... 'நீங்க கட்டாயம் வந்தே ஆகணும்' என்று சொல்ல தர்மசங்கடத்தைக் கொடுப்பதுதான் இங்கே அதிகமாக இருக்கிறது. அதைவிட, இப்படி நாசூக்காக நல்ல செய்தியை சொன்னது... மெச்சும்படி இருந்தது. பயண அலுப்பு, போக்குவரத்துச் செலவு போன்றவற்றை தவிர்க்கும் பொருட்டு இப்படி 'ஸ்வீட்’ கொடுத்து சுப செய்தி சொல்வது இருதரப்புக்குமே சுலபமான விஷயம்தானே!

யோசிப்போமா..?!

- உஷா நாராயணன், குரோம்பேட்டை

முத்தத் தொற்று உஷார்!

அனுபவங்கள் பேசுகின்றன !

என் தங்கையின் குழந்தைக்கு இரண்டு மாத வயது. திடீரென குட்டிப் பாப்பாவின் பட்டுக் கன்னத்தில் சிவப்புத் தடிப்புகள் தோன்ற, கொசுக்கடியா... அலர்ஜியா... கிருமித் தொற்றா என்று குழம்பி டாக்டரிடம் சென்றோம். ''குழந்தைக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பீர்களா..?'' என்று டாக்டர் கேட்க, வீட்டினர், குழந்தையைப் பார்க்க வருபவர்கள் என அனைவரும் தவறாமல்  முத்தம் கொடுப்பதைச் சொன்னோம். கடிந்துகொண்ட டாக்டர், ''உமிழ்நீரில் சுரக்கும் ஒருவித ஆஸிட், நம் உதட்டு ஈரத்திலிருந்து குழந்தையின் கன்னங்களில் பட்டு, அலர்ஜி ஏற்படுத்தியதன் விளைவே இது’' என புரியவைத்தார். அதிலிருந்து வீட்டினர் அவளைக் கன்னத்தில் முத்தமிட்டுக் கஷ்டப்படுத்துவதை நிறுத்திக் கொண்டதுடன், வரும் விருந்தினர்களிடமும் தவிர்க்கும்படி இதமாகக் கேட்டுக் கொண்டோம்!

உங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா..?!

- ஆர்.விஜயா ரவி, ஈரோடு

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு